இந்தியா Vs சீனா: உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை நாடாக இருப்பது வரமா, சாபமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் உள்ள சீனாவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மத்தியில் இந்தியா விஞ்சும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆசிய நாடுகளுமே ஏறைக்குறைய தலா 140 கோடிக்கு அதிகமான மக்கள்தொகையை கொண்டுள்ளன. மேலும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலான மக்களை இவை கொண்டுள்ளன.
சீனாவின் மக்கள்தொகை அடுத்த ஆண்டில் இருந்து சரியக்கூடிய வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு 1 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இது இறப்பு எண்ணிக்கையை விட சிறிது மட்டுமே அதிகம். இதற்கு முக்கிய காரணம் கருத்தரிப்பு சதவீதம் அபரிமிதமாக குறைந்து வருவதே.
கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கருத்தரிப்பு சதவீதமும் குறைந்து கொண்டு வருகிறது. 1950இல் 5.7 ஆக இருந்த பெண்கள் குழந்தைபெற்றுகொள்ளும் சதவீதம், தற்போது 2குழந்தைகளாக குறைந்துள்ளது. எனினும், இந்த சரிவு விகிதம் என்பது மெதுவாக உள்ளது. அப்படியென்றால், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா முந்துகிறது என்பதன் அர்த்தம் என்ன?
மக்கள்தொகை குறைப்பில் இந்தியாவை விட சீனாவின் வேகம் அதிகம்
1973இல் 2 சதவீதம் ஆக இருந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை 1983ஆம் ஆண்டுக்குள் 1.1 சதவீதமாக சீனா குறைத்தது. இதில் பெரும்பாலானவை மனித உரிமைகளை கடுமையாக மீறியதன் மூலம் சாதிக்கப்பட்டது என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஒரு குழந்தை தொடர்பாகவும் திருமணம், குழந்தைகளுக்கு இடையேயான இடைவெளி தொடர்பாகவும் அங்கு இரு வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த நூற்றாண்டாண்டின் இரண்டாம் பாதியில் ஏறத்தாழ ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அளவில் இந்தியா விரைவான மக்கள்தொகை வளர்ச்சியை கண்டது. இந்த காலகட்டத்தில் இறப்பு விகிதம் சரிந்தது, மக்களின் வாழ்நாள் அதிகரித்தது, அவர்களின் வருமானமும் உயர்ந்தது.
நிறைய மக்கள்- குறிப்பாக நகரத்தில் வசிப்பவர்கள்- சுத்தமான குடிநீர், நவீன சாக்கடை வசதியை பெற்றனர்.
"இருப்பினும் பிறப்பு விகிதம் அதிகமாகவே இருந்தது" என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் மக்கள்தொகை ஆய்வாளரான டிம் டைசன். கடந்த 1952ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியா, முதன்முறையாக தேசிய மக்கள்தொகை கொள்கையை 1976ஆம் ஆண்டு வகுத்தது. அந்த நேரத்தில் சீனா தனது பிறப்பு விகிதத்தை குறைப்பதில் மும்முரமாக இருந்தது.
ஆனால் 1975 ஆம் ஆண்டு அவசரநிலையின் போது - அடிப்படை மனித உரிமைகள் இடைநிறுத்தப்பட்ட போது - குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் லட்சக் கணக்கான ஏழைகளுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டது.
இது குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எதிரான சமூகப் பின்னடைவுக்கு வழிவகுத்தது.
"எமர்ஜென்சி நடக்காமல் இருந்திருந்தால் மற்றும் அரசியல்வாதிகள் அதிக செயல்திறனுடன் செயல்பட்டிருந்தால் கருவுறுதல் குறைவு இந்தியாவில் வேகமாக இருந்திருக்கும். குடும்பக் கட்டுப்பாடு விஷயத்தில் அடுத்தடுத்து வந்த அனைத்து அரசாங்கங்களும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டன," என்று பேராசிரியர் டைசன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு பிறகு மக்கள் தொகை திட்டங்களை அறிமுகப்படுத்திய கிழக்கு ஆசிய நாடுகளான கொரியா, மலேசியா, தைவான் மற்றும் தாய்லாந்து ஆகியவை கூட இந்தியாவுக்கு முன்னதாகவே, குறைந்த கருவுறுதல் நிலை, பிரசவத்தின்போது தாய் சேய் உயிரிழப்பு ஏற்படுவதை குறைத்தல், வருவாய் உயர்வு மற்றும் மனித வளர்ச்சி உயர்வு ஆகியவற்றை அடைந்தன.
இன்னும் இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் ஏற்படவில்லை
சுதந்திரத்துக்கு பிறகு 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை இந்தியா சேர்த்துள்ளது, மேலும், அடுத்த 40 ஆண்டுகளுக்கு அதன் மக்கள் தொகை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கடந்த சில தசாப்தங்களாக அதன் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது, மேலும் நாடு "மக்கள்தொகை பேரழிவு" பற்றிய மோசமான கணிப்புகளை மீறியுள்ளது.
எனவே, சீனாவை விட இந்தியா அதிக மக்கள் தொகையை கொள்வது என்பது கவலையளிக்க கூடிய நிலை இல்லை என்று மக்கள் தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருவாய் உயர்வு மற்றும் சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கான மேம்பட்ட அணுகல் ஆகியவை இந்தியப் பெண்களுக்கு முன்பை விட குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள உதவியது, இது வளர்ச்சி வளைவை திறம்பட சமன் செய்துள்ளது.
இந்தியாவின் 22 மாநிலங்களில் 17 மற்றும் கூட்டாட்சி நிர்வாகத்தில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒரு பெண்ணுக்கு இறந்து குழந்தைகள் என கருவுறுதல் விகிதங்கள் மாற்று நிலைகளுக்குக் கீழே குறைந்துள்ளன. ( Replacement level எனப்படும் மாற்று நிலை என்பது ஒரு நிலையான மக்கள்தொகையை பராமரிக்க புதிய பிறப்புகள் போதுமானதாக இருக்கும் என்ற நிலையாகும்) இந்தியாவின் வட பகுதியை விட தென் பகுதியில் பிறப்பு விகிதம் குறைவு வேகமாக உள்ளது.
"இந்தியாவின் பல பகுதிகள் தென்னிந்தியாவைப் போல இருந்திருக்க முடியாது என்பது ஒரு பரிதாபம்" என்கிறார் பேராசிரியர் டைசன். "எல்லா விஷயங்களும் சமமாக இருப்பதால், வட இந்தியாவின் சில பகுதிகளில் விரைவான மக்கள்தொகை வளர்ச்சி வாழ்க்கைத் தரத்தை தாழ்த்தியுள்ளது" என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
சீனாவை முந்துவது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
ஏன் அப்படி? காரணம்...
சீனா உட்பட ஐந்து நிரந்தர உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான இந்தியாவின் கோரிக்கையை வலுப்படுத்த முடியும்.
இந்தியா ஐ.நா.வின் ஸ்தாபக உறுப்பினராக உள்ளது மற்றும் நிரந்தர இருக்கைக்கான அதன் கோரிக்கை நியாயமானது என்று எப்போதும் வலியுறுத்துகிறது.
ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் மக்கள்தொகைப் பிரிவின் இயக்குநர் ஜான் வில்மோத் கூறுகையில், “[அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால்] விஷயங்களில் உங்களுக்கு சில உரிமைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்” என கூறுகிறார்.
இந்தியாவின் மக்கள் தொகையியல் மாற்றமடைந்துவரும் போக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றூ கூறுகிறார், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த கே.எஸ். ஜேம்ஸ்.
குறைபாடுகள் இருந்தபோதிலும் ஏழைகளும் அதிகம் படிப்பறிவு இல்லாதவர்களையும் உள்ளடக்கிய ஜனநாயக நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம் “ஆரோக்கியமான மக்கள்தொகை மாற்றத்தை” நிர்வகிப்பதற்கான சில பெருமைகளை இந்தியா பெற வேண்டும் என்பது ஜேம்ஸ் கருத்தாகும்.
“பெரும்பாலான நாடுகள் அதிக கல்வியறிவு மற்றும் வாழ்க்கை தரத்தை அடைந்தபின்னரே இதை செய்தன” என்றும் அவர் கூறுகிறார்.
மற்றொரு மகிழ்ச்சியான செய்தி, உலகில் தற்போது 25 வயதுக்கு கீழ் இருப்பவர்களில் ஐந்தில் ஒருவர் இந்தியர் மற்றும் இந்தியாவில் 47 சதவீதத்தினர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் 1990 களின் முற்பகுதியில் இந்தியா தனது பொருளாதாரத்தை தாராளமயமாக்கிய பிறகு பிறந்தவர்கள். இத்தகைய இளம் இந்தியர்கள் தனித்துவமான சில குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர் என்று பொருளாதார வல்லுநரான ஸ்ருதி ராஜகோபாலன் கூறுகிறார்.
“இந்த இளம் தலைமுறை இந்தியர்கள் அறிவு மற்றும் நெட்வொர்க் பொருட்கள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நுகர்வோர் மற்றும் தொழிலாளர் ஆதாரமாக இருப்பார்கள். இந்தியர்கள் உலகளாவிய திறமைகளின் மிகப்பெரிய தொகுப்பாக இருப்பார்கள்," என்று அவர் கூறுகிறார்.
சவால்கள் என்ன?
இத்தகைய மக்கள்தொகையின் பலன்களை அறுவடை செய்ய இந்தியா, வேலை செய்யும் வயதில் உள்ள இளம் தலைமுறையினருக்கு போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
ஆனால், வேலை செய்யும் வயதில் உள்ள இந்தியர்களில் வெறும் 40 சதவீதம் பேர் மட்டுமே வேலை செய்கின்றனர் அல்லது வேலை செய்ய விரும்புகின்றனர் என்று இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையம் (CMIE)கூறுகிறது.
வேலை செய்யும் வயதில் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும், குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் குறைவான நேரத்தைச் செலவிடுவதால் அதிகமான பெண்களுக்கு வேலைகள் தேவைப்படும்.
இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையத்தின் கூற்றுப்படி, வேலை செய்யும் வயதுடைய பெண்களில் 10 சதவீதமாக மட்டுமே அக்டோபரில் தொழிலாளர் பட்டியலில் இணைந்துள்ளனர். சீனாவில் இது 69 சதவீதமாக உள்ளது. இடம்பெயர்தல் என்பது மற்றொரு சவால் ஆகும். ஏறக்குறைய 20 கோடி இந்தியர்கள் நாட்டுக்குள்ளேயே - மாநிலங்கள் இடையே மற்றும் மாவட்டங்கள் இடையே- இடம்பெயர்ந்து உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இதில், பெரும்பாலானோர் வேலைக்காக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வோர் ஆவர்.
“கிராமப்புறங்களில் குறைந்த ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு குறைவு போன்ற காரணங்களால் இடம்பெயர்தல் அதிகரிக்கும்போது நமது நகரங்கள் பெரிதாகும். ஆனால், இவ்வாறு இடம்பெயர்வோருக்கு சரியான வாழ்க்கை தரத்தை வழங்குவார்களா? இல்லையென்றால், அதிக குடிசைப்பகுதிகள் மற்றும் நோய்களில் போய் இது முடியும்” என்கிறார் . குழந்தைகள் திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உள்ளது என்றும் இறப்பு பிறப்பு தொடர்பாக முறையாக பதிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் உள்ளதும் கவலையளிக்க கூடியதாக உள்ளது.
மக்கள்தொகை கட்டுப்பாடு" பற்றிய அரசியல் சொல்லாடல்கள் நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மையினரான முஸ்லிம்களை இலக்காகக் கொண்டதாகத் தோன்றுகிறது.
உண்மையில், "இந்தியாவின் மதக் குழுக்களுக்கு இடையே குழந்தை பிறப்பதில் உள்ள இடைவெளிகள் பொதுவாக முன்பை விட மிகக் குறைவு" என்று பியூ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் வயதுமூப்பு பிரச்னை
1947இல், இந்தியாவின் சராசரி வயது 21. சொற்பமாக 5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இன்றோ சராசரி வயது 28க்கு மேல், 10%க்கும் அதிகமான இந்தியர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் குறைந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பே மாற்று நிலைகளை எட்டியுள்ளன.
"உழைக்கும் வயது மக்கள்தொகை குறைந்து வருவதால், வயதான மக்களை ஆதரிப்பது அரசாங்கத்தின் வளங்களில் பெருகிவரும் சுமையாக மாறும்" என்கிறார் Whole Numbers and Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India என்ற புத்தகத்தின் ஆசிரியர் ருக்மணி எஸ்.
"குடும்ப கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்பட வேண்டும், மேலும் வயதானவர்கள் தனியாக வாழ்வது கவலைக்குரிய ஆதாரமாக மாறும்," என்று அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












