You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள 5 வீராங்கனைகள்
- எழுதியவர், மனோஜ் சதுர்வேதி
- பதவி, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசி இந்தி
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவுக்கு பதக்கம் வென்று தர வாய்ப்புள்ள ஐந்து வீராங்கனைகள் உள்ளனர்.
இம்முறை இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவை நிறைவேற்றுவதில் வீராங்கனைகள் முக்கிய பங்களிப்பார்கள்.
பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, கடந்த இருமுறையும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிவி சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன், பெண் மல்யுத்த வீராங்கனை பங்கல் மற்றும் துப்பாக்கி சூடுதல் வீராங்கனை சிஃப்ட் கவுர் சம்ரா ஆகிய 5 இந்திய வீராங்கனைகள் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மீராபாய் சானு இரண்டாம் முறை பதக்கம் வெல்வாரா?
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பளு தூக்குதலில் போட்டியிடும் வீராங்கனைகளில் மீராபாய் சானுவை விட சிறந்த வீராங்கனை ஒருவர் மட்டுமே இருக்கிறார். எனவே, தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
மீராபாய் சானு, 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஹாங்சோவில் (Hangzhou) நடந்த ஆசியப் போட்டிகளில் காயம் காரணமாக மீராபாய் சானுவால் பதக்கம் வெல்ல முடியாமல் போனது. இவர் சக்கர நாற்காலியில் டெல்லி விமான நிலையத்தை அடைந்த போது, இவரை வரவேற்க ஒருவரும் இல்லை. அப்போது இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்.
பெண்கள் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மிக வெற்றிகரமான வீராங்கனை மீராபாய் சானு. ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றது மட்டுமின்றி, இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி, காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
பளுதூக்கும் போட்டியில் பங்குபெறும் 12 வீராங்கனைகளில் 200 கிலோவிற்கு மேல் பளுதூக்கும் வலிமை கொண்டவர் மீராபாய் மட்டுமே.
மீராபாய் சானுவால் 205 கிலோ பளு தூக்க முடியும். இதில் ஸ்நாட்ச் எனும் முறையில் ( முழு எடையை தலைக்கு மேல் எடையை தூங்குவது) 90 கிலோ வரையும், க்ளீன் அண்ட் ஜர்க் எனும் முறையில் (மார்பு வரை எடையை தூக்கி நிறுத்தி, பிறகு தலைக்கு மேல் தூக்குவது) 115 கிலோ எடையும் தூக்கும் திறன் கொண்டுள்ளார். ஒருவேளை ஸ்நாட்ச் முறையில் கூடுதலாக 5 கிலோ வரை தூக்கும் பட்சத்தில் இவர் தங்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
பி.வி.சிந்து
இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் (வெள்ளி மற்றும் வெண்கலம்) வென்ற ஒரே வீராங்கனை சிந்து மட்டும் தான். முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்த திறனை வெளிப்படுத்துபவர் சிந்து.
காயம் காரணமாக பிவி சிந்து தனது சிறந்த ஃபார்மில் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை.
2024 இல் 62.5 வெற்றி விகிதம் வைத்துள்ளார் சிந்து. 2016 இல் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற போது சிந்துவின் வயது 21. அப்போது இறகுப்பந்தில் பதக்கம் வென்ற முதல் வீரர் எனும் பெயர் பெற்றார். அப்போது அவரது வெற்றி விகிதம் 63. அதேபோல, 2020 இல் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற போது அவரது வெற்றி விகிதம் 61.
பிவி சிந்துவின் வழிகாட்டியாக இந்தியாவின் சிறந்த இறகுப்பந்து வீரர் பிரகாஷ் படுகோனே இருக்கிறார்.
ஒரு வீரரின் வெற்றி என்பது, சரியான நேரத்தில், சரியான ஷாட் ஆடுவதை பொறுத்து இருக்கிறது. எப்போது ஸ்மாஷ் (Smash) ஆடவேண்டும், எப்போது டிராப் ஷாட் (Drop Shot) ஆடவேண்டும், எப்போது வாலி (Volley) ஆடவேண்டும் என்று சிந்துவுக்கு பயிற்சி அளித்து வருகிறேன் என்கிறார் பிரகாஷ்.
ஆன்டிம் பங்கல்
சர்வதேச அளவில் 53 கிலோ பிரிவில் 5 சாம்பியன்ஷிப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆன்டிம் பங்கல் அனைத்திலும் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி, உலக சாம்பியன்ஷிப் மற்றும் போட்டியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலமும் வென்றுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்ல, இவர் ஜப்பானை சேர்ந்த அகாரி ஃபுஜினாமியை (Akari Fujinami) தோற்கடிக்க வேண்டும். ஏனெனில், அகாரி 130 சண்டைகளில் தோல்வியடையாமல் விளையாடி வருகிறார்.
இவரது தந்தை ராம்நிவாஸ் தனது நிலம், டிராக்டர் மற்றும் கார் போன்றவற்றை விற்று இவரை மல்யுத்த வீராங்கனை ஆக்கியுள்ளார். இவர் தற்காப்பில் சிறந்த திறன் கொண்டிருக்கிறார். இதனால் எதிராளி புள்ளிகள் எடுப்பதை இவர் தடுக்கிறார்.
தங்கத்திற்கு குறி வைக்கும் நிகத் ஜரீன்
இது நிகத் ஜரீனின் முதல் ஒலிம்பிக் போட்டி. டோக்கியோ ஒலிம்பிக்கில் மேரி கோமிடம் தோல்வி அடைந்ததால், இவர் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் வெற்றிகரமாக திகழ்ந்து, நாட்டின் நம்பர் 1 வீராங்கனை எனும் நிலையை அடைந்துள்ளார்.
நிகத் இதுவரையில் இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கமும், ஒருமுறை காமன்வெல்த் போட்டியில் தங்கமும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒருமுறை வெண்கலமும் வென்றுள்ளார். இவர் பதக்கப் பட்டியலில் மிச்சம் வைத்திருப்பது ஒலிம்பிக் மட்டுமே. இந்த குறையை விரைவில் இவர் தீர்ப்பதற்கு சாத்தியம் உள்ளது.
2022 இல் இருந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற ஆரம்பித்தார் நிகத். அப்போதிலிருந்து இவர் ஃப்ளைவெயிட் பிரிவில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளார். பாரிஸ் சென்றடைந்த பிறகு எக்ஸ் தளத்தில், கனவை நிறைவேற்ற வந்துள்ளதாக பதிவிட்டிருந்தார்.
பொதுவாக குத்துச்சண்டைக்கு பெண்களை அனுமதிக்காத சமூகத்தில் இருந்து வந்தவர் நிகத். ஆனால், விமர்சனங்களை கண்டுகொள்ளமல், குத்துச்சண்டை மீது மகளுக்கு இருந்த ஆர்வம் மற்றும் முயற்சிகளை ஊக்குவித்த இவரது தந்தை முகமது ஜமீல் பாராட்டுதலுக்குரியவர்.
‘கோல்டன் ஷூட்டர்’ சிஃப்ட் கவுர் சம்ரா
கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய துப்பாக்கி சுடுதல் அணி வீரர்கள் சிறந்து செயற்பட தவறினர். ஆனால், சிஃப்ட் கவுர்- க்கு இது ஒரு சுமையாக இருக்காது. ஏனெனில் இவர் அந்த அணியில் இடம்பெறவில்லை. இவர் கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார்.
கடந்த ஆண்டு 50 மீட்டர் மூன்று நிலை ரைஃபிள் போட்டியில் 469.6 புள்ளிகள் பெற்று, பிரிட்டனைச் சேர்ந்த சியோனெட்டின் உலக சாதனையைத் தகர்த்தார். இவர் முட்டியிடும் (Kneeling) நிலையில் 154.6 புள்ளிகள், தரையில் படுத்தபடி (Prone) நிலையில் 157.9 புள்ளிகள் மற்றும் நிற்கும் (Standing) நிலையில் 157.1 புள்ளிகள் பெற்றிருந்தார்.
இவரது உறவினர் ஷெய்க்கோன் ஒரு ஷூட்டர். அவருடன் 9 வயதில் இருந்து துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொள்ளும் இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இதனால் அதிகரித்த ஈர்ப்பின் காரணமாக சிஃப்ட் கவுர் இந்த விளையாட்டை தேர்வு செய்துள்ளார்.
ஷூட்டிங் பயிற்சி மேற்கொண்டு வந்த போதே, இவர் மருத்துவர் ஆவதற்கும் முயற்சி செய்துள்ளார். இவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஃபரித்கோட் நகரில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடமும் பெற்றுள்ளார். ஆனால், ஷூட்டிங் போட்டியில் தீவிரமாக இறங்கிய சிஃப்ட் கவுர் மருத்துவ படிப்பில் இருந்து விலகி, விளையாட்டில் முழு கவனம் செலுத்த துவங்கினர்.
இதுகுறித்து சிப்ட் கவுர், ‘நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்றால் அழுத்தமான சூழலில் இருந்து வெளிவர வேண்டும். நான் ஒரு போதும் அழுத்தத்தை எடுத்துக் கொள்வதில்லை. அதனால் தான் என்னால் வெற்றிகரமாக நல்ல முடிவைப் பெற முடிகிறது’ என்று கூறியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)