இந்தியாவில் வங்கதேச எம்.பி. கொலை: 3 பேர் கைது - திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

பட மூலாதாரம், ANWARUL AZIM ANAR FB
ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் அசீம் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுஸமான் கான் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
”இந்தக் கொலை திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. வங்கதேச போலீசார் இந்த வழக்கில் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்," என்று வங்கதேசத்தில் உள்ள தான்மண்டி பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அசாதுஸமான் கான் கூறினார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்திய காவல்துறையும் இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பதாகவும் வங்கதேச உள்துறை அமைச்சர் கூறினார்.
”மே 13 அன்று தனது காரில் ஏற்றிச் சென்ற நபர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தூக்கி எறியப்பட்டதாக கார் ஓட்டுநர் விசாரணையின்போது தெரிவித்தார்,” என்று கொல்கத்தாவின் பிதான்நகர் துணை போலீஸ் கமிஷனர் மானவ் ஷ்ரிங்லா பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANWARUL AZIM ANAR FB
ஆனால் எம்பி கொலை செய்யப்பட்டாரா அல்லது அவரது உடல் மீட்கப்பட்டதா இல்லையா என்பதை கொல்கத்தா காவல்துறை இன்னும் முறையாக உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் கொல்கத்தாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் அசீம் கொல்லப்பட்டதாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்ததாக வங்கதேச காவல்துறையின் ஓர் அதிகாரி பிபிசி பங்களாவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
"எம்.பி. அன்வருல் சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்தார். இது கண்டிப்பாக கொலைதான். இதன் பின்னணியில் உள்ள ரகசியத்தைப் பின்னர் கூறுகிறேன்" என்று வங்கதேச உள்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தியா வங்கதேச உறவுகளில் தாக்கம்?
இந்திய பயணத்தின் போது எம்.பி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?
"பரஸ்பர உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இதுவரை எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, வங்கதேச குடிமகன் ஒருவராலேயே அன்வருல் கொல்லப்பட்டுள்ளார்," என்று இந்தக் கேள்விக்குப் பதிலளித்த கான் கூறினார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொலை நடந்தது எப்படி தெரிந்தது?

பட மூலாதாரம், Getty Images
விசாரணையைத் தொடங்கிய பின்னர், அன்வருல் அசீமை அவரது நண்பரின் வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற கார் ஓட்டுநரை முதலில் தடுப்புக் காவலில் வைத்ததாக மேற்கு வங்க காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அசீம் காரில் அமர்ந்ததும் மேலும் 3 பேர் அதில் ஏறியதாக டிரைவர் போலீசாரிடம் தெரிவித்தார். இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் அதில் அடங்குவர். பின்னர் இந்த 4 பேரும் கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ஏடிஎஸ், நான்கு பேர் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டது. ஆனால் மூன்று பேர் மட்டுமே வெளியே வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு ஆண்களும் பின்னர் வங்கதேசம் திரும்பினர் என்று ஏடிஎஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து வங்கதேச புலனாய்வு துறைக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். பின்னர் அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரிடம் இருந்தும் பெறப்பட்ட தகவல்கள் கொல்கத்தா காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் அசீமின் மரணத்தை போலீசாரால் உறுதிப்படுத்த முடிந்தது.
நியூ டவுனில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ரத்தத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் புதன்கிழமை பிற்பகல் வரை எம்.பி.யின் உடலை மீட்க முடியவில்லை. தற்போது இந்தக் குடியிருப்பை போலீசார் சீல் வைத்துள்ளனர்.
அன்வருலின் மகள் மும்தாரின் ஃபிர்தௌஸ் டோரின் புதன்கிழமை காலை கொல்கத்தா வந்திருப்பதை கொல்கத்தாவில் உள்ள வங்கதேச தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
'காலை உணவுக்குப் பிறகு காணவில்லை'

கொல்கத்தாவின் சிந்தி பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் கோபால் பிஸ்வாஸ், கடந்த 20 ஆண்டுகளாக அன்வருல் அசீமுடன் குடும்ப உறவு வைத்திருந்ததாகக் கூறுகிறார்.
கோபால் விஸ்வாஸ் கொல்கத்தாவில் நகை ஏற்றுமதி வணிகத்துடன் தொடர்புடையவர். வங்கதேசத்தில் பிஎன்பி அரசு ஆட்சியில் இருந்தபோது அன்வருல் இந்தியாவில் வசித்து வந்தார். கொல்கத்தாவில் உள்ள மஜ்தியாவில் உள்ள சுபாஷ் அகர்வாலின் வீட்டில் அவர் வசித்து வந்தார். அங்கு அவருக்கு கோபால் விஸ்வாஸுடன் அறிமுகம் ஏற்பட்டு அது பின்னர் நட்பாக மாறியது.
பராநகரில் உள்ள கோபால் விஸ்வாஸ் வீட்டில் அன்வருல் ஹக் தங்கியிருந்தார். அன்வருல் ஹக் இந்தியாவில் உள்ள நரம்பியல் நிபுணரிடம் ஆலோசனை பெற விரும்பினார் என்று கோபால் தெரிவித்தார்.
மே 13 அன்று அன்வருல் ஹக் காலை உணவைச் சாப்பிட்டதாக கோபால் கூறுகிறார்.
"இன்றைய தினம் என் கார் கிடைப்பதற்கு இல்லை என்றும் வேறு கார் ஏற்பாடு செய்துகொள்ளுமாறும் நான் அவரிடம் சொன்னேன். அதன் பிறகு நான் வீட்டின் முதல் மாடியில் உள்ள என் அலுவலகத்திற்குச் சென்றேன்" என்று கோபால் மேலும் கூறினார்.
மதியம் வீட்டை விட்டுச் செல்லும்போது மாலைக்குள் வீடு திரும்புவதாக அன்வருல் கூறியதாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர் வீடு திரும்பாததால் கவலையடைந்து பராநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தத்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
புகார் கிடைத்த பிறகு போலீசார் எம்பி அன்வருலை தேடத் தொடங்கினார்கள். முதலில் அவரது போன் இருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். கொல்கத்தாவின் நியூ மார்க்கெட் பகுதியில் போன் இருப்பது தெரிய வந்தது.
இதற்குப் பிறகு மே 17ஆம் தேதி பிகாரின் ஏதோவொரு பகுதியில் அவரது போன் சிறிது நேரத்திற்கு சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












