ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் - சபாநாயகர் தேர்தலுக்கு ஒரு நாள் முன் காங்கிரஸ் அறிவித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்தத் தகவலை தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாபுக்கு காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பது குறித்து பல்வேறு ஊகங்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தில் முன்வைக்கப்படுகின்றன.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் கட்சி உற்சாகத்தில் உள்ளது. மோதி எழுச்சிக்குப் பிந்தைய 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் கிடைத்ததைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்கு தொகுதிகளை வென்றதால் காங்கிரஸ் தெம்பாக இருக்கிறது. கடந்த இரு முறைகளுக்கும் மாறாக இந்த முறைதான் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித் தலைவரை பெறுவதற்குரிய அளவுக்கான உறுப்பினர்களை மக்களவையில் பெற்றுள்ளது. இந்த 18-வது மக்களவையில் மோதி அரசுக்கு எதிராக ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒரு ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சபாநாயகர் தேர்தலில் கடும் போட்டி
நாடாளுமன்ற மக்களவையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (புதன்கிழமை) காலை 11 மணியளவில் நடக்கிறது. இதில், ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 17-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா போட்டியிடுகிறார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரசைச் சேர்ந்த, நாடாளுமன்ற அலுவல்களில் அதிக அனுபவம் பெற்ற மூத்த தலைவரான கொடிக்குனில் சுரேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும் கேரள மாநிலத்தின் மாவேலிக்கரை தொகுதியின் எம்.பி.யுமான அவர், எட்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்களவையில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி இல்லாத நிலையில், சபாநாயகர் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் சபாநாயகர் பதவியைப் பெற விரும்பியதாக தேர்தல் முடிவுகள் வெளியான போதே தகவல்கள் வெளியாயின. குறிப்பாக, தெலுங்கு தேசம் கட்சி சபாநாயகர் பதவிக்கு குறி வைத்ததாக அரசியல் அரங்கில் ஊகங்கள் எழுந்தன.
இந்த பின்னணியில், பாஜக - காங்கிரஸ் வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதும் சபாநாயகர் தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் திட்டம் என்ன?
மக்களவைத் தேர்தலில் வென்ற இரு தொகுதிகளில் வயநாட்டை ராஜினாமா செய்துவிட்டு, ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக் கொள்ள ராகுல் காந்தி தீர்மானித்த போதே, தேசிய அரசியலில் அவர் இனி தீவிரமாக ஈடுபடுவார் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்தனர். அப்போது பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "ராகுல் காந்தி டெல்லி அரசியலில் தீவிரமாக ஈடுபட தீர்மானித்துவிட்டார் என்பதற்கான முன்னோட்டமாகவே ரேபரேலி தொகுதியை தக்க வைத்ததை எடுத்துக் கொள்கிறேன். ஆண்டின் 365 நாட்களிலும் தேசிய அரசியலில் முனைப்புடன் இருக்க அவர் தலைநகரிலேயே தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம். அதற்காகவே, அவர் ரேபரேலியை தேர்வு செய்திருக்கிறார்." என்று கூறினார்.
காங்கிரஸ் பெற்ற வெற்றியின் சூத்திரதாரி என புகழாரம்
கடந்த இரு தேர்தல்களை விட காங்கிரஸ் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகள் பெற்றதற்கு ராகுல் காந்தியின் இரண்டு நீண்ட நடைபயணங்கள் தான் காரணம் என்று புகழாரம் சூட்டப்படுகிறது. ராகுல் காந்தி 2022-23இல் மேற்கொண்ட 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் நற்பெயரை தேடித்தந்தது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்த பயணம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, ராகுல் காந்தி ஜனவரி மாதம் மணிப்பூரில் இருந்து நியாய யாத்திரையைத் தொடங்கியபோது, யாத்திரையின் நேரம் குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இருப்பினும், அரசியல் ஆய்வாளர் ராகுல் வர்மா, நியாய யாத்திரை 'தோல்வி' அடைந்து விட்டது என்று கருதுகிறார், ஏனெனில் "இந்தக் காலக்கட்டத்தில் அக்கட்சியின் முக்கிய கூட்டணியான நிதிஷ் குமார் போன்றவர்கள் கட்சியை விட்டு விலகினர்," என்று விளக்கினார்.
ஆனால் யாத்திரையில் பங்கேற்ற யோகேந்திர யாதவின் கூற்றுப்படி, நியாய யாத்ரா கட்சியை அதன் சமூக அடித்தளத்தை நோக்கிக் கொண்டு சென்றது, என்கிறார். யோகேந்திர யாதவின் கூற்றுப்படி, "காங்கிரஸ் எப்போதுமே சமூகத்தின் ஏழைப் பிரிவினரின் கட்சியாக இருந்து வருகிறது. ஆனால் அதன் கொள்கைகள் மற்றும் அதன் தலைமை இரண்டும் ஏழை சமூகத்தில் இருந்து விலகியிருந்தன. ராகுல் மேற்கொண்ட யாத்திரை மீண்டும் காங்கிரஸின் நல்ல கொள்கைகளை மக்களிடையே நிலைநாட்ட உதவியது. இந்தச் செயல்முறை இப்போதுதான் தொடங்கி உள்ளது. விரைவில் சமூகத்தின் ஏழைப்பிரிவுடன் முழுமையாக காங்கிரஸ் கைக்கோர்க்கும்," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ராகுல் என்ற பிராண்ட் எத்தகையது?
ராகுல் காந்தி என்கிற அரசியல் தலைவரின் பிம்பம், பிரதமர் மோதியின் '56 அங்குல மார்பு' கதையிலிருந்து வேறுபட்டது. எழுத்தாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான பரோமிதா வோரா, ராகுலின் இந்திய ஒற்றுமைப் பயணம் (பாரத் ஜோடோ யாத்திரை) வீடியோக்கள் ஒரு வித்தியாசமான ஆண்மையின் உணர்வை தனக்கு உருவாக்கியதாக எழுதுகிறார். “மக்கள் தனக்கு முன்னால் தலைவணங்க வேண்டும் என்று கோரும் ஒரு பெரிய சர்வாதிகார ஆண் அல்ல இவர். இது வெளிப்படைத்தன்மை, புன்னகை, மென்மை மற்றும் ஒர் அரவணைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஆண்மை," என்கிறார் அவர்.
தொடர்ந்து இதுபற்றி எழுதிய அவர், "அவரின் இந்த பிம்பம் நட்பு, சக மனிதர்களை தன்னிடம் பழக உந்துதல், வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்ட சுயபரிசோதனைக்கான தேடலை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. அதில், சில நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் பலவீனங்கள் இருந்தபோதிலும் உறுதியாக இருப்பதற்கான தேடலாக அது இருந்தது. இது ஒருவித உணர்ச்சியை உருவாக்கியது. நரேந்திர மோதி ஒரு வலுவான, சக்திவாய்ந்த மற்றும் திறமையானவராக தோன்றினாலும், ராகுல் காந்தி தன்னிடம் வருபவர்களை ஒரு இசை போல அரவணைத்து அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துகிறார்," என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












