You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனிதர்களின் முதல் மூதாதையான பாலூட்டி இனம் டைனோசர் காலத்தில் எப்படி வாழ்ந்தது தெரியுமா?
- எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
- பதவி, பிபிசி சுற்றுச்சூழல் நிருபர்
ஸ்காட்லாந்தின் ஐல் ஆஃப் ஸ்கை என்ற தீவில் (Isle of Skye) கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியமூட்டும் இரண்டு அரிய புதைபடிவங்கள், பாலூட்டிகள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்கின்றன.
நவீனகால சிறிய பாலூட்டி விலங்குகளின் ஆயுட்காலம் சராசரியாக ஒரு வருடம் தான் என்றாலும், டைனோசர்களுடன் பூமியில் முதன்முதலில் சுற்றித்திரிந்த சிறிய பாலூட்டி விலங்கினம் ஒன்று, ஏழு ஆண்டுகளுக்கும் அதிகமாக உயிர் வாழ்ந்ததை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
பழமையான பாலூட்டி விலங்கினமான க்ருசடோடான் (Krusatodon), தற்கால மூஞ்சூறு போன்ற உடல் அமைப்பை கொண்டிருக்கும். இந்த அழிந்துபோன விலங்கினத்தின் ஒரு சில புதைபடிவங்கள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த இனத்தின் இதுவரை அறியப்பட்ட சில புதைபடிவங்களில் ஒரு சிறிய விலங்கு மற்றும் ஸ்கை தீவைச் சேர்ந்த சேர்ந்த ஒரு பெரிய விலங்கு ஆகியவற்றின் ஆச்சரியப்படும் வகையில் முழுமையான இரண்டு எலும்புக்கூடுகள் உள்ளன.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
புதைபடிவத்தின் பற்களில் இருந்தது என்ன?
இந்தப் பழங்கால உயிரினங்களின் எச்சங்களை ஆய்வு செய்வதன் மூலம், ஆரம்ப காலத்தில் வாழ்ந்த பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சியைச் சுற்றியுள்ள மர்மங்களை விலக்க முடியும்,என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பூமியில் உள்ள ஒவ்வொரு வாழ்விடத்தையும் ஆக்கிரமித்து காலனித்துவப்படுத்துவதில் அவற்றின் குறிப்பிடத்தக்க பங்கைக் கண்டறிய முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
மரங்களின் வயதை அறிய அவற்றின் ஆண்டு வளையங்களை ஆய்வு செய்வது போல ஆராய்ச்சியாளர்கள் மிகவும் மேம்பட்டத் தொழில்நுட்பமான எக்ஸ்ரே இமேஜிங்கைப் பயன்படுத்தி, க்ருசடோடான் இனங்களின் இரண்டு புதைபடிவங்களையும் ஆய்வு செய்தனர். எக்ஸ்ரே இமேஜிங் மூலம் அவற்றின் பற்களில் உள்ள வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்தனர்.
"இந்தச் சிறுவயது க்ருசடோடான் விலங்கின் பற்களை ஆய்வு செய்த போது, அது தாய் விலங்கிடம் பால் குடிப்பதை நிறுத்தி, திரவ உணவுகளை அசை போடும் பருவத்தில் இருந்தது. அதற்கு இரண்டு வயது இருக்கலாம்,” என்று ஸ்காட்லாந்தின் தேசிய அருங்காட்சியகங்களின் தொல்லுயிரியலின் இணை ஆராய்ச்சியாளர் டாக்டர் எல்சா பன்சிரோலி பிபிசி செய்தியிடம் கூறினார்.
"இந்தப் புதைபடிவ ஆய்வு அசாதாரணமான ஒன்று. பாலூட்டிகளின் பரிணாமம் எவ்வாறு நடந்தது என்பதைப் பற்றி நமக்கு நிறைய சொல்கிறது." என்று விளக்கினார்.
இன்று பூமியில் வாழும் சிறிய பாலூட்டிகளின் (எலிகள் போன்றவை) ஆயுட்காலம் மிகக் குறைவு, சராசரியாக 12 மாதங்கள் வரை உயிர்வாழ்கின்றன, மேலும் விரைவாக முதிர்ச்சியடைந்து, பிறந்த சில மாதங்களுக்குள் பால் பற்களை இழந்து திரவ உணவு சாப்பிட ஆரம்பித்துவிடுகின்றன.
மனித இனத்தின் முதல் முன்னோடி
க்ருசடோடான் கிர்ட்லிங்டோனெசிஸ் (Krusatodon kirtlingtonesis) என்ற உயிரினம், சுமார் 16.6 கோடி (166 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு, ஐல் ஆஃப் ஸ்கை (Skye) பகுதி, ஆழமற்ற கடல்கள் மற்றும் அடர்ந்த காடுகளைக் கொண்ட வெப்பமண்டல சொர்க்க பூமியாக இருந்தபோது அங்கு வாழ்ந்தன.
அதாவது ஜுராசிக் காலக்கட்டத்தில், டைனோசர்களின் நிழலில் காலூன்றிய முதல் பாலூட்டி இனம் இவை.
சிறிய உடலமைப்புடன், பழமையான மற்றும் சில நேரங்களில் மிகவும் விசித்திரமான விலங்கினமாக இருக்கும் க்ருசடோடான், இன்றைய காலகட்டத்தில் வாழும் பூனைகள் தொடங்கி திமிங்கலங்கள் வரையிலான ஆயிரக்கணக்கான வெவ்வேறு பாலூட்டிகளின் முன்னோடிகளாக இருந்தன. மனித இனமும் இதில் அடக்கம்.
புதைபடிவப் புதையல்
"ஸ்கை பகுதியின் புதைபடிவங்கள் வாயிலாக பாலூட்டிகளின் பரிணாமத்தைப் புரிந்து கொள்கையில், வரைபடத்தில் ஸ்காட்லாந்தின் முக்கியத்துவத்தையும் உணர முடிகிறது. ஆனால் இங்கு ஆய்வு செய்யப்பட வேண்டிய புதைபடிவங்கள் இன்னும் அதிகம்,” என்று டாக்டர் பான்சிரோலி கூறினார்.
2016-ஆம் ஆண்டில் ஸ்கை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட க்ருசடோடான் புதைபடிவமானது அறிவியலுக்குத் தெரிந்த ஒரே 'இளவயது’ ஜுராசிக் பாலூட்டி எலும்புக்கூடு ஆகும். அதே சமயம் 1970-களில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய ரக பாலூட்டி எலும்புக்கூடுகளில் ஒன்றாகும்.
ஸ்காட்லாந்தின் தேசிய அருங்காட்சியகங்களில் உள்ள முதுகெலும்பிகள் (Vertebrate) தொல்லுயிரியலின் மூத்த கண்காணிப்பாளரும், திட்டத்தில் இணை ஆராய்ச்சியாளருமான டாக்டர் ஸ்டிக் வால்ஷ் கருத்துப்படி, "வெவ்வேறு வளர்ச்சி நிலைகளைக் கொண்ட ஒரே இனத்தின் இரண்டு அரிய புதைபடிவ எலும்புக்கூடுகளைக் கண்டறிவது மிகவும் ஆரம்பகால பாலூட்டிகளின் வாழ்க்கையைப் பற்றிய விஞ்ஞானிகளின் புரிதலை மீண்டும் மாற்றி எழுதுகிறது,” என்றார்.
பிரத்திபெற்ற 'நேச்சர்' அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வில் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், சிகாகோ பல்கலைக்கழகம், லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)