You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு தன்னுடைய சிறப்பு அதிகாரத்தின் கீழ் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்துள்ளது.
'உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனக் கூறுகிறார் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பால் என்ன நடக்கும்? பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநர் தொடர்வதில் சிக்கல் உள்ளதா?
ஆளுநரின் செயலும் தமிழ்நாடு அரசின் முறையீடும்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட 22 மசோதாக்களின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்திருந்தார்.
இவற்றில் பல்கலைக்கழக சட்டங்களை மாற்றியமைப்பது தொடர்பான பத்து மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பி அனுப்பினார். இதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.
ஆனால், மசோதாக்களின் மீது ஆளுநர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதையடுத்து, ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்தது.
தீர்ப்பில் என்ன உள்ளது?
இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.டி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தன. செவ்வாய்க் கிழமையன்று (ஏப்ரல் 8) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், "சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களையும் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் எதிரானது" எனக் கூறினர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிரான பஞ்சாப் மாநில அரசு வழக்கின் தீர்ப்பை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், "அதன்பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல" எனக் கூறினர். இந்த வழக்கின் போது ஆளுநரின் அதிகாரத்தை நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அறிவித்தனர். குறிப்பாக, அந்த மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கருதப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
தீர்ப்பில், 'ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரம் (Veto) என்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடமில்லை. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு அரசியலமைப்புப் பிரிவு 200-ன் கீழ் ஏதாவது ஒரு நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும்' என நீதிபதி ஜே.டி.பர்திவாலா குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் போது அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது என்பது பொது விதியாக உள்ளதாகவும் தீர்ப்பில் ஜே.டி.பர்திவாலா குறிப்பிட்டார்.
"மாநில அரசின் ஆலோசனைப் படியே ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 200-ன் கீழ் அவருக்கு என எந்த தனிப்பட்ட விருப்புரிமையும் இல்லை" என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
'ஒரு மசோதா கிடைத்ததும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் அதைப் பற்றி மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்' என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது எனவும் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக வேந்தராக ஆளுநர் தொடர்வாரா?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநர் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன், "பல்கலைக் கழகங்கள் மீது ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளன. துணைவேந்தர் நியமனம், தேர்வுக் குழு ஆகியவற்றில் அவரது அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பல்கலைக் கழகங்களில் இருந்து வேந்தர் என்ற பதவியை நீக்குவது தொடர்பானது அல்ல எனவும் குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பின் போது இதையே குறிப்பிட்ட வில்சன், "பல்வேறு பல்கலைக் கழகங்களில் ஆளுநர் வேந்தராக இருக்கிறார். அந்தப் பதவியில் அமர்ந்து கொண்டு துணைவேந்தர் நியமனம் உள்பட அனைத்துப் பணிகளையும் தடுத்து வந்தார். அவர் வேந்தராக நீடிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மாநில அரசு கூறும் நபரை வேந்தராக நியமிக்க வேண்டும் என மசோதாவில் கூறப்பட்டிருந்தது" எனக் கூறினார்.
"இது பல்கலைக்கழகங்களில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம்" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் வேந்தராக இருக்கிறார். பிற பல்கலைக்கழங்களில் வேந்தராக ஆளுநர் இருக்கிறார். அதிகாரத்தை முதலமைச்சர் எடுத்துக் கொண்டால் குழப்பம் ஏற்படும்" என்கிறார்.
'உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசரச் சட்டம் வரலாம்'
"துணைவேந்தர் தேடுதல் குழுவில் (Search committee) பல்லைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து விதிகளை மீறி துணைவேந்தர்கள் நியமனங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி.
கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் மீறப்படும் போது, பல்கலைக் கழகங்களுக்கான நிதியை நிறுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
"மசோதாக்களில் சட்டமீறல் உள்ளதா என்பதை ஆளுநர் ஆராய்வதற்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறுவதை ஏற்க முடியாது. ஆளுநரை நீக்குமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை ஆளுநர் ஏற்க வேண்டும் என்பதைப் போல இந்த தீர்ப்பு உள்ளது" என ராமமூர்த்தி தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்த தீர்ப்பு நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார்.
"குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்"
அதேநேரம், தீர்ப்பு தொடர்பாக மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
"ஆளுநர்கள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும்போது, உச்ச நீதிமன்றம் அந்த அதிகாரத்தை தானே எடுத்துக் கொள்ளும் என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அது ஜனநாயகத்துக்கு சரியானதாக இருக்குமா என்பது பிரதான கேள்வி" எனக் கூறுகிறார் ஷ்யாம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், " இந்த தீர்ப்பு, அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும். எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது எனத் தெரியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மறைமுக ஆட்சி அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் செலுத்துவதுபோல இந்த உத்தரவு உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அவ்வாறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால் இது சட்டமாகிவிடும். இந்த தீர்ப்பு குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்" எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்வது தான் சரியானதாக இருக்கும் எனக் கூறிய ஷ்யாம், "அரசியல் சாசனத்தை மதிக்காத ஒருவரை எவ்வாறு தொடர அனுமதிக்கிறீர்கள் எனக் குடியரசுத் தலைவரைப் பார்த்து கேள்வி கேட்பதாக இந்த தீர்ப்பை பார்க்க முடியும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆளுநர் தனக்கு அனுப்பும் சட்ட முன்வடிவை எவ்வளவு நாள் தாமதிக்கலாம் என்றும் அவ்வாறு தாமதித்தால் தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக நீதிமன்றம் கூறுவதாகவும் ஷ்யாம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு