குயர் சமூக மக்களுக்கு ஜுன் மாதம் ஏன் முக்கியமானதாக இருக்கிறது?

தன்பாலின ஈர்ப்பு, குயர்

பட மூலாதாரம், Getty Images

”2019ஆம் ஆண்டு பெங்களூருக்கு ஒரு வேலை விஷயமாக நான் சென்றிருந்தேன். அப்போது அங்கே ‘பிரைட் வாக்’ நடக்கிறது என்று கூறினார்கள். ’பிரைட் வாக்’ என்றால் என்ன, அது எதற்காக நடைபெறுகிறது என்பது குறித்து எதுவும் தெரியாது. எனவே அந்த இடத்திற்குச் செல்லும்போது யாருக்கும் என்னைத் தெரிந்துவிடாமல் இருக்க முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு சென்றேன்.

ஆனால் அங்கு சென்று பார்த்தபோது, சுற்றுயிருக்கும் மக்கள் அனைவரும் எங்கள் சமுதாய மக்கள் என்று தெரிந்ததும் நான் எனது முகத்தில் இருந்த மாஸ்கை கழற்றிவிட்டேன். உற்சாகமாக நடனமாடினேன். என்னை மறந்து நான் அங்கு மகிழ்ந்து திரிந்தேன். என்னுடைய வாழ்வில் முக்கிய திருப்புனையாக நான் பார்ப்பது அந்த பிரைட் வாக்கைதான்!”

தன்பால் ஈர்ப்பு, பால் ஈர்ப்பு அற்ற, பால் புதுமையினர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்காக (LGBTQIA+) நடத்தப்படும் ‘பிரைட் வாக்கில்’ (Pride Walk) தான் முதன்முதலில் பங்கெடுத்த அனுபவம் குறித்து இப்படி கூறுகிறார் திருநங்கை மரக்கா.

மரக்காவை போல எத்தனையோ குயர் சமுதாய மக்களுக்கு ’பிரைட் வாக்’ ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. பொதுமக்களுக்கு இவர்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தியிருக்கிறது.

திருநர் சமுதாயம், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் பால் புதுமையினர் ஆகியோரின் உரிமைகளையும், வரலாற்று பக்கங்களையும் பொது சமூகத்திற்கு எடுத்துரைக்கும் விதமாக உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில், LGBTQ+ மக்களால் இந்த ஜூன் மாதம் Pride மாதமாகக் கொண்டாடப்படுகிறது.

சில நாடுகளில் ஜூன் தவிர மற்ற சில மாதங்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலேயே மும்பை, பெங்களூர், கொல்கத்தா போன்ற மற்ற நகரங்களில் இது வெவ்வேறு மாதங்களில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

‘பிரைட் வாக்’ என்றால் என்ன?

தமிழகத்தைப் பொறுத்தவரை LGBTQ+ மக்களுக்கான ‘பிரைட் மாதமாக’ ஜூன் மாதமே எப்போதும் தேர்வு செய்யப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிறன்று ‘பிரைட் வாக்’ நடத்தப்பட்டு வருகிறது.

நகரின் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, திருநங்கைகள், தன் பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் பால் புதுமையினர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும், தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்துகொண்டு, அவர்களது அடையாளங்களை எந்தவொரு தயக்கமுமின்றி வெளிப்படுத்தி, தங்களது சமுதாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்திக்கொண்டு ஊர்வலமாகவும், கொண்டாட்டத்துடனும் நடந்து செல்வதே ‘பிரைட் வாக்’ என அழைக்கப்படுகிறது.

இந்த ஊர்வலத்தில் குயர் சமுதாய மக்கள் மட்டுமல்லாமல், அவர்களை ஆதரிக்கும் நண்பர்களும், செயற்பாட்டாளர்களும் சில பிரபலங்களும் சில நேரங்களில் குடும்ப உறுப்பினர்களும்கூட பங்கு கொள்வதை நம்மால் காண முடியும்.

’பிரைட்’ தினம் உருவான வரலாறு என்ன?

தன்பாலின ஈர்ப்பு, குயர்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா போன்ற நாடுகளில் தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநர்கள், பால் புதுமையினர் சமுதாய மக்களை இயல்பாக ஏற்றுகொள்ளும் பக்குவம் இன்றளவும் ஏற்படவில்லை. இன்று இந்திய சமூகம், எந்த நிலையில் அவர்களை மக்களை அணுகுகிறதோ, அதேபோன்றுதான் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்கா போன்ற நாடுகளின் நிலையும் இருந்தது.

அன்றைய காலகட்டத்தில், அமெரிக்காவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மிகப்பெரும் ஒடுக்குமுறையைச் சந்தித்து வந்தனர். ஆனால் அந்த ஒடுக்குமுறையிலிருந்து வெடித்த புரட்சிதான் இன்றைக்கு இப்படியான பிரைட் மாதமும், பிரைட் வாக்கும் நடத்தப்படுவதற்கு வழிவகுத்துள்ளது.

1960களில், தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருப்பது அமெரிக்காவில் ஒரு மனநோயாக வகைப்படுத்தப்பட்டது. அவர்கள் காவல்துறையினரால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்பட்டனர். மேலும் சமூகத்தில் பலரால் புறக்கணிக்கப்பட்டனர்.

இங்கிலாந்தில்கூட, தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருப்பது 1967ஆம் ஆண்டுவரை வரை குற்றமாக இருந்தது.

ஆனால் 1969இல் ’ஸ்டோன்வால் கலவரங்கள்’ (Stonewall Riots) வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது. இது தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒன்று திரண்டு போராடவும், சம உரிமைகளுக்காக பிரசாரம் செய்யவும் உதவியது.

அமெரிக்காவில் அன்று இருந்த தன்பாலின ஈர்ப்பாளர்கள் பார்களில் மட்டுமே சற்று சுதந்திரமாகச் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். அவர்களின் சந்திப்பையும், சுதந்திரத்தையும் தொந்தரவு செய்யும் வகையில் அவ்வபோது காவல்துறையினரின் சோதனைகளும், கெடுபிடிகளும் நடப்பது வழக்கம்.

(இங்கே தன்பாலின ஈர்ப்பாளர்களாக குறிப்பிடப்படுவது ஆண்கள் மட்டுமே. ஏனென்றால் தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்றால் ‘Gay’ என்று மட்டும்தான் அன்றைய பொதுமக்கள் பரவலாக அறிந்திருந்தனர்.)

ஜூன் 28, 1969ஆம் ஆண்டு அன்று, அமெரிக்காவின் நியூயார்க்கில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் அடிக்கடி ஒன்றுகூடும் பகுதியான ஸ்டோன்வால் விடுதியில் (Bar) காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

தன்பாலின ஈர்ப்பு, குயர்

அந்த வாரத்தில் அது இரண்டாவது முறையாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை. அவர்கள் 200 பேரை வீதியில் வீசினர், சிலரைத் தாக்கினர்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களை காவல்துறை நடத்தும் விதம் குறித்துப் பெரிதும் கோபமடைந்தனர், எனவே அவர்கள் போராடத்தை தேர்ந்தெடுத்தனர்.

அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதால் சலிப்படைந்த அவர்கள் தங்களது போரட்டங்களை வாரக் கணக்கில் நீடித்தனர். அது ஒருநாள் கலவரமாக வெடித்தது.

இந்த கலவரங்கள் பற்றிய செய்தி உலகம் முழுவதும் பரவியது. மேலும் இது சமத்துவத்திற்காகப் போராடுவதற்கும், உரிமை குழுக்களில் சேர்ந்து எதிர்ப்புகளைப் பதிவு செய்வதற்கும் மற்றவர்களைத் தூண்டியது.

கலவரம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, சமத்துவம் கோரி நியூயார்க்கில் முதன்முதலாக தன்பாலின ஈர்ப்பாளர்களால் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

ஸ்டோன்வால் கலவரம் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

தன்பாலின ஈர்ப்பு, குயர்

பட மூலாதாரம், Getty Images

ஸ்டோன்வால் போராட்டங்கள் நடந்து முடிந்த பிறகு, 1972ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அதிகாரப்பூர்வமாக ’முதல் பிரைட் திருவிழா’ நடைபெற்றது.

அப்போது சுமார் 2,000 பேர் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். ஆனால் தற்போது ​​லண்டனில் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு, ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகின்றனர்.

ஸ்டோன்வாலில் நடைபெற்ற போராட்டத்தை நினைவு கூறும் விதமாக 1989ஆம் ஆண்டு, ‘ஸ்டோன்வால்’ என்ற தொண்டு நிறுவனம் ஒன்று இங்கிலாந்தில் நிறுவப்பட்டது.

இந்த தொண்டு நிறுவனம், தன்பாலின ஈர்ப்பாளர்களை நோக்கி நிகழ்த்தப்படும் அநீதிக்கு எதிராக போராடுகிறது. மேலும் பிரிட்டனில் உள்ள பள்ளிகளில், ஆசிரியர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களுடைய உறவு பற்றி பேசுவதைத் தடுக்கும் சட்டப்பிரிவு 28 -ஐ முறியடிக்கவும் பிரசாரம் செய்து வந்தது.

அதேபோல் 2008ஆம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது காட்டப்படும் வெறுப்பை ஊக்குவிப்பது சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது.

இதுதவிர, இந்த பிரைட் வாக் உலகின் உள்ள பல நாடுகளுக்கும் சென்றடைந்தது. இந்தியாவில் 1999ஆம் ஆண்டு, கொல்கத்தாவில்தான் முதன்முதலாக பிரைட் வாக் நடத்தப்பட்டது. ஆனால் அதில் 15க்கும் குறைவான நபர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அவர்களும் மும்பை, பெங்களூர் என நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்து வந்து ஒருங்கிணைந்தவர்கள்.

அதன்பின் படிப்படியாக வளர்ந்து, தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் பிரைட் வாக் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ’தமிழ்நாடு வானவில் கூட்டமைப்பு’ சார்பாக பிரைட் வாக் ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதனை தமிழில் ‘வானவில் சுயமரியாதை பேரணி’ என்று அழைக்கின்றனர்.

குயர் என்றால் விசித்திரமானவர்கள் அல்ல வேறுபட்டவர்கள்

தன்பாலின ஈர்ப்பு, குயர்

” தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே மக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். திருவிழாக்களுக்கான உடைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுக்கு அத்தகைய பண்டிகைகளும், திருவிழாக்களும் எத்தகைய உற்சாகத்தை ஏற்படுத்துகிறதோ, எங்கள் சமுதாய மக்களுக்கு இந்த ’பிரைட் வாக்’ அதைவிட அதிகமான உற்சாகத்தை ஏற்படுத்துகிறது” என்கிறார் திருநங்கை மரக்கா.

பிபிசியிடம் பேசிய அவர், “குயர் என்ற வார்த்தைக்கு இங்கு பலருக்கு அர்த்தம் தெரியாது. குயர் என்று நீங்கள் கூகுளில் போட்டு தமிழாக்கம் தேடினால் ’விசித்திரமான’ என்று பொருள் தரும். ஏனென்றால் ஆரம்ப காலத்தில் மேற்கத்திய நாடுகளில் எங்களைப் போன்ற மனிதர்களை விசித்திரமாக இருக்கிறோம் என்று கூறி ’குயர்’ என்று அழைக்கத் தொடங்கினர். ஆனால் ”உங்களை எதைக் கொண்டு தாக்குகிறார்களோ, அதையே உங்களது ஆயுதமாக மாற்றுங்கள்” என்று அம்பேத்கர் சொன்னது போல, இன்று குயர் என்ற வார்த்தையே எங்களது சக்திவாய்ந்த அடையாளமாக மாறியிருக்கிறது.

இந்த பொதுச் சமூகத்திடமிருந்து நாங்கள் சற்று வேறுபட்டவர்களாக இருக்கிறோம். எனவே விசித்திரமாக இருக்கிறவர்கள் என்பதைவிட வேறுபட்டவர்கள் என்று கூறுவதுதான் குயர் என்ற வார்த்தைக்கு சரியான பொருளாக இருக்கும். ஏனென்றால் இன்று நேற்று அல்ல, மனித குலம் தோன்றிய ஆதி காலத்திலிருந்தே எங்களைப் போன்ற மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். நாங்களும் இயற்கையின் ஓர் அங்கம்தான்.

அதேசமயம் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போன்ற நிலைமை இப்போது எங்களுக்கு இல்லை. நிறைய மாறியிருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் நிறைய மாற்றங்கள் வரும். எனவே இந்த மாதத்தை மிக உற்சாகமாக கொண்டாடுவதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்” என்கிறார் மரக்கா.

ஜூன் மாத இறுதியில் வரவிருக்கும் பிரைட் வாக் தினத்தில் அணிவதற்கான ஆடைகளை தான் தற்போதே தயார் செய்து வருவதாகவும் பிபிசியிடம் நெகிழ்ந்து கூறுகிறார் அவர்.

’போராட்டங்களை கொண்டாட்டங்களாக மாற்றுகிறோம்

தன்பாலின ஈர்ப்பு, குயர்

”இங்கே நடத்தப்படும் பிரைட் வாக் என்பதை ஒரு ஊர்வலமாக மட்டும் பார்க்கக்கூடாது. அது பல குயர் மக்களை தங்களது தயக்கங்களையும், பயத்தையும் உடைத்து வெளியே வரசெய்வதற்கான மாபெரும் உந்து சக்தியாக விளங்குகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்கிறார் தினேஷ் சோமசுந்தரம்.

அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர். ஆனால் பல ஆண்டுகளாக என்னுடைய அடையாளத்தை நான் வெளிப்படுத்தவில்லை. அதற்கான தைரியம் எனக்கில்லை. இந்த சமூகத்தால் சந்தித்த அழுத்தங்களை எனக்குள் நானே வைத்துக்கொண்டிருந்தேன். 2018 ஆம் ஆண்டு முதன்முதலில், பிரைட் வாக்கை பார்க்க சென்றிருந்தேன். அப்போது ஓரமாக நின்று, என்ன நடக்கிறது என வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அங்குதான் ‘ என்னை போன்று இத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள், நாம் இங்கு தனியாக இல்லை’ என்ற உணர்வு ஏற்பட்டது.

அதன்பின் நான் என்னை, என்னுடைய அடையாளத்தை.. பொதுச்சமூகத்திற்கு தைரியமாக வெளிப்படுத்துவதற்கு கொஞ்சம், கொஞ்சமாக தயாராகிக் கொண்டிருந்தேன். இறுதியாக 2019 ஆம் ஆண்டு பிரைட் வாக்கின் போது, ஊர்வலத்தில் இறங்கி நடக்க துவங்கினேன். நான் யாராக இருக்கிறேனோ அதை அப்படியே வெளிப்படுத்தினேன்.

அங்கு சுற்றியிருந்த யாருமே என்னை வித்தியாசமாக பார்க்கவில்லை. எனக்குள் அத்தனை ஆண்டுகளாக இருந்த அழுத்தம், அங்கு மொத்தமாக கலைந்து போனது. இங்கு நான் மட்டும் தனியாக இல்லை என்ற நம்பிக்கை வந்தது.சந்தோசமாகவும், சுதந்திரமாகவும் என்னை நான் அங்கு உணர்ந்தேன்” என்று தெரிவித்தார்.

’பிரைட் வாக்’ என்பது கொண்டாட்டத்திற்காக நடத்தப்படுகிறது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது வெறும் கொண்டாட்டத்திற்கான நிகழ்வு மட்டுமல்ல, எங்களை போன்ற மனிதர்கள் குறித்து இந்த பொதுச்சமூகத்திடம் விழிப்புணர்வு ஏற்படுவதற்கான மாபெரும் வாய்ப்புதான் இந்த பிரைட் வாக் ” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தன்னை போன்ற எத்தனையோ LGBTQIA+ சமுதாய மக்கள் தங்களுடைய தயக்கங்களை உடைத்து வெளியே வந்ததற்கு, ’பிரைட் வாக்’ ஒரு அடித்தளமாக இருந்தது என்கிறார் தினேஷ் சோமசுந்தரம். மேலும் தன்பாலினத்தவர்களுக்கான திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும், திருநர் மக்களுக்கான Horizontal reservation கிடைக்க வேண்டும் போன்றவற்றை இந்த பிரைட் வாக்கில் தான் வலியுறுத்தப்போவதாகவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிடுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: