You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் விபத்து எப்படி ஏற்பட்டது? நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தகவல்
நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை நிலைக்குழு, மானியங்களுக்கான கோரிக்கை மீதான அறிக்கையைச் சமர்பித்துள்ளது.
அதில் முப்படைகளின் முன்னாள் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அந்த விபத்து 'மனிதப் பிழை (விமானத்தை இயக்கியவர்களின் பிழை) காரணமாக ஏற்பட்டது' என்று பாதுகாப்புத்துறை நிலைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிபின் ராவத் மரணம்
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இதர ராணுவ வீரர்கள் சூலூர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக உதகையில் உள்ள வெலிங்டன் ராணுவ தளத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
பிபின் ராவத், வெலிங்டன் ராணுவத் தளத்தில் நடைபெற இருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வந்திருந்தார். 12 அதிகாரிகளைக் கொண்ட எம்.ஐ. 17 ரக ஹெலிஹாப்டர் வெலிங்டனை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக குன்னூரில் விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா மற்றும் 11 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டரை இயக்கிய க்ரூப் கேப்டன் வருண் சிங் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சைப் பலனின்றி ஒரு வாரத்திற்குள்ளாகவே உயிரிழந்தார்.
நிலைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
இந்த அறிக்கை, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2022 வரையிலான காலத்தில் 34 பாதுகாப்புப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்துக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கைப்படி, 2017-18 காலகட்டத்தில் 8 விபத்துகள் பதிவாகியுள்ளன. மேலும், அதிகபட்சமாக 2018-19 காலகட்டத்தில் 11 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து 2021-22 காலகட்டத்தில் 9 விபத்துகளும் பதிவாகியுள்ளன.
கடந்த 2019-20 மற்றும் 2020-21 காலகட்டத்தில் ஆண்டுக்கு தலா மூன்று விபத்துகள் என 6 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2017 முதல் 2011 வரை ஏற்பட்ட 34 விபத்துகளில் 19 விபத்துகள் மனிதப் பிழையால் (ஏர் க்ரூ) ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, பயணத்தின்போது விமானக் குழுவினரால் செய்யப்பட்ட தவறுகள் அல்லது தவறான மதிப்பீடுகள், விபத்துகளுக்கு வழிவகுப்பதைக் குறிக்கிறது.
இதுபோக, ஒன்பது விபத்துகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பறவை மோதி ஒரு விபத்து ஏற்பட்டதாகவும், மற்றொரு விபத்து இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறைந்த விபத்துகள்
நிலைக்குழு கமிட்டியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இந்த 34 விபத்துகள் தொடர்பாக விபத்து நடந்த காலத்திலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது.
அதோடு, இதுபோன்ற விபத்துகள் வருங்காலத்தில் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு விசாரணைக் குழுக்கள் முன்வைத்த பரிந்துரைகள் பற்றியும் நிலைக்குழுவிடம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் விபத்துகள் பெரும் அளவில் குறைக்கப்பட்டு இருப்பதையும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியிருப்பதாக நிலைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கைப்படி 2000 முதல் 2005 காலகட்டம் வரை 0.93% ஆக இருந்த விபத்துகள், 2017-22 காலகட்டத்தில் 0.27 ஆக குறைந்துள்ளது. மேலும், 2020 மற்றும் 2024 காலகட்டத்தில் விபத்துகள் 0.20% ஆகக் குறைந்துள்ளதாகவும் அமைச்சகம் அறிவித்ததாக பாதுகாப்புத்துறை நிலைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)