'தோல்வி, ஏமாற்றத்திற்கு பிறகு வந்த போன் கால்'- மனு பாக்கர், சரப்ஜோத் சிங் சாதித்தது எப்படி?

    • எழுதியவர், பிரதீப் குமார் மற்றும் சவுரப் துக்கால்
    • பதவி, பிபிசி

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் செவ்வாய்க்கிழமை களம் இறங்கிய மனு பாக்கர் வரலாறு படைத்துள்ளார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

2024 ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பதக்கக் கணக்கைத் திறந்த மனுவுக்கு இது இரண்டாம் பதக்கமாகும்.

மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் இந்தியாவுக்காக இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றிருந்தாலும், அவர்கள் இரண்டு வெவ்வேறு ஒலிம்பிக்கில் இந்த சாதனையை படைத்தனர்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சுஷில் குமார், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அதேசமயம் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பிபிசியின் ’2020 ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் விளையாட்டு வீராங்கனை விருது' வென்ற மனு

2021 ஆம் ஆண்டில் மனு பாக்கர் 'பிபிசியின் 2020 ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் விளையாட்டு வீராங்கனை' விருதை வென்றார். இந்த விருதை பெற்றுக்கொள்ளும்போது, நாட்டிற்காக முடிந்தவரை அதிக பதக்கங்களை வெல்வதற்கான விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அவர் தனது உரையில், "வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் கூடவே வளர்ந்து வரும் இந்திய விளையாட்டு வீராங்கனை விருதையும் நீங்கள் வழங்குகிறீர்கள் என்பதை அறிந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்" என்று கூறினார்.

"வாழ்நாள் சாதனையாளர் விருதைப்பெற நீண்ட காலம் நன்றாக செயல்பட வேண்டும். நிறைய சாதிக்க வேண்டும். அப்போதுதான் இந்த மரியாதை உங்களுக்குக் கிடைக்கும். அதேசமயம், சிறப்பாகச் செயல்படக்கூடியவர்களுக்கு, நாட்டுக்காக அதிக பதக்கங்களை வெல்லக்கூடியவர்களுக்கு வளர்ந்துவரும் வீரர் விருது அளிக்கப்படுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

'பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள்' பிரிவின் கீழ் 'பிபிசி வளர்ந்து வரும் வீராங்கனை' விருது வழங்கி வளர்ந்து வரும் வீராங்கனைகள், கௌரவிக்கப்படுகிறார்கள்.

'பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை' விருதின் நோக்கம், இந்திய வீராங்கனைகள் மற்றும் அவர்களின் சாதனைகளை கெளரவிப்பது, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிப்பது மற்றும் அவர்களைப்பற்றி அறிந்த மற்றும் அறியாத கதைகளை உலகின் முன் கொண்டு வருவதாகும்.

பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை நிகழ்ச்சியில் மனு பாக்கர் தனக்கு கிடைத்த மரியாதையை தனது லட்சியத்துடன் இணைத்திருந்தார்.

வலுவான மறுபிரவேசத்தின் கதை

இருப்பினும் பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கரின் வெற்றியின் கதை தோல்விக்குப் பிறகான வலுவான மறுபிரவேசத்தின் கதையாகும்.

2020 ஒலிம்பிக்கில் (2021 இல் டோக்கியோவில் நடைபெற்றது) மனு பாக்கர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. அந்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னால் மனுவின் தைரியம் தளர்ந்து, அவரால் பதக்கச்சுற்றை எட்ட முடியவில்லை. இது அவருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

தோல்வியின் ஏமாற்றம் மற்றும் நம்பிக்கையின்மைக்கு மத்தியில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் அவர் சலிப்படையத் தொடங்கினார். முன்னதாக குத்துச்சண்டை, தடகளம், ஸ்கேட்டிங், ஜூடோ மற்றும் கராத்தே போன்ற விளையாட்டுகளை கைவிட்ட மனு பாக்கர் தனது 14 வது வயதில் துப்பாக்கி சுடுதலில் முழு மூச்சாக இறங்கியிருந்தார்.

2016 ஆம் ஆண்டில் துப்பாக்கி சுடுதல்தான் தனது எதிர்காலம் என்று மனு முடிவு செய்தபோது கப்பல் பொறியாளரான அவரது தந்தை ராம்கிஷன் பாக்கர் தனது வேலையை விட்டுவிட்டு மகளின் கனவுகளை நிறைவேற்ற இரவும் பகலும் உழைத்தார்.

ஐந்தாண்டுகளுக்குள் மனு பல வெற்றிகளைக் கண்டார். 2017 தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஹீனா சித்துவை தோற்கடித்தார்.

2018 ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பையில் மனு ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. மனு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இரண்டு முறை உலக சாம்பியனான மெக்ஸிகோ துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அலெஜான்ட்ரா ஜவாலாவை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

2019 இல் மனு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். இவையெல்லாம் சேர்ந்து அவருக்கு அதீத தன்னம்பிக்கை ஏற்பட்ட ஆரம்பித்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய விளையாட்டுகளை உன்னிப்பாக கவனித்து வந்த அனைவரும் மனு பாக்கர் மீது தங்கள் கண்களை வைத்திருந்தனர். ஆனால் ஒரு போட்டியில் அவரது கைத்துப்பாக்கி செயலிழந்தது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் அவரது முழு பங்கேற்பும் தடம் புரண்டது.

எதிர்பார்ப்புகளின் மேகத்தில் சவாரி செய்த மனு பாக்கர் தனது தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தனது அப்போதைய பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா மீது குற்றம் சாட்டினார். முன்னாள் துப்பாக்கி சுடும் வீரர் ராணா இதை மனுவின் பக்குவமின்மை என்று அழைத்தார். ஆனால் இருவரும் பிரிந்தனர்.

இதற்குப் பிறகு இந்த விளையாட்டின் மீதான அவருடைய ஆர்வம் குறைந்தது. துப்பாக்கி சுடுதலை விட்டுவிட்டு மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல முடிவு செய்ததாக பல ஊடக நேர்காணல்களில் அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான நேரம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. மற்றொரு வாய்ப்பை தனக்கு அளித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஜஸ்பால் ராணாவுக்கு செய்த அழைப்பு

கவிஞரும், மனித உரிமை ஆர்வலருமான மாயா ஏஞ்சலோவின் 'ஸ்டில் ஐ ரைஸ்' என்ற கவிதையும், பகவத்கீதையின் ’உன்னுடைய கடமையை செய் என்ற மந்திரமும்’ துப்பாக்கிச் சுடுதல் உலகுக்குத் திரும்பும் நம்பிக்கையை மனு பாகருக்கு அளித்தது.

இந்தக் குழப்பத்தில் ஒரு நாள் மனுபாகர் தன்னைச் சுற்றியிருந்த யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்தார். இது ஜஸ்பால் ராணாவை அழைக்கும் முடிவு.

பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சரியாக ஒரு வருடம் முன்பு மனு பாக்கர் ஜஸ்பால் ராணாவை அழைத்து உதவி கோரினார். ஜஸ்பால் ராணாவால் மனுவிடம் மறுத்துப்பேச முடியவில்லை.

மனுவுக்கு நெருக்கமானவர்கள் அவரை அழைக்க வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு வருடத்திற்குள் நான்கு பயிற்சியாளர்களை முயற்சித்த மனு பாக்கர், ஜஸ்பால் ராணாவால் மட்டுமே தனது தலைவிதியை மாற்ற முடியும் என்பதை உணர்ந்திருந்தார்.

இந்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வசதிகள் மூலமும் மனு பாகர் உதவி பெற்றார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை தகவல் அளித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம், "மனுபாகரின் பயிற்சிக்காக அரசு 2 கோடி ரூபாய் செலவழித்தது. அவரை ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்துக்கு பயிற்சிக்கு அனுப்பினோம். நிதி உதவி காரணமாக தனக்கு வேண்டிய பயிற்சியாளரை பணியமர்த்த அவருக்கு முடிந்தது." என்று தெரிவித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல் - முழு விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

யார் இந்த சரப்ஜோத் சிங்?

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கருடன் சேர்ந்து வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார் சரப்ஜோத் சிங். அம்பலாவில் உள்ள தீன் என்ற கிராமத்தை சேர்ந்த இவர் மனு பாக்கருடன் இணைந்து, தென் கொரிய அணியை வீழ்த்தினார்.

சரப்ஜோத் சிங்கின் பயிற்சியாளர் அபிஷேக் ராணா இது குறித்து பேசிய போது, ஹங்கேரி நாட்டை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரரான கரோலி டக்காஸின் வாழ்க்கைதான் சரப்ஜோத்க்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.

"ஹங்கேரி நாட்டை சேர்ந்த கரோலி டக்காஸ் பற்றி பேச்சாளர் மஹேஷ்வர் கூறி தான் எனக்கு தெரிய வந்தது. கண்ணி வெடி தாக்குதலில் தன்னுடைய வலது கையை இழந்த நிலையிலும், டாக்காஸ் தன்னுடைய இடது கையில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று அவர் தங்கப் பதக்கமும் வென்றார். அவரின் இந்த வெற்றிக் கதை என்னை வெகுவாக ஈர்த்தது. எத்தனை துன்பங்கள் வந்தாலும், மனம் தளராமல் முயற்சி செய்தால் நீங்கள் உங்கள் இலக்கை அடையலாம் என்பதை இது உணர்த்தியது. இந்த கதையை நான் தொடர்ந்து சரப்ஜோதிற்கு பயிற்சியின் போது கூறி வந்தேன். இது ஒலிம்பிக் பதக்கம் என்ற எங்கள் இலக்கின் மீது கவனம் செலுத்த வைத்து எங்களை ஊக்குவித்தது" என்று கூறினார்.

திங்கள் கிழமை அன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டிக்கான தகுதி சுற்றில் தோல்வி அடைந்தார் சரப்ஜோத். இது அவரை வருத்தமடைய செய்தது.

"அவருடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்து போனது. அன்று மாலை நான் அவருக்கு மீண்டும் ஊக்கமளித்தேன். ஹங்கேரி நாட்டு வீரரைப் பற்றி மீண்டும் கூறினேன். அது எங்களை முன்னோக்கி செல்ல உந்துதல் அளித்தது. அடுத்த நாள் அவர் கலப்பு இரட்டையர் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்ற அனைத்தையும் மறந்துவிடு. இந்த இலக்கில் மட்டும் கவனம் செலுத்து என்று கூறி தான் இன்று நடைபெற்ற போட்டிக்கு அனுப்பினேன்," என்றும் அபிஷேக் கூறுகிறார்.

பயிற்சி மையத்தில் இருந்து ஒலிம்பிக் மைதானம் வரை

அம்பலாவில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை அபிஷேக் 2016ம் ஆண்டு துவங்கிய போது அதில் சேர்ந்தார் சரப்ஜோத் சிங். முதலாம் ஆண்டில் (2017) தேசிய ஜூனியர் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். அது அவர் வாழ்வின் ஒரு முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது.

"அதனை தொடர்ந்து அவர் பின்னோக்கி பார்க்கவே இல்லை. தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றார். அவரின் கடின உழைப்பு மற்றும் மன பலம் போன்றவைதான் அவரின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தன," என்று கூறுகிறார் அபிஷேக்.

"குருக்குல கல்வி பின்புலத்தில் இருந்து அவர் வந்தார். ஒழுக்கமும், டிஜிட்டல் உலகில் இருந்து வரும் கவன சிதறல்களையும் குறைப்பதற்குதான் நான் முன்னுரிமை கொடுத்தேன். அதே ஒழுக்கத்தை என்னுடைய பயிற்சியிலும் வழங்குகிறேன். ஒருமுறை சரப்ஜோத் அவருடைய போனில் 'பப்ஜி' செயலியை பதிவிறக்கம் செய்து வைத்தார். சில நாட்கள் கழித்து அவரின் பெற்றோர்கள், அவர் அதிக நேரம் மொபைல் போனில் செலவிடுவதாக கூறினார். நான் பிறகு அவருடைய போனை வாங்கி அந்த செயலியை நீக்கினேன். விளையாட்டில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினேன்," என்றும் நினைவு கூறுகிறார் அபிஷேக்.

2007 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவிலான ஜூனியர் பிரிவுகளில் பங்கேற்றவர் அபிஷேக் ராணா. ஆனால் அவரால் தொடர்ச்சியாக வெற்றி பெற இயலவில்லை. இறுதியில் 2011ம் ஆண்டு விளையாட்டில் இருந்து வெளியேறினார். 2016ம் ஆண்டு அவர் பயிற்சி மையத்தை துவங்கினார்.

"நான் கண்ட கனவு எது நிறைவேறவில்லையோ, அதனை என்னுடைய மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன். சரப்ஜோத் என்னுடைய ஒலிம்பிக் கனவை நிறைவேற்றியிருக்கிறார். இது எனக்கும், அவரின் ஒலிம்பிக் கனவுக்கு பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் முக்கியமான தருணம்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் அபிஷேக்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)