தெலங்கானா: தலைமுறைகள் கடந்தும் பச்சை குத்தும் கலையை கைவிடாத தோட்டி பழங்குடிகள்
தெலங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டத்தில் வசிக்கும் தோட்டி பழங்குடியினருக்கு பச்சை குத்துவது ஒரு பாரம்பரியம். பச்சை குத்துவது அவர்களது வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒன்றாக உள்ளது.
பச்சை குத்திக் கொள்ளாமல், இவர்களால் திருமணம்கூட செய்ய முடியாது. இவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால்கூட, இவ்வாறு பச்சைக் குத்திக்கொள்வதுதான் மருந்து.
இந்தப் பழங்குடிச் சமூகத்தில் உள்ள சில பெண்களுக்கு, பச்சை குத்துவது ஒரு பரம்பரை மரபாக உள்ளது. அவர்கள் அதை ஒரு தொழிலாகவும் கருதுகின்றனர்.
“தலைமுறை தலைமுறையாக, இந்தப் பச்சை குத்தும் கலையை நாங்கள் கற்றுக்கொண்டோம். எங்கள் குழந்தைகளுக்கும் பச்சை குத்துகிறோம்” என்கிறார் பெந்தூர் சத்தியம்மா.
“எங்கள் முன்னோர்கள் மிகப்பெரிய வடிவில் பச்சை குத்திக் கொள்வார்கள். ஆனால் எங்கள் தலைமுறை அதை விரும்புவதில்லை. திருமணப் பிரச்னை காரணமாக நாங்கள் சிறிய வடிவில் பச்சை குத்திக் கொள்கிறோம். இவை இல்லையென்றால், திருமணங்கள் நடைபெறாது. திருமணத்திற்குப் பிறகு நெத்திப் பொட்டு வைத்து இதை மறைத்துக் கொள்வோம்” என்று கூறுகிறார் மதுமிதா.
இவர்களில் பலர் பச்சை குத்திக் கொள்வதை உடல் வலிக்கு ஒரு மருந்தாகக் கருதுகின்றனர். எனவே, அவர்கள் தங்கள் உடலில் பச்சை குத்திக் கொள்ளும்போது ஏற்படும் வலியைத் தாங்குகிறார்கள். அவர்களுக்கு பச்சை குத்துவதில் அதீத நம்பிக்கை உள்ளது.
ஆனால், பச்சை குத்திக் கொள்வதன் மூலம் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை ஓர் உளவியல் உணர்வு மட்டுமே என்றும், இது பல தலைமுறைகளாக அவர்களுக்கு ஒரு பாரம்பரியமாக இருந்து வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி குடிமேதா மனோகர் தெரிவிக்கிறார். மற்றபடி அதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் ஆதாரமும் இல்லை என்று அவர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



