கொரோனா தடுப்பூசி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

பட மூலாதாரம், Getty Images
லண்டனின் அறிவியல் அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய கண்காட்சியில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் விநியோகம் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓர் அலமாரியில் ஓர் ஊசி, ஒரு மருந்து பாட்டில் மற்றும் அட்டையிலான ஒரு தட்டு ஆகியவை உள்ளன. இவை, 2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி 90 வயதான மார்கரெட் கீனன் என்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியுடன் தொடர்புடையவை. மருத்துவ ஆய்வுகளுக்கு வெளியே கொரோனா தடுப்பூசியைப் பெற்ற உலகின் முதல் நபர் என்ற பெருமையைப் அந்தப் பெண்மணி அன்று பெற்றார்.
அந்தக் கணம் முதல் தற்போதுவரை உலகளவில் 13 பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் பூஸ்டர்கள் டோஸ்களும் அடங்கும். இந்த இரண்டு வருடங்களில் நாம் என்ன கற்றுக்கொண்டோம்? தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த தரவு என்ன வெளிப்படுத்துகிறது? பக்க விளைவுகள் பற்றி என்ன தெரியும்?
சுருக்கமாக கூறுவதென்றால், உலகெங்கிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளைக் கட்டுப்படுத்துவதில் கொரோனாவுக்கு எதிரான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் முதன்மை பங்கு வகித்ததாக ஓர் ஆராய்ச்சி கூறுகிறது. தடுப்பூசி இல்லாவிட்டால், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கும்.
மிகக் கடுமையான பக்க விளைவுகள் அரிதாகவே இருந்ததாக பொது சுகாதார நிறுவனங்கள் கூறுகின்றன.
அந்த அறிக்கைகளின் பின்னணி குறித்து பார்ப்போம்.
நடைமுறை விளைவுகள்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தடுப்பூசிகள் பெரிய அளவில் மக்களை சென்றடையைத் தொடங்கியதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் இறப்பு விகிதம் உலகம் முழுவதும் கணிசமாகக் குறைந்துள்ளது.
ஓமிக்ரான் போன்ற அதிகம் பரவக்கூடிய திரிபுகள் உச்சத்தில் இருந்தபோது கூட, பெரும்பாலான மக்கள் கடுமையாக நோய்வாய்ப்படவில்லை அல்லது இறக்கவில்லை என்பதை தடுப்பூசி உறுதி செய்துள்ளது.
டிசம்பர் 13 அன்று வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், காமன்வெல்த் நிதியம் அமெரிக்க யேல் பல்கலைக்கழக பொது சுகாதார துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் இல்லாதிருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்க அழைப்பு விடுத்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் மட்டும் 18.5 மில்லியன் கூடுதல் மருத்துவமனை அனுமதி மற்றும் 3.2 மில்லியன் இறப்புகள் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் என்று அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கூடுதல் தொற்று ஏற்பட்டிருந்தால் மருத்துவச் செலவுக்காக செலவழித்திருக்க வேண்டிய 1.15 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை தடுப்பூசித் திட்டம் மூலம் அமெரிக்கா சேமித்துள்ளது.
"டிசம்பர் 12, 2020 முதல், அமெரிக்காவில் 82 மில்லியன் நோய்த்தொற்றுகள், 4.8 மில்லியன் மருத்துவமனைகள் அனுமதி மற்றும் 7,98,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. வேறுவிதமாக கூறினால், தடுப்பூசி இல்லாவிட்டால் அமெரிக்கா 1.5 மடங்கு அதிகமான தொற்றையும், 3.8 மடங்கு அதிகமான மருத்துவமனை அனுமதிகளையும், 4.1 மடங்கு அதிகமான இறப்புகளையும் சந்தித்திருக்கும்" என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
"கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பலருக்கு இறப்பதற்கும் உயிர்வாழ்வதற்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது” என்கிறார் பிரேசிலியன் சொசைட்டி ஆஃப் இம்யூனைசேஷன் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் இசபெல்லா பல்லாலாய்.
டாக்டர் பல்லாலாயின் சொந்த நாடான பிரேசில், வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு பிரேசில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
2021ஆம் ஆண்டு ஜனவரியில் முதல் தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டபோது, பிரேசிலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. தேசிய சுகாதார செயலாளர்கள் கவுன்சில் கூறியதன்படி, பிரேசிலில் கடந்த ஆண்டு மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில், தினசரி புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 72,000 ஆகவும், தினசரி இறப்புகளின் எண்ணிக்கை 3,000ஐயும் தாண்டியது. வாரங்கள் செல்லச் செல்ல தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரேசிலியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், இறப்பு எண்ணிக்கையும் பெரிய அளவில் குறையத் தொடங்கியது. 2022ஆம் ஆண்டு ஜனவரியில் ஓமிக்ரான் திரிபு காரணமாக இந்த எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கினாலும், இந்த புதிய அலையின் உச்சமாக தினசரி 950 இறப்புகள் பதிவானது. இது முந்தைய அலையோடு ஒப்பிடும் போது மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு.
பக்க விளைவுகள்

பட மூலாதாரம், Getty Images
"காலம் செல்ல செல்ல, அதிக அளவு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் அதன் பாதுகாப்பு குறித்து நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று டாக்டர் பல்லாலாய் கூறுகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், தடுப்பூசிக்குப் பிந்தைய பக்க விளைவுகள் குறித்த ஒவ்வொரு வழக்கையும் கண்காணித்து விசாரிக்க ஒழுங்குமுறை முகமைகளும் பொது சுகாதார நிறுவனங்களும் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.
"தீவிரமான பக்க விளைவுகள் மிகவும் அரிதானவை" என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை சுட்டிக்காட்டுகிறது.
ஊசி போட்ட இடத்தில் வலி, சோர்வு, தலைவலி, உடல் வலி, காய்ச்சல் ஆகியவை தடுப்பூசிக்குப் பிறகான மிகவும் பொதுவான அசௌகரியங்கள்.
"இந்தப் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை லேசானவை மற்றும் ஒரு வாரத்திற்கும் குறைவாகவே நீடிக்க வேண்டும்" என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் கடுமையான பக்க விளைவுகள் குறித்து சமீபத்திய புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? இது தொடர்பான புள்ளிவிவரங்களின் புதுப்பித்த பதிவு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் (CDC) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை அறியப்பட்ட மிகவும் தீவிரமான பக்க விளைவுகளின் விகிதாசார எண்கள் இவை:
அனாபிலாக்ஸிஸ் (தடுப்பூசிக்குப் பிறகான ஒவ்வாமை) - ஒரு மில்லியன் டோஸ்களில் ஐந்து வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஜான்சென் தடுப்பூசி தொடர்பான ரத்த உறைவு - ஒரு மில்லியன் டோஸ்களில் நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஜான்சென் தடுப்பூசியுடன் தொடர்புடைய குய்லின்-பாரே நோய் அறிகுறி - இது குறித்த அதிகாரப்பூர்வ எண்கள் எதுவும் இல்லை. ஆனால் ஃபைசர் டோஸ் செலுத்திக்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் சிறிய அதிகரிப்பு இருந்தது.
மயோகார்டிடிஸ் மற்றும் பெரிகார்டிடிஸ் (இதய அழற்சி) - ஃபைசர் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 16 முதல் 17 வயதுடையவர்களிடம் ஒரு மில்லியனுக்கு 105.9 வழக்குகளும், 18 முதல் 24 வயதுடையவர்களில் ஒரு மில்லியனுக்கு 52.4 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகளின் பல ஆய்வுகள் மற்றும் மதிப்பாய்வுகள் தொடர்பான தரவுகள் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதைக் காட்டுகின்றன.
இறப்பு என்று வரும்போது, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 7 வரை தடுப்பூசிக்குப் பிறகு 17,800 இறப்புகள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இது நாட்டில் செலுத்தப்பட்ட 657 மில்லியன் டோஸ்களில் 0.0027 சதவிகிதம். எனினும், இந்த மரணங்களுக்கான நேரடி காரணம் தடுப்பூசி என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
மருத்துவப் பதிவுகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் மூலம் இந்த வழக்குகள் அனைத்தையும் ஆய்வு செய்ததில் ஜான்சன் தடுப்பூசியுடன் தொடர்புடைய ஒன்பது இறப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டன.
அடுத்து என்ன வரும்?
கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகும், கொரோனா வைரஸை திறம்பட கட்டுப்படுத்தும் வரை இன்னும் பல சவால்கள் உள்ளன.
"உலகளாவிய கண்ணோட்டத்தில், நோய்த்தடுப்பு நிலையில் மிகவும் பின்தங்கிய நாடுகள் சில உள்ளன" என்று தொற்றுநோய் நிபுணர் ஆண்ட்ரே ரிபாஸ் ஃப்ரீடாஸ் கூறுகிறார்.
உதாரணமாக, ஹைதியின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு ஆரம்ப டோஸ்களை எடுத்துக் கொண்டுள்ளனர். அல்ஜீரியா (15%), மாலி (12%), காங்கோ (4%) மற்றும் ஏமன் (2%) போன்ற நாடுகளிலும் இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது.
வைரஸ் பரவல் அதிகரிக்கும் போது தீவிரமான பரவல் அல்லது புதிய திரிபுகள் உருவாகும் என்பதால் இது மிகப்பெரும் கவலையை வெளிப்படுத்துவதாக ஆண்ட்ரே ரிபாஸ் ஃப்ரீடாஸ் எச்சரிக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












