மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநர்களுக்கு காலக்கெடு: மு.க.ஸ்டாலின் யோசனைக்கு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் வரவேற்பு எப்படி?

பட மூலாதாரம், M.K.Stalin
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது மாநில ஆளுநர்கள் குறித்த கால வரம்புக்குள் ஒப்புதல் வழங்கும் வகையில் அவர்களுக்கு குடியரசு தலைவர் அறிவுரை வழங்கவும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை நிறைவேற்றிய தனித்தீர்மானம் போல, பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாத மற்ற மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக கேரளா, மேற்கு வங்கம், பிகார், ஒடிஷா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது. நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதை காண்கிறோம். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநரின் கடமைகளும் பொறுப்புகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும் அவை இப்போது மதிக்கப்படுவதோ பின்பற்றப்படுவதோ இல்லை. அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன," என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் தலையீடு

"மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் அந்த குறிப்பிட்ட இனங்களில் முடங்கிப்போயுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வடிவகளுக்கு ஒப்புதல் வழங்கும் பொருட்டு ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களை பலமுறை தெளிவுபடுத்தியும் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதேநிலைதான் பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன."
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"இந்தச் சூழ்நிலையில் அந்தந்த மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு ஒன்றிய அரசு மற்றும் இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும் என்று கருதி 10-4-2023 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் சாராம்சத்தையும் கடிதத்துடன் இணைக்கிறேன்.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நோக்கம், மற்ற மாநிலங்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன். உங்களுடைய மாநில சட்டமன்றத்திலும் இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை நிலைநிறுத்துவதற்காக தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என உறுதியாக நம்புகிறேன்," என்று கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிற மாநிலங்களில் கள யதார்த்தம்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் இந்த கடிதம் தொடர்பான தகவல்கள், கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்து வெளியாகும் ஊடகங்களிலும் செய்தியாக வெளி வந்தன. இதன் மூலம் தேசிய பிரதான ஊடகங்களின் தேசிய தலைப்புச் செய்திகளில் மு.க.ஸ்டாலின் இடம்பிடித்துள்ளார்.
இந்தப் பின்னணியில், ஸ்டாலின் கடிதத்துக்கு பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களில் எப்படி வரவேற்பு இருக்கும் என அந்த மாநிலங்களின் பிரபல ஊடகங்களில் பணியாற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த முன்முயற்சி, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் உணர்வுகளை ஒன்றிணைக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான கிருஷ்ணா.
இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடக பணியில் இருப்பவர். ஆந்திர பிரதேசத்திலும் பிறகு டெல்லியில் இருந்தும் ஆந்திராவின் பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு மூத்த ஆசிரியராக இருக்கிறார்.
தெலங்கானாவிலும் இதே நிலை

"ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படும் மசோதாவால் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு மட்டுமல்ல. தெலங்கானா மாநிலத்திலும் அத்தகைய சூழல் நிலவுகிறது. தெலங்கானா மாநில ஆளுநரால் 10 மசோதாக்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தபோது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆளுநர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என நீதிமன்றம் சொன்ன பிறகே மூன்று மசோதாவுக்கு அனுமதியும் இரண்டை நிராகரித்தும் மற்றவற்றை மாநில அரசுக்கும் திருப்பி அனுப்பினார் தெலங்கானா ஆளுநர்," என்று கிருஷ்ணா கூறினார்.
"மத்தியில் ஆளும் கட்சியும் மாநிலத்தில் ஆளும் கட்சியும் வெவ்வேறு துருவங்களாக உள்ளபோது இத்தகைய பிரச்னைகள் இயல்பாகவே எழுகின்றன. அதை அனுபவித்து வரும் மாநிலம் என்ற வகையில், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தமது அரசியல் விருப்பத்தை மீறி ஸ்டாலினின் முயற்சிக்கு ஆதரவு தருவார் என எதிர்பார்க்கிறேன்," என்கிறார் கிருஷ்ணா.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு வேறு வழியில்லை

இதேபோல, முதல்வர் ஸ்டாலினின் முன்முயற்சியை காங்கிரஸ் ஆளும் முதல்வர்களும் நிச்சயமாக ஆதரிப்பார்கள் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரேணு முட்டல். இவர் ராஜஸ்தானில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழின் மூத்த ஆசிரியர்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள், மத்திய புலனாய்வு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றைப் பயன்படுத்தி மாநிலத்தில் ஆளும் கட்சியினருக்கு நெருக்கடியை தருவதாக நீண்ட காலமாகவே குற்றம்சாட்டப்பட்டு வருவதாக இவர் கூறுகிறார்.
இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் இதுநாள் வரை ஒற்றுமையாக இல்லை. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அது சாதகம் என்பதால், இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆளும் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக ரேணு தெரிவிக்கிறார்.
இவரது கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் எம்.பி ராகுல் காந்தி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் யாதவ், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசியதை அறிந்தோம்.
அந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அணியில் மேலும் பல கட்சிகளை சேர்க்கும் பொறுப்பை குறிப்பாக, தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்டிர சமிதி தலைவருமான கே. சந்திரசேகர ராவ், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை ஓரணியில் கொண்டு வரவும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை தாமே ஏற்றுக் கொள்வதாக நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
இந்த முன்னேற்றங்களை நம்மிடையே சுட்டிக்காட்டிய ரேணு மிட்டல், மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் தலைவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் இலக்கு வைக்க மத்திய அரசுத் துறைகளை பயன்படுத்தும் போக்கு குறித்து எழும் விமர்சனங்கள் அதிகரித்து வருதவாகவும் குறிப்பிட்டார்.
இத்தகைய நிலைமையை சமாளிக்க வேண்டுமானால் பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். ராஜஸ்தான் மாநிலம் மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் மற்ற இரண்டு மாநிலங்களும் இந்த விஷயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாடு முதல்வரின் முயற்சியை ஆதரிக்க வேண்டும். அதைத்தாண்டி வேறு வழியில்லை என ரேணு கூறுகிறார்.
மேற்கு வங்கத்தில் எதுவும் நடக்கலாம்

மேற்கு வங்க மாநிலத்தில் மாநில ஆளுநராக ஜக்தீப் தன்கர் இருந்தபோது அங்கு ஆளும் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு கடும் தலைவலியை கொடுத்து வந்தார்.
பிறகு அவர் குடியரசு துணைத் தலைவர் ஆனதும், மேற்கு வங்க மாநில ஆளுநராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சி.வி. ஆனந்தபோஸ் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். அதன் பின்பு அந்த மாநிலத்தில் ஆளுநருக்கும் முதல்வர் மற்றும் அரசுக்கும் இடையிலான முரண்பாடுகள் வெளிப்படையாக காணப்படவில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திமுகவின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினுடன் இணக்கமான நட்புறவை அவரது தந்தை மு. கருணாநிதியின் ஆட்சிக் காலம் முதல் பேணி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
ஆனால், அவர் சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடிதத்தை ஆமோதித்து தமது மாநில சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்பாக தனித்தீர்மானம் நிறைவேற்ற முற்படுவாரா என்பது கேள்விக்குரியே என்கிறார் நெட்வொர்க் 18 தொலைக்காட்சியின் அரசியல் ஆசிரியர் பல்லவி கோஷ்.
மேற்கு வங்கம் மட்டுமின்றி டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அரசிலும் கூட அத்தகைய தயக்கம் காணப்படலாம். இந்த இரு மாநிலங்களிலும் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல், அரசியல் சூழ்நிலைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதால் வெளிப்படையாக மத்தியில் ஆளும் பாஜக அரசை ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி ஆம் ஆத்மி தலைமை எதிர்வினையாற்றுமா என கவனிக்க வேண்டும் என்கிறார் பல்லவி.
எல்லோருக்கும் 'பிரதமர்' ஆசை உள்ளது

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சந்தித்துப் பேசியதை நினைவுகூர்ந்த பல்லவி, ஆளுநர் விவகாரத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி எதிர்ப்பை வெளிக்காட்டுவதை விட, ஓரணியில் தாங்கள் முதலில் நின்று பலத்தை நிரூபிக்கலாம் என்ற முடிவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருப்பதாகக் கூறுகிறார்.
எதிர்க்கட்சி அணியில் ஓரணியாக திரள ஆசைப்படும் எல்லா தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கும் தாங்களே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் காண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதை ஒதுக்கி வைத்து விட்டு ஓரணியில் சேர்ந்தால் பாஜகவுக்கு எதிரான அணி திரட்டலில் அவை வெற்றி காணலாம் என்கிறார் பல்லவி கோஷ்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் முயற்சி முன்மாதிரியானது என்றாலும் ஒடிஷாவில் அவர் எதிர்பார்ப்பது நடக்கப்போவதில்லை. அதுபோலத்தான் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களிலும் என்கிறார் அவர்.
ஒடிஷாவில் வாய்ப்பில்லை
ஒடிஷா மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி தலைமையிலான அரசுக்கு தலைமை வகிக்கும் முதல்வர் நவீன் பட்நாயக், தனியாக அரசியல் களம் கண்டு வருகிறார். அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாகவும் அவர் இருப்பதாக பார்க்கப்படுகிறார்.
அவரது நிலைப்பாடு குறித்து அம்மாநிலத்தின் பிரபல தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் ஆசுதோஷிடம் பேசினோம். இவர் பிஜு பட்நாயக் காலம் முதல் பிஜு ஜனதா தளம் கட்சியின் அரசியல் முன்னேற்றங்களை மிக நெருக்கமான கவனித்து வருபவர்.
"மு.க. ஸ்டாலினின் தந்தை கருணாநிதியுடன் தற்போதைய முதல்வர் நவீன் பட்நாயக்கும் அவரது தந்தை பிஜு பட்நாயக்கும் நெருங்கிய நட்பை கொண்டவர்கள். அந்த உறவு எப்போதும் இருக்கும். ஆனால், அதற்காக மு.க. ஸ்டாலின் யோசனை தெரிவித்தபடி ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை ஒடிஷாவில் எழவில்லை," என்கிறார் ஆசுதோஷ்.
"பிஜு ஜனதா தளத்தை பொறுத்தவரை, அதற்கு மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணக்கமான உறவும் வேண்டும், தமிழ்நாட்டில் ஸ்டாலின் என்ற பெரிய கட்சியின் தலைவருடன் நட்பும் வேண்டும். அதை அவர் ஒரே பார்வையில் காண மாட்டார். தமிழ்நாட்டில் உள்ளது போல ஒடிஷாவில் ஆளுநர்-முதல்வர் முரண்பாடோ மோதலோ கிடையாது. இங்கு எல்லாம் சுமூகமாகவே இருக்கிறது," என்று ஆசுதோஷ் தெரிவித்தார்.
ஸ்டாலினுக்கு ஆதரவான பார்வை

இதேவேளை, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள முன்முயற்சி அரசியல் கலப்பில்லாதது என்ற கோணத்தில் அவரது செயல்பாடுகளை விவரிக்கிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களான லட்சுமணன் மற்றும் குபேந்திரன்.
"அரசியலமைப்பு சுதந்திரம் மிக்கவர், அதிக அதிகாரம் படைத்தவர், கேள்விக்கு அப்பாற்பட்டவர் என ஆளுநர் பற்றி நாம் நினைத்திருந்த நேரத்தில்தான் பல வழக்குகளில் சமீபத்திய ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்புகளில் ஆளுநர் மட்டுமின்றி குடியரசு தலைவர் முடிவை கூட ரத்து செய்துள்ளன."
"மசோதாவுக்கு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஒப்புதல் தர காலவரையறை இல்லை என்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, எந்த கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் அது ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் அரசியல் விளையாட்டுகளை செய்வதைத் தவிர்க்க முதல்வர் ஸ்டாலின் செய்த முன்முயற்சி அவசியமானது," என்கிறார் லட்சுமணன்.
தேசிய அரசியல் பக்கம் சாய்கிறாரா?

ஆனால், ஆளுநர் விவகாரத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றியதை வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தேசிய அரசியலில் ஆர்வம் வந்து விட்டதாக கூறப்படுவதை தம்மால் ஏற்க முடியாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
ஆளுநர் கடந்த சில மாதங்களாக மசோதா விவகாரத்தில் கொடுத்து வந்த நெருக்கடி, முன்னுக்குப் பின் முரணாக செயல்பட்டது போன்ற விரக்தியால்தான் தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற முதல்வரை தூண்டியிருக்க வேண்டும் என்று நம்புவதாக அவர் கூறுகிறார்.
முதல்வர் ஸ்டாலினை தேசிய அரசியலுக்குள் கொண்டு வர பல தலைவர்கள் முயன்றாலும், தமது தந்தை கருணாநிதியின் வழியிலேயே அவர் தமிழ்நாட்டுடன் தமது அரசியல் வரம்பை நிறுத்திக் கொள்வார் என்கிறார் குபேந்திரன். அதே சமயம், ஆளுநர் தொடர்பான தீர்மான விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்துக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் சாதகமாக இருப்பார்கள் என்று நம்புவதாக கூறுகிறார் குபேந்திரன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












