போலியோ முகாம்- காஸா மீதான தாக்குதலை 3 நாட்கள் நிறுத்த ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், டாம் பென்னெட்
- பதவி, பிபிசி செய்திகள்
குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க வேண்டும் என்ற "மனிதநேய காரணத்திற்காக" காஸாவில் நீண்டகாலமாக நடந்து வரும் தொடர் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கும் இந்த முகாமின் மூலம் காஸா பகுதி முழுவதிலும் சுமார் 6.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ரிக் பீபர்கார்ன் தெரிவித்தார்.
இந்த முகாம் மத்திய, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மூன்று தனித்தனி கட்டமாக நடக்க இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும், உள்ளூர் நேரப்படி 06:00 முதல் 15:00 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தாக்குதல் இடைநிறுத்தப்படும்.
25 ஆண்டுகளுக்கு பிறகு காஸாவில் முதல் முறையாக 10 மாத குழந்தை ஒன்று போலியோ நோய்தொற்று பாதிப்புக்கு உள்ளானதை அடுத்து இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக ஐக்கிய நாடு சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
போலியோ சொட்டு மருந்து வகை 2-ன் (nOPV2) சுமார் 6 லட்சம் டோஸ்கள் ஏற்கனவே காஸாவில் இருக்கின்றன. கூடுதலாக 4 லட்சம் டோஸ்கள் கூடிய விரைவில் அங்கு வரயிருக்கிறது.
ஐநா ஊழியர்கள் மற்றும் உள்ளூர் சுகாதார பணியாளர்களால் இந்த மருந்து வழங்கப்படும். இதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது இருக்கிறது.
போலியோ மருந்து முகாமை பாதுகாப்பாக நடத்துவதற்காக காஸாவில் உள்ள ஐநா செய்தித் தொடர்பாளர் லூயிஸ் வாட்டர்ட்ஜ் போர் நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்தார்.
"வானில் இருந்து குண்டுகள் வீசப்பட்டு தாக்குதலுக்கு மத்தியில் குழந்தைகளுக்கு மருந்து வழங்க இயலாது. மேலும் உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடும்போது குழந்தைகளுக்கு மருந்து வழங்க இயலாது ", என்று அவர் வெள்ளிக்கிழமை அன்று வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
"முகாம் நடைபெறும் போது நடக்கும் எந்த ஒரு தாக்குதல் நடவடிக்கையும், குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கும் எங்கள் செயல்பாட்டை பாதிக்கும்", என்று அவர் தெரிவித்தார்.
இந்த வாரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தின் முதல் இரண்டு டோஸ்கள் வழங்கப்படும் என்றும், நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அடுத்த டோஸ் வழங்கப்பட வேண்டும் என்று லூயிஸ் வாட்டர்ட்ஜ் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த முகாமின் மூலம் 90% குழந்தைகளுக்கு மருந்து வழங்கி காஸா பகுதியில் போலியோ வைரஸ் பரவுவதை தடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாக இருக்கிறது.
அந்த இலக்கை எட்ட முடியவில்லை என்றால் மேலும் நான்காவது நாளாக தாக்குதல் இடைநிறுத்தப்பட்டு இந்த முகாம் தொடரவும் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
போலியோ வைரஸ் மிகவும் கொடிய நோய் பரப்பும் கிருமி. அது பெரும்பாலும் கழிவுநீர் மற்றும் அசுத்தமான நீர் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடல் சிதைவு மற்றும் பக்கவாதம் ஏற்படும். குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை இது பாதிக்கிறது.
இந்த தாக்குதல் தொடங்குவதற்கு முன்பு, காஸா மற்றும் மேற்குக் கரை பகுதியில் போலியோ நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் சரியாக நடந்து வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
சமீபத்திய தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு 99% குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கப்பட்டது, ஆனால் இது கடந்த ஆண்டு 89% ஆகக் குறைந்துள்ளது.
"இந்த முகாமின் மூலம் காஸா பகுதியில் உள்ள 6.5 லட்சத்திற்கும் அதிகமான பாலத்தீன குழந்தைகளுக்கு மருந்து வழங்க சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்", என்று ஹமாஸ் ஆயுதக்குழு அதிகாரி பாசெம் நயிம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இந்த மூன்று நாள் இடைநிறுத்தம் என்பது முழு போர் நிறுத்தத்தை உணர்த்துவதில்லை என்று இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதென்யாகு குறிப்பிட்டு உள்ளார்.
இந்த திட்டத்தை "வலுவாக" வரவேற்பதாக ஐநாவுக்கான இங்கிலாந்து துணை நிரந்தர பிரதிநிதி ஜேம்ஸ் கரியுகி கூறினார்.
"நாம் இப்போது இதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். 90% குழந்தைகளுக்கும் மருந்து வழங்க இந்த போர் இடைநிறுத்தங்கள் போதுமானதாக இருக்க வேண்டும். இந்த முகாமிற்கு ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் வரும்போது அவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும்", என்றும் அவர் கூறினார்.
பணயக்கைதிகளாக இருப்பவர்களுக்கும் இந்த முகாமின் மூலம் மருந்து வழங்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் ஹகாய் லேவினே வலியுறுத்தினார். அவர் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்களுக்கான மன்றத்தின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது முன்னறிவிப்பின்றி ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலின்போது சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
காஸாவில் அக்டோபர் 7 முதல், 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












