அசாமில் பலதார மணத்தை தடை செய்ய அரசு ஆயத்தம், அச்சத்தில் முஸ்லிம்கள்

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA
- எழுதியவர், திலீப் குமார் ஷர்மா
- பதவி, குவாஹட்டியில் இருந்து பிபிசி இந்திக்காக
அசாம் மாநிலத்தில் பலதார மணத்தை தடை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை அசாம் அரசு அமைத்துள்ளது. பலதார மணத்தை தடை செய்ய மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதை இந்த நிபுணர் குழு ஆய்வு செய்யும். இந்த குழு அடுத்த 6 மாதங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.
பலதார மணத்தை தடை செய்ய இந்த நிபுணர் குழுவை அமைப்பதாக அசாம் முதல்வர் ஹேமந்தா பிஸ்வா சர்மா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.
"சட்ட வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் அடங்கிய இந்தக் குழு பலதார மணத்தைத் தடை செய்வதற்கான விதிகளை ஆய்வு செய்யும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவுடன் கூடவே 1937-ஆம் ஆண்டின் முஸ்லிம் தனிநபர் சட்டத்தையும் (ஷரியத்) அது ஆராயும்,”என்று முதல்வர் கூறியிருந்தார்.
" நாங்கள் ஒரு பொதுவான சிவில் சட்டத்தை நோக்கி செல்லவில்லை. அதற்கு தேசிய ஒருமித்த கருத்து அவசியம். ஆனால் அசாமில் பொதுவான சட்டத்தின் ஒரு அங்கமாக மாநில சட்டத்தின் மூலம் நாங்கள் பலதார மணத்தை, அரசியலமைப்பிற்கு விரோதமானதாகவும், அரசியலமைப்பிற்கு எதிரானதாகவும் அறிவிக்க விரும்புகிறோம்," என்கிறார் முதல்வர்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, எல்லா குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருகிறது. ஆனால் மாநிலத்தில் புதிய சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் பலதார மணத்தை தடை செய்ய அசாம் அரசு முயற்சிப்பது குறித்தும் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.
முதலமைச்சரின் இந்த அறிக்கை தெற்கு அசாமில் குடியேறியுள்ள வங்காள வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.
இது வகுப்புவாத ஒருமுனைப்படுத்தும் அரசியலா?
"மாநில அரசின் இந்த நடவடிக்கை முற்றிலும் வகுப்புவாத ஒருமுனைப்படுத்தல் அரசியலால் தூண்டப்பட்டது. முதல்வர் கூறுவதில் முற்றிலும் உண்மை இல்லை,” என்று அசாமின் நதியோரப் பகுதிகளில் வசிக்கும் வங்காள வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்களிடையே அசாமிய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சார்-சபௌரி பரிஷத்தின் தலைவர் டாக்டர் ஹபீஸ் அகமது குறிப்பிட்டார்.
"இந்தியாவில் பலதார மணம் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களில், இந்த நடைமுறை இஸ்லாமியர்களிடம் மட்டுமல்ல, இந்துக்களிடையேயும் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது." என்று அவர் சொன்னார்.
அனைத்து அசாம் சிறுபான்மை மாணவர் சங்கத் தலைவர் ரிஸாவுல் கரீமும் பலதார மணம் குறித்த அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.
"எங்கள் அமைப்பு 1980 முதல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் பலதார மணம் மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஆனால் முதலமைச்சர் பேசும் விதத்தில் உண்மை சிறிதும் இல்லை." என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA
புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?
தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS) சமீபத்திய தரவு, இந்தியாவில் முஸ்லிம்களைத் தவிர மற்ற சமூகங்களிலும் பலதார மணம் காணப்படுகிறது என்பதைக்காட்டுகிறது, இருப்பினும் தற்போதைய தரவுகள், இதில் சரிவைக் காட்டுகின்றன.
இந்தியாவில் 15 முதல் 49 வயதுடைய 1.4 சதவிகித பெண்கள் பலதார மணத்தில் உள்ளனர் என்று NFHS தரவுகள் கூறுகின்றன.
பலதார மணத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் (6.2 சதவிகிதம்) உள்ளனர். அசாம் 2.4 சதவிகிதத்துடன் இந்த மாநிலங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
‘‘பலதார மணத்தை தடை செய்யும் சட்டத்தை நல்ல நோக்கத்துடன் அரசு கொண்டு வர விரும்பினால் அதை அனைவரும் வரவேற்போம்,” என்று குவாஹட்டி பல்கலைகழகத்தின் முன்னாள் பேராசிரியர் அப்துல் மனான் கூறினார்.
"முஸ்லிம்கள் பலதார மணத்தை மதரீதியாக நடைமுறைப்படுத்த சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டாலும், இந்த நடைமுறை தற்போது அஸ்ஸாம் முஸ்லிம்களிடையே கிட்டத்தட்ட இல்லை," என்றார் அவர்.
புதிய சட்டத்தால் என்ன மாற்றம் வரும்?
"பலதார மணம் எப்போதுமே ஒரு பிரச்சனை, ஆனால் அதற்கு ஏற்கனவே நாட்டில் சட்டம் உள்ளது. ஐபிசி 494 பிரிவின் கீழ் இரண்டாவது திருமணம் குற்றமாகும். இதையும் மீறி அசாம் அரசு ஒரு புதிய சட்டம் இயற்றப் போகிறது. அப்படி நடந்தால் அதற்கு பல அர்த்தங்கள் இருக்கும்,” என்று குவாஹட்டி உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அன்ஷுமன் போரா கூறினார்.
"பலதார மணம் தொடர்பான இந்த சட்டத்தில் மிக கடினமான பணி திருமணத்தை நிரூபிப்பது. ஐபிசியில் கூட ஆதாரத்துடன் திருமணத்தை நிரூபிப்பது மிகவும் கடினம்" என்கிறார் அவர்.
"ஐபிசியில் உள்ள இந்தக்குற்றம், மத வேறுபாடுகளைத்தாண்டி அனைவருக்கும் சமமாக பொருந்தும். ஐபிசியின் கீழ் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது."
"அவர்கள் முஸ்லிம் சட்டத்தின் கீழ் நான்கு திருமணங்கள் செய்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் மீது ஐபிசியின் கீழ் வழக்குத் தொடர முடியும்." என்று அவர் கூறினார்.
பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவது பற்றிப் பேசப்படும் நிலையில் அசாம் அரசு, பலதார மணத்திற்காக ஏன் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று அன்ஷுமன் கேட்கிறார்.
”இது ஒரு அரசியல் வித்தை. ஏனெனில் குழந்தைத் திருமண விவகாரத்தில் அரசு ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்தது. ஆனால் அது பின்னாளில் மந்தமாகி விட்டது. பழங்குடியினர் பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் பெரிய அளவில் நடக்கின்றன. அங்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், @HIMANTABISWA
ஓய்வுபெற்ற நீதிபதி ரூமி குமாரி ஃபூகன் தலைமையிலான நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே முஸ்லிம் உறுப்பினர் குவாஹட்டி உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் நெகிபுர் ஜமான் ஆவார்.
"இப்போது குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது, எனவே, எங்கள் முதல் கூட்டம் நடைபெறும் வரை அடுத்த வேலை பற்றி எதுவும் கூறுவது மிக அவசரத்தனமாக இருக்கும். ஆனால் வங்காள வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்களிடையே பலதார மணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் உள்ளன. இதையெல்லாம் நாங்கள் ஆராய்வோம்.”
"நாங்கள் எல்லா சட்ட விதிகள் மற்றும் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் (ஷரியத்) விதிகளையும் ஆய்வு செய்வோம்," என்று அவர் கூறினார்.
முஸ்லிம்களை குறிவைப்பதாக குற்றச்சாட்டு
அசாம் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியின் தேபப்ரதா சைகியா, அரசின் இந்த நடவடிக்கையை வகுப்புவாத ஒருமுனைப்படுத்தலுடன் தொடர்புபடுத்துகிறார்.
“இதுவரை நாட்டில் ஒரே சிவில் சட்டம் இயற்றப்படவில்லை. ஆனால் தனியாக புதிய சட்டம் இயற்றும் முயற்சியில் மாநில அரசு இறங்கியுள்ளது. இதுபோன்ற பிரசாரத்தில் நேரத்தையும், அரசு பணத்தையும் வீணடிக்காமல், மாநிலத்தின் மற்ற பிரச்னைகள் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம்," என்று அவர் கூறினார்.
"பலதார திருமணம் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல, பிற சமூகங்களிலும் உள்ளது. எனவே முஸ்லிம்களை மட்டும் குறிவைப்பது நியாயமில்லை." என்று அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (AIUDF) தலைவர் மௌலானா பதுருதீன் அஜ்மல் கூறினார்.
இந்தியாவில் பலதார மணம் என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் அல்லது கணவர்களை கொண்டிருப்பது. இந்த பிரச்னை, தனிநபர் சட்டங்கள் மற்றும் இந்திய தண்டனை சட்டம் (IPC) ஆகிய இரண்டாலும் கவனிக்கப்படுகிறது.
முஸ்லிம் தனிநபர் சட்டம் (ஷரியத்) 1937 இன் கீழ், முஸ்லிம் ஆண்கள் முதல் மனைவியின் ஒப்புதலுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்தச் சட்டத்தில் ஆண்களுக்கு மட்டுமே மறுமணம் செய்ய அனுமதி உண்டு. முஸ்லிம் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள முடியாது.
" குழந்தை திருமண தடுப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை, மதரஸாக்கள் மீது நடவடிக்கை என்று தற்போதைய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளால் வங்காள வம்சாவளி முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று மாநிலத்தில் நீண்டகாலமாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் மூத்த செய்தியாளர் வைகுந்த் நாத் கோஸ்வாமி கூறினார்.

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA
“இந்துத்துவ அரசியல் செயல்திட்டத்தின் கீழ் பாஜக அரசு எந்த வேலையைச்செய்தாலும் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்” என்கிறார் அவர்.
பாஜகவின் பதில்
“அரசியல்வாதிகள் எந்தக் குற்றச்சாட்டைக்கூறினாலும், பலதார மணம் சமூக நலனுக்கு உகந்ததா, இல்லையா என்பதுதான் அடிப்படைக் கேள்வி,” என்கிறார் அசாம் பிரதேச பாஜகவின் மூத்த தலைவர் பிரமோத் சுவாமி.
”எங்கள் அரசு அதை தடை செய்ய எல்லா சட்ட அம்சங்களையும் ஆராய்ந்து வருகிறது. நாங்கள் மகளிர் அதிகாரத்தை நோக்கி செயல்பட்டு வருகிறோம். அதனால்தான் முத்தலாக் ஒழிக்கப்பட்டது," என்று அவர் மேலும் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












