You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா vs வங்கதேசம் டெஸ்ட் தொடர்: இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 5 வங்கதேச வீரர்கள்
- எழுதியவர், சஞ்சய் கிஷோர்
- பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக
நஸ்முல் ஹுசைன் ஷாண்டோ தலைமையிலான வங்கதேச அணி ஒரு கனவோடு இந்தியா வந்துள்ளது.
இதுவரை இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தோல்விகளைச் சந்தித்து ஒரு வெற்றியைக்கூட பெறாத வங்கதேச அணி முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்ய முயற்சி செய்யும்.
பாகிஸ்தான் மண்ணில் நடந்த இரண்டு டெஸ்ட் தொடரில் அந்த அணியை தோற்கடித்ததன் மூலம் வங்கதேச அணியின் மனோபலம் உயர்ந்துள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பரில் டாக்காவில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே முதல் டெஸ்ட் நடைபெற்றது. செளரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்கள் ஒரே போட்டியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனை அடையாத வரை இந்தியாவை தோற்கடிக்க முடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான 13 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை வங்கதேச பந்துவீச்சாளர்களால் 20 விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. ஆறு டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் தேவையே இந்தியாவுக்கு ஏற்படவில்லை.
ஆனால் இன்றைய சூழலிலும் இப்படிச் சொல்ல முடியுமா?
குறிப்பாக பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு வங்கதேச அணி இங்கு வந்துள்ளது. கடந்த டிசம்பரில் நியூசிலாந்துடனான தொடரை வங்கதேசம் 1-1 என சமனில் முடித்திருந்தது. ஆனால், அதன் பிறகு இலங்கையில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
முஷ்ஃபிகுர் ரஹீம்
பாகிஸ்தானில் எதிர்பாராத அதிசய வெற்றி பெற்றாலும் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு முன் வங்கதேசத்தின் கனவு இம்முறையாவது நிறைவேறும் எனத் தோன்றவில்லை. 2013ஆம் ஆண்டு முதல் இந்தியா தனது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது மற்றும் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
இந்திய அணியின் வியூக வகுப்பாளர்கள் கூர்ந்து கவனிக்கும் சில வீரர்கள் தற்போதைய வங்கதேச அணியில் உள்ளனர். வங்கதேச மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்கள் உள்ளனர். அவர்கள் முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் ஷாகிப் அல் ஹசன்.
வங்கதேச அணியின் அனுபவமிக்க வீரரான முஷ்ஃபிகுர் ரஹீம் ஸ்டம்புகளுக்கு பின்னாலும், முன்னாலும் உறுதியாக நிற்கும் திறன் கொண்டவர்.
அவர் 94 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக இருந்த அனுபவம் கொண்டவர். இந்தியாவுக்கு எதிரான அவரது சாதனை சிறப்பாக உள்ளது மற்றும் பாகிஸ்தானில் அவரது அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகு அவர் நல்ல ஆட்டத் திறனுடன் உள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்ஸ்களில் 216 ரன்களை எடுத்து, 108 ரன் சராசரியை வைத்திருந்தார் முஷ்ஃபிகுர். முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் அவர் 191 ரன்கள் எடுத்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் முஷ்ஃபிகுர் 50.53 ரன் சராசரியுடன் 657 ரன்களை எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் அடங்கும். இந்தியா அவரை விரைவாக அவுட் செய்ய விரும்பும். இல்லையென்றால் ஆட்டத்தை தன் பக்கம் கொண்டு செல்லக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது.
லிட்டன் தாஸ்
வங்கதேச அணிக்குச் சாதகமாக இல்லாத சூழ்நிலைகளிலும் ரன்களை குவிக்கும் திறன் கொண்ட ஒரு தைரியமான பேட்ஸ்மேன் என்று அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பரான லிட்டன் தாஸை நாம் சொல்லலாம்.
அனைத்து ஃபார்மேட்களையும் பற்றிப் பேசினால் இந்தியாவுடனான போட்டிகளில் அவரது ஆட்டம் எப்போதுமே சிறப்பாக இருந்துள்ளது. லிட்டன் பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாதபடி அவரை சீக்கிரமே வெளியேற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் விரும்புவார்கள்.
லிட்டன் தாஸ் பாகிஸ்தானில் இரண்டு இன்னிங்ஸ்களில் 194 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும். இரண்டாவது டெஸ்டில் லிட்டன் 138 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இவரது ஆட்டத்தைப் பார்த்தால், லிட்டன் 8 டெஸ்ட் போட்டிகளில் 543 ரன்கள் எடுத்துள்ளார்.
ஷாகிப் அல் ஹசன்
ஷாகிப் அல் ஹசன், இன்று உலகின் சிறந்த ஆல்ரவுண்டராக கருதப்படுகிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலுமே அவர் இந்தியாவுக்கு சிக்கல்களை ஏற்படுத்த முடியும்.
மேலும் அவரிடம் சுமார் 17 வருட அனுபவம் உள்ளது. இது இந்திய அணிக்குப் பெரும் சவாலாக இருக்கலாம். ஷாகிப் வங்கதேசத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.
சர்வதேச கிரிக்கெட்டில் 14,000-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ள அவர் 700-க்கும் அதிகமான விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஷாகிப் பாகிஸ்தானில் மூன்று இன்னிங்ஸ்களில் 38 ரன்கள் எடுத்தார் மற்றும் ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இருப்பினும் இந்தப் புள்ளிவிவரங்கள் அவரது திறமைக்குக் கட்டியம் கூறவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஷாகிப் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 32.44 சராசரியில் 292 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அவர் இந்தியாவுக்கு எதிராக எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி 376 ரன்கள் எடுத்துள்ளார்.
சமீபத்தில் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக விளையாடிய அவர் சோமர்செட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னிடம் கிரிக்கெட் இன்னும் மீதமுள்ளது என்பதை நிரூபித்தார்.
அவரது ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் துல்லியமான பந்துவீச்சு காரணமாக இந்திய அணி கண்டிப்பாக எச்சரிக்கையுடன் இருக்கும்.
மெஹ்தி ஹசன் மிராஸ்
ஒரு காலத்தில் ஷாகிப் அல் ஹசனின் வாரிசாகக் கருதப்பட்ட மெஹ்தி ஹசன் மிராஸுக்கு, இந்தியாவின் சுழல் பந்துவீச்சுக்குத் துணைபுரியும் ஆடுகளங்கள் சாதகமாக அமையலாம். அவரது பந்துகள் சிறந்த பேட்ஸ்மேன்களை கூட ஏமாற்றியுள்ளன.
தனது ஆஃப் பிரேக் மூலம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை மிகவும் தொந்தரவு செய்தார், 26 வயதான ஆல்-ரவுண்டர் மிராஸ்.
மிராஸ் நான்கு இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தின் வெற்றிகரமான பந்துவீச்சாளராகத் தன்னை நிரூபித்துக்கொண்டார். அதோடு அவர், அவர் 155 ரன்களும் எடுத்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் 10 டெஸ்ட்களில் எடுத்த 536 ரன்கள் மற்றும் 39 விக்கெட்டுகள் அவரது திறமையைப் பறைசாற்றுகின்றன.
அவரது பேட்டிங் மெருகேறியுள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் அவருக்கு எதிராக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கலாம் அல்லது அவரை சோர்வடையச் செய்யும் உத்தியைப் பின்பற்றலாம்.
தைஜுல் இஸ்லாம்
தைஜுல் இஸ்லாம் இந்திய ஸ்பின்னிங் டிராக்குகளில் ஆபத்தானவராக நிரூபணமாகலாம்.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இந்தியாவுக்கு எதிரான கடைசி தொடரில் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்தார்.
அந்தத் தொடரின் இரண்டு டெஸ்டின் நான்கு இன்னிங்ஸ்களில் 8 பேர் அவரது பந்துக்குப் பலியாயினர். விராட் கோலி, சதேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், ஷுப்மான் கில், குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுகள் இதில் அடங்கும்.
அவர் புஜாரா, கில் ஆகியோரை தலா இரண்டு முறை வெளியேற்றினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தைஜுல் 8 டெஸ்ட் போட்டிகளில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தஸ்கின் அகமது
தஸ்கின் அகமது டெட் விக்கெட்டுகளிலும் வேகமாகப் பந்து வீசுவதற்கும் பெயர் பெற்றவர். பாகிஸ்தானில் தஸ்கின் மூன்று இன்னிங்ஸ்களில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடந்த 2021இல் காயத்திலிருந்து திரும்பிய பிறகு, தஸ்கின் சீராக மற்றும் துல்லியமாகப் பந்து வீசும் பவுலராக ஆகியுள்ளார். ஆலன் டொனால்டும் அவரைப் பாராட்டியுள்ளார். இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தஸ்கின் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
அதில் அவர் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக அவர் விளையாடிய ஒரே டெஸ்ட் போட்டியில் அவர் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார்.
ரோஹித் ஷர்மாவின் அணி புதிய பந்தைச் சந்திக்கும்போது குறிப்பாக டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அவர் மீது எச்சரிக்கையுடன் இருக்கும்.
சுழல் பந்துவீச்சுக்கு எதிரான இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடு கடந்த மூன்று ஆண்டுகளில் சற்று குறைந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் ஷாகிப் அல் ஹசன், தைஜுல் இஸ்லாம், மெஹ்தி ஹசன் மிராஸ் ஆகியோர் வங்கதேசத்திற்கு முக்கியமானவர்களாக நிரூபணமாகலாம்.
தனது அணி மிகவும் சமநிலை வாய்ந்தது என்று வங்கதேச அணியின் பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்க கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)