ரஷ்ய எண்ணெய்க்கு ஐரோப்பா விதித்த தடையால் இந்தியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் நீடிக்க என்ன செய்ய வேண்டும்?

oil

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தீபக் மண்டல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

யுக்ரேன் மீது தாக்குதல் தொடுத்ததற்கு தண்டனையாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU), கடந்த ஆண்டு டிசம்பரில் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு தடை விதித்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதன் சுத்தீகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொருளாதாரத் தடைக்கு முன் ஐரோப்பா தனது எண்ணெய் தேவையில் 30 சதவிகித்தை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது.

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீதான தடை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஐரோப்பா முழுவதும் விநியோக பற்றாக்குறையை உருவாக்கும் என்று நம்பப்பட்டது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் போராடிக்கோண்டிருந்த ஐரோப்பாவிற்கு இது மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது.

ஆனால் இந்த தடை இருந்தபோதிலும், ஐரோப்பாவிற்கு ரஷ்ய எண்ணெயின் விநியோகம் தொடர்கிறது.

ரஷ்யாவின் எண்ணெய் தற்போது இந்தியா வழியாக ஐரோப்பிய சந்தையை சென்றடைகிறது

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஐரோப்பாவை நேரடியாக சென்றடையாததால், அங்குள்ள எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்கு உற்பத்தி பிரச்னை எழுந்துள்ளது.

ஆனால் இந்தியாவின் தனியார் துறை சுத்தீகரிப்பு ஆலைகள் ஐரோப்பாவில் விநியோக இடைவெளியை நிரப்ப இதை ஒரு நல்ல வாய்ப்பாக பார்த்தன.

இந்தியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி, தொடர்ந்து ஐந்து மாதங்களாக அதிகரித்து வந்தது. இந்த மாதம் அது 19 லட்சம் டன்னை எட்டியது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன.

இந்தியாவில் இருந்து பெட்ரோ பொருட்கள் இறக்குமதியில் ஐரோப்பிய ஒன்றியம் முதலிடம்

இது 2022-23 நிதியாண்டில் அதிகபட்ச மாதாந்திர எண்ணிக்கையாகும். 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரை, இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுத்தீகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் அளவு 11.6 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் இருந்து சுத்தீகரிக்கப்பட்ட பெட்ரோல் பொருட்களை இறக்குமதி செய்யும் 20 பிராந்தியங்களில் ஐரோப்பிய ஒன்றியம் முதலிடத்தை எட்டியது.

இந்த காலகட்டத்தில் இந்தியாவின் சுத்தீகரிக்கப்பட்ட பெட்ரோல் பொருட்களின் ஏற்றுமதியில் 15 சதவிகிதம், ஐரோப்பிய சந்தைக்கு செய்யப்பட்டது. பின்னர் அது 22 சதவிகிதமாக அதிகரித்தது.

ரஷ்யாவின் பெட்ரோலியப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்த பிறகு இந்த சந்தைக்கு இந்தியாவின் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்தது. இப்போது இந்தியா மிகப்பெரிய சப்ளையராக ஆகும் நிலையில் இருப்பதாக ப்ளூம்பெர்க் செய்தி முகமை தெரிவிக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை அதிக அளவில் மானிய விலையில் வாங்குகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கிய ரஷ்யா-யுக்ரேன் போருக்கு முன் இந்தியாவின் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெயின் பங்கு ஒரு சதவிகிதமாக மட்டுமே இருந்தது. ஆனால் ஓரு ஆண்டில் அதாவது 2023 பிப்ரவரிக்குள் இது 35 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 16.2 பீப்பாய்கள் எண்ணெய் வாங்கியது.

கடந்த ஓராண்டில் தனது நாடு இந்தியாவிற்கான எண்ணெய் விற்பனையை 22 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், தெரிவித்தார். சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது அதிக எண்ணெய் வாங்கும் நாடாக உள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு ரஷ்யா தனது எண்ணெய் விலையை குறைத்தபோது, எண்ணெய் இருப்பை அதிகரிக்க இந்தியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இங்குள்ள தனியார் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையங்கள் இப்போது ரஷ்யாவிலிருந்து வரும் அதிகரித்த எண்ணெய் வரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன, மேலும் அவை ஐரோப்பாவை தங்கள் சிறந்த சந்தையாகப் பார்க்கின்றன.

சுத்தீகரிப்பு ஆலைகள் பயனடைகின்றன

oil

பட மூலாதாரம், Getty Images

உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்தீகரிப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்திய சுத்தீகரிப்பு நிறுவனங்களின் சப்ளை அதிகரிப்பு காரணமாக, ஐரோப்பிய சந்தையில் எண்ணெய் நெருக்கடி கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக மாறவில்லை. ஆனால் நெருக்கடி ஏற்படக்கூடும் என்ற அச்சம் முன்பு நிலவியது.

கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்தியாவின் சுத்தீகரிப்பு திறன் அதன் உள்நாட்டு தேவையை விட அதிகமாக உள்ளது. இதனால்தான் அதிகப்படியான சப்ளை, ஐரோப்பிய சந்தைக்கு அதிக அளவில் திருப்பி விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்திய சுத்தீகரிப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் ரஷ்ய எனர்ஜி குரூப் ரோஸ்நெஃப்டின் கூட்டாளி நிறுவனமான நைராவுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.

ஐரோப்பிய யூனியன் ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்தாலும் கூட இந்தியா வழியாக அது அதிக அளவில் எண்ணெய் வாங்குகிறது.

ரஷ்யாவிடம் இருந்து மலிவான கச்சா எண்ணெயை வாங்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் கோபம் வெளியிட்டதும் சுவாரசியமானது.

2022 டிசம்பரில் இந்தியா வந்த ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் அனெலினா பெர்பாக், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியாவிடம் புகார் அளித்தபோது, கடந்த 9 மாதங்களில் ஐரோப்பிய யூனியன் வாங்கியதில் ஆறில் ஒரு பங்கை மட்டுமே இந்தியா வாங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

ஆனால் இப்போது இந்தியாவில் இருந்து எண்ணெய் வாங்குவதில் ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த ஆட்சேபனையும் காணப்படவில்லை.

இந்தியா நம்பகமான சப்ளையராக வளர்ந்து வருகிறதா?

petrol or diesel

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் சொந்த கச்சா எண்ணெய்க்கான தேவை மிக அதிகமாக உள்ளது. ஒரு மாதத்திற்கு மேல் நம்மிடம் இருப்பு இல்லை. இத்தகைய சூழ்நிலையில், இந்திய சுத்தீகரிப்பு நிறுவனங்கள் அதிகப்படியான சப்ளையை பயன்படுத்தி பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரித்து வருகின்றன என்றால் அது மிகவும் நல்ல விஷயம் என்று ஐஐஎஃப்எல் செக்யூரிட்டிஸின் கமாடிட்டிஸ் துணைத் தலைவர் அனுஜ் குப்தா கூறினார்.

ரஷ்ய எண்ணெய் மீதான தடைக்குப் பிறகு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் எண்ணெய் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அங்கு இறக்குமதி அதிகரித்துள்ளது என்று குப்தா கூறுகிறார். இதுவரை இந்தியாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் சுத்தீகரிக்கப்பட்ட பொருட்களை அதிகமாக வாங்காமல் இருந்தன. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்திய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளன.

"இந்தியாவின் பொருளாதாரத் திறனுக்கு இது சிறப்பான விஷயம். இதன் காரணமாக இந்தியா நம்பகமான சப்ளையராக உருவெடுத்துள்ளது. விநியோகச் சங்கிலியில் வலுவான இணைப்பாக ஆகும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதை நம்பலாம்,” என்று குப்தா தெரிவித்தார்.

இந்தியாவின் பொருளாதரத்திற்கு இது நல்ல விஷயமாக இருக்கும்.

ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்குவது தொடர்பாக சில மேற்கத்திய நாடுகள் இந்தியா மீது கோபம் கொண்டிருந்தன. உலகத்தின் முன் இதை எதிர்ப்பதாகவும் கூறின. ஆயினும் உள்ளுக்குள் இந்த சூழ்நிலையால் அவைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உலகளாவிய எண்ணெய் விநியோகம் அப்படியே உள்ளது என்பது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளுக்கு நிம்மதி தரும் விஷயமாக இருக்கிறது ஏனெனில் இதன் மூலம் இங்குள்ள சுத்தீகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் அவற்றின் சந்தைக்கு வரமுடியும். அங்கு விநியோக நிலைமை சிறப்பாக இருக்கும். இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நலன் சார்ந்தது. அதிகரித்து வரும் பணவீக்கத்தின் பார்வையில் எண்ணெய் விலை அதிகரிப்பானது குறிப்பாக ஐரோப்பாவிற்கு அபாய மணியாக உள்ளது.

தொழிற்சாலை

பட மூலாதாரம், Getty Images

உலக எண்ணெய் விநியோகத்தை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற இந்திய சுத்தீகரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரிப்பு ஒரு நல்ல அறிகுறி என்று அமெரிக்காவும் ஐரோப்பாவும் கருதுகின்றன.

இந்திய சுத்தீகரிப்பு நிறுவனங்கள் இதன் மூலம் சிறப்பான பலனைப் பெற்று வருகின்றன. மலிவான ரஷ்ய எண்ணெய் காரணமாக, அவற்றின் சுத்தீகரிப்பு செலவு குறைந்துள்ளது மற்றும் லாபம் அதிகரித்துள்ளது..

”இதன் மூலம் இந்தியா பயனடையும். ஏற்கனவே வலுவாக உள்ள இந்திய சுத்தீகரிப்புத் துறையை இது மேலும் சக்திவாய்ந்ததாக மாற்றும். இதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியா ஒரு இடைநிலை சந்தையாக மாறும். மேலும் பல நாடுகள் இந்தியாவில் இருந்து சுத்தீகரிப்பு பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கும்.” என்று அனுஜ் குப்தா குறிப்பிட்டார்.

இந்தியா தனது சுத்தீகரிப்பு திறனை அதிகரிக்க வேண்டும்

oil

பட மூலாதாரம், Getty Images

ரஷ்ய எண்ணெய் மீதான தடை குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே ஆரம்பத்தில் ஒருமித்த கருத்து இருக்கவில்லை. இது ஒரு அவசர முடிவாக அமைந்தது. பிரான்ஸ் மற்றும் ஜி-7க்கு வெளியே உள்ள நாடுகள் கூட இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு என்று கூறியுள்ளன.

“இப்போது ஐரோப்பா எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடி எரிசக்தி விலை உயர்வு. ஐரோப்பாவில் மின்சாரத்தின் விலை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இன்று ரஷ்ய எண்ணெய்க்கு தடை இருந்தாலும் ஐரோப்பா, ரஷ்ய எரியாற்றலை நம்பித்தான் ஆகவேண்டும். இன்றும் நிலைமை அப்படித்தான் உள்ளது. மாறிவிட்ட சூழ்நிலையில் இப்போது இந்த எண்ணெய் ரஷ்யாவில் இருந்து நேரடியாக வராமல் இந்தியா வழியாக வருகிறது. எரியாற்றல் பாதுகாப்பு என்பது நேர்கோட்டில் கொண்டுவரமுடியாத ஒன்றாகும்,” என்று எரிசக்தி நிபுணர் அரவிந்த் மிஷ்ரா கூறுகிறார்.

ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கியதன் மூலம் இந்தியா இதுவரை 35 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது. மறுபுறம் பெட்ரோலியப் பொருட்களின் முக்கிய சப்ளையராகவும் உருவெடுத்துள்ளது.

ஒரு சரக்கை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா, இப்போது ஏற்றுமதியாளராக மாறும் ஒரு சூழ்நிலையை இந்தப்போர் உருவாக்கியுள்ளது” என்கிறார் அரவிந்த் மிஷ்ரா. பெட்ரோலின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விநியோகத்திற்கான முக்கிய மையமாக இந்தியா வேகமாக மாறி வருகிறது. ஆனால் இந்தியா தனது சுத்தீகரிப்பு திறனை மேலும் விரிவுபடுத்தி அதை வலுப்படுத்தும் போதுதான் இந்த சூழ்நிலையின் நன்மையை தொடர்ந்து பெற முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: