வ.உ.சிதம்பரனாரின் சுதேசி கப்பல் கம்பெனியில் பெரியார் பணம் முதலீடு செய்தாரா? ஒரு வரலாற்றுத் தேடல்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

வ.உ. சிதம்பரனார் துவங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தில் பெரியார் முதலீடு செய்தாரா இல்லையா என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்துவருகின்றன. இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது?

ஒரு ஃபேஸ்புக் விவாதத்தில்தான் இந்த விவகாரம் துவங்கியது. பெரியாரியலாளரான வாலாசா வல்லவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பெரியார் தொடர்பாக வீரமணி தொகுத்த நூலின் ஒரு பக்கத்தை வெளியிட்டு, வ.உ.சியின் கப்பல் நிறுவனத்திற்கு பெரியார் பங்களிப்புச் செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது அந்த ஃபேஸ்புக் பதிவிலேயே வ.உ.சி. ஆய்வாளர் ரெங்கைய்யா முருகன் உள்ளிட்டோர், இது தொடர்பாக சந்தேகங்களைப் பதிவுசெய்தனர். இதற்குப் பிறகு, அந்த விவாதம் அந்த ஃபேஸ்புக் பக்கத்தைத் தாண்டியும் பரவியது. வேறு சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் நடந்தன.

தன்னுடைய முன்னோடியாக வ.உ. சிதம்பரனாரை பெரியார் குறிப்பிட்டிருந்தாலும் அவரது கப்பல் நிறுவனத்தில் பெரியார் முதலீடு செய்யவில்லை என சிலர் குறிப்பிட்டனர். ஆனால், பெரியாரியலாளர்கள், பெரியார் அவருடைய சொந்தத் தொகை 5,000 ரூபாய் உள்பட சுமார் 35,000 ரூபாயை கப்பல் நிறுவனத்திற்காகத் தந்தார் என வாதிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்கள் சொல்வதென்ன?

இந்த விவகாரத்தைப் புரிந்துகொள்ள, முதலில் ஒரு சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமென வ.உ. சிதம்பரனார் ஏன் விரும்பினார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பான தகவல்களை வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய 'Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle Against the British Maritime Empire' நூல் விரிவாகத் தருகிறது.

அதாவது, 1906-ஆம் ஆண்டுவாக்கில் தூத்துக்குடியில் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பனி வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் தங்களுக்குச் சாதகமாக இல்லை என தூத்துக்குடியைச் சேர்ந்த சில வர்த்தகர்கள் கருதினர்.

அவர்கள் வ.உ.சியை அணுகி, தாங்கள் தூத்துக்குடிக்கும் கொழும்பு நகருக்கும் இடையில் ஒரு சுதேசி கப்பல் போக்குவரத்தை நடத்த விரும்புவதாகத் தெரிவித்தனர். அந்த முயற்சியில் அவரும் இணைந்துகொள்ள வேண்டுமெனக் கூறினர்.

இதில் ஈர்க்கப்பட்ட வ.உ.சி. தனது வழக்கறிஞர் பணியைவிட்டுவிட்டு, அவர்களோடு இணைந்துகொண்டார். ஆரம்பத்தில் வேறொரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கப்பல்கள் இயக்கப்பட்டன. ஆனால், அதிலும் பிரச்னைகள் ஏற்படவே, சொந்தமாக ஒரு கப்பல் நிறுவனத்தை துவங்க முடிவுசெய்யப்பட்டது.

அப்படித்தான் சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பனிக்கான அடித்தளம் இடப்பட்டது. 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி தி சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பனி, கூட்டுப் பங்கு நிறுவனமாக கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டது.

இந்தக் கம்பனிக்கு பல நோக்கங்கள் இருந்தன. இந்தியா, இலங்கை மற்றும் பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கடல்சார் பயிற்சியளிப்பது, கப்பல் கட்டுவது, கடல்சார் பயிற்சிகளை அளிக்கும் நிறுவனங்களை உருவாக்குவது, கடல்சார் வர்த்தகம், கப்பல்களைச் செலுத்தும் துறைகளில் இந்தியா, இலங்கை, ஆசிய நாடுகளுக்கு இடையில் நட்புணர்வையும் ஒத்துழைப்பையும் உருவாக்குவது ஆகியவை இதன் நோக்கங்களில் சிலவாக இருந்தன.

கப்பல்களைக் கட்டுவதற்கும் பழுதுபார்ப்பதற்குமான தளங்களை உருவாக்கவும் இந்த நிறுவனம் விரும்பியது. அதாவது ஒரு நிறுவனமாக மட்டுமில்லாமல், தேசியப் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கமும் இந்த நிறுவனத்திற்கு இருந்தது.

கப்பல் நிறுவனத்தில் யாரெல்லாம் முதலீடு செய்தனர்?

இந்தக் கப்பல் நிறுவனத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் முதலீடாகத் தேவைப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இது மிகப் பெரிய தொகை. இந்தக் கப்பல் நிறுவனத்தில் பங்குகளை வாங்கிக் கொள்ள பலர் முன்வந்தனர்.

இது தொடர்பான தகவல்களையும் Swadeshi Steam நூல் விரிவாகத் தருகிறது. எத்தனை பேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள் என்பது துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும், முதலீடு செய்தவர்கள் பலரது பெயர்களை இந்த நூல் தருகிறது.

வள்ளல் பாண்டித்துரைத் தேவர் மிகப் பெரிய அளவில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் இதில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்தனர்.

தூத்துக்குடியில் சுதேசி ஸ்டோர் என்ற கடையை வைத்திருந்த பி. வேங்கடராமானுஜுலு, 10,000 ரூபாயை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார். இயக்குநர்கள் குழுவிலும் இடம்பெற்றார். தூத்துக்குடியைச் சேர்ந்த வங்கியாளரும் வர்த்தகருமான எம்.வி. மாய நாடார், 100க்கும் மேற்பட்ட பங்குகளை வாங்கியிருந்தார்.

இந்த புதிய கப்பல் நிறுவனத்தில் முதலீடு செய்வதில் சென்னையில் இருந்தோர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்கிறது நூல். பம்பாயிலிருந்து 10,000 பங்குகளும் கல்கத்தாவிலிருந்து 15 ஆயிரம் பங்குகளும் வாங்கப்பட்டன. ஆனால், சென்னையைச் சேர்ந்தவர்கள் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை என்றாலும் சிலர் முதலீடு செய்ய முன்வந்தார்கள்.

சென்னையில் வசித்துவந்த குஜராத்தி வர்த்தகரான லாட் கோவிந்ததாஸ் 120 பங்குகளை வாங்கிக்கொண்டார். இந்தியன் வங்கியின் பிரமோட்டர்களில் ஒருவரும் சட்ட நிபுணருமான வி. கிருஷ்ணசாமி ஐயர் 25 பங்குகளை வாங்கினார். மற்றொரு வழக்கறிஞரான பி.ஆர். சுந்தர ஐயர் 12 பங்குகளை வாங்கினார்.

பத்திரிகையாளரான ஜி. சுப்பிரமணிய ஐயர் ஐந்து பங்குகளை வாங்கினார். சேலம், ஈரோடு போன்ற இடங்களில் இருந்தும் முதலீடுகள் வந்தன. சேலத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு பங்குகள் வாங்கப்பட்டன.

சேலத்தில் வழக்கறிஞராக இருந்த சி. ராஜகோபாலாச்சாரியார் ஆயிரம் ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கியதாக அவருடைய பேரன் குறிப்பிட்டார். இந்தக் கப்பல் நிறுவனம் சிரமமான காலகட்டத்தை அடைந்தபோது தான் பணம் கொடுத்ததாகவும் ஆரம்பத்தில் பங்குகளை வாங்கவில்லையெனவும் ராஜாஜி பிறகு குறிப்பிட்டதாக இந்த நூல் கூறுகிறது.

பெரியார் பணம் முதலீடு செய்தாரா?

ஈரோட்டில் இருந்து சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டதாக அந்தக் காலகட்டத்தில் வெளியான சுதேசமித்திரன், தி ஹிந்து நாளிதழ்கள் குறிப்பிட்டன. ஆனால், அந்தக் காலகட்டத்தில் ஈரோட்டில் மிகப் பெரிய வர்த்தகராக இருந்த பெரியார் ஈ.வெ.ராமசாமி, மொத்தமாக 35 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு கப்பல் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டதாக பல ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்டார்.

சென்னை சேத்துப்பட்டில் வ.உ.சிதம்பரனார் பெயரில் ஒரு அரங்கைத் திறந்து வைத்துப் பேசிய பெரியார் மேற்குறிப்பிட்ட தகவல்களைத் தெரிவித்தார். 1948-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி வெளியான விடுதலையில் இந்தப் பேச்சு இடம்பெற்றிருக்கிறது.

"நமது வ.உ.சி. அவர்கள் வெள்ளையர்களின் கப்பலுக்கு எதிராக கப்பலையும் கட்டி, தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் பிரயாணக் கப்பலாக ஏற்பாடு செய்தார். அந்தக் காலத்தில் நான் நன்றாக வாழ்ந்திருந்தவன்தான். வ.உ.சியின் இந்த முயற்சிக்காக எங்கள் ஊரிலேயே 35 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து கொடுத்தோம். அதில் எங்கள் பணம் 5 ஆயிரம். முஸ்லிம் நண்பர்களுடையது ஐந்தாயிரம். மற்றவர்களும் ஆயிரம், ஐநூறு என்பது போன்று உதவிசெய்து, அவரது முயற்சிக்கு பலந்தேடினோம்." என்று அந்தப் பேச்சில் பெரியார் குறிப்பிட்டதாக 'விடுதலை'யில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வேறு இடங்களில் இது தொடர்பான பதிவுகள் இல்லை.

ஆனால், வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்திற்கு பெரியார் நிதி அளித்ததாக இந்த ஒரு இடத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்கிறார் வ.உ.சி. ஆய்வாளரான ரெங்கையா முருகன்.

"1919லிருந்து 1936-ஆம் ஆண்டுவரை வ.உ.சியும் பெரியாரும் மிக நெருக்கமாக இருந்தார்கள். இருவரும் இணைந்து பல கூட்டங்களில் பேசினார்கள். இந்தக் கூட்டங்கள் எதிலும் கப்பல் நிறுவனத்தில் செய்த முதலீடுகள் குறித்து இருவரும் பேசவில்லை. அதேபோல, வ.உ.சியின் மறைவை ஒட்டி, இரு கட்டுரைகள் பெரியாரால் எழுதப்பட்டன. அந்தக் கட்டுரைகளிலும் இந்த தகவல் இல்லை. பெரியார் வாழ்ந்த போதே எழுதப்பட்ட அவரது சரிதத்திலும் இந்தத் தகவல் இடம்பெறவில்லை. ஆனால், பல ஆண்டுகள் கழித்து ஒரு கூட்டத்தில் பேசும்போதுதான் இதுபோன்ற ஒரு தகவலை பெரியார் முன்வைக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்" என்கிறார் அவர்.

ஆனால், இந்த விவகாரத்தில் பெரியார் தவறான தகவலை எதற்காகத் தெரிவிக்கப் போகிறார் என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். "இது போன்ற தகவலை பல ஆண்டுகளுக்குப் பிறகு தவறாகச் சொல்வதால் பெரியாருக்கு என்ன கிடைக்கப் போகிறது? 1928-இல் நாகப்பட்டினத்தில் பேசிய வ.உ.சி., நானும் பெரியாரும் 20 ஆண்டுகளாக நெருக்கமாக இருந்துவருகிறோம் எனக் குறிப்பிடுகிறார். அந்தக் காலகட்டத்தில்தான் இந்த கப்பல் நிறுவனம் உருவானது."

"ஆகவே பெரியார் நிதி அனுப்பியிருக்கவே வாய்ப்பிருக்கிறது. வேறு எங்கும் ஏன் ஆதாரம் இல்லை என்று கேள்வியெழுப்புவது சரியானதில்லை. பணம் கொடுத்தவரே எத்தனை இடத்தில் போய் சொல்ல முடியும்? இதில் சம்பந்தப்பட்டவர்களும் பிறரும் சொல்லியிருக்க வேண்டும். சொல்லவில்லை என்பதால் அப்படி நடக்கவில்லை என்றாகிவிடுமா?" என்கிறார் மார்க்சிய - பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வாலாசா வல்லவன்.

பெரியார் தரப்பில் பல சிறிய ஆவணங்களைக்கூட பத்திரமாக வைத்திருக்கும் நிலையில், பெரியார் செலுத்திய பணத்திற்கு பதிலாகத் தரப்பட்ட பங்கு பத்திரங்களும் பாதுகாக்கப்பட்டிருக்குமே எனக் கேள்வியெழுப்புகிறார் ரெங்கைய்யா முருகன். ஆனால், பல நூறு பங்கு பத்திரங்கள் வெளியிடப்பட்டும் தற்போதைய ஆய்வாளர்களுக்கு அவை கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் வாலசா வல்லவன். ஆ.இரா. வேங்கடாசலபதியின் நூலில் இரண்டு பங்கு பத்திரங்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

"இது ஒரு விவாதமே இல்லை. பெரியார் முதலீடு செய்ததாக நம்பாவிட்டால், அதனால் என்ன ஆகிவிடப்போகிறது?" என்கிறார் வாலாசா வல்லவன்.

சுதேசி கப்பல் நிறுவனத்திற்கு என்ன ஆனது?

சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் நிறுவனத்திற்காக Gallia, Lawoe என இரு கப்பல்கள் வாங்கப்பட்டன. ஆனால், விரைவிலேயே வ.உ.சிக்கும் நிறுவனத்தின் பிற இயக்குநர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. 1907-ஆம் ஆண்டு ஜூலையில் Lawoe கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு விபத்தைச் சந்தித்தது. ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டது.

1908-ஆம் ஆண்டில் வ.உ.சி. அந்த நிறுவனத்தின் துணைச் செயலர் பதவியிலிருந்து விலக வற்புறுத்தப்பட்டார். 'கண்காணிப்பாளர்/ஏஜென்ட்' என்ற ஊதியத்துடன் கூடிய பதவி அவருக்குக் கொடுக்கப்பட்டது.

வ.உ.சி. தனது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டுமென அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் 1908-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி அவரிடம் வலியுறுத்தினர்.

மார்ச் 12-ஆம் தேதி வ.உ.சி. கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மிகப் பெரிய கலவரம் மூண்டது. காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

ஜூன் மாதத்தின் துவக்கத்தில் சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் நிறுவனத்தில் இருந்து வ.உ.சி. ராஜினாமா செய்தார். ஜூலை மாதத்தில் வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவரது தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

தொடர்ந்து இழப்பைச் சந்தித்துவந்த சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பனி 1910-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. இரண்டு கப்பல்களும் விற்கப்பட்டன.1911-இல் அந்த நிறுவனம் கலைக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு