2036-இல் ஆமதாபாத் நகரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திட்டத்திற்கு குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு ஏன்?

    • எழுதியவர், ராக்ஸி கக்டேகர் சாரா
    • பதவி, ஆமதாபாத்

பாரிஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் 2024-ல் உலகம் முழுவதிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், குஜராத்தில் தன் ஒலிம்பிக் கனவை நிறைவேற்றுவதற்கான போட்டியில் பங்கெடுக்க இந்தியா தயாராகி வருகிறது.

“2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இது, 140 கோடி இந்தியர்களின் கனவு,” என சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஆண்டு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான உரிமம் தொடர்பான விவகாரங்கள் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஃபியூச்சர் ஹோஸ்ட் கமிஷனுடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்கெனவே பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

ஒலிம்பிக் போட்டி எந்த நகரத்தில் நடத்தப்படலாம் என்பது குறித்து பிரதமரோ அல்லது இந்திய ஒலிம்பிக் சங்கமோ ஏதும் கூறாத நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆமதாபாத் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

குஜராத்தில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

குஜராத் அரசு பல கோடி மதிப்பிலான விளையாட்டு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான ஆமதாபாத்தில் விளையாட்டு நகரம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள மாநில அரசு, புறநகரில் தனியாருக்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் விவசாய நிலத்தில் கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

தன் சொந்த மாநிலமான குஜராத்தின் முதலமைச்சராக சுமார் 13 ஆண்டுகள் பிரதமர் நரேந்திர மோதி இருந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் தவிர 1995-ம் ஆண்டு முதல் பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியை இழக்கவில்லை. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான ஆமதாபாத் நரேந்திர மோதி மைதானம் அங்கு அமைந்துள்ளது.

ஆமதாபாத் மாவட்டத்தின் உயர் அதிகாரி ஒருவர் கையெழுத்திட்ட மே 30-ம் தேதி கடிதத்தின் நகல் பிபிசியிடம் உள்ளது. விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்த கிராமங்களில் நிலம் கணக்கெடுப்பு செய்வதற்கு அரசு விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விவசாய நிலங்களை வழங்குவதற்கு சுமார் 300 விவசாயிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

“ஒலிம்பிக்ஸ் நடத்த எங்கள் நிலத்தை வழங்கினால், அனைத்து விவசாயிகளும் என்ன செய்வார்கள்?,” என கரோடியா கிராமத் தலைவரான நிலேஷ் வகேலா தெரித்தார்.

ஆமதாபாத் நகரத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் வரவுள்ள மூன்று கிராமங்களுள் கரோடியாவும் ஒன்று. மற்றவை கோதாவி மற்றும் மணிப்பூர் கிராமங்கள் ஆகும்.

விவசாயிகளின் இந்த எதிர்ப்பு கடந்த சில வாரங்களாக கவனம் பெற்றுள்ளது. இதில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் இணைந்துள்ளனர். இந்த போராட்டம் தீவிரமடையும் என அஞ்சப்படும் நிலையில், இதனால் முன்மொழியப்பட்ட திட்டப் பணிகள் பாதிக்கப்படலாம்.

இத்தகைய பெரிய திட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் போராட்டம் நடைபெறுவது இது முதன்முறை அல்ல. சில சந்தர்ப்பங்களில் போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

“ஒலிம்பிக் ஏற்பாடுகள் குறித்து யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. எல்லாம் திட்டமிட்டபடி நடந்துவருகிறது,” என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மூத்த துணை தலைவர் அஜய் படேல் தெரிவித்தார்.

விவசாயிகள் ஏன் போராடுகின்றனர்?

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் சமீபத்தில், இத்தகைய போட்டிகளை நடத்துவதில் பிரான்ஸின் அனுபவத்தைப் பயன்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, பிரான்ஸ் தூதர் தியெர்ரி மேத்துவை சந்தித்தார்.

ஆனால், கள நிலவரம் வேறாக இருக்கிறது.

நரேந்திர மோதி 2001-ல் குஜராத் முதலமைச்சராவதற்கு முன்பு வரை, அதிக நேரத்தை செலவிட்ட சன்ஸ்கர்தாம் பள்ளியிலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள விவசாயிகள் இந்தியாவின் ஒலிம்பிக் திட்டம் குறித்து கவலை கொண்டுள்ளனர்.

விளையாட்டு எனும் பெயரில் நிலத்தை எடுத்துக் கொண்ட பின், தாங்கள் நிலமற்றவர்களாகி விடுவோம் என அவர்கள் அஞ்சுகின்றனர். கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்புக்கு பொருந்தாத விலையை தருவதாக கூறுவதாகவும் புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக விவசாயிகள் பலர் ஜூன் மத்தியில் சாலையில் இறங்கி போராடினர், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அளித்தனர்.

“அவர்கள் எங்களிடம் வந்து இத்திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். அதற்கு பதிலாக அவர்கள், காவல்துறையினருடன் எங்கள் நிலத்திற்கு வந்து, எங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகின்றனர்,” என விவசாயி சஞ்சய் வகேலா குற்றம்சாட்டினார்.

நரேந்திர மோதி மைதானத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள கோதாவி கிராமம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காந்திநகர் தொகுதிக்குள் வருகிறது.

“அதிகாரப்பூர்வ கடிதம் மற்றும் சர்வே எண்களின் பட்டியலுடன், ஆயுதங்களுடன் அவர்கள் (அரசு அதிகாரிகள்) வந்தனர். கணக்கெடுப்புக்காக எங்கள் நிலத்தில் வலுக்கட்டாயமாக நுழைந்தனர். ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தும் நடைமுறையில் இருப்பதை குறிக்கும் விதமாக, அவர்கள் நிலத்தை அளந்து எல்லை கற்களை நட்டனர்,” என கோதாவி கிராமத்தின் தலைவர் சக்திசிங் வகேலா தெரிவித்தார்.

67 வயதான பூபத்சிங் வகேலாவுக்கு இரண்டு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் பயிரிடுவதுதான் வருமானத்திற்கான ஒரே ஆதாரம். அருகிலுள்ள சந்தையில் கடந்த மூன்று மாதங்களில் காய்கறிகள் விற்றதன் மூலம் ரூ. 72,000 வருமானம் ஈட்டியுள்ளார் அவர்.

“சமீபத்தில் ரயில்வே தண்டவாளம் அமைக்கும் திட்டத்திற்காக நான் நிலத்தை இழந்தேன். இப்போது ஒலிம்பிக்ஸ்-க்காக அவர்கள் வருகின்றனர். நான் எங்கே செல்வது? வேலையின்மை மற்றும் பசியால் நான் சாக வேண்டுமா?,” என அவர் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை அதனால் நிறைவேற்ற முடியுமா என அவர் அச்சப்படுகிறார்.

“இந்த வயதில் என்னால் என்ன வேலையை பெற முடியும்?” என அவர் கேட்கிறார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஆமதாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரவீனா டி.கே. மற்றும் ஆமதாபாத் நகர்ப்புற வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ஆகியோரின் பதில்களை பெற அவர்களை பிபிசி தொடர்புகொண்டது. ஆனால், அவர்களின் பதில்களை பெற முடியவில்லை.

“கேல் மகாகும்பம் போன்ற நிகழ்ச்சிகளை மாநில அரசு வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இப்போது, 2036-ல் ஒலிம்பிக்ஸ் நடத்துவது மீது கவனம் செலுத்துகிறது,” என, ஊடக சந்திப்பொன்றில் பிபிசியின் கேள்விக்கு குஜராத் அரசின் செய்தித்தொடர்பாளர் ருஷிகேஷ் படேல் பதிலளித்தார்.

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்து முதலமைச்சர் ஆய்வு செய்த பிறகு “உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனவும் படேல் தெரிவித்தார்.

பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம்

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆறு விளையாட்டு வளாகங்கள் அமைப்பதற்காக மாநில அரசு தனியாக நிறுவனம் அமைத்து, 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குஜராத் மாநிலத்தின் தகவல் துறையின் சமூக ஊடக பதிவில், இத்திட்டத்தின் மாதிரி பொதுவெளியில் வைக்கப்பட்டிருந்தது.

இதற்கான நடைமுறைகளை பொறுத்து இப்பணிகள் அக்டோபர் 2024-ல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இப்பணிகள் மூன்றரை ஆண்டுகளில் முடிவடையும் எனவும் இந்திய ஊடகங்களிடம் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, இத்திட்டத்திற்கான பலனை கட்டுமான நிறுவனங்களும் வடிவமைப்பாளர்களுமே அறுவடை செய்வார்கள் என்றும் உள்ளூர் மக்கள் பயன்பெற மாட்டார்கள் என்றும் விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

“நாங்கள் எங்கள் நிலத்தை விற்க விரும்பவில்லை. எங்களுக்கு வளர்ச்சி தேவையில்லை. வளர்ச்சி அடையாத மாவட்டங்களுக்கு இத்தகைய திட்டங்களை அரசு ஏன் எடுத்துச் செல்வதில்லை?” என தர்மேந்திரசிங் வகேலா பிபிசியிடம் கூறினார்.

இத்தகைய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, “உள்கட்டமைப்பு, ஜிடிபி, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான வாய்ப்பு” என, குஜராத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் நேஹா ஷா கூறுகிறார்.

ஆனால் மறுபுறத்தில், “அந்த வளர்ச்சி எல்லோரையும் உள்ளடக்கிய ஒன்றாக இல்லாவிட்டால், புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை கடினமாகிவிடும், ஏனெனில் இதனால் வாழ்க்கை செலவுகள் அதிகமாகி, அவர்களுக்கு வருமானத்திற்கான ஆதாரம் ஏதும் இல்லாமலாகிவிடும்.” என அவர் தெரிவித்தார்.

மற்றொரு பொருளாதார நிபுணர் ஹேமந்த் ஷா, புதிய கட்டமைப்புகள் ஒலிம்பிக் நிகழ்வுக்குப் பிறகு என்னவாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்தார்.

ஒலிம்பிக்ஸ் செயல் திட்டத்தை இந்தியா நிறைவேற்றுமா?

"ஆமதாபாத்தில் ஒலிம்பிக்ஸ் நடத்தும் முயற்சியில் இந்தியா வெற்றி பெற வேண்டுமானால், ‘ஒலிம்பிக் 2020 செயல்திட்டங்களை’ பின்பற்ற வேண்டும். ஒலிம்பிக்ஸ் 2020 செயல்திட்டத்தின் படி, ஒலிம்பிக்கை நடத்த விரும்பும் ஒரு நாடு ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்" என்பது உட்பட பல பரிந்துரைகள் உள்ளன.

போலந்து, இந்தோனேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிடம் இருந்து இந்தியா சவாலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகளை நடத்துவதற்கான செலவுகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நேரத்தில், அதன் பலன்கள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.

“2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக, 2017-ம் ஆண்டில் 8 பில்லியன் டாலர் செலவிட பாரிஸ் முன்வந்தது. ஆனால், அந்த பட்ஜெட் இன்னும் பல பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது,” என சிந்தனை மையமான ‘ஃபாரின் ரிலேஷன்ஸ்’ சமீபத்திய ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

“ஒலிம்பிக் போட்டியை நடத்திய முதல் தெற்கு அமெரிக்க நாடான பிரேசிலுக்கு, 2016-ம் ஆண்டில் 20 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக செலவு அதிகரித்தது, ரியோ நகரம் மட்டும் அதில் 13 பில்லியன் டாலர்கள் அளவுக்கான செலவு சுமையை ஏற்றது. அந்நகரம் பரந்த அளவிலான உள்கட்டமைப்பிலும் அதிக முதலீடு செய்ய வேண்டியிருந்தது. இதில் சில இடங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இருந்தாலும், அதன் பின்னர் பெரும்பாலான இடங்கள் கைவிடப்பட்டன அல்லது அரிதாகவே பயன்படுத்தப்பட்டன.” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)