புதுச்சேரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

பட மூலாதாரம், Getty Images
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நகர பகுதியில் இயங்கி வரும் பிரபலமான தனியார் பள்ளியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் ஒருவர் பல மாதங்களாக பாலியல் ரீதியாக பல்வேறு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்தாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரைப் பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
விலங்கியல் ஆசிரியர் மாணவிக்கு பாலியல் சீண்டல்
ஆசிரியரின் நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் இருந்து மறுப்பு தெரிவித்த அந்த மாணவி, வீட்டுக்கு தெரிந்தால் பள்ளி படிப்பு பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார். ஆனால், மாணவி தன்னை பற்றி வெளியே சொல்லாமல் இருக்கிறார் என்பதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த ஆசிரியர், மாணவியின் தொலைபேசிக்கு வாட்சப் மூலம் தொடர்ந்து குறுஞ்செய்திகள் மற்றும் ஆபாச இணையதளங்களின் முகவரியை அனுப்பிப் பார்க்கும்படி வற்புறுத்தியாக மாணவி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் ஆசிரியரின் தொல்லைகளை பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி தன்னுடன் பயிலும் சக மாணவியிடம் இந்த சம்பவம் குறித்துத் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து மாணவியின் தோழி அவரது பெற்றோரிடம் இந்த விவகாரம் குறித்துக் கூறியுள்ளார். இதன் பிறகு பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவியை அழைத்து குழந்தைகள் உதவி மையத்திற்கு தொலைபேசி மூலம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, பள்ளி இயங்கிவரும் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திற்குத் தகவல் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் குழந்தை நல ஆணைய அலுவலகத்தில் வைத்து, மாணவியிடம் காவல் துறையினர் விசாரணை செய்து, அதன் அடிப்படையில் முறையான புகாரையும் பெற்றனர்.
காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது என்ன?
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் இனியனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.
அப்போது விளக்கமளித்த அவர், "குழந்தை நல ஆணையம் மூலம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், போக்சோ சட்டத்தின் கீழ் பிரிவு 10 மற்றும் பிரிவு 12ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பள்ளிக்கூடத்தில், பள்ளி நேரத்தின் போது மாணவிக்கு பாலியல் சீண்டல் செய்துள்ளதாக மாணவி விசாரணையில் தெரிவித்துள்ளார். மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவியின் பதினொன்றாம் வகுப்பு இறுதி தேர்வின் போதும், அதன்பிறகு தற்போதும் தனக்கு நேரடியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்," என தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
வாட்சப்பில் தவறான குறுஞ்செய்தி அனுப்பியது யார்?
மேற்கொண்டு மாணவிக்கு வாட்சப் மூலம் குறுஞ்செய்திகளும், ஆபாச இணையதள முகவரிகளும் அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக கூறுபடுவது குறித்து ஆய்வாளரிடம் பிபிசி கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த அவர், "அதைப் பற்றி உறுதிப்படுத்தும் விதமான தகவல் இதுவரை இல்லை. மாணவியின் தொலைபேசிக்கு வாட்சப்பில் இருந்து குறுஞ்செய்தி பெறப்பட்டதாக தரவுகள் இல்லை. மேலும் ஆசிரியர் தொலைபேசியிலும் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எந்த தரவுகளும் இல்லை." என்றார்.
மேலும், "இதைத் தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது. இதில் சில பிரச்னைகள் உள்ளது. அதாவது வேறு யாராவது இதை அனுப்பினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம். காரணம், அனுப்பியதாக கூறுபடும் நபரின் தொலைபேசியிலும், அவை சென்று சேர்ந்ததாக கூறப்படும் மாணவியின் தொலைபேசியிலும் அவ்வாறு குறுஞ்செய்தி மற்றும் ஆபாச தகவல்கள் ஏதும் இல்லை.
குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, சைபர் கிரைம் போலீசாருக்கு தன்னுடைய பெயரில் வேறு தொலைபேசியில் இருந்து தவறான தகவல் பகிரப்படுவதாகப் புகார் அளித்துள்ளார். ஆகவே இதனை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை செய்து வருகிறோம். விசாரணைக்கு பிறகே இதுதொடர்பாக உறுதியாக கூற முடியும்," என்றார் ஆய்வாளர் இனியன்.
குழந்தைகள் நல ஆணையம் சொல்வது என்ன?
இந்த வழக்கை முதலில் விசாரணை செய்த குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் சிவசாமியிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், "மாணவியிடம் அதே பள்ளியைச் சேர்ந்த விலங்கியல் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டுள்ளார். தொலைப்பேசியில் வாட்சப் மூலமாகத் தவறான குறுஞ்செய்தி மற்றும் ஆபாச இணைய முகவரிகளை அனுப்பியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த கொரோனா தொற்றுக் காலத்திற்குப் பிறகு இணைய வழிக் கல்வி தொடங்கப்பட்டதில் இருந்து இதுபோன்ற தவறான அணுகுமுறைகளை கையாளும் செய்திகளை அதிகம் பார்க்க முடிகிறது. அந்த இணைய வழிக்கல்வி மூலம் மாணவர்களின் தொலைப்பேசி எண்ணை எடுத்துக்கொண்டு அதனைச் சிலர் தவறாகக் பயன்படுத்தி வருகின்றனர்.
மாணவிகளுக்குத் தவறான குறுஞ்செய்தி மற்றும் ஆபாச இணைய முகவரிகளை அனுப்பிவிட்டுத் தவறுதலாக அனுப்பிவிட்டது போன்று சொல்கின்றனர். இதன் மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவர்களை பள்ளி செய்முறை வகுப்பு மதிப்பெண்ணைக் காரணம் காட்டி மிரட்டுகின்றனர். இவ்வாறு சிக்கலுக்கு உள்ளாகும் மாணவிகள் தங்கள் பாதிப்பை வெளியே சொல்லப் பயந்து இருக்கும் சூழலை, சிலர் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்," என்று சிவசாமி தெரித்துள்ளார்.
அரசுப் பள்ளி நிறுவனங்களில் முதலில் இந்த மாதிரியான பள்ளி பாட முறையை மாற்ற வேண்டும் என்று குழந்தைகள் நல ஆணைய தலைவர் சிவசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "பள்ளியில் பிற ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வரிடம் விசாரணை செய்ய இருக்கிறோம். மேலும் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக, இந்த விவகாரம் தெரிந்த பிறகும் இதனை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமின்றி மாணவிக்குத் தேவையான ஆலோசனை வழங்கியுள்ளோம். அதுமட்டுமின்றி அவர் உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்த காரணத்தால் மாணவியின் பாதிப்பு குறித்தும், அவருக்கு பெற்றோரின் முக்கியத்துவம் குறித்தும் மாணவியின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். தற்போது மாணவி அவரது வீட்டில் பாதுகாக்க இருக்கின்றார்," என்று குழந்தைகள் நல ஆணைய தலைவர் சிவசாமி தெரித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் பணி நீக்கம்
மேலும் பாதிக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவியிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், மாணவிக்கு உள்நோக்கத்துடன் வாட்சப் குறுஞ்செய்தி அனுப்பியது தெரிந்துள்ளது என்று கூறிய பள்ளி நிர்வாகம் இந்த சம்பவத்தின் தீவிர தன்மையை உணர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரைப் பள்ளி நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் பள்ளி விலங்கியல் ஆசிரியரை கைது செய்ய சிறப்பு தனிப்படை அமைத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












