சென்னையில் கோடைகால பழங்கள்: இவற்றில் கலப்படத்தை எப்படி கண்டறிவது?

கலப்பட பழ வகைகள்
    • எழுதியவர், கவியரசு வி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வாட்டி வதைக்கும் கோடை காலம் என்றாலும் அதை நாம் எதிர்நோக்குவதற்கு ஒரு காரணம் உண்டென்றால் அது இக்காலத்தில் மட்டுமே நாம் உண்டு மகிழும் பழவகைகள் தான். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், வெக்கையை (கடும் உஷ்ணம்) தணித்துக்கொள்ள ஒவ்வொரு வருடத்தைப் போலவும் இம்முறையும் மக்கள் கோடை காலத்துக்கே உரிய பழங்களையும் பானங்களையும் நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, கோடையில் மட்டும் சுவைத்து மகிழக்கூடிய மாம்பழத்தின் விற்பனை, இந்த ஆண்டும் வழக்கம் போலவே அமோகமாக உள்ளது.

மக்களில் பலர், உடல் சூட்டை தணிக்கும் அவசரத்திலும், பழத்தை சுவைக்கும் பரவசத்திலும் கண்ணெதிரே இருக்கும் ஓர் ஆபத்தைக் காணாமல் கடந்து செல்கிறார்கள்.

சென்னையில் உணவு பாதுகாப்பு துறையினர் சமீபத்தில் சாலையோர கடைகளில், குறிப்பாக பழங்கள் மற்றும் பழரசக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

தாகம் தணிக்க நாம் உண்ணும் தர்பூசணி முதலிய பழங்களிலும், பருகும் பழச்சாறுகளிலும் செய்யப்படும் கலப்படத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோடைக்கு பிரபலமான பழங்கள் மற்றும் பழச்சாறுகளில் எப்படி கலப்படம் செய்யப்படுகிறது? அவற்றை எப்படி கண்டறியலாம்? கலப்படம் செய்பவர்கள் குறித்து எப்படி புகார் அளிக்கலாம்?

இந்த கேள்விகளுடன், சென்னையில் பணியாற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி சதிஷ் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"வியாபார லாபத்திற்காகவும், விரைவில் காய்களை பழுக்க வைக்கவும், பழங்களைப் பளீச்சென காண்பிக்கவும் பல விதமான கலப்படங்கள் நடக்கின்றன. குறிப்பாக கோடை காலத்தில் பழங்களின் விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தி இவை பெருமளவில் நடக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வட இந்தியாவில் மட்டும் செய்யப்பட்டு வந்த இந்தக் கலப்பட முறைகள், சமீப ஆண்டுகளில் தென்னிந்தியாவிலும் பெருகிவிட்டது. தர்பூசணி, மாம்பழம் என்று பழவகைகளில் மட்டும் கலப்படம் நடப்பதில்லை. குளிர்ச்சிக்காக பருகும் பழரசத்தில் கூட எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கலப்படம் நடக்கிறது. இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் நிச்சயம் பெற்றிருக்க வேண்டும்" என்று சதீஷ் குமார் கூறினார்.

'சாய' தர்பூசணி, ரசாயன பழங்கள்

கலப்பட பழங்கள்
படக்குறிப்பு, கள ஆய்வில் உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார்

நிறத்தால் 'பளீச்' என்று இருக்கும் தர்பூசணி தான் சுவையானதாகவும் இனிப்பானதாகவும் இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். அப்படி நம்பி நீங்கள் அதை வாங்கி சாப்பிடும்போது எதிர்பார்த்த சுவை இல்லாததை உணர்வீர்கள். அப்படி உங்கள் கண்களை ஏமாற்றியது, ஊசியின் மூலம் ரசாயன சாயம் செலுத்தப்பட்ட தர்பூசணியாகத்தான் இருக்க வேண்டும்.

இது பற்றி பேசிய சதிஷ் குமார், "அது வெறும் சாயம் மட்டுமல்ல; ரசாயனம் கலந்த சாயம். நிறம் சீக்கிரத்தில் மங்காமல் இருக்க பல வேதிப்பொருட்கள் இதில் கலக்கப்படுகின்றன. இவை துணிகளுக்கு சாயம் பூச பயன்படுத்தப்படுகின்றன. ரசாயனங்கள் மனித உடலுக்கு என்ன மாதிரியான தீங்கை ஏற்படுத்தக் கூடுமோ அவை அனைத்தையும் ரசாயனம் கலந்த இந்த தர்பூசணிகள் ஏற்படுத்தும்.

வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு முதலியவை இதனால் உடனடியாக ஏற்படக்கூடிய உபாதைகள். இதை தொடர்ந்து சாப்பிடுவது தொண்டைப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் முதலிய தீவிரமான நோய்களையும் உண்டாக்கும்" என்கிறார்.

இப்படி கலப்படம் செய்யப்பட்ட பழங்களை மக்களாலேயே சுலபமாக கண்டுபிடிக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், "ஒரு டிஷூ பேப்பர் (Tissue Paper) அல்லது ஒரு சாதாரண வெள்ளை துணியை எடுத்துக்கொண்டு, வெட்டிய பழத்தின் உட்பகுதியின் மீது அழுத்தி சாறை எடுக்கவேண்டும். சாயம் கலந்த பழமாக இருப்பின், சாயத்தின் நிறப் பிசுக்கு அந்த துணியில் ஒட்டிக்கொள்ளும். கலப்படமல்லாத பழத்தில் சாறுடைய ஈரப்பதம் மட்டுமே துணியில் ஒட்டும்," என்று கூறினார்.

பழங்களில் கலப்படம்

பட மூலாதாரம், Getty Images

எக்ஸ்பிரஸ் வேகத்தில் பழுக்கும் மாம்பழம்

கோடை காலம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைத்து மகிழும் ஒரு பழவகை மாம்பழம். செயற்கையாக பழுக்க வைக்கும் சர்ச்சையில் அடிக்கடி சிக்கும் மாம்பழத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்தைப் பற்றியும் சதிஷ்குமார் விளக்கினார்.

  • "கோடை காலம் தொடங்கும்போதே மாம்பழ வியாபாரிகளுக்கு அரசு தரப்பில் மாம்பழத்தை பழுக்க வைக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கிறோம்.
  • Enripe என்ற ஒரு ரசாயன பாக்கெட்டை இதற்கு பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அதைத் தவறான செயல்முறையில் பயன்படுத்தினால் மாம்பழம் அதன் ஊட்டச்சத்து அனைத்தையும் இழந்து நச்சுத்தன்மை கொண்டதாகவும் மாறும்.
  • குறிப்பிட்ட அளவு பாக்கெட்டுகளை குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு மட்டுமே பழங்களுக்கு மத்தியில் வைக்க வேண்டும். அதன் ஆவி மட்டுமே பழங்கள் மீது படவேண்டும்.
பழங்களில் கலப்படம்

பட மூலாதாரம், Getty Images

  • அந்த பாக்கெட்டுகள் பழங்களோடு நேரடி தொடர்பு கொள்ளக்கூடாது.
  • இப்படி பழுக்க 42 மணி நேரம் வரை ஆகும்.
  • ஆனால் பழங்களை விரைவில் பழுக்க வைப்பதற்காக பாக்கெட்டுகளைப் பிரித்து அவற்றை அதிக எண்ணிக்கையில் பழங்களோடு நேரடி தொடர்பில் வைக்கிறார்கள்.

ரசாயன கலப்பில்லா பழங்களை எப்படி கண்டறிவது?

ரசாயனம் கலந்த பழங்களை மனிதர்கள் உட்கொள்வதால் புற்றுநோய் வரும் அபாயம் இருக்கிறது. மக்கள் மாம்பழம் வாங்கும்போது சில விஷயங்களை கவனிக்கத் தவறுகிறார்கள் என்றும் சதீஷ்குமார் கூறுகிறார்.

  • ஒரு கூடையில் உள்ள அனைத்து பழங்களும் ஒரே அளவில் பழுத்திருக்கும். ஆனால் நடைமுறையில் அப்படி பழுக்க வாய்ப்பில்லை.
  • ரசாயனம் அல்லாத மாம்பழத்தை கண்டறிய சில வழிமுறைகள் உள்ளன.
  • ரசாயனம் கலந்த மாம்பழம், இயற்கை மணமற்று இருக்கும்.
  • ரசாயனமுள்ள மாம்பழம் முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இயற்கையாக பழுத்த மாம்பழம் அப்படி இருக்காது.
  • ரசாயனமுள்ள மாம்பழத்தை தண்ணீரில் போட்டால் அது மிதக்கும்.
  • இயற்கையானது மிதக்காது. இறுதியாக ரசாயனமுள்ள மாம்பழத்தைச் சாப்பிடும்போது புளிப்பு சுவையை உணர முடியும்.
  • அனைத்திற்கும் மேலாக மாம்பழத்தை நன்கு கழுவி விட்டு தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது எப்போதும் நல்லது", என்கிறார் சதீஷ் குமார்.

சில நாட்களுக்கு முன் சென்னையில் ஒரே சந்தையில் 5 டன் மாம்பழங்களை ரசாயனம் கலந்ததாக கண்டறிந்து உணவு பாதுகாப்பு துறையினர் அழித்தனர்.

கலப்பட பழங்கள்
படக்குறிப்பு, சென்னையில் நடந்த ஆய்வின்போது, மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பழரசத்திலும் கலப்படம்

வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள மக்கள் வெளியிடங்களில் பழரசம் வாங்கி அருந்துவது வழக்கமாகி விட்டது. அதன் சுவையையும் குளிர்ச்சியையும் மட்டும் கவனிக்கும் மக்கள் அது தயாரிக்கப்படும் முறையை கவனிப்பதும் முக்கியம் என்கிறார் உணவு அதிகாரியான சதிஷ் குமார்.

"கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சோதனையில் பல கடைகளில் அழுகிய நிலையில் உள்ள பழங்களைக் கொண்டு பழரசம் தயாரிக்கப்படுவதைக் கண்டுபிடித்தோம். ஆனால் மக்கள் அதைக் குடிக்கும்போது சுவையானதாகத்தான் தெரியும். அதனால் மக்கள் தங்கள் கண் முன் தயாரிக்கப்படும் பழரசத்தை மட்டும் குடிப்பது நல்லது," என்று கூறினார்.

எப்படி புகார் அளிப்பது?

"இப்படி பழவகை கலப்படம் மட்டுமன்றி, வேறு எந்த உணவு கலப்படம் தொடர்பாக மக்கள் புகாரளிக்க விரும்பினாலும் TN Food Safety Consumer App என்ற தமிழ்நாடு அரசின் செயலியிலும் foodsafety.tn.gov.in என்ற இணையதளத்திலும் புகைப்படங்களுடன் புகாரளித்தால் அரசு அதிகாரிகள் இரண்டு நாட்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்," என்கிறார் உணவுப் பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார்.

"நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் உணவு பாதுகாப்பு ஆய்வு அதிகாரிகள் இருக்கிறார்கள். புகாரளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். எனவே மக்கள் தயங்காமல் புகாரை தெரிவிக்கலாம்," என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: