You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரியில் ரூ.1,000 கோடியை கடந்த மது விற்பனை - அரசுக்கு வருவாய், சர்ச்சையாகிறதா ‘போதை’ வியாபாரம்?
- எழுதியவர், எஸ். நடராஜன், புதுச்சேரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுச்சேரியில் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ. 1000 கோடியை கடந்திருக்கிறது. அதே சமயம், மது விற்பனையால் அரசுக்கு வருவாய் கிடைத்தாலும் மறுபுறம் அதை அருந்தும் மக்களின் போதைப்பழக்கம் மற்றும் அதன் விற்பனையை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு சர்ச்சை ஆகியிருக்கிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மது விற்பனைக்குப் பெயர் பெற்ற பகுதி. தமிழ்நாட்டை ஒப்பிடும்போது புதுச்சேரியில் குறைந்த விலையில், நிறைய பிராண்டுகளில் மதுபான வகைகள் கிடைப்பதும், அழகிய கடற்கரை நகரமாக அது இருப்பதும் தான், மதுப்பிரியர்களை பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி ஈர்க்க முக்கிய காரணம்.
புதுவையின் அடையாளங்களில் மதுவுக்கு ஓர் இடம் உண்டு என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக மது விற்பனைத் துறையின் வருவாய் அதிகரித்து வருகிறது.
மதுபான விற்பனை மூலமாக அரசுக்குக் கிடைத்த வருவாய், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.600 கோடி முதல் 850 கோடி வரை என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு அது ரூபாய் 1,100 கோடியாக உயர்ந்துள்ளது.
தென்னிந்தியாவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் புதுச்சேரியும் உள்ளது. ஆன்மிக சுற்றுலா, உல்லாச சுற்றுலா என்ற இரண்டு வகைகளிலும் புதுச்சேரிக்கு ஓர் ஈர்ப்பு உள்ளது. சுற்றுலா வளர்ச்சியின் தாக்கத்தை தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளது மது.
ஒரு காலத்தில் புதுச்சேரி மாநில வருவாய்க்கும், புதுச்சேரி வாழ் மக்களின் முன்னேற்றத்திற்கும் பஞ்சாலைகள், கைத்தறி நெசவு, சர்க்கரை ஆலைகள், விவசாயம் ஆகியவை முக்கிய பங்காற்றின. ஆனால் தற்போது வணிகம், சுற்றுலா மற்றும் மது விற்பனை மூலம் கிடைக்கும் கலால் வரி ஆகியவை புதுச்சேரி அரசின் வருவாயின் மையமாக உள்ளன.
வருவாய் பெருக உதவும் சுற்றுலா
புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளில் எவ்வளவு மதுபான கடைகள் அதிகரித்துள்ளன என்பது குறித்து அறியக் கலால் துறையின் துணை ஆணையர் சுதாகரிடம் பிபிசி விளக்கம் கேட்டது.
அது குறித்து விளக்கிய அவர், "புதுச்சேரியைப் பொருத்தவரை மதுபான கடைகளுக்கு உரிமம் புதிதாக வழங்குவதில்லை. மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை என இரண்டு வகையான மதுபான கடைகளுக்கும் 1989இல் இருந்து உரிமம் வழங்குவதில்லை.
ஏற்கெனவே உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லறை மதுபான விற்பனை கடைகள் இடத்தை மட்டுமே மாற்றியுள்ளன. தற்போது சுற்றுலாவை மையப்படுத்தி இயங்கக் கூடிய உணவும், மதுபானமும் வழங்கும் ரெஸ்ட்ரோ பார்களுக்கும் உரிமங்கள் வழங்கியுள்ளோம்.
குறிப்பாக, புதுச்சேரி சுற்றுலா பகுதி என்பதால் இங்கே வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி, வெளிநாட்டவர்களும் அதிகம் வருகை தருகின்றனர். அதிலும் புதுச்சேரிக்கு வருவாய் தருவதில் சுற்றுலா முக்கிய பங்காற்றுகிறது.
அதன் காரணமாக சுற்றுலாவை மேம்படுத்த, சுற்றுலாவை மையப்படுத்தி இயங்கக் கூடிய மதுபான வசதிகளுடன் இயங்கக்கூடிய உணவகங்களுக்கு மட்டுமே தற்போது உரிமம் வழங்கப்படுகிறது," என்றார் அவர்.
மதுக்கடைகள் திறக்க விதிகள் என்ன?
"மொத்தம் மற்றும் சில்லறையாக மதுபானம் விற்பனை செய்யக்கூடிய கடைகள் நகரப் பகுதிகள், வளர்ச்சியடைந்த பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலிருந்து 50 மீட்டர் தொலைவில் அமைத்திருக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் இத்தகைய இடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அமைத்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் அடிப்படையில் மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உணவகம் மற்றும் மதுபான வசதிகளுடன் இயங்கக்கூடிய ரெஸ்ட்ரோ பார்களுக்கு சில்லறையை மதுபானங்கள் விற்பனைசெய்யக்கூடாது என்ற நிபந்தனை தவிர மேற்கூறிய நிபந்தனைகள் பொருந்தாது," என்றார் துணை ஆணையர். சுற்றுலாவை மையப்படுத்திய ரெஸ்டோ பார்கள் அரசின் வழிகாட்டுதல் படியே இயங்க அனுமதிக்கப்படுகின்றன. புதுச்சேரி, கோவா ஆகிய இடங்களுக்கு சுற்றுலாவை பொருத்தவரை நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவ்வாறு நினைத்துத்தான் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளும் வருகை தருவதாகக் கூறுகிறார் அவர்.
ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி
மதுபான கடைகள் நிறுவப்படும் போது அவை கல்வி நிலையம் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலிருந்து கொடுக்கப்பட்ட இடைவெளியில் அமைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்த பின்னரே அனுமதியும் வழங்குகிறோம். இதில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு இருப்பதாகக் கூறினால், அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வோம். அது உறுதியானால், அதனை கலால் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவருடைய பரிந்துரைக்கு ஏற்ப வேறு இடத்திற்கு மாற்றுவதற்குப் பரிசீலனை செய்வதாக கலால் துறை துணை ஆணையர் தெரிவித்தார்.
புதிய மதுக்கடைகள் எத்தனை?
"புதுச்சேரியில் 39 மொத்த விற்பனை மதுபான கடைகள், சுமார் 150 சில்லறை விற்பனை மதுபான கடைகள், 170 ரெஸ்டோ பார்கள் ஆகியவற்றுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. புதுவை ஆட்சிக்கு உட்பட்ட காரைக்காலில், 12 மொத்த விற்பனை மற்றும் 36 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. மஹேவில்,27 மொத்த விற்பனை மற்றும் 33 சில்லறை விற்பனை கடைகளும் உள்ளன. ஏனாமில், 7 மொத்த விற்பனை மற்றும் 7 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன," என்கிறார் அவர்.
"ரூபாய் 1500 கோடி வருவாய் இலக்கு"
"புதுச்சேரியில் 2019ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய 5 ஆண்டுகள் வரை சராசரியாக மதுபான விற்பனை மூலமாக வரக்கூடிய வருவாயானது ரூபாய் 600-லிருந்து 850 கோடி வரை இருந்தது. பின்னர் கொரோனா காலத்தில் ரூபாய் 750 கோடியாக குறைந்தது.
தொடர்ந்து மதுபான விற்பனையை ஒழுங்குமுறை செய்து, விலையை முறையாக நெறிமுறைப்படுத்தினோம். இதையடுத்து கடந்த ஆண்டு வருவாய் ரூபாய் 1,100 கோடியை எட்டியது. இந்த ஆண்டு ரூபாய் 1400லிருந்து 1500 கோடி ரூபாய் வரை இலக்கு வைத்துள்ளோம்," என்று கூறினார் சுதாகர்.
இதற்கிடையே மொத்த மற்றும் சில்லறை விற்பனை மதுபான கடைகள் இடம்பெயரும் போது அதனால் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்வதாகக் கலால் துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஒரு மலிவான சுற்றுலா நகரம். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வருவதற்குக் கரணம் தங்கும் விடுதிகள், உணவுகள் மற்றும் மதுபானங்கள் அனைத்தும் மலிவான விலையில் கிடைக்கின்றன.
மேலும் தமிழ்நாட்டில் சுமார் 250 வகையான மதுபானங்கள் கிடைக்கின்றன. ஆனால் புதுச்சேரியில் 1000க்கும் மேற்பட்ட மதுபான வகைகள் கிடைக்கின்றன. இவையும் புதுவைக்கு மதுபானத்தை நாடி பயணிகள் வருவதற்கு காரணமாகின்றன.
"மலிவான விலையில் மதுபானம்"
மலிவான விலையில் மதுபானம், உணவு, தங்கும் விடுதிகள் கிடைப்பதால் சுற்றுலா பயணத்துக்குப் புதுச்சேரியைத் தேர்வு செய்வதாக சுற்றுலா பயணி விஷ்ணு ஆதித்யா கூறுகிறார். இதுகுறித்து பேசிய அவர், "புதுச்சேரியில் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் இருப்பது மட்டுமின்றி இங்கே மலிவான மதுபானங்கள் கிடைக்கின்றன. பிற பகுதிகளைக் காட்டிலும் நிறைய விதவிதமான மதுபானங்கள் மற்ற பகுதிகளைக் காட்டிலும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. புதுச்சேரியை தென் இந்தியாவின் கோவா போலதான் பார்க்கிறோம். பிற சுற்றுலாத் தளங்களை காட்டிலும் புதுச்சேரியில் செலவு குறைவாகவே உள்ளது. குறிப்பாக ஹோட்டலில் தங்குவது, வெளியே சென்று உணவு சாப்பிடுவது, மது அருந்துவது ஆகிய அனைத்துக்குமான செலவு இங்கே குறைவு. பிரெஞ்சு டவுன் பகுதிகளுக்குச் சென்று உணவு மற்றும் மது அருந்த விரும்பினாலும் அதிக பணம் செலவழிக்காமல் அதை மிதமான விலையில் பெற முடிகிறது. இதனால்தான் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் புதுச்சேரி வர விரும்புகிறோம்," என்று கூறுகிறார் விஷ்ணு.
கலாசாரம் முற்றிலுமாக சீரழிந்துவிட்டது
ஒருபுறம் புதுவை அரசின் வருவாய்க்கு சுற்றுலாத்துறை பெரிய அளவில் பங்களித்தாலும், பிற மாநிலத்தவர்களை ஈர்க்கும் ஒரே விஷயமாக மதுபானம் உள்ளதாக தமது கவலையைப் பகிர்ந்து கொள்கிறார் தனியார் தகவல் தொழில்நுட்ப துறையில் மனிதவள மேலாளரும், 'பெண்கள் சமூகத்தை மேம்படுத்துதல்' அமைப்பின் நிறுவனருமான எஸ்.காயத்ரி பிபிசியிடம் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவதற்குக் காரணம் இங்குள்ள இயற்கை வளம் அல்ல. அவ்வாறு அவர்கள் ரசிக்க விரும்பினால் அதற்கு நிறைய இடங்கள் உள்ளன.
ஆனால் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி மற்றும் கோவாவை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர். இதற்குக் காரணம் இங்கு மதுபானங்கள் மலிவான விலைக்குக் கிடைப்பதுதான். மற்றொன்று இங்கே எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
இங்கே தான் அனைத்து விதமான மது அருந்தும் இடங்கள் உள்ளன. அதற்கேற்ப மகிழ்ச்சி தரக்கூடிய இடங்களும் உள்ளன. முக்கியமாகப் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மட்டுமே வருகின்றனர்.
அப்படி வரும்போது அவர்கள் இங்குள்ளவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி புதுச்சேரி நகரத்தில் கலாச்சாரத்தைக் கெடுக்கின்றனர்," என்கிறார்.
புதுச்சேரியில் பிறந்த வளர்ந்த தனக்கு தற்போது 45 வயதாகிறது என்று கூறும் காயத்ரி, ஆனால் தனது இளமையில் தாம் மகிழ்ந்து அனுபவித்த புதுவையைப் போல இப்போது இல்லை என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்