ஒலிம்பிக்கில் விளையாட விரலையே துண்டித்துக் கொண்ட ஆஸ்திரேலிய வீரர் - எதற்காக தெரியுமா?

    • எழுதியவர், டிஃபானி டர்ன்புல்
    • பதவி, பிபிசி செய்தியாளர், சிட்னியிலிருந்து

பாரிஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காகத் தன்னுடைய விரலின் ஒரு பாதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார் ஹாக்கி வீரர். அவரது இந்தச் செயல் பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரரான மேட் டாசன் (Matt Dawson) படுகாயம் அடைந்தார். வலது கை விரல் ஒன்றில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை மூலம் அதனைச் சரி செய்துவிடலாம் என்றாலும் கூட அந்தக் காயத்தில் இருந்து மீண்டு, விரல் இயல்பாகச் செயல்பட சில மாதங்கள் ஆகலாம் என்று மருத்துவர்கள் அவரை எச்சரித்துள்ளனர்.

மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் அந்த வீரரின் ஒலிம்பிக் கனவு கலைந்துவிடும் என்ற அச்சத்தில், தன்னுடைய விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட அவர் முடிவு செய்தது, அவரின் குடும்பத்தினர் மற்றும் சக வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விரலை இழக்கத் துணிந்த வீரர்

30 வயதான மேட் டாசன், தன்னுடைய ஒரு விரலை இழந்த வெறும் 16 நாட்களில், ஜூலை 27-ஆம் தேதி அன்று அர்ஜெண்டினாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் தன்னுடைய கூக்கபுர்ராஸ் (ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் பெயர்) அணியுடன் பங்கேற்க உள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மேட் டாசன் பயிற்சி ஆட்டத்தின் போது தன்னுடைய விரல் உடைந்துவிட்டதாகவும், ஓய்வு அறையில் தன்னுடைய விரலைப் பார்த்து மயக்கம் அடைந்துவிட்டதாகவும் கூறினார். "என்னுடைய ஒலிம்பிக் கனவு முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தேன்," என்று அவர் கூறினார்.

உடனடியாக ப்ளாஸ்டிக் சர்ஜன் ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, அவர், உடனடியாக விரலைச் சரி செய்தாலும் கூட அந்தக் காயத்தில் இருந்து மீண்டு வர நிறைய காலம் ஆகும் என்றிருக்கிறார்.

மேலும் முழுமையாக அந்த விரல் செயல்படுமா என்பதிலும் சந்தேகம் உள்ளது என்று அவர் தெரிவித்ததாகக் கூறினார். ஆனால், அந்த விரலை நீக்கிவிட்டால், 10 நாட்களில் மீண்டும் விளையாடச் சென்றுவிடலாம் என்று மருத்துவர் கூறியதாக மேட் டாசன் அறிவித்தார்.

அவசரப்பட்டு எந்தச் செயலையும் செய்ய வேண்டாம் என்று அவருடைய மனைவி கூறியிருந்த போதும், மேட் டாசன் தன்னுடைய விரலை நீக்கும் முடிவை அன்று மதியமே எடுத்துவிட்டார்.

'ஒலிம்பிக்கில் பங்கேற்க நான் கொடுக்கும் விலை இந்த விரல்'

மேட் டாசன், "என்னுடைய கரியர் ஆரம்பமாவதற்கு முன்பே முடிவுக்கு வந்ததைப் போல் ஆகிவிட்டது. யாருக்குத் தெரியும், இது என் இறுதி ஒலிம்பிக் போட்டியாகக் கூட இருக்கலாம். நான் இப்போதும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் அதைத்தான் செய்யப் போகிறேன்," என்று 'பார்லே வூ ஹாக்கி' (Parlez Vous Hockey) என்ற போட்காஸ்டில் குறிப்பிட்டார்.

"ஒலிம்பிக்கில் விளையாட என்னுடைய விரலின் ஒரு பகுதியை இழப்பது தான் நான் தரும் விலை என்றால் அதைத்தான் நான் செய்யப் போகிறேன்," என்றும் அவர் கூறினார்.

அணியின் தலைவர் அரன் ஜாலுஸ்கி, டாவ்சனின் இந்த முடிவு அணியின் உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட அவர்கள் டாவ்சனுக்கு ஆதரவு தருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

பாரீஸில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எங்களுக்கு என்ன யோசிப்பது என்றே தெரியவில்லை. அவர் மருத்துவமனைக்குச் சென்றார். தன்னுடைய விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட்டார் என்று கேள்விப்பட்டோம். ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு மக்கள் கையையும் காலையும் சில நேரங்களில் விரலின் ஒரு பாதியையும் இழக்கத் தயாராக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது," என்று கூறினார் அரன்.

"உங்களது ஒரு கனவுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்து, பல்வேறு தியாகங்களைச் செய்து இங்கே விளையாட வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள் எனில், அவரது முடிவு மிக எளிமையான ஒன்று என்று தான் நான் கூறுவேன்," என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வாரத் துவக்கத்தில் இது தொடர்பாக பேசிய அணியின் பயிற்சியாளர் காலின் பேட்ச், டாசன் தன் அணியினருடன் மீண்டும் பயிற்சிக்கு வந்துவிட்டார் என்று குறிப்பிட்டார்.

"பாரீஸில் விளையாடத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் மேட் டாசன். இது போன்ற சூழலில் நான் இப்படி விரலை நீக்கியிருப்பேனா என்று கேட்டால் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் அதைச் செய்திருக்கிறார்," என்று அவர் ஆஸ்திரேலியாவின் செவன் நியூஸ் நெட்வொர்க் சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேட் டாசனுக்கு அடிபடுவது இது முதல் முறையல்ல. 2018-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சில வாரங்களுக்கு முன்பு ஹாக்கி மட்டை பட்டு கிட்டத்தட்ட ஒரு கண்ணையே இழக்கும் நிலைக்கு ஆளானார் அவர்.

ஆனால், அந்தப் போட்டியிலும் அவர் பங்கேற்றார். அவரது அணி தங்கப்பதக்கம் வென்றது. பிறகு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது அந்த அணி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)