You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிக்க தயாராகும் சென்னை பெண் - கோடை கால பயிற்சியால் சர்வதேச வீராங்கனையானது எப்படி?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
“சில சமயங்களில் படகைச் செலுத்தும்போது காற்று பலமாக வீசும், அலைகள் அதிகமாக இருக்கும், காலை முதல் மாலை வரை தண்ணீரிலேயே இருக்க நேரிடும். இப்போது அதெல்லாம் பழகிவிட்டது. இம்முறை பாரிஸில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் இருக்கிறேன்” என்கிறார் நேத்ரா குமணன்.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நடைபெறும் பாய்மர படகு போட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் மற்றும் நேத்ரா குமணன் ஆகியோர் இந்தியாவுக்காக விளையாடுகின்றனர்.
தனது இராண்டாவது ஒலிம்பிக் தொடரில் கலந்து கொண்டுள்ள நேத்ரா குமணன், இரண்டாவது சுற்றின் முடிவில் ஏழாவது இடத்தில் உள்ளார்.
முதல் சுற்றில் ஆறாவது இடம் பிடித்து இருந்த நேத்ரா, இன்னும் எட்டு சுற்று போட்டிகள் உள்ள நிலையில் இரண்டாவது சுற்றுக்கு பிறகு 20 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறார்.
டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் படகுபோட்டியில் கலந்து கொண்ட நேத்ரா குமணன், 35வது இடத்தை பிடித்து இருந்தார்.
ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதற்கு முன்பாக நேத்ரா குமணம் பிபிசி தமிழிடம் பேசியிருந்தார்.
ஒலிம்பிக் போட்டியில் நேத்ரா விளையாடி வரும் நிலையில் இந்த கட்டுரை மறுபகிர்வு செய்யப்பட்டுகிறது.
கோடைக்கால வகுப்புகள் மூலம் தொடங்கிய பயணம்
சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த நேத்ரா குமணன், வரும் ஜூலை மாதம் பாரிஸ் நகரில் நடைபெற உள்ள 2024 ஒலிம்பிக்கின் பாய்மர படகுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றில் அவர் வெற்றி பெற்றிருந்தார்.
இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு இவர் தகுதி பெறுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பாக 2020 டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அவர் தகுதி பெற்றிருந்தார்.
சிறுவயதில் இருந்தே பாய்மர படகுப் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார் நேத்ரா. 2014 மற்றும் 2018இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட அவர், அதில் முறையே 7வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்தார். பாய்மரப் படகுப் போட்டிகளுக்காக ஆப்ரிக்காவிற்கு மேற்கே உள்ள கிராண்ட் கனேரியா தீவுகளில், ஒரு ஐரோப்பிய அகாடமி மூலமாக பயிற்சி எடுத்துக் கொள்கிறார் நேத்ரா.
14 வயதில் பாய்மர படகுப் பயிற்சிக்கான கோடைக்கால வகுப்புகளில் தொடங்கிய பயணம் ஒலிம்பிக் வரை செல்லுமென சற்றும் எதிர்பார்க்கவில்லை என்கிறார் நேத்ரா.
“சிறுவயதில் இருந்தே கோடைக்கால வகுப்புகள், விளையாட்டு என ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபாட்டுடன் இருக்க அப்பா என்னை ஊக்குவிப்பார். 2011இல் பாய்மர படகுப் பயிற்சி குறித்துக் கூறி, அதில் சேருமாறு அப்பா கூறினார்.
வித்தியாசமான ஒன்றாக உள்ளதே என்று அதில் சேர்ந்தேன். அப்போது முதல் அதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தினேன், இதோ 13 வருடங்கள் கடந்து, ஒலிம்பிக் போட்டிகள் வரை சென்றது எதிர்பார்க்காத ஒன்று தான்” என்கிறார் நேத்ரா.
2020ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒரு வருடம் தாமதமாக 2021இல் ஜுலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடத்தப்பட்டது.
“2020ஆம் ஆண்டில் தகுதிச் சுற்றுகளுக்காக நான் என்னை முழுமையாக தயார்படுத்தியிருந்தேன். ஆனால் கொரோனா பரவியதால் ஒலிம்பிக் போட்டிகள் மட்டுமல்லாது, தகுதிச் சுற்றுகளும் தள்ளிவைக்கப்பட்டன. கொரோனா பொது முடக்கம் அமலில் இருந்ததால் மேற்கொண்டு பயிற்சிகளும் எடுத்துக்கொள்ள முடியாமல் வீட்டில் இருந்தேன்.
பின்னர் எல்லாம் சரியாகி 2021இல் டோக்கியோவில், முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்றதால் சில குழப்பங்களும் தடுமாற்றங்களும் இருந்தன. ஆனால் இப்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். எனவே இந்த முறை பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்கிறார் நேத்ரா.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல் - முழு விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
ஐரோப்பிய அகாடமியில் பயிற்சி எடுப்பது ஏன்?
ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஆப்ரிக்காவிற்கு மேற்கே உள்ள கிராண்ட் கனேரியா தீவுகளில், ஒரு ஐரோப்பிய அகாடமி மூலமாக பயிற்சி எடுத்துக்கொள்கிறார் நேத்ரா.
“நீளமான கடற்கரைக்கு பெயர் போனது இந்தியா, அப்படியிருக்க கிராண்ட் கனேரியா தீவுகளுக்கு செல்லக் காரணம், அங்கு தான் பல ஐரோப்பிய பாய்மர படகு சாம்பியன்கள் பயிற்சி எடுத்துக் கொள்வார்கள்.
இது முழுக்கமுழுக்க ஐரோப்பியர்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு விளையாட்டுத் துறை. அவர்களின் கலாசாரத்திலும் வாழ்விலும் பாய்மர படகு கலந்துள்ளது. சிறுவர்கள் கூட பாய்மர படகுகளை எளிதாக கையாள்வார்கள். அப்படியிருக்க அவர்களிடமிருந்து பயிற்சி எடுத்தால்தான் ஒலிம்பிக்கில் போட்டிபோட முடியும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அங்கு தான் பயிற்சி எடுத்தேன்” என்று கூறினார் நேத்ரா.
இந்தியாவில் உள்ள பாய்மர படகுப் போட்டிகளுக்கான வசதிகள் குறித்து பேசிய அவர், “இந்தியாவில் மும்பை, சென்னை, ஹைதராபாத், போபால் போன்ற இடங்களில் இதற்கான வசதிகள் உள்ளன. ஆனால் பலருக்கும் பாய்மர படகுப் போட்டிகள் குறித்து தெரிவதில்லை. எதிர்காலத்தில் இந்த விளையாட்டுத்துறை இந்தியாவில் மேம்படும் என்று நம்புகிறேன்.
இதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒரு அகாடமி தொடங்கி இந்த விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென்ற ஆசையும் உள்ளது” என்கிறார் நேத்ரா.
பாய்மரப் போட்டிகளில் கலந்துகொள்ள அதிகம் செலவாகுமா?
“உண்மையைச் சொன்னால் டென்னிஸ், கிரிக்கெட் கோடைக்கால வகுப்புகளை விட இதற்கான வகுப்புகளின் கட்டணம் குறைவே. நான் நேத்ராவை இதில் சேர்த்தபோது தான் எனக்கும் இது புரிந்தது” என்கிறார் நேத்ராவின் தந்தை வி.சி.குமணன்.
தொடர்ந்து பேசிய அவர், “செலவு எங்கே ஆகுமென்றால் ஒலிம்பிக் அல்லது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற சர்வதேச போட்டிகளுக்கு செல்லும்போது தான். அதற்கும் மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளிக்கின்றன. பாய்மர படகுப் போட்டிக்கென சொந்தமாக படகு வாங்குவதற்கும் சில லட்சங்கள் செலவாகும். ஒலிம்பிக் என்று வரும்போது அது தவிர்க்க முடியாதது.
இந்த விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர்களுக்கு சென்னையில் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ளன. அவர்களே படகு தருவார்கள். இது கோடைக்காலம் என்பதால் எளிதாக அதில் சேரலாம்.” என்று கூறினார்.
“பெண் பிள்ளையை ஏன் கடலுக்குள் அனுப்புகிறாய் என என்னுடைய அப்பா, அம்மா கேட்டார்கள். உறவினர்களும் பலரும் பெண்ணை வெளிநாடுகளுக்கு தனியாக ஏன் அனுப்புகிறீர்கள், இந்த விளையாட்டை விட்டுவிட்டு வேறு ஏதாவது வேலைக்கு போகச் சொல்லலாமே, திருமணம் செய்து வைக்கலாமே என்றெல்லாம் கூறுகிறார்கள்.
இதை அவள் பணத்திற்காக, புகழுக்காக செய்யவில்லை, அவளுக்கு பிடித்திருக்கிறது, ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டுமென்பது அவளது கனவும் கூட. எனவே அதை நோக்கிச் அவள் செல்லட்டும். 16, 17 வயதாக இருக்கும்போதே அவள் இஸ்ரேலுக்கு தனியாக பயணம் செய்து பயிற்சி எடுத்துக்கொண்டாள். பின்னர் பல இடங்களுக்கு தனியாகச் சென்றாள். அவள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்கிறார் வி.சி.குமணன்.
மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு
மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆதரவு தொடர்ந்து நேத்ராவுக்கு கிடைப்பதாக கூறுகிறார் வி.சி.குமணன்.
“பாய்மர படகுப் போட்டிகளைப் பொறுத்தவரை தேசிய அளவிலான போட்டிகளில் ஒருவர் நுழைந்துவிட்டாலே, அவர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். அதேபோல தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களை சர்வதேச போட்டிகளுக்கு அனுப்ப மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியுதவி செய்கின்றன.
அதுவே ஒலிம்பிக் போட்டிகள் எனும்போது மத்திய அரசின் ‘டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம்’ (Target Olympic Podium Scheme) திட்டம் உள்ளது. அதன் மூலம் நிதியுதவி அளிக்கப்படும், அது எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. அதே போல தமிழ்நாடு அரசு சார்பாகவும் நிதியுதவி அளித்துள்ளார்கள். எனவே இந்த விளையாட்டிற்கு அரசு ஆதரவும், நல்ல எதிர்காலமும் உள்ளது” என்கிறார் வி.சி.குமணன்.
நேத்ரா குமணனை வாழ்த்தி தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலீட் (ELITE) திட்ட வீராங்கனை நேத்ரா குமணன், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2வது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப் போட்டியில் பங்கேற்கவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றதன் மூலம், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகுப் போட்டிக்கு தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற நேத்ரா, 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன். அவரது குறிப்பிடத்தக்க சாதனைகள் இந்தியாவின் எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்” என்று கூறியிருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)