சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாத சுவாமி திருக்கோவிலில் யாக சாலைக்கு மண்ணெடுக்கத் தோண்டியபோது 20க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகளும் நூற்றுக்கணக்கான செப்பேடுகளும் கிடைத்துள்ளன.
குடமுழுக்கு பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாத சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்துவதற்கு பணிகள் நடந்துவருகின்றன. மே 24ஆம் தேதி அங்கு குடமுழுக்குச் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில், அந்த விழாவுக்கு யாக சாலை அமைக்க மண் எடுப்பதற்காக கோவிலுக்குள் மேற்குக் கோபுர வாசல் அருகே நேற்று பள்ளம் தோண்டப்பட்டது. இரண்டடி ஆழம் தோண்டிய நிலையில், சில சிலைகள் தட்டுப்பட்டன. இதையடுத்து, மிகக் கவனமாக பணிகள் நடைபெற்றன.
அப்போது அந்தப் பள்ளத்தில் இருந்து விநாயகர், முருகன், வள்ளி - தெய்வானை, சோமாஸ்கந்தர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சிவகாமி உள்பட 23 செப்புச் சிலைகள் கிடைத்தன.

இந்தச் சிலைகள் அரையடி முதல் இரண்டு அடி வரை உயரம் கொண்டவையாக இருந்தன. இதுதவிர, 493 செப்பேடுகளும் 16 பூஜை பொருட்களும் 15 பீடங்களும் 50 வேறு சில உலோகப் பொருட்களும் கிடைத்தன.
இங்கு கிடைத்த செப்பேடுகளில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழி தேவாரப் பதிகம் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், அனைத்து செப்பேடுகளையும் முழுமையாகப் படித்த பிறகே, அதில் என்னென்ன பாடல்கள் அல்லது தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது தெரியவரும்.
இதுபோல பொருட்கள் கிடைத்த தகவல் தெரிந்ததும் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோயிலுக்கு அவற்றைப் பார்வையிட்டார்.

'மிகப் பெரிய அதிசயம்'
இந்தப் பொருட்கள் கிடைத்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கோவிலுக்கு வந்தனர். ஆனால், அந்தப் பொருட்களை வருவாய்த் துறையினர் எடுத்துச் செல்ல கோவில் நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை. இப்போதைக்கு இந்தப் பொருட்கள் கோவிலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இன்று, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் ஓலைச்சுவடி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நூலாக்கக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் சென்னையிலிருந்து சீர்காழி சென்று அந்த செப்பேடுகளில் உள்ள தகவல்களை ஆராய்ந்து வருகின்றனர்.
"இது மிகப் பெரிய அதிசயம். இதுவரை தமிழ்நாட்டில் செப்பேட்டில் எழுதப்பட்ட தேவாரம் கிடைத்ததில்லை. ஆனால், தேவாரப் பாடல்கள் செப்பேட்டில் எழுதப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. சிதம்பரம் கோவிலில் குலோத்துங்கச் சோழனிடமும் அவனது மகன் விக்கிரம சோழனிடமும் தளபதியாக இருந்த நரலோக வீரன் என்பவன் செப்பேடுகளில் தேவாரப் பாடல்களை எழுதியதாக சிதம்பரம் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
ஆகவே தற்போது கிடைத்துள்ள செப்பேடுகள் அவனால் எழுதப்பட்டதாக இருக்கலாம்" என்கிறார் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.
செப்பேட்டில் எழுதப்பட்ட தேவாரம்

குலோத்துங்கச் சோழனிடமும் விக்கிரம சோழனிடமும் தளபதியாக இருந்த நரலோக வீரன், சிதம்பரம் கோவிலில் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். இந்தக் கோவிலில் இரண்டு பெரிய நுழைவாயில்களைக் கட்டவும் சந்நிதியை விரிவுபடுத்தவும் செய்தார். ஊர்வலப் பாதைகளில் விளக்குகளை எரியச் செய்தார். நடராசர் பிட்சாடன யாத்திரையில் செல்வதற்காக ரிஷப வாகனம் ஒன்றை அமைத்துத் தந்தார். அதோடு நூறு கால் மண்டபம் ஒன்றையும் கட்டினார்.
இவர் திருஞான சம்பந்தர் தேவாரத்தை ஓதுவதற்கென்று மண்டபம் ஒன்றை அமைத்ததோடு, மூவர் தேவாரத்தை செப்பேடுகளில் எழுதவும் ஏற்பாடு செய்ததாக தனது பெரிய புராண ஆய்வு நூலில் மா. ராசமாணிக்கனார் கூறியிருக்கிறார்.
இந்தச் சிலைகளும் செப்பேடுகளும் ஏன் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கின்றன? "தமிழ்நாட்டின் மீது பல முறை அந்நியர் படையெடுப்பு நடந்திருக்கிறது.

மாலிக் கபூர் படையெடுப்பு, பிரெஞ்சு படையெடுப்பு, ஆங்கிலேயர் படையெடுப்பு என தொடர்ந்து நடந்திருக்கிறது. இப்போது கிடைத்திருப்பவை முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தைச் சேர்ந்தது என்பதால் மாலிக் கபூர் படையெடுப்பிலிருந்து இந்தப் பொருட்களைக் காக்க புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம்" என்கிறார் பாலசுப்பிரமணியம்.
தமிழ்நாட்டில் இதுவரை செப்பேட்டில் எழுதப்பட்ட தேவாரம் கிடைத்ததில்லை என்றாலும், கல்வெட்டுகளில் தேவாரப் பாடல்கள் கிடைத்துள்ளன. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரிக்கு அருகில் உள்ள திருவிடைவாயிலில் உள்ள புண்ணியநாதர் கோவிலில் 1912ஆம் ஆண்டில் கல்வெட்டில் ஒரு தேவாரப் பாடல் கண்டுபிடிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட சைவத் திருத்தலமாகும். திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்ற பதிகத்தைப் பாடியது இந்தத் தலத்தில்தான் என நம்பப்படுகிறது.
இக்கோயிலில் நாற்பத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. பல்லவ மன்னர்களின் காலத்திலேயே கட்டப்பட்ட இந்தக் கோவில் தொடர்ந்து சோழ மன்னர்களால் மேம்படுத்தப்பட்டது. வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் ஆகிய சோழ மன்னர்கள் இந்தக் கோவிலுக்கு நிவந்தங்களை அளித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












