You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அந்தரத்தில் தண்டவாளம், சுற்றி வெள்ளம் : 800 பேரின் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு உயரிய விருது
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, சரளைக் கற்கள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியபடி நின்றதை அறிந்து, உடனடியாக ரயிலை நிறுத்தி வைத்து, சுமார் 800 பயணிகளைக் காப்பாற்றிய ரயில் நிலைய (ஸ்டேஷன்) மாஸ்டர் ஜாஃபர் அலிக்கு ரயில்வே துறையின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், ரயில்வே ஊழியர்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, ரயில்வேயில் பல்வேறு மட்டங்களில் பணியாற்றும் 100 சிறந்த பணியாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு `அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' (Ati Vishisht Rail Seva Puraskar) என்னும் விருதை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது வரும் டிசம்பர் 21 ஆம் தேதி 69ஆவது ரயில்வே வார விழாவின் போது வழங்கப்பட உள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
ரயில் நிலைய மாஸ்டர் ஜாஃபர் அலி, ரயிலை நிறுத்தி சுமார் 800 பயணிகளின் உயிரை காப்பாற்றியது எப்படி? அந்த சமயத்தில் என்ன நடந்தது?
அன்றைய தினம் என்ன நடந்தது?
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 17 அன்று இரவு 9.12 மணியளவில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ஜாஃபர் அலி, ரயில் நிலையத்திற்கு முன்னால் உள்ள ரயில் பாதை வெள்ள நீரில் மூழ்கி இருப்பதைப் பற்றி, பொறியியல் அதிகாரி ஒருவரிடம் இருந்து எச்சரிக்கையைப் பெற்றார்.
சில நிமிடங்களில் திருச்செந்தூரில் இருந்து சென்னை சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. சுமார் 800 பயணிகள் பயணித்த ரயிலை, நிலைய அதிகாரி (ஸ்டேஷன் மாஸ்டர்) உடனடியாக நிறுத்தினார்.
அப்போது, "ரயில் நிலைய நடைமேடையில் வெள்ள நீர் எதுவும் இல்லை, பிறகு எதற்கு ரயிலை வெகுநேரமாக நிறுத்தி வைத்துள்ளீர்கள்?" என கோபமடைந்த பயணிகள், இருள் சூழ்ந்த ரயில் நிலையத்தில் செய்வதறியாது நிலைய மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், நேரம் கடந்து விடிந்ததும் ரயில் நிலையத்தின் நான்கு புறமும் வெள்ளம் சூழ்ந்திருப்பதை கண்ட பயணிகள் ஆபத்து குறித்து உணர்ந்து கொண்டனர்.
உணவளித்த கிராம மக்கள்
ஸ்ரீவைகுண்டத்தைப் புரட்டிப் போட்ட வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ரயில்வே அதிகாரிகள் உட்பட மீட்புப் படையினர் வருவதற்கு காலதாமதமான நிலையில், உள்ளூர் மக்கள் வீட்டில் இருந்த உணவுப் பொருட்களை வைத்து உணவு சமைத்துப் பயணிகளுக்கு அளித்தனர்.
முதல்கட்ட நிவாரணப் பணியாளர்கள் கிட்டத்தட்ட 60 மணிநேரத்திற்கும் மேலாக பலகட்ட சவால்களுக்குப் பிறகு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு சென்றடைந்தனர்.
தண்ணீர் வடியத் தொடங்கிய பிறகுதான் ரயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, பல மீட்டர் தூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்தனர்.
இந்நிலையில்தான், செந்தூர் எக்ஸ்பிரஸில் சுமார் 800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, மதிப்புமிக்க ரயில்வே வாரிய விருதான 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருதுக்கு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர், ஜாஃபர் அலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
'என் பொறுமைக்குக் கிடைத்த விருது'
"இக்கட்டான சூழ்நிலையில் பொறுமையாக ரயில் பயணிகளை சமாளித்து ரயில்வே துறைக்கு நல்ல பெயர் பெற்று கொடுத்ததற்காக, இந்த விருது தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக" கூறுகிறார் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாஃபர் அலி.
"இந்த விருது எனக்குக் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்கிறார் அவர்.
கடந்த 1997 ஆம் ஆண்டு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் துணை நிலைய மாஸ்டராக பொறுப்பேற்று, கடந்த 27 ஆண்டுகளாக நிலைய மாஸ்டராக பணியாற்றி வருகிறார் அவர்.
தற்போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிலைய மாஸ்டராக பணியாற்றுகிறார்.
அப்போது என்ன நடந்தது என்பதை அவர் விளக்கினார்.
"கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.10 ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
ஆனால், அதற்கு முன்னதாகவே ரயில்வே பொறியாளர் ஒருவர், 'தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக பல இடங்களில் நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது, ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது, எனவே ரயிலை இயக்குவது பாதுகாப்பானது அல்ல' என தெரிவித்திருந்தார்.
உடனடியாக நான் மதுரையில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது" என்றார் அவர்.
கனமழை தொடர்ந்து பெய்வதால் ரயிலை விட்டு வெளியே வராமல் இருந்த ரயில் பயணிகள், 'ஏன் இவ்வளவு நேரம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கிறது?' என தெரியாமல் 3 மணிநேரத்திற்குப் பிறகு 12 மணியளவில் ஒவ்வொருவராக அலுவலகத்திற்கு வந்து தன்னிடம் கேட்கத் தொடங்கியதாக அவர் கூறுகிறார்.
"நிலையை விளக்கிக் கூறியதால், ஒரு சில பயணிகள் அதை ஏற்றுக்கொண்டு மீண்டும் ரயிலுக்குச் சென்றனர். ஆனால், ஒரு சிலர் நிலையைப் புரிந்து கொள்ளாமல் என்னுடன் பிரச்னை செய்தனர்" என்றார்.
அச்சமயத்தில், மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் ரயில் நிலையத்தில் மின்சாரம், செல்போன் சேவை உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் மிகவும் சிறிய ரயில் நிலையம் என்பதால் தேநீர், திண்பண்ட கடைகள் என எதுவும் இருக்காது. "இதனால் மதுரை கோட்ட மேலாளர் அலுவலக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்க முடியாமல் திணறியதாக," நிலைய மாஸ்டர் ஜாஃபர் அலி தெரிவித்தார்.
'ஆயிரம் உணவு பொட்டலங்கள் வீண்'
தொடர்ந்து பேசிய ஸ்டேஷன் மாஸ்டர் ஜாஃபர் அலி, ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த ரயில் சிக்னல் பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பிரத்யேக தொலைபேசி மட்டுமே வேலை செய்தது என நினைவுகூர்ந்தார்.
எனவே, அதன் மூலம் மதுரை கோட்ட மேலாளருக்குத் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், உடனடியாக தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்து நான்கு பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் வரவழைக்கப்பட்டு, முதலில் 200 ரயில் பயணிகளை அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்க அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்தார்.
"எஞ்சிய பயணிகளை அழைத்துச் செல்ல பேருந்துகள் ரயில் நிலையத்திற்குள் காட்டாற்று வெள்ளம் காரணமாக வர முடியவில்லை. இதனால், சுமார் 600 பயணிகள் ரயிலிலேயே தங்கினர்" என்றார் அவர்.
ரயில் பயணிகளுக்கு புதுக்குடி கிராம மக்களிடம் தகவல் தெரிவித்து உணவு ஏற்பாடும் செய்து கொடுத்துள்ளார் அவர்.
இரு தினங்கள் கழித்து வெள்ள நீர் வடியத் தொடங்கிய பின்னர் ஹெலிகாப்டர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு ரயில் நிலையத்திற்கு வர தொடங்கியதையடுத்து, பயணிகள் ஹெலிகாப்டர் மற்றும் வாகனங்களில் மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
"கனமழையால் ஏற்பட்ட ரயில் சேவை பாதிப்பில் நான் 54 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றினேன். இரண்டரை நாட்கள் பயணிகளை சமாளிப்பது தான் எனக்கு பெரிய சவாலாக இருந்தது." என நினைவுகூர்கிறார் அவர்.
இச்சூழலில் தன் குடும்பத்தினரை தன்னால் தொடர்புகொள்ள முடியாத சூழல் இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஸ்டேஷன் மாஸ்டர் ஜாஃபர் அலிக்கு ரயில்வே துறை விருது அளித்திருப்பது குறித்து, அந்த ரயிலில் பயணித்த சுரேஷ் என்பவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "இன்று நடந்தது போல் உள்ளது. ஆனால், ஓராண்டு ஆகிவிட்டது. எனது வாழ்நாளில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தையும் அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் ஜாஃபர் அலியையும் மறக்கவே முடியாது" என்றார்.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மழையில் சிக்கிக் கொண்டு செய்வதறியாது திகைத்துப் போய் கோபத்துடன் இருந்த போது , ஜாஃபர் அலி அனைத்துப் பயணிகளிடமும் மிகவும் தன்மையாக நடந்து கொண்டது நம்பிக்கையை தந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"கிராம மக்களும் அவர்களிடம் இருந்ததை வைத்து எங்களின் பசியை ஆற்றினார்கள் அதற்கு முழு காரணம் ஸ்டேஷன் மாஸ்டர் தான்" என்கிறார் அவர்.
இது குறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்ட செய்தி தொடர்பாளர் கோபிநாத் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ஸ்டேஷன் மாஸ்டர் ஜாஃபர் அலி சிறப்பாக செயல்பட்டதாக, அப்போதைய கோட்ட மேலாளர் அவரை அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டு தெரிவித்தது மட்டுமல்லாமல் அவரை கௌரவப்படுத்தினார்.
மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இருந்து இந்த விருதுக்காக ஜாஃபர் அலி பெயர் பரிந்துரை செய்யப்பட்டு, மத்திய ரயில்வே துறைக்கு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)