You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்ரீஜேஷ்: இந்தியாவின் சுவர் என்றழைக்கப்பட்ட ஹாக்கி ஜாம்பவானின் சாதனைப் பயணம்
- எழுதியவர், விகாஸ் பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற அந்த தருணம், வீரர்கள் பெருமகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டாடினர்.
ஆனால் பிஆர் ஸ்ரீஜேஷ் மட்டும் அமைதியாக அந்த இடத்தை விட்டு நடந்து சென்று, மைதானத்தின் ஒரு முனையில் இருந்த கோல் போஸ்ட்டின் முன் தலைகுனிந்து நின்றார். அந்த காட்சி அவருக்கும் கோல் போஸ்டுக்குமான நீண்ட நெடிய ஆழ்ந்த உறவை பிரதிபலித்தது. ஆம். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக கோல்போஸ்ட் தான் அவரின் உறைவிடமாக இருந்தது.
ஆனால் அந்த வீட்டில் இனி இருக்க முடியாது. கோல் போஸ்டை அவர் எந்த அளவுக்கு `மிஸ்’ செய்கிறாரோ அதை விட இருமடங்காக இந்தியா அவரை `மிஸ்’ செய்யும். வியாழன் அன்று தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய `கோல்கீப்பர்’ ஸ்ரீஜேஷ், ஒரு புகழ் பெற்ற பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்.
"இந்தியாவின் சுவர்" என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஸ்ரீஜேஷ், இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவரது அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. இந்த ஸ்கோரை சமன் செய்ய ஸ்பெயின் கடுமையாக போராடியது. ஆனால் ஸ்ரீஜேஷ் அவர்களின் முயற்சிகளை முறியடித்தார், குறிப்பாக போட்டியின் இறுதி நிமிடங்களில் கோல்கீப்பராக கோல்போஸ்டுக்கு முன் இந்திய அணியின் அரணாக நின்றார்.
அவரது வழக்கமான சாதுர்யமான டைவ்ஸ் மற்றும் உள்ளுணர்வு விளையாட்டில் பிரதிபலித்தது. ஸ்பெயின் வீரர்கள் 9 பெனால்டி கார்னர்களைப் பெற்றனர், ஆனால் எதையும் அவர்களால் கோல் ஆக மாற்ற முடியவில்லை. கோல்கீப்பராக இந்த விளையாட்டில் அவரது திறனை புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீஜேஷ் மற்றும் அவரது குழு இறுதி வரை தங்கள் முன்னிலையை தக்கவைக்க போராடியது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
முன்னாள் இந்திய கேப்டனான ஸ்ரீஜேஷ், இந்த ஒலிம்பிக்கில் இந்தியா முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறியதில் முக்கிய பங்காற்றினார். பிரிட்டனுக்கு எதிரான நாக்-அவுட் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டாக றியது. அந்த சமயத்திலும் இந்திய அணியின் சுவராக இருந்து கோல் விழாமல் தடுத்தார். அந்த ஆட்டத்தில் கோலாக மாற வேண்டிய இரண்டு சிறந்த பந்துகளை தடுத்து அணியை காப்பாற்றினார்.
கண்ணீரை வெற்றியாக மாற்றிய ஸ்ரீஜேஷ்
அரையிறுதியில் ஜெர்மனியிடம் இந்தியா தோல்வி அடைந்த போது அவர் கண்ணீர் வடித்ததை அனைவரும் பார்த்தனர். அவர் இந்தளவுக்கு கவலை கொள்ள முக்கிய காரணம் இது அவரின் கடைசி ஆட்டம். இனி அவர் ஒருபோதும் தங்கப் பதக்கத்தை வெல்ல மாட்டார் என்பதை எண்ணி கண் கலங்கினார். ஆனால் அதில் இருந்து மீண்டு, தனது கவனத்தை வெண்கலப் பதக்கத்தின் பக்கம் திருப்பினார்.
வியாழன் அன்று, அவர் மீண்டும் அனைவரின் முன்னிலையிலும் கண்ணீர் வடித்தார் - ஆனால் இந்த முறை மகிழ்ச்சியில்!
சுமார் இருபது ஆண்டுகளாக நாட்டின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்த அந்த மனிதருக்காக, இந்திய ரசிகர்களும் அவருடன் சேர்ந்து கண்ணீர் வடித்தனர் என்று சொன்னால் மிகையாகாது. சமூக ஊடகங்கள் அவரை பற்றிய நெகிழ்ச்சி பதிவுகளால் நிரம்பி வழிகின்றன.
இந்திய தேசம் பொதுவாக கிரிக்கெட் பித்து பிடித்த ரசிகர்களின் கூடாரம் என்று அறியப்படுகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்த அதே கவனமோ, புகழோ அல்லது பணமோ மற்ற விளையாட்டு வீரர்களுக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஒரு ஹாக்கி கோல் கீப்பருக்கு இவை கிடைப்பது மிகவும் கடினம்.
"ஹாக்கி விளையாட்டில் ஒரு கோல் கீப்பர் மீது அதிக கவனம் விழாது. அவரை பிரத்யேகமாக நேசிக்கும் ரசிகர்கள் இருப்பதும் கடினம். அவர் கண்ணுக்கு தெரியாதவர், ஆனால் அவர் தவறு செய்யும் போது மட்டும் வெளிச்சத்துக்கு வருவார். நான் இளமையாக இருந்த போது, இந்தியாவின் கோல்கீப்பர் யார் என்று கூட எனக்குத் தெரியாது” என்று அவர் 2021 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் கூறினார்.
பந்து வரும் திசையை நானோ விநாடிகளில் தீர்மானித்த ஸ்ரீஜேஷ்
ஸ்ரீஜேஷ் ஒருபோதும் கவனத்தையோ நட்சத்திர பிம்பத்தையோ துரத்தவில்லை; அவர் வேலையைத் தொடர விரும்பினார். கசப்பான-இனிப்பான அனுபவங்களை ஒரே மாதிரியாக எடுத்து கொள்ளும் அவரின் அணுகுமுறைதான் அவரைத் தொடர வைத்தது.
அவர் ஜூனியர் சர்க்யூட் விளையாட்டு போட்டிகளில் தனது விரைவான அனிச்சை உணர்வுகளால், ஒரு பந்து வரும் திசையை நானோ விநாடிகளில் தீர்மானிக்கும் திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
ஆனால் 2006 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனியர் அணியில் ஸ்ரீஜேஷின் அறிமுகம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
அவர் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார், ஆனால் இந்திய அணியின் பரம எதிரியான பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் முக்கியமான கோலை தவறவிட்டார். அதைத் தொடர்ந்து வந்த விமர்சனம் அவருக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது.
கடினமான நாட்களிலும் பயிற்சி
அணியில் நிரந்தர இடம் கிடைக்காததால் அடுத்த சில வருடங்கள் அவருக்கு கடினமாக இருந்தது.
இந்த காலகட்டத்தில் இந்திய ஹாக்கியும் மோசமான கட்டத்தை கடந்தது. 2008 இல் பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறக்கூட அணியின் திறன் போதவில்லை.
ஆனால் ஸ்ரீஜேஷ் தொடர்ந்து கடினமாக பயிற்சிகள் மேற்கொண்டார். அவர் மீண்டும் 2011 இல் அணிக்குள் காலடி எடுத்து வைத்தார்.
அது சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டி. இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.
அவர் மிகவும் தன்னம்பிக்கையுடன் மைதானத்தில் தோன்றினார். இரண்டு முக்கியமான பெனால்டி வாய்ப்புகளை முறியடித்ததன் மூலம் இந்தியாவை வெற்றி பெற செய்தார்.அந்த போட்டி முடிந்த உடனேயே ஸ்ரீஜேஷ் மீது மீண்டும் கவனம் திரும்பியது.
அவர் 2012 இல் லண்டன் ஒலிம்பிக்கிற்கு இந்திய அணியுடன் பயணம் செய்தார். ஆனால் இந்தியா பதக்கம் இல்லாமல் திரும்பியது.
அணியின் மோசமான ஆட்டத்தை தாண்டி, இந்திய கோல்போஸ்டின் பாதுகாவலராக ஸ்ரீஜேஷ் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார்.
அடுத்த பிரகாசமான தருணம்
2014 ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொண்ட போது அவரது அடுத்த பிரகாசமான தருணம் அமைந்தது.
ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் 16 ஆண்டுகால தங்கப் பதக்க வறட்சியை முடிவுக்குக் கொண்டுவர அற்புதமாக விளையாடி இரண்டு பெனால்டிகளைச் சேவ் (save) செய்தார்.
ஆனால் அவரது குணாதிசயம், துணிவு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றை ஒன்றுபட பிரதிபலிக்கும் ஒரு கணம், 2015 இல் அமைந்தது. ஹாக்கி உலக லீக்கில் ஹாலந்து அணிக்கு எதிரான போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த சமயத்தில் ஸ்ரீஜேஷ் படுகாயமடைந்தார், அவரது தொடைகள் மீது ஐஸ் பேக் வைக்கப்பட்டிருந்தது. அவரது கட்டைவிரல் உடைந்த நிலையில் இருந்தது அவரது தோள்பட்டை சர்ஜிக்கல் டேப்களால் மூடப்பட்டிருந்தது. போட்டிக்கு முந்தைய நாள் இரவு அவரால் நடக்கவே முடியவில்லை.
போட்டியின் போது அவர் கோல் போஸ்டில் நின்றபோது, அவர் ஒரு `மம்மி’ போல் இருக்கிறார் என்று கேலி செய்யப்பட்டார்.
ஆனால் எல்லா வலிகளுக்கும் நகைச்சுவைக்கும் பின்னால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெரிய சர்வதேச போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தது.
பெனால்டி ஷூட் அவுட்டில் அவர் செய்த அசத்தலான சேவ்கள் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற உதவியது.
இந்திய ஹாக்கியில் ஒரு ஜாம்பவான் என்ற அவரது இடம் அப்போது உறுதிப்படுத்தப்பட்டது. ரியோ ஒலிம்பிக்கில் இந்திய அணியை வழிநடத்தும்படி நிர்வாகம் அவரிடம் கேட்டது.
அந்த ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கத்தை வெல்லவில்லை, ஆனால் கால் இறுதி வரை முன்னேறியது. லண்டன் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டனர்.
சக வீரர்கள் மனதில் இடம் பிடித்த ஸ்ரீஜேஷ்
ஸ்ரீஜேஷ் ஒருபோதும் வெற்றியைத் தன் தலையில் ஏற்றி கொள்ளவில்லை. அடக்கமாகவும் எப்போதும் அணுகக் கூடியவராகவும் இருந்தார். பொதுவாக விளையாட்டு நட்சத்திரங்கள் மத்தியில் காணப்படும் பிம்பம் இல்லாமல், தனது வாழ்க்கையை சாதாரணமாக வாழ்ந்தார்.
இது அவரது சக வீரர்களிடமும், இந்திய ரசிகர்களிடமும் அவருக்கென தனி இடத்தை ஏற்படுத்தியது.
2017 இல் ஏற்பட்ட காயம் அவரது விளையாட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் அளவுக்கு அச்சுறுத்தியது. எல்லாவற்றையும் மீறி, இரண்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் பல மாத ஓய்வுக்குப் பிறகு அவர் மீண்டு வந்தார்.
ஆனால் அவரது செயல்திறன் மீண்டும் பழையபடி இல்லை. அவரது வேகம் குறைந்துவிட்டதாக விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இளம் கோல் கீப்பர்களும் அவரது இடத்திற்கு போட்டியிட்டனர். ஆனால் எதிர்வினை ஆற்றாமல் ஒதுங்கி, கடுமையாக உழைத்து வந்தார்.
ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஹாக்கி பதக்கத்திற்காக 41 வருட காத்திருப்பு - மற்றொரு வறட்சி ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவர அவர் மீண்டும் தயாராக இருந்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல அவர் உதவினார்.
மகனுக்காக பசுவை விற்ற தந்தை
ஸ்ரீஜேஷ் வாழ்க்கையில் அடித்த புயல்கள் மீது ஏறி அவரை சவாரி செய்ய வைத்தது அவரின் குடும்ப பின்னணி தான்.
ஸ்ரீஜேஷ் தென் மாநிலமான கேரளாவில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
அவர் விளையாட்டை நேசித்தார். ஆனால் ஓடுவது அவ்வளவாக பிடிக்காது.
எனவே மற்ற விளையாட்டுகள் மற்றும் ஹாக்கியில் வெவ்வேறு விளையாட்டு நிலைகளை முயற்சித்த பிறகு, அதிக ஓட்டம் இல்லாததால் கோல் கீப்பிங் பிரிவை தேர்ந்தெடுத்தார்.
மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டார். 2003 இல் டெல்லியில் தேசிய சோதனைக்கு அழைக்கப்பட்டார். 48 மணி நேரத்திற்கும் மேலான ரயில் பயணத்திற்குப் பிறகு 15 வயதான அவர் இந்திய தலைநகரை வந்தடைந்தார். அங்கு முகாமில் பெரும்பாலான வீரர்கள் பேசும் மொழி ஹிந்தி. ஸ்ரீஜேஷுக்கு ஹிந்தி ஓரளவுக்கு தான் தெரியும். ஆனாலும் சமாளித்தார்.
ஹாஸ்டலில் பெரும்பாலும் ஹிந்தி பேசும் நபர்களுடன் தங்கியிருந்த அவர், சவாலை ஏற்றுக்கொண்டு மொழியைக் கற்றுக் கொண்டார். சில அழகான வார்த்தைகள் உட்பட, பிந்தைய ஆண்டுகளில் பதற்றமான போட்டிகளின் போது அவரின் ஹிந்தி வார்த்தைகள் அடிக்கடி கேட்கப்பட்டன.
அவர் இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு நல்ல `கிட்’ இல்லை. அவரது தந்தை மகனின் சூழலை அறிந்து, தனது பசுவை விற்று 10,000 ரூபாய் மதிப்பிலான அந்த கிட்-ஐ வாங்கினார்.
கடந்த வியாழன் அன்று அவரது மகன் தனது கடைசி போட்டியில் இந்தியாவுக்காக அற்புதமாக விளையாடி, பாராட்டுகளை வென்றதைக் காண அவரது தந்தையுடன் அவரது வீட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். அந்த தருணத்தில் ஸ்ரீஜேஷின் வாழ்க்கை முழுமை அடைந்தது.
அடுத்த அத்தியாயம் ஆரம்பம்
ஸ்ரீஜேஷ் இனி இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார். இதனுடன் தன் இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் அவரது முன்னுரிமையாக மாறும்.
"என் குழந்தைகள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கான நேரம் இது, நான் என் பயணத்தை முடித்துவிட்டேன், அவர்களின் வாழ்க்கை தொடங்குகிறது," என்று அவர் Olympics.com ஊடகத்திடம் கூறினார்.
அந்த உரையாடலில் அவர் தனது சாதனைகளைப் பற்றி பேச விரும்பவில்லை.
"எப்போதும் சிரித்த முகத்துடன் மக்கள் என்னை ஒரு நல்ல மனிதராக நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் அவர் சொன்னதை மேற்கோள் காட்டியது.
"இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு, அவர்கள் ஹாக்கி மைதானத்தில் அடியெடுத்து வைக்கும் போது, ஸ்ரீஜேஷைப் போல நான் ஒரு கோல்கீப்பராக மாற வேண்டும் என்று அவர்கள் உணர வேண்டும்."
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)