You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடும் வெப்பம் நிலவும் சிங்கப்பூரை நிழல் நிறைந்த நாடாக முதல் பிரதமர் லீ மாற்றியது எப்படி?
- எழுதியவர், சாம் ப்லோச்
உஷ்ணமான தீவு நாடான சிங்கப்பூர், ஒவ்வொரு மூலையிலும் பசுமையையும் நிழலையும் சேர்ப்பதற்கு நீண்ட காலமாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மற்ற நகரங்களும் இதைப் பின்பற்ற முடியுமா?
வெப்பம் என்பது மனிதகுலத்தின் மிகவும் அபாயகரமான காலநிலை அச்சுறுத்தலாகும். வெள்ளம், சூறாவளி மற்றும் காட்டுத் தீ ஆகியவற்றால் ஏற்படும் மரணங்களின் கூட்டுத்தொகையை விட ஒவ்வோர் ஆண்டும் அதிக உயிர்களை இது பலிகொள்கிறது.
நகரங்களில் இதன் ஆபத்து மிக அதிகமாக உள்ளது. ஏனெனில், நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு காரணமாக இவை பூமியின் மற்ற பகுதிகளை விட இரு மடங்கு வேகமாக வெப்பமடைகின்றன.
அபாயகரமான வெப்பநிலைகள் பொதுவானதாகி வருவதால், பாரிஸ் முதல் பீனிக்ஸ் வரையிலான உலகளாவிய நகரங்களின் தலைவர்கள், அதிக நிழலை உருவாக்குவதற்குத் திட்டமிடுகிறார்கள்.
ஆனால், உஷ்ணமான தீவு நாடான சிங்கப்பூர், பூமியில் உள்ள எந்தவொரு நகரத்தையும் விடச் சிறந்த நிழல் உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கலாம். இங்குள்ள மக்கள், பல காலமாகப் பெருமழை மற்றும் வெப்பத்தை சமாளிக்கத் தங்களுக்கென்று சில தந்திரங்களைக் கொண்டுள்ளனர்.
அவற்றில் முதன்மையானது மூடப்பட்ட நடைபாதைகளாக இருக்கலாம். இந்த பொது நிழல் எப்படி தோன்றியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. வளைந்த கடைகள் மற்றும் வீடுகளின் தரைத் தளங்கள் வழியாகச் செல்லும் இந்த "ஐந்து அடி வழிகள்" (five-foot ways), பொலோக்னாவின் போர்டிகோக்களை ஒத்திருந்தாலும், இவை தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.
19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிங்கப்பூரை நிறுவியதாகக் கருதப்படும் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரியான ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ், 1822 இல் முதல் நகரத் திட்டத்தில் இவற்றைச் சேர்த்தார்.
நுண்ணிய நிர்வாகி லீ குவான் யூ
மோசமான வானிலையில் போக்குவரத்து திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு தெருவின் இருபுறங்களிலும் தெளிவான, தொடர்ச்சியான மற்றும் மூடப்பட்ட பாதைகளை ராஃபிள்ஸ் கட்டாயமாக்கினார்.
காலப்போக்கில், அவரது "வரண்டா-வழிகள்" ஆதரவை இழந்தன. 1960களில் சிங்கப்பூரைச் சுதந்திரத்திற்கு வழிநடத்திய சக்திவாய்ந்த பிரதமரான லீ குவான் யூவால் அவை நவீன வடிவத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்டன.
லீ குவான் யூ ஒரு நுண்ணிய நிர்வாகியாக இருந்தார். அவர் காலநிலை மற்றும் வசதி ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தினார். நாட்டின் பொருளாதார உற்பத்தித்திறனைக் காற்றிலுள்ள ஈரப்பதம் (Humidity) கட்டுப்படுத்துகிறது என்று அவர் நம்பினார்.
வெளிப்புறங்களில், அவர் நிழலின் மீது தீவிரமான ஆர்வம் கொண்டிருந்தார். நடைபாதைகள் மற்றும் உலாத்தளங்களின் மோசமான வடிவமைப்பு குறித்து அவர் கீழ்நிலை அதிகாரிகளுக்குச் சொற்பொழிவு ஆற்றுவதுடன், சில நேரங்களில் சூடான தரையில் முழங்காலிட்டு அமர்ந்து அதை நிரூபிக்கவும் செய்வார்.
1960கள் மற்றும் 1970களில், லீயின் சர்வாதிகார அரசாங்கம் உயரமான பொது வீட்டு வசதிக் குடியிருப்புகளை அமைத்தபோது, கட்டடக் கலைஞர்கள் ஒவ்வொரு கட்டடத்தின் தரைத் தளங்களையும் காற்றுக்காகத் திறந்து வைத்தனர். இவை குடியிருப்பாளர்கள் கூடி குளிர்ந்த காற்றை அனுபவிக்கக்கூடிய "வெற்றுத் தளங்கள்" (void decks) ஆகப் பாதுகாக்கப்பட்டன.
1980களின் பிற்பகுதியிலும் 1990களிலும், சிங்கப்பூரின் வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து முகமைகள், அருகிலுள்ள பேருந்து அல்லது ரயிலுக்குச் செல்லும் பாதைகள் காய்ந்திருப்பதை உறுதி செய்வதற்காக, நடைபாதைகளுக்கு மேல் தனித்து நிற்கும் உலோக விதானங்களைக் (Metal Canopies) கட்ட உத்தரவிட்டன.
பாதசாரிகளுக்கு முக்கியத்துவம்
இன்று, சுமார் 200 கிமீ (124 மைல்கள்) மூடப்பட்ட நடைபாதைகளை அமைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நியூயார்க்கின் எல்லா இடங்களிலும் காணப்படும் கட்டுமான சாரங்கள் நிரந்தர நடைபாதை கட்டமைப்பாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள், அப்போது அந்தச் சாதனை எப்படி இருக்கும் என்று உங்களுக்கு ஒரு யோசனை கிடைக்கும்.
அமெரிக்காவில், ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் அதிக வெளிச்சம் உள்ளே வர தங்கள் கட்டடங்களைத் தெருவில் இருந்து தள்ளி வைக்க வேண்டும், ஆனால் சிங்கப்பூரில், அவர்கள் தங்கள் கட்டடங்களின் தரைத் தளங்களிலிருந்து 8-12 அடிக்கு (2.4-3.7மீ) பாதசாரிகளுக்கு நிழலளிக்கும் மேல்தட்டுகளை உருவாக்கி நிழல் கட்டமைப்புக்குப் பங்களிக்க வேண்டும்.
பேருந்துக்காக ஒரு நிலையத்தில் காத்திருக்கும்போது நேரம் வேகமாக செல்வதாக உணர வைப்பதை போல, சிங்கப்பூர் மக்கள் இந்த நடைபாதைகளின் கீழ் நடப்பது வெயிலின் கீழ் நடப்பதை விட 14% குறைவாக இருப்பதாக உணர்கிறார்கள்.
"எப்போதும் அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள வெப்பமண்டலப் பகுதியில் இருக்கிறோம்," என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் நிலப்பரப்பு வடிவமைப்பாளர் மற்றும் பேராசிரியர் யுன் ஹை ஹ்வாங் கூறுகிறார். நாள் முழுவதும் வெப்பநிலை 31-33° செல்சியஸைச் (88-91°F) சுற்றி இருப்பதால், "நமக்கு எப்போதும் நிழல் தேவை," என்று அவர் மேலும் கூறுகிறார்.
நிழலைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட அனைவரும் ஒரு கனமான அலுமினிய கூரையை விட ஒரு பசுமையான விதானத்தின் இலைகளை விரும்புவார்கள், ஆனால் மரங்கள் எப்போதும் இதற்குத் தீர்வாக இருக்க முடியாது என்று அரசாங்கத்துடன் இணைந்த நகர்ப்புற வெப்ப முயற்சியான கூலிங் சிங்கப்பூர் (Cooling Singapore) இன் முன்னாள் ஆராய்ச்சியாளர் லீ ருஃபெனாச்ட் கூறுகிறார்.
ஆனால், மரங்கள் நிழல் மூலமாகவும், காற்றில் தண்ணீரை வெளியிடுவதன் மூலமாகவும் குளிர்ச்சியைக் கொடுக்கின்றன என்று அவர் குறிப்பிடுகிறார் - ஈரப்பதமான சிங்கப்பூரில், அதிக ஈரப்பதம் இன்னலை அதிகரிக்கலாம்.
பசுமை மற்றும் கட்டட நிழல்
வசதியாக உணர்வதற்காக ருஃபெனாச்ட் பசுமை மற்றும் கட்டட நிழலின் சமநிலையைப் பரிந்துரைக்கிறார். சிங்கப்பூரில், மிக அடர்த்தியான கட்டட நிழல், நகர மையத்தில் உள்ள வானளாவிய கட்டடங்களில் காணப்படுகிறது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், வெளிப்புறச் சதுக்கங்களில் போதுமான நிழலை வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
இது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உட்காரும் பகுதிகளில் குறைந்தது 50% குளிர்ச்சியாக இருக்க வேண்டும். மரங்கள், குடைகள், விதானங்கள் போன்ற பல மூலங்களிலிருந்து இந்த நிழல் வரலாம். ஆனால் அவர்களின் வடிவமைப்புச் சுற்றறிக்கைகளில், அருகில் உள்ள ஒரு கோபுரத்தின் கத்தி போன்ற நிழலால் கூட இது வழங்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
''முதலில் எனக்கு நிழலைக் கொடுங்கள்"
ஒரு பொது இடம் நிழலற்றதாக இருந்தால், யாரும் அதைப் பயன்படுத்த மாட்டார்கள் என்று திட்டமிடுபவர்கள் நம்புகிறார்கள். ஈரப்பதத்தின் சாத்தியமான விளைவுகள் இருந்தபோதிலும், பிரதமர் லீ எல்லா இடங்களிலும் மரங்களை நட கோரினார். ஒரு "சுத்தமான மற்றும் பசுமையான" சிங்கப்பூர் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் என்று அவர் நம்பினார்.
அவரது கட்டளையின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட 'பூங்காக்கள் மற்றும் மரங்கள் பிரிவு', முக்கிய சாலைகளைச் சுத்தப்படுத்தியது. அவற்றை அங்ஸனாக்கள், மழை மரங்கள், மஹோகனிகள் மற்றும் அகாசியாக்கள் போன்ற அகலமான விதானங்களின் கீழ் மறைத்தது. "பூக்கள் பரவாயில்லை," என்று அவர் துறைத் தலைவரிடம் கூறியதாகத் தெரிகிறது, "ஆனால் முதலில் எனக்கு நிழலைக் கொடுங்கள்".
1970களில், சிங்கப்பூர் மக்களை அவர்களின் கார்களில் இருந்து பொதுப் போக்குவரத்திற்குத் தள்ளுவதற்காக நெரிசல் நேரக் கட்டண நிர்ணயம் மற்றும் பிற திட்டங்களை அவர் செயல்படுத்தியபோது, புதிய பயணிகளை விரட்டியடிக்கும் அளவு சூரியனின் வெப்பம் கடுமையாக தாக்கக்கூடிய நடைபாதைகள், சாலையைக் கடக்கும் பாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் மீது லீ தனது கவனத்தைத் திருப்பினார்.
லாஸ் ஏஞ்சல்ஸில், தெரு வடிவமைப்புப் புதிரின் கடைசித் துண்டு மரங்கள்தான். ஒவ்வொரு அளவீடும் பள்ளம் தோண்டப்பட்ட பிறகு, ஒவ்வொரு வடிகாலும் வெட்டப்பட்ட பிறகு, ஒவ்வொரு வண்டிப்பாதையும் அமைக்கப்பட்ட பிறகு, மரங்கள் கான்கிரீட் குழிகளில் இடப்பட்டு நடைபாதைகளில் ஒழுங்கற்ற முறையில் நடப்படுகின்றன.
அரசாங்கத்திற்கு நிறைய செல்வாக்கு
ஆனால், சிங்கப்பூரில், லீ தொடக்கத்திலிருந்தே அவற்றைக் கருத்தில் கொள்ளுமாறு தனது நிலப் பயன்பாட்டுத் திட்டமிடுபவர்களுக்கு உத்தரவிட்டார்.
பெரும்பாலான சேவை வயர்கள் மற்றும் இணைப்புகள், தெரு மரங்கள் மற்றும் அவற்றின் வேர்களுக்கு அருகில் செல்லும் நிலத்தடி குழாய்களில் அமைக்கப்பட்டுள்ளன. பசுமை உள்கட்டமைப்பு நகர்ப்புறத் திட்டமிடுபவர்களால் திட்டமிடப்பட்டு, பொதுப் பணி முகமைகளால் வடிவமைக்கப்பட்டு, பூங்காக்கள் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த பூங்காக்கள் வாரியத்திற்கான பட்ஜெட் லீயின் தலைமையின் கீழ் பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டது. .
இந்த நிதி மற்றும் ஒருங்கிணைப்பு, செழிப்பான நகர்ப்புற காடுகள் இருப்பதற்கும், சோர்ந்துபோன வெகுசில நகர மரங்கள் இருப்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை நிரூபித்துள்ளது. சாலைகள் தவிர, லீயின் நகர்ப்புறத் திட்டமிடுபவர்கள் தனியார் கட்டமைப்புகளில் பசுமையைக் கட்டாயப்படுத்தினர், கிட்டத்தட்ட முழுமையாக இழந்துவிட்ட இயற்கையான மழைக்காடுகளுக்கு ஈடுசெய்ய ஒரு புதிய தோட்ட நகரத்தை மீட்டெடுத்தனர்.
சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு நிறைய செல்வாக்கு இருந்தது. வலுவான தனியார் சொத்து எடுப்புரிமை மூலம், அது சுமார் 90% நிலத்தை வைத்திருந்தது. மேலும், கட்டட ஆய்வாளர்கள் தரையில் மரங்களைக் காணும் வரை ஒரு கட்டடம் வாழ்வதற்கு தயாராக இருப்பதாக அனுமதி வழங்க மாட்டார்கள்.
சிங்கப்பூரின் விரிவான பொது வீட்டு வசதி குடியிருப்புகளிலும் புல்வெளிகள், இலைகள் சூழ்ந்த முற்றங்கள் மற்றும் பூங்காக்கள், வனவிலங்கு காப்பகங்களுடன் இணைக்க மரங்கள் நிறைந்த பாதைகளும் இருந்தன. இதன் விளைவாக, பணக்கார மற்றும் ஏழைக் குடியிருப்புகள் என சிங்கப்பூரில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் மரங்கள் உள்ளன.
"நாங்கள் நடுத்தர வர்க்கத்திற்கும் தொழிலாளர் வர்க்கப் பகுதிகளுக்கும் இடையில் வேறுபாடு பார்க்கவில்லை," என்று லீ தனது நினைவுக் குறிப்புகளில் எழுதினார். அவ்வாறு செய்திருந்தால் அது பீப்பிள்ஸ் ஆக்சன் பார்ட்டி கட்சிக்கு "அரசியல் ரீதியாகப் பேரழிவை" ஏற்படுத்தியிருக்கும் என்று அவர் கூறினார்.
நிழல் என்பது பொருளாதார சமத்துவமின்மையின் நம்பகமான குறிகாட்டியாக இருக்கும் அமெரிக்க நகரங்களிலிருந்து இது சிங்கப்பூரை வேறுபடுத்துகிறது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் உள்ளூர் பூங்காக்களை உருவாக்குதல் மற்றும் மிகவும் லட்சியமான நில மீட்பு முயற்சிகள் உட்பட லீயின் ஸ்மார்ட் திட்டமிடல் கொள்கைகள் காரணமாக, சிங்கப்பூர் ஒரு குறிப்பிடத்தக்க காரியத்தைச் செய்ய முடிந்தது: அது ஒரே நேரத்தில் அடர்த்தியானதாகவும் பசுமையாகவும் மாறியது. நகரத்தில் மூன்று மில்லியன் மக்கள் அதிகமாகச் சேர்ந்தபோதிலும், நகர்ப்புற காடு 1974 இல் 158,600 மரங்களிலிருந்து 2014 இல் 1.4 மில்லியனாக அதிகரித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இன்று, தீவின் கிட்டத்தட்ட பாதி பகுதிகள் புற்கள், புதர்கள் மற்றும் அகலமான விதான மரங்களால் மூடப்பட்டுள்ளன. நகரங்கள் வளரும்போது இயற்கைக்கு இடம் கொடுக்க முடியாது என்ற கருத்தை இது பொய்யாக்கி உள்ளது.
"உயிரியல்-இயற்பியல் சூழல் தான் இதை வேறுபடுத்திகாட்டும் காரணியாக இருக்கிறது" என்று பூங்காக்கள் வாரியத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் டேனியல் பர்சாம், சிங்கப்பூரின் வெற்றியை விளக்கச் சொன்னபோது என்னிடம் கூறினார். "ஒவ்வொரு நாளும் கோடை காலமாகவும், ஆண்டுதோறும் 2 மீட்டர் [7 அடி] மழை பெய்யும்போதும் மரங்களை வளர்ப்பது எளிது."
ஆனால், அரசியல் ஒருமித்தகருத்து இல்லாமல், அந்த மரங்கள் வளர இடம் ஒதுக்கப்பட்டிருக்காது என்று அவர் மேலும் கூறுகிறார். "இது அவர்கள் [லீயின் அரசாங்கம்] தொடரப் போகும் ஒரு குறிக்கோளாக இருந்தது, மேலும் அதை அடைவதில் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருந்த ஒரு பார்வை இது."
பர்சாம் இப்போது கொலராடோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் மரம் வளர்ப்பு - மரங்கள் மற்றும் காடுகளை வளர்ப்பது - பற்றி கற்பிக்கிறார். கொலராடோவில் அரசியல் தலைவர்கள் பதவியில் பல தசாப்தங்கள் இல்லை, சில ஆண்டுகள் மட்டுமே உள்ளனர்.
"சிலர் லீ குவான் யூவை ஒரு வலுவான மனிதர் அல்லது அரை-சர்வாதிகார நபராக உருவாக்கம் செய்வார்கள், அது ஓரளவுக்கு உண்மைதான்," என்று பர்சாம் கூறுகிறார். "ஆனால் இந்த அமைப்பிலிருந்து வந்த ஒரு நல்ல விஷயம் இதுதான். அவர் இந்தக் குறிக்கோளை நிர்ணயித்தார், மேலும் மக்கள் அதை அடையப் பொருள் வளங்களையும் அரசியல் ஆதரவையும் வழங்கினார்."
ஆனால், நிர்வாகங்களுக்கிடையில் முழுமையான ஒத்திசைவு தேவைப்படும் அதே வேளையில், மியாமி போன்ற வெப்பமண்டல நகரங்களில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் அத்தகைய ஒரு திட்டத்தைத் தொடர முடியாது என்பதற்கு எந்த அடிப்படைக் காரணமும் இல்லை.
அப்படியானால், இந்த நிழல் அனைத்தும் சிங்கப்பூர் மக்களையும் பாதுகாக்கிறதா? பிற்பகலில், வானளாவிய கட்டடங்களின் நிழல்களில் மூழ்கிய சிங்கப்பூரின் வணிக மாவட்டத் தெருக்கள் நகரத்திலேயே மிகவும் குளிர்ச்சியாக இருக்கின்றன. சூரியன் மறைந்ததும் அதன் விளைவு முடிவடைகிறது.
அப்போது கட்டடங்கள் உறிஞ்சிய சூரிய கதிர்வீச்சை வெளியிடுகின்றன. இரவில், ஒரு பொது வீட்டு வசதி குடியிருப்பின் பசுமையான மைதானங்கள் அதிக குளிர்ச்சியை அளிக்கலாம், ஏனெனில் பரபரப்பான வணிகத் தெருவில் வீசும் காற்றை விட 1-2° செல்சியஸ் (2-4°ஃபாரன்ஹீட்) குளிர்ச்சியாக இருக்கும்.
காற்று வெப்பநிலைக்கும் வெப்ப நோய்வாய்ப்படுதலுக்கும் இடையிலான நன்கு நிறுவப்பட்ட தொற்றுநோயியல் இணைப்பு, சிங்கப்பூரின் மிகவும் நிழலான பகுதிகள்தான் வெப்பத்திலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கக் கூடியவையாக இருக்கின்றன என்பதை காட்டுகின்றன. மரங்கள் மற்றும் கட்டடங்கள் போன்ற நிழல் உள்கட்டமைப்பு மட்டும் காலநிலை மாற்றத்தின் அனைத்து வெப்பமயமாதல் விளைவுகளையும் சமாளிக்கப் போதுமானதாக இருக்காது, ஆனால் இது நிச்சயம் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
சிங்கப்பூரைப் போல, நிழலில் தனிப்பட்ட ஆர்வம் கொண்ட ஒரு வலுவான மனிதரால் நீண்ட காலம் ஆளப்பட்ட ஒரு சர்வாதிகார தேசிய-அரசு போல, உள்ளூர் அமெரிக்க அரசாங்கங்கள் திறம்பட இருக்க வாய்ப்பில்லை.
மேலும், சிங்கப்பூரின் மரங்கள் வளர்வதற்கு ஏற்ற காலநிலை உள்ளதைப் போன்ற அதிர்ஷ்டத்தைப் பெரும்பாலான அமெரிக்க நகரங்கள் பெறவில்லை.
இருப்பினும், நிழலைக் குறித்த குறிக்கோளுடன் அரசு திட்டமிடல் மூலம் என்ன செய்ய முடியும் என்பதைச் சிங்கப்பூர் காட்டுகிறது. அனைவருக்கும் ஒரு குளிர்ந்த நகரம் எட்டக்கூடிய தூரத்தில்தான் உள்ளது. இது சாத்தியமற்றது என்று பாசாங்கு செய்ய வேண்டாம்.
*இந்தக் கட்டுரை ஜூலை 2025 இல் வெளியிடப்பட்ட சாம் ப்லோச்சின் "நிழல்: மறக்கப்பட்ட இயற்கைத் வளத்தின் வாக்குறுதி" (Shade: The Promise of a Forgotten Natural Resource) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு