You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குமரி அனந்தன்: நாடாளுமன்றத்தில் தமிழில் ஒலித்த முதல் குரல் - அரசியல் வாழ்வில் செய்தது என்ன?
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தனது 93வது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
காந்தியவாதியாகவும், காமராஜரின் சீடராகவும் இருந்த குமரி அனந்தன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக 'இலக்கியச் செல்வர்' என்று பாராட்டப்பட்டார்.
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறையும் நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும் பதவி வகித்துள்ளார்.
அவரது மகளான தமிழ்நாடு பாஜகவின் மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவரது தமிழ் இலக்கிய பங்களிப்பை நினைவுகூர்ந்து, அவர் விட்டுச் சென்ற பணியை "நான் தொடர்வேன்" என்று தெரிவித்திருந்தார்.
- தமிழிசை செளந்தரராஜன்: ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை, தேர்தலில் வென்றதில்லை - ஆனாலும் சாதித்தது எப்படி?
- வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு
- வசந்தகுமார் காலமானார் - கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர் மரணம்
- காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவு மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டி - வெற்றிக்கான வியூகமா? பலவீனமா?
குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக சில காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சுவாசப் பிரச்னை ஏற்பட்டதால் வேலூரில் தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், வயது மூப்பு காரணமாக சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு அவர் காலமானார்.
அவர் உடல்நலன் குன்றியிருந்ததன் காரணமாகவே சமீபத்தில் பிரதமர் மோதி ராமேஸ்வரம் வந்திருந்தபோது, தமிழிசை சௌந்தரராஜன் தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தனின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
குமரி அனந்தன், தொழிலதிபராகவும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஹெச். வசந்த குமாரின் அண்ணன் ஆவார். வசந்த குமாரின் மறைவுக்குப் பிறகு வசந்த குமாரின் மகன் தற்போது அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில் 1933-ம் ஆண்டு மார்சு 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன். சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்குத் தலை மகனாக பிறந்தார்.
கடந்த 1977ஆம் ஆண்டு குமரி அனந்தன் நாகர்கோயில் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1980, 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது அரசியல் பயணத்தில் அவர் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைத் தொடங்கினார். பிறகு அவை இந்திய தேசிய காங்கிரஸ் உடன் இணைக்கப்பட்டது.
தனது தந்தையின் இழப்பு குறித்து தமிழிசை சௌந்தரராஜன், "தமிழ் கற்றதால் நான் தமிழ் பேசவில்லை, தமிழ் என்னைப் பெற்றதால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாகப் பேச வைத்த என் தந்தை, இன்று என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார்.
குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்றுகொண்டு தமிழிசை என்று எனக்குப் பெயர் வைத்தார்.
நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார். மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா," என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காந்தியவாதியாக இருந்த குமரி அனந்தன், காங்கிரஸ் கொள்கைகள் மீது தீவிரப் பற்று கொண்டவர். காமராஜரின் சீடராக விளங்கி, பிற்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
காந்தியவாதியான அவர் கதர் வேட்டி அணிந்து, நெற்றியில் விபூதியுடன் எளிய தோற்றமளிப்பவராக இருந்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பனை மரப் பணியாளர்கள் நல வாரியத் தலைவராக 2008ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார், 2011ஆம் ஆண்டு அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.
அப்போது அவர் எழுதிய கடிதத்தில், "நான், சுதேசியத்தில் பற்று கொண்டவன் என்ற காரணத்தால் பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. பனைச் செல்வம் பெருஞ்செல்வம், உடல் நலம் தரும் செல்வம். ஊதியம் இல்லாத வேலையாலும், எளியோர்க்கும் நாட்டுக்கும் செய்யும் தொண்டாக மனநிறைவோடு அந்தப் பொறுப்பில் இருந்து பணியாற்றினேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 17 முறை தமிழத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மதுவிலக்கு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தமிழுக்கு முன்னுரிமை, நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இந்த நடைபயணங்களை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் சென்னை வரை பூரண மதுவிலக்கு கோரி அவர் மேற்கொண்ட நடைபயணம் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு அவர் சென்னையிலிருந்து தருமபுரிக்கு நடைபயணம் மேற்கொண்டார்.
சென்னை மெரினா கடற்கரையில் இருந்து அந்த நடைபயணத்தைத் தொடங்கி வைத்துப் பேசியிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், "தமிழக மக்களின் நலனுக்காக தனது 86வது வயதில் 16வது முறையாக நடை பயணம் மேற்கொள்கிறார். சுப்ரமணிய சிவாவால் தேர்வு செய்யப்பட்ட இடமான தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோவில் அமைக்க வலியுறுத்தியும், பூரண மதுவிலக்கு, நதிகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நடைபயணம் மேற்கொள்கிறார் " என்று கூறினார்.
இலக்கியச் செல்வர் என அனைவராலும் அழைக்கப்பட்ட குமரி அனந்தன், நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர்.
அவரது மேடைப் பேச்சுகள் பலரையும் ஈர்க்கக்கூடியதாக இருந்தன.
செம்பனை நாடு-மலேசிய அனுபவம், உலகம் சுற்றும் குமரி-பயண அனுபவங்கள், கடலில் மிதக்கும் காடுகள்- அந்தமான் பயணம், பாரதிரப் பாடிய பாரதி, தேசமும், நேசமும், விடுதலை வீரர்களின் வீரரும் தியாகமும், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், தமிழ் தரும் காட்சிகள், தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகளின் காலடி தேடி, பேச்சுக் கலைப் பயிற்சி என பல்வேறு தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார்.
தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார் குமரி அனந்தன். அவருக்கு 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு 'தகைசால் தமிழர்' விருதை வழங்கியது.
கடந்த 2022ஆம் ஆண்டு அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
அவரது மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு