அமீர்கான் - ஐரா இருவரும் தந்தை - மகள் உறவை மேம்படுத்த கூட்டாக எடுத்த சிகிச்சை பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அனகா பதக்
- பதவி, பிபிசி செய்தியாளர்
"நான் என் தந்தையிடம் ஒருபோதும் பேசுவதில்லை, நான் சொல்வதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டர்."
"முன்பு எங்களிடையே நல்ல உறவு இருந்தது. ஆனால், இப்போது இடைவெளி அதிகமாகிவிட்டது."
என்ன உறவாக இருந்தாலும் இரு நபர்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுகிறது, அவர்களுக்குள் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
"நான் பல ஆண்டுகளாக எனது நண்பர்/சகோதரி/சகோதரர்/உறவினர்களுடன் பேசவில்லை," என்று மற்றவர்கள் கூறுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம்.
தாயுடன் உடன்படவில்லை, தந்தையுடன் உடன்படவில்லை என இருப்பவர்கள் ஒரே வீட்டிலே ஒன்றாக வாழ்ந்து அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், அவர்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள விரும்பாத நபர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
அவர்களுக்கு இடையிலான உறவு நாளுக்கு நாள் மோசமடைகிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?
- பிரிட்டனில் ஏலம் விடப்பட இருந்த இந்தியரின் மண்டை ஓடு - மீட்கப் போராடும் பழங்குடியினர்
- இந்தியா-பாகிஸ்தான் இடையே 'ட்ரோன் ரேஸ்': யாருடைய கை மேலோங்கி இருக்கிறது?
- ஜூலியா பஸ்த்ரானா: பணத்திற்காக கணவரால் காட்சிப் பொருளாக பயன்படுத்தப்பட்ட பெண்
- ப்ளூ ஸ்கை: ஈலோன் மஸ்கின் எக்ஸ் தளத்துடன் போட்டி போட முடியுமா? இதை உருவாக்கியது யார்?

இதற்கு குடும்ப மனநல சிகிச்சை அல்லது கூட்டு மனநல சிகிச்சை தீர்வாக இருக்கலாம். நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் விவேக் மூர்த்திக்கு அளித்த பேட்டியில், தானும் தனது மகள் ஐராவும் கூட்டுக் குடும்ப மனநல சிகிச்சையில் இருப்பதாக அமீர் கான் கூறினார்.
அடிப்படையில், இத்தகைய தெரபி அல்லது மனநல மருத்துவரிடம் செல்வது ஒரு பலவீனமாக இன்னும் கருதப்படுகிறது. மனநோய் கொண்டவர்களே மனநல மருத்துவர்களிடம் செல்வார்கள் என்ற பார்வை உள்ளது.
ஆனால் விவாகரத்து கட்டத்தை அடைந்த தம்பதிகள், மனநல ஆலோசகரிடம் சென்று தங்கள் உறவை மேம்படுத்தலாம், தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, விவாகரத்தை தவிர்க்கலாம் என்பது மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், மற்ற உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும், தொடர்பை மேம்படுத்தவும் வேறுபாடுகளைக் குறைக்கவும், நாம் எவ்வித சிகிச்சைகளையும் பரிந்துரைப்பதில்லை. இதற்கொரு தீர்வாக இருக்கும் குடும்ப மனநல சிகிச்சை அல்லது கூட்டு மனநல சிகிச்சை குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.
குடும்ப மனநல சிகிச்சை என்பது பேச்சு சிகிச்சையின் ஒரு வடிவம். (அதாவது உரையாடுவதன் மூலமாக பிரச்னைகளை சரிசெய்யக் கூடிய சிகிச்சை, இதில் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை.)
இந்த சிகிச்சை, ஒரு குடும்பம் அல்லது குடும்பத்தின் ஒரு சில உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள உதவும்.

பட மூலாதாரம், Getty Images
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களிடையே தொடர்பை மேம்படுத்தி, அவர்களின் உறவை மேம்படுத்தி, கோபம் மற்றும் வெறுப்பைக் குறைப்பதுதான் இந்த சிகிச்சையின் நோக்கம்.
தங்களின் வாழ்க்கையில் நிகழும் எல்லாவற்றுக்கும் ஒட்டுமொத்த குடும்பத்தையோ அல்லது குடும்பத்தில் நிகழும் விஷயங்களையோ குற்றம் சாட்டும் போதோ அல்லது குடும்பத்தில் உள்ள சில உறுப்பினர்களின் நடத்தை ஒருவரைத் தொந்தரவு செய்கிறது என்றாலோ, அல்லது அந்நபரின் நடத்தையாலேயே ஒட்டுமொத்த குடும்பமும் சூழப்பட்டிருக்கிறது என்றாலோ இந்த சிகிச்சை பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகிறது.
அப்படியிருக்கும்போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் அமர்ந்து பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது அவசியம். ஆனால், அர்த்தமில்லாத பேச்சுவார்த்தைகள் அல்லது குற்றச்சாட்டுகளை மட்டுமே பேசும் அளவுக்கு உறவில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்.
அந்த நேரத்தில்தான் மனநல ஆலோசகரிடம் சென்று இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
நிகிதா சுலே மும்பையில் மருத்துவ உளவியல் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். அவர் கூறுகையில், "இந்தியாவில் குடும்பத்தை மையப்படுத்திய கலாசாரம் நிலவுகிறது. இதில், நீங்கள் ஒரே நேரத்தில் பல நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியிருக்கும். அவர்களுடன் உளரீதியாகவும், நிதி, சமூகரீதியாகவும் இணைக்கப்பட்டு இருப்பீர்கள். அப்படியிருக்கும்போது, இந்தியாவுக்கு இத்தகைய குடும்ப சிகிச்சை மிகவும் தேவையான ஒன்று" என்கிறார்.
"உணர்வுரீதியாகத் தொடர்புகொள்வதற்கான வழிகளோ, அந்த உணர்வுகளை மட்டுப்படுத்துவதற்கான வழிகளோ நம்மிடம் இல்லை. இரவு உணவு குறித்தோ அல்லது பணம் அல்லது தொலைக்காட்சியில் என்ன நடந்தது என்பது குறித்தோதான் நாம் பேசுகிறோம். ஒரே நேரத்தில் குடும்பத்தில் உள்ள பலர் காயப்பட்டிருப்பார்கள். பிரச்னைகளைப் பேசினாலோ அல்லது நிபுணரின் உதவியை நாடும்போதோ தீர்க்கப்பட்டுவிடும். ஆனால், வீட்டுக்கு வெளியே பிரச்னைகளைப் பேசுவதை அவர்கள் தவிர்க்கின்றனர்" என்கிறார் அவர்.
க்ளெவ்லேண்ட் கிளீனிக் (Cleveland Clinic) எனும் இணையதளம், வெவ்வேறு குடும்ப உறுப்பினர்கள் நிபுணரிடம் ஒன்றாகவோ அல்லது வெவ்வேறு குழுக்களாகவோ அமர்ந்து மேற்கொள்ளும் சிகிச்சை குறித்த தகவல்களை வழங்குகிறது. குழந்தைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தோர் அல்லது மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள்கூட ஒன்றாக அமர்ந்து தங்கள் கேள்விகளுக்குப் பதிலைக் கண்டறியலாம்.

பட மூலாதாரம், Getty Images
இந்த சிகிச்சை மேலும் சில விஷயங்களில் பயனளிக்கும் என்று இந்த இணையதளம் கூறுகிறது.
- வீட்டில் யாராவது இறந்துவிட்டாலோ அல்லது ஒருவரையொருவர் குற்றம் சாட்டினாலோ என்ன செய்வது?
- வயதான பெற்றோர்கள், அவர்களின் நடுத்தர வயது குழந்தைகள் மற்றும் இளம் வயது பேரக் குழந்தைகள் இடையிலான தொடர்புப் பாலத்தை எவ்வாறு உருவாக்குவது?
- பெற்றோர்கள் பிரிவதால், குழந்தைகள் பாதிப்படையும்போது என்ன செய்வது?
- வீட்டில் யாராவது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால், அல்லது மன நோயுடன் போராடினால், அந்தக் குடும்பம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த சிகிச்சை மூலம் கற்றுக்கொள்ளலாம்.
சீரடியை சேர்ந்த மனநல மருத்துவர் ஓம்கர் ஜோஷி "ஒருவருக்கு மன அழுத்தமோ அல்லது மனச் சிதைவோ (schizophrenia) ஏற்பட்டால், அவர்களுடைய நடத்தை மிகவும் தொந்தரவை ஏற்படுத்தும். பல நேரங்களில் அவர்கள் ஆலோசனைக்குத் தயாராக இருக்க மாட்டார்கள்," என்கிறார்.
அப்படியிருக்கும்போது "அவர்களை எப்படிச் சமாளிப்பது என அவர்களின் குடும்பத்தினருக்கு அறிவுறுத்துவோம். ஒருவருடைய மனநல பிரச்னையை அவர்களின் குடும்பத்திற்கு விளக்குவதும் குடும்ப சிகிச்சையில் ஒன்றுதான்" என்கிறார் அவர்.
ஆனால், எத்தனை பேர் இத்தகைய குடும்ப மனநல சிகிச்சைக்குச் செல்வார்கள்? எத்தனை பேர் தங்களுக்குள் உறவு முறிந்துவிட்டதாக ஒப்புக்கொண்டு அதை சரிசெய்ய ஒப்புக்கொள்வார்கள்?

பட மூலாதாரம், Getty Images
"சிகிச்சை தேவை என்பதைப் பலரும் ஒப்புகொள்வதில்லை. சில தினங்களுக்கு முன்பு ஒரு தாயும் மகளும் வந்திருந்தனர். தாய்க்கு 70 வயதுக்கு மேல் இருக்கலாம், மகள் 40களில் இருக்கலாம். மகள் நன்றாகப் படித்துப் பெரிய பதவியில் உள்ளார். அவருக்கு விவாகரத்தாகி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்," என்றார் ஜோஷி.
"மகளுக்கு மறுமணம் செய்ய வேண்டும் என அவரின் தாய் நினைக்கிறார். இதனால் இருவருக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது. தனது தாய் இறந்தால்கூட தான் கவலைப்பட மாட்டேன் என மகள் கூறும் அளவுக்கு இது சென்றிருக்கிறது.
தனக்கு உதவி தேவை என்பது நன்கு படித்த அவருக்குத் தெரியவில்லை. தனக்கு தாய்தான் பிரச்னை, அவருக்கு அறிவுரை கூறுங்கள் என்கிறார் மகள்."
அடிப்படையில், "மகளின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு குடும்ப சிகிச்சை அளிக்கலாம். ஆனால், தங்களுக்கு சிகிச்சை வேண்டும் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்வதில்லை" என்கிறார் அவர்.
இதனால், சிகிச்சைக்கு வருபவர்களிடம் நிபுணர்கள் முதலில் சில மருத்துவப் பரிசோதனைகளைப் பரிந்துரைப்பதாகவும், அதன்பின் அவர்களின் மனநலன் குறித்துப் பரிசோதிப்பதாகவும் கூறுகிறார் ஜோஷி.
மேலும், "ஒருவருடைய இயல்பு, பல்வேறு விஷயங்களுக்கு அவர் எப்படி எதிர்வினையாற்றுகிறார், அவர் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுபவரா அல்லது தனக்குள்ளேயே வைத்துக் கொள்பவரா என்பதைப் பார்க்க வேண்டும். அந்தப் பரிசோதனைகளின் மூலம், அவர்களின் குணநலன்கள், குறைகள் அவருக்கு முன்பாக விளக்கப்படும். இந்த சிகிச்சையில் நாங்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதில்லை. நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் கூறுவோம். என்ன செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதைக் கூறுவோம்," என்றார்.
தலைமுறை அதிர்ச்சிக்கான தீர்வு

பட மூலாதாரம், Getty Images
தலைமுறை இடைவெளியால் ஏற்படும் குழப்பமும் மனநல ரீதியிலானதுதான். உதாரணமாக, ஒரு தந்தை எப்போதும் கோபம் கொண்டு சிறு விஷயங்களுக்கு எல்லாம் தனது மகனை அடித்தால், அந்த மகனும் வளர்ந்து குழந்தை பெற்ற பிறகு இவ்வாறே செய்வார்.
ஒரு தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சிக்கு சிகிச்சை மேற்கொள்ளாமல், அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது.
"இதற்கு இருக்கும் ஒரே தீர்வு குடும்ப மனநல சிகிச்சைதான். நம்முடைய கடந்த கால அனுபவங்களில் இருந்துதான் நம்முடைய நடத்தைகள் உருவாகின்றன. நாம் நினைப்பது தவறு என்பதை ஒருவர் கூற வேண்டும்.
சரியானது எது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த சிகிச்சையின் மூலம், இந்தத் தலைமுறை அதிர்ச்சியைக் குணப்படுத்தி, அடுத்த தலைமுறையுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும்," என்கிறார் புனேவை சேர்ந்த தெரபிஸ்ட் ஷ்ருதிகீர்த்தி பட்னாவிஸ்.
இதன் அடுத்த கட்டம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
குடும்ப உறவுகள் சிதைவதற்கு என்ன காரணம் என்பதை நிபுணர்கள் கண்டறிகின்றனர். ஏதாவதொரு விஷயம் நடக்கும்போது அதனால் ஏற்படும் கோபத்தைப் பல ஆண்டுகளாக மனதில் வைத்திருப்பதே பெரும்பாலும் இதற்குக் காரணம். பலரும் அந்தச் சம்பவங்களை மறப்பதில்லை.
"அப்படிப்பட்ட நேரத்தில் அவற்றை ஏற்றுக்கொண்டு எப்படி உறவை நகர்த்துவது (Acceptance and Commitment Therapy) என்பதற்கான சிகிச்சை வழங்கப்படும். என்ன நடந்ததோ அதை ஏற்றுக்கொண்டு, பிரச்னைகளைத் தீர்ப்பதே இந்த சிகிச்சை" என்கிறார் ஷ்ருதிகீர்த்தி.
"நம்மால் எந்தளவு பொறுத்துக்கொள்ள முடியும் என்பதற்கான எல்லையை வரையறுக்க வேண்டும்" என்கிறார் ஜோஷி.
இதே கருத்தை வலியுறுத்தும் ஷ்ருதிகீர்த்தி, "நாம் எல்லைகளை நிர்ணயிப்பது இல்லை. முதலில் இது சுயநலமாக இருப்பது போன்று தோன்றும். ஆனால், அதன்மூலம் உறவு மேம்படும். ஏனெனில், ஒருவருக்கொருவர் உள்ள எதிர்பார்ப்புகள் கட்டுப்படுத்தப்படும்" என்கிறார் அவர்.
குடும்ப மனநல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் அவ்வளவாக இல்லை என அனைத்து நிபுணர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொள்கின்றனர்.
நிகிதா சுலே கூறுகையில், "குடும்ப விவகாரங்களை ஏன் வெளியே சொல்ல வேண்டும் எனப் பலரும் கருதுகின்றனர். சிகிச்சைக்காக நீங்கள் சந்திப்பவர்கள் நிபுணர்கள், அவர்கள் உங்களை மதிப்பிடுவதில்லை. பிரச்னைகளைத் தீர்க்க உதவுகின்றனர்."
"உதவியை நாடாமல் உங்களுக்குள்ளேயே பிரச்னைகளைப் போட்டுக் கொண்டால் வாதங்களும் சண்டைகளும் தொடர்ந்து, உங்கள் முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்துவிடும்" என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












