You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
JEE Advanced: குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் என்ன செய்யலாம்?
பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்பார்த்திருந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு 2025 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மதிப்புமிக்க ஐ.ஐ.டி.களில் சேர்க்கைக்கான நுழைவாயிலாகும். இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி -களில் ஒன்று சுழற்சி அடிப்படையில் இந்த தேர்வை நடத்தும். இந்தாண்டு ஐஐடி கான்பூர் ஜே இ இ அட்வான்ஸ்டு தேர்வுகளை நடத்தியுள்ளது.
ஜூன் 3ம் தேதி தொடங்கவுள்ள கலந்தாய்வுக்கு யாரெல்லாம் தகுதிப் பெறுவார்கள், கலந்தாய்வில் விருப்ப தேர்வுகளை நிரப்பும் போது கவனிக்க வேண்டியவை என்ன, குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்துக் கொள்ளலாம்.
- அமெரிக்காவில் உயர் கல்வி பயிலும் வாய்ப்பு தடைபட்டால் வேறெந்த நாடுகளில் படிக்கலாம்?
- நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் முதல்முறையாக பெண் கேடட்கள் - சாதித்த 17 பெண்கள்
- "சமூக வலைத்தள தணிக்கை தீவிரப்படுத்தப்படும்" -மாணவர் விசாக்களுக்கு டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடுகள்
- தமிழ்நாடு: தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகாதது ஏன்?
ஜேஇஇ அட்வான்ஸ்டு 2025-ல் யார் தகுதி பெறுகிறார்கள்?
கூட்டு சேர்க்கை வாரியம் (ஜேஏபி) நிர்ணயித்தபடி, ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் மொத்த மதிப்பெண்களை பெற்றிருந்தால் மட்டுமே ஒரு மாணவர் ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2025 இல் தகுதி பெற்றவராக அறிவிக்கப்படுவார். தகுதி மதிப்பெண்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறாக இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்து பிரிவினருக்குமான தகுதி மதிப்பெண்கள் குறைந்துள்ளன.
தகுதி மதிப்பெண்கள் எவ்வளவு ?
பொதுப் பிரிவினருக்கு (பொது தரவரிசை பட்டியல்) ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 5.83% மதிப்பெண்களும், 20.56% மொத்த மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஓபிசி-என்சிஎல் மற்றும் பொதுப்பிரிவு (பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள்) பிரிவினருக்கு , குறைந்தபட்ச மொத்த மதிப்பெண்கள் 18.50% ஆகும், அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்சம் 10.28% மொத்த மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இந்த கட் ஆப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட குறைவானதாக உள்ளன. இந்த ஆண்டு பொது தரவரிசையில் இடம் பெற ஒவ்வொரு பாடத்தில் குறைந்தபட்சம் 7 மதிப்பெண்களும், மொத்தமாக அனைத்து பாடங்களிலும் சேர்த்து 360க்கு 74 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினர் மற்றும் கிரீமி லேயர் அல்லாத ஒபிசி பிரிவனர் ஒவ்வொரு பாடத்திலும் 6 மதிப்பெண்களும் மொத்தமாக 66 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். எஸ் சி, எஸ் டி பிரிவினர் மற்றும் மாற்று திறனாளிகள் குறைந்தபட்சம் 3 மதிப்பெண்கள் ஒவ்வொரு பாடத்திலும் மொத்தமாக 33 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். "ஒவ்வொரு ஆண்டும் கேள்வித்தாள் எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை பொருத்து கட் ஆப் மதிப்பெண்கள் மாறுபடுகின்றன. ஒரு மாணவர் எல்லா பாடங்களிலும் குறைந்தபட்சம் 20-30 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற விதி இருந்தால் மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். சில பாடங்களில் 90% மதிப்பெண்கள் இருந்தாலும், அனைத்து பாடங்களிலும் அதன் அடிப்படையாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதை இந்த மதிப்பெண் முறை உறுதி செய்கிறது" என்று கல்வியாளர் பாலாஜி சம்பத் கூறுகிறார்.
2025 ஆம் ஆண்டில், தேர்வுக்கு வந்த 1,80,422 விண்ணப்பதாரர்களில், 54,378 வேட்பாளர்கள் தகுதி பெற்றனர், இது மொத்த தேர்வாளர்களில் சுமார் 30.1% ஆகும். தகுதி என்றால் இந்த மாணவர்கள் ஐ.ஐ.டி மற்றும் பிற முதன்மை நிறுவனங்களில் சேருவதற்கான அடுத்த கட்டமான ஜோசா (JoSAA) கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆகியுள்ளனர்.
JoSAA கவுன்சிலிங் தொடக்கம்
ஜோசா கலந்தாய்வு ஜூன் 3ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. மாணவர்கள் கலந்தாய்வுக்கு பதிவு செய்து, தங்கள் விருப்பத் தேர்வுகளை செய்ய தொடங்கலாம்.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்று 12 ஆம் வகுப்பு (அல்லது அதற்கு சமமான) வாரியத் தேர்வுகளில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே ஜோசா கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.
பொது மற்றும் ஓபிசி-என்சிஎல் பிரிவுகள் 12 ஆம் வகுப்பில் குறைந்தது 75% மொத்த மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும், அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 65% தேவை அல்லது அவர்கள் அந்தந்த தேர்வு வாரியங்களின் முதல் 20 சதவீதத்தில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஜோசா கலந்தய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும், அவர்கள் விரும்பும் கல்வி நிறுவனங்கள், மற்றும் பாடங்களை தங்களின் விருப்ப வரிசையில் நிரப்ப வேண்டும்.
23 ஐஐடிகள், 31 என்ஐடிகள், 26 ஐஐஐடிகள், மற்றும் 46 பிற அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஜிஎஃப்டிஐ) உட்பட 127 நிறுவனங்களுக்கான சேர்க்கை ஒதுக்கீட்டை ஜோசா கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறதி. 2025 ஆம் ஆண்டில் JoSAA மூலம் கிடைக்கும் மொத்த இடங்களின் எண்ணிக்கை தோராயமாக 62,853 ஆகும். இந்த இடங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன :
ஐஐடி: 18,160 இடங்கள்
என்.ஐ.டி., - 24 ஆயிரத்து, 525 இடங்கள்
ஐஐஐடி: 9,940 இடங்கள்
மற்ற ஜி.எஃப்.டி.ஐ.க்கள்: 10,228 இடங்கள்.
குறைந்த தகுதி மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கை வாய்ப்புகள்
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் பொதுவாக அதிக இறுதி தரவரிசையில் (higher closing rank) கொண்ட ஐ.ஐ.டி.களில் இடங்களைப் பெற வாய்ப்புண்டு. இவை பெரும்பாலும் ஐ.ஐ.டி பிலாய், ஐ.ஐ.டி கோவா, ஐ.ஐ.டி ஜம்மு, ஐ.ஐ.டி பாலக்காடு, ஐ.ஐ.டி மண்டி, ஐ.ஐ.டி ஜோத்பூர், ஐ.ஐ.டி புவனேஸ்வர், ஐ.ஐ.டி பாட்னா, போன்ற புதிய ஐ.ஐ.டிகளாக இருக்கும். மேலும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் அல்லது மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங் போன்ற பாடங்களுக்கு பொதுவாக கணினி அறிவியல் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் போன்ற பாடங்களை விட போட்டி குறைவாக இருக்கும். இந்த படிப்புகளில் சேரவும் வாய்ப்பு கிடைக்கும்.
எடுத்துக்காட்டாக, ஐஐடி பம்பாய் மற்றும் ஐஐடி டெல்லி போன்ற முன்னணி ஐஐடிகளில் கணினி அறிவியல் பாடங்களில் சேர விரும்புவோர் தரவரிசையில் முதல் சில நூறு இடங்களுக்குள் இருக்க வேண்டும். புதிய ஐஐடிகளில் தரவரிசையில் 4000 முதல் 6000 வரையிலான இடத்தில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
"புதிய ஐஐடிகளில் விண்ணப்பிக்க தயங்குகிறார்கள். அந்த ஐஐடிகளிலும் நல்ல பாடங்கள், வித்தியாசமான பாடங்கள் உள்ளன. அவையும் இரண்டு ஆண்டுகளில் பிரபலமாகிவிடும். ஏ ஐ பாடம் என்றால் அனைவரும் விருப்பப்படுகிறார்கள். ஆனால் மெட்டலர்ஜி(உலோகவியல்) போன்ற படிப்புகளை மிக புராதானமாக படிப்பு என்று நினைத்து ஒதுக்கிவிடுகிறார்கள். ஆனால் அவற்றுக்கும் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு உள்ளது" என்று சென்னை ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்றுள்ள கல்வியாளர் பாலாஜி சம்பத் கூறுகிறார்.
கலந்தாய்வில் விருப்ப தேர்வுகளை நிரப்பும் போது செய்ய வேண்டிய முக்கியமான விசயம் என்ன?
கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) 2025 கலந்தாய்வு செயல்முறை ஜூன் 3, 2025 அன்று மாலை 5 மணிக்கு பதிவு மற்றும் விருப்ப தேர்வு நிரப்புதலுடன் தொடங்குகிறது. இது ஜூன் 12 வரை நடைபெறுகிறது. கலந்தாய்வில் ஆறு சுற்றுகள் உள்ளன. இந்த சுற்றுகளுக்குப் பிறகு, மத்திய சேர்க்கை ஒதுக்கீடு வாரியம் (CSAB) NIT, IIIT மற்றும் GFTI ஆகியவற்றில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப சிறப்பு சுற்றுகளை நடத்துகிறது.
JoSAA கலந்தாய்வு மூலம் ஒரு இடத்தைப் பெறாத வேட்பாளர்கள் CSAB சிறப்பு சுற்றுகளில் பங்கேற்கலாம், மாநில அளவிலான கலந்தாய்வுகளிலும் விண்ணப்பிக்கலாம். ஜோசா கலந்தாய்வில் பங்கேற்காத கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்க்கை பெறலாம்.
இந்த கலந்தாய்வில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான எத்தனை இடங்கள் வேண்டுமானாலும் நிரப்பலாம். ஐஐடிகளுக்கு ஜே இ இ அட்வான்ஸ்டு மதிப்பெண்கள் அடிப்படையிலும் என் ஐ டி மற்றும் பிற கல்வி நிலையங்களுக்கு ஜே இ இ மெயின்ஸ் அடிப்படையிலும் இடங்கள் நிரப்பப்படும், எனவே மாணவர்கள் இதனை கவனத்தில் கொண்டு கலந்தாய்வின் போது விருப்ப தேர்வுகளை நிரப்ப வேண்டும் என்கிறார் கல்வியாளர் பாலாஜி சம்பத். "ஒரு மாணவருக்கு முதல் விருப்பம் ஐஐடி சென்னையாக இருக்கலாம். அடுத்தது அவர் என் ஐ டி திருச்சி என்று விருப்பம் தெரிவிக்கலாம். மூன்றாவது ஐஐடி பாட்னா என்று குறிப்பிடலாம். ஐஐடி என்பதால் அவற்றை முதலில் குறிப்பிட வேண்டுமென அவசியம் இல்லை. தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்ப, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நிரப்ப வேண்டும். ஒரு ஐஐடியில் தனக்கு இடம் கிடைக்காதோ என்று நினைத்து அதை நிரப்பாமல் இருக்க வேண்டாம். கலந்தாய்வின் போது பல மாற்றங்கள் ஏற்படும். ஏதோ ஒரு சூழலில் விருப்பப்பட்ட ஐஐடியில் இடம் இருந்தும், மாணவர் அதனை தனது விருப்பப் பட்டியலில் குறிப்பிடவில்லை என்றால் அதில் இடம் பெற முடியாது. எனவே, பிறரது மதிப்பெண்ணை பற்றி கவலைப்படாமல், தனது முன்னுரிமை அடிப்படையில் குறைந்தது ஒரு மாணவர் 50 முதல் 60 இடங்களை விருப்ப தேர்வாக வழங்கலாம். கடந்த கால கட் ஆப் மதிப்பெண் ஆகியவற்றையும் தெரிந்து கொண்டு, கவனமாக நிரப்ப வேண்டும்" என்று அவர் வலியுறுத்துகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு