அமித்ஷா நிகழ்ச்சியில் 13 பேர் பலியானது ஏன்? தவறு நடந்தது எங்கே? பா.ஜ.க. கூட்டணி அரசு என்ன செய்தது?

அமித்ஷா நிகழ்ச்சியில் 13 பேர் பலியானது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரஜக்தா போல்
    • பதவி, நவி மும்பையிலிருந்து பிபிசி மராத்தி

சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மகாராஷ்டிரா அரசு சார்பாக 'மராட்டிய பூஷண்' விருது வழங்கும் விழா ஏப்ரல் 16ஆம் தேதி நவிமும்பையில் உள்ள கார்கரில் ஒரு திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு விருதை வழங்கினார்.

அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு ‘மகாராஷ்டிர பூஷண்’ விருது வழங்கப்பட்டபோது, ​​அவரை நம்பிய லட்சக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சிக்காக திரண்டிருந்தனர். அவர்களில் பலர் வெயிலின் தாக்கத்தால் (Heat Stroke) பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்ததில் 13 பேர் இறந்தனர்.

மருத்துவமனையில் அனுமதி

மும்பை, வெயில், அமித்ஷா, வெப்பம்

பட மூலாதாரம், PRAJAKTA POL

நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலரிடம் பிபிசி மராத்தி பேசியது. நிகழ்ச்சி நடந்த இடத்தில் செய்யப்பட்டு இருந்த ஏற்பாடு குறித்தும், நிகழ்ச்சிக்குப் பிறகு என்ன நடந்தது என்றும் அவர்களிடம் கேள்விகளை முன்வைத்தது.

மகாராஷ்டிரா பூஷன் விருது நிகழ்ச்சிக்கு, 20 லட்சம் பேர் வருவார்கள் என கணிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் 8-9 லட்சம் பேர் வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் முதலே ஏராளமானோர் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு கூட்டத்திற்கு வந்திருந்த பலர் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டனர். சிலர் இந்தக் கூட்டத்திலேயே மயங்கி விழுந்தனர்.

இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மயக்கமடைந்த நபர்கள், அருகில் உள்ள பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-60 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 பேர் வெயிலின் தாக்கத்தால் MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையின் இந்த வார்டுக்கு சென்றபோது, ​​50 வயதான வித்யா பாட்டீல் அமர்ந்திருந்தார். அவரது மகனும் உடனிருந்தார். மருத்துவமனைக்கு தொடர்ச்சியாக வரும் தலைவர்களின் கூட்டங்களில் இருந்து விலகி இருக்கும் வகையில் அவர் வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நிலை குறித்து உறவினர்கள் கேட்டபோது, ​​இப்போது தலைவர்கள் வந்து விசாரித்து செல்கிறார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் பதிலளித்துள்ளது.

ஆனால் வந்து செல்லும் எந்த தலைவரும் எங்களை சந்தித்து 'சாப்பிட்டீர்களா' என்று கூட கேட்கவில்லை என நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ​​“விராரில் இருந்து நாங்கள் 60 பேர் வந்து இருந்தோம். ரொம்ப தூரத்தில் இருந்து வர வேண்டும் என்பதால் முந்தைய நாளே நாங்கள் வந்து விட்டோம். நாங்கள் தங்குவதற்கு செய்யப்பட்ட ஏற்பாடு நன்றாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும், என் மனைவி பார்வதி பாட்டீல் வெப்பத்தால் அவதிப்பட்டார்.

பிறகு எங்கள் ஆட்கள் பார்வதியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தலைவர்கள் இப்போதுதான் வருகிறார்கள். யாரும் என்னை பார்த்து சாப்பிட்டு விட்டேனா என்று கூட கேட்கவில்லை. இப்போது என் மனைவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்," என்று வித்யா பாட்டீல் கூறினார்.

'என் மாமாவுக்கு மாரடைப்பு'

மும்பை, வெயில், அமித்ஷா, வெப்பம்

பட மூலாதாரம், PRAJAKTA POL

இந்த நிகழ்ச்சிக்காக லோனாவாலாவில் இருந்து 12 பேருந்துகளில் வந்திருந்த பக்தர்களின் ஒருவர் நிலேஷ் பதக்.

அவருடன் வந்திருந்த நிலேஷின் தாய் மாமா கைலாஸ் தபாடே (45 வயது) மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது பற்றி நிலேஷ் கூறுகையில், “எங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நாங்கள் அனைவரும் அப்பாசாகேப்பிற்காக வந்தோம். அரசியல் தலைவர்களின் பேச்சுகள் முடிந்தபிறகு, அப்பாசாஹேப் பேசத் தொடங்கினார். அதைக் கேட்க நாங்கள் அனைவரும் காத்திருந்தோம். அன்று வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. குடிக்க தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது, ஆனால் நாங்கள் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து ரொம்ப தூரத்தில் தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது. அப்பாசாகேப்பின் உரை முடிந்ததும் நிகழ்ச்சி முடிந்ததாக அறிவிக்கப்பட்டது,“ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே செல்ல முயற்சி செய்தோம். ஆனால் கேட் சிறியதாக இருந்தது. வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் என் அத்தை அங்கே உட்கார்ந்து விட்டார். கூட்டம் அதிகமாக இருந்தது. நானும் பேருந்துக்கு சென்று விட்டேன். அதற்கு பிறகுதான் என் மாமா மயங்கி விழுந்துவிட்டார் என்று எனக்கு போன் வந்தது. உடனே மருத்துவமனைக்கு சென்றேன். இப்போது அவர் நன்றாக இருக்கிறார். ஆனால் அவரை சந்திக்க எங்களுக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை," என்று பிபிசியிடம் தெரிவித்தார் நிலேஷ்.

'கூட்டத்தில் காலில் அடிபட்டது'

மும்பை, வெயில், அமித்ஷா, வெப்பம்

பட மூலாதாரம், PRAJAKTA POL

தியானேஷ்வர் பாட்டீல் தனது மனைவி மற்றும் 3 வயது மகளுடன் அதிகாலை 4 மணிக்கு சாந்தர்ஸ் சாலையில் இருந்து மகாராஷ்டிரா பூஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டார்.

காலை 6 மணிக்கு, கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு அவர் வந்தடைந்தார். கூட்டத்திற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து தியானேஷ்வர் பாட்டீலிடம் கேட்டபோது, ​​அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்ததாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் மக்கள் கூட்டம் அதிகமாகி விட்டது என்று தியானேஷ்வர் பாட்டீல் கூறினார்.

“ஆனால் நிகழ்ச்சி முடிந்து மதியம் 1.30 மணிக்கு கிளம்பும் போது திடீரென கூட்டம் அலைமோதியது. நான் காலையில் இருந்து பழங்கள் மட்டுமே சாப்பிட்டேன். வெயில் மிக அதிகமாக இருந்தது. எனக்கு மயக்கம் வர ஆரம்பித்தது."

"மனைவியிடம் என் மகள் இருந்தாள். எனக்கு மயக்கம் வந்து கீழே விழுந்துவிட்டேன். என்னை பிடிக்க வந்த போது என் மனைவியும் கீழே விழுந்து விட்டார். ஆனால் இப்போது நான் நன்றாக இருக்கிறேன்," என்று தியானேஷ்வர் பாட்டீல் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்காக முர்பாத்தில் இருந்து வந்திருந்த 45 வயதான நரேந்திர கெய்க்வாட், நிகழ்ச்சி முடிந்ததும் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார். அதில் அவரது இடது காலில் அடிபட்டது. அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் இப்போது கெய்க்வாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு

மும்பை, வெயில், அமித்ஷா, வெப்பம்

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிராவில் நடந்த இந்த சம்பவம் குறித்து தங்கள் கவலையை அரசியல் தலைவர்கள் பதிவுசெய்துள்ளனர்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ராஜ் தாக்கரே ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக ராஜ் தாக்கரே மருத்துவமனைக்குச் சென்றார்.

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவரான ராஜ் தாக்கரே சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

"இந்த சம்பவத்தை மாநில அரசால் தவிர்த்திருக்க முடியும். காலை முதலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அரசு நினைத்து இருந்தால் இந்த நிகழ்ச்சியை ராஜ்பவனில் நடத்தியிருக்கலாம் அல்லது மாலை நேரத்தில் கூட்டத்தை கூட்டி இருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம்," என்று ராஜ் தாக்கரே தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: