You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆழ்கடல் அற்புதம்: சூரிய ஒளி புகாத ஆழத்தில் ஒளிச்சேர்க்கை இல்லாமல் ஆக்சிஜன் உற்பத்தி ஆவது எப்படி?
- எழுதியவர், விக்டோரியா கில்
- பதவி, பிபிசி அறிவியல் நிருபர்
ஆழ்கடலில் "இருண்ட ஆக்ஸிஜன்" உற்பத்தி ஆவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடற்பரப்பில் இருக்கும் `உலோக முடிச்சு’ பந்துகளில் இருந்து ஆக்சிஜன் உருவானது விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் பாதி கடலில் இருந்து கிடைப்பதாகும். இந்த கண்டுபிடிப்பிற்கு முன்பு வரை, கடல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆகிறது என்றும் இந்த செயல்பாட்டுக்கு சூரிய ஒளி தேவைப்படும் என்றும் புரிந்துக் கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது சூரிய ஒளி ஊடுருவ முடியாத இடத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியாவதை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
ஆம், 5 கிமீ ஆழத்தில், சூரிய ஒளி ஊடுருவ முடியாத இடத்தில், இயற்கையாக உருவாகும் உலோக "முடிச்சுகள்" மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, உலோக முடிச்சுகள் கடல் நீரை (H2O) ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக பிரிக்கின்றன.
பல சுரங்க நிறுவனங்கள் இந்த உலோக முடிச்சுகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளன. அப்படி நடந்தால் இயற்கையாக நிகழும் செயல்முறையை சீர்குலைக்கும் என்று கடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். சுரங்க நிறுவனங்கள் உலோக முடிச்சுகளை எடுக்க ஆரம்பித்தால் அவை உருவாக்கும் ஆக்சிஜனைச் சார்ந்து இருக்கும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும்.
ஆக்ஸிஜன் பற்றிய நம்பிக்கையை மாற்றிய ’உலோக முடிச்சு’
"நான் இதை முதன் முதலில் 2013 இல் கவனித்தேன். கடலில் சூரிய ஒளியே இல்லாத, முழு இருளில் அதிக அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது" என்று ’ஸ்காட்டிஷ் அசோசியேஷன் ஃபார் மரைன் சயின்ஸ்’ அமைப்பின் முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்வீட்மேன் விளக்குகிறார்.
"அந்த சமயத்தில் நான் அதை புறக்கணித்தேன். காரணம் ஒளிச்சேர்க்கை மூலம் மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்தி ஆகும் என்று எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. நான் அதை நம்பினேன்” என்று விளக்கினார்.
"இறுதியில், இந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பை பல ஆண்டுகளாக நான் புறக்கணித்து வந்ததை என்பதை உணர்ந்தேன்" என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.
பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்வீட்மேன் அவரது சக விஞ்ஞானிகளுடன் ஹவாய் மற்றும் மெக்சிகோ இடையே உள்ள ஆழ்கடல் பகுதியில் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டனர் - இது உலோக முடிச்சுகள் நிறைந்திருக்கும் கடலோரப் பகுதி.
உலோக முடிச்சுகள் எப்படி உருவாகிறது?
கடல் நீரில் கரைந்த உலோகங்கள், ஷெல் துண்டுகள் அல்லது பிற கழிவுகள் ஒன்றிணைந்து சில வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து உலோக முடிச்சுகள் உருவாகின்றன. இந்த செயல்முறை முழுமையாக நிகழ மில்லியன்கணக்கான ஆண்டுகள் ஆகும்.
இந்த உலோக முடிச்சுகளில் லித்தியம், கோபால்ட் மற்றும் தாமிரம் போன்ற உலோகங்கள் இருப்பதால் - இவை அனைத்தும் பேட்டரிகள் தயாரிக்கத் தேவைப்படும். எனவே பல சுரங்க நிறுவனங்கள் அவற்றைச் சேகரித்து மேற்பரப்பில் கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன.
பேராசிரியர் ஸ்வீட்மேன் கூற்றுபடி, உலோக முடிச்சுகள் உருவாக்கும் `இருண்ட ஆக்ஸிஜன்’ கடற்பரப்பில் இருக்கும் உயிரினங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும்.
அவரது கண்டுபிடிப்பு, `நேச்சர் ஜியோசயின்ஸ்’ இதழில் வெளியிடப்பட்டது. அதே சமயம், முன்மொழியப்பட்ட ஆழ்கடல் சுரங்க முயற்சிகளின் அபாயங்கள் குறித்து விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் புதிய கவலைகளை எழுப்புகிறது.
உலோக முடிச்சுகள் பேட்டரிகளைப் போல செயல்படுவதால் துல்லியமாக ஆக்ஸிஜனை உருவாக்க முடிகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
"நீங்கள் ஒரு பேட்டரியை கடல் நீரில் போட்டால், அது நுரைகளை உமிழத் தொடங்குகிறது. அதற்குக் காரணம், மின்சாரம் கடல்நீரை ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனாக [குமிழ்கள்] பிரிக்கிறது" என்று பேராசிரியர் ஸ்வீட்மேன் விளக்கினார்.
"இந்த உலோக முடிச்சுகளிலும் இந்த செயல்பாடு தான் நடக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம். இது ஒரு டார்ச்சில் உள்ள பேட்டரியை போன்ற தன்மை கொண்டது" என்றார்.
"நீங்கள் ஒரு பேட்டரியை மட்டும் பயன்படுத்தும்போது, டார்ச் லைட்டை ஒளிர வைக்காது. இரண்டு பேட்டரிகள் பயன்படுத்தும் போது டார்ச்சை ஒளிரச் செய்ய போதுமான மின்னழுத்தம் உருவாகிறது. எனவே கடற்பரப்பில் முடிச்சுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்படுத்தும் போது, அவை வேலை செய்கின்றன."
ஆராய்ச்சியாளர்கள் இந்த கோட்பாட்டை ஆய்வகத்தில் சோதனை செய்து, உருளைக்கிழங்கு அளவிலான உலோக முடிச்சுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அவர்களின் சோதனைகள் ஒவ்வொரு உலோகக் கட்டியின் மேற்பரப்பில் உள்ள மின்னழுத்தங்களை அளவிட்டன - முக்கியமாக அதில் இருக்கும் மின்சாரத்தின் ஆற்றல் ஆய்வு செய்யப்பட்டது.
உலோக முடிச்சுகளில் இருந்த மின் சக்தி, ஒரு பொதுவான AA-அளவிலான பேட்டரியில் உள்ள மின்னழுத்தத்திற்கு கிட்டத்தட்ட சமமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
அதன்படி, கடலின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் முடிச்சுகள் கடல்நீரின் மூலக்கூறுகளை பிளவுபடுத்தும் அல்லது மின்னாற்பகுப்பு (electrolyse) செய்யும் அளவுக்கு பெரிய மின்சாரத்தை உருவாக்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சுரங்க நிறுவனங்களின் அபாயகரமான முயற்சி
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, ஒளி மற்றும் உயிரியல் செயல்முறையில் தேவை இல்லாமல், பேட்டரி மூலம் நிகழும் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்முறை, நிலவு மற்றும் வேறு கிரகங்களிலும் நிகழ வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்கையில், உயிர்கள் செழிக்கக் கூடிய ஆக்ஸிஜன் நிறைந்த சூழல் அங்கு உருவாகும்.
`இருண்ட ஆக்ஸிஜன்’ கண்டுபிடிப்பு கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலத்தில் நிகழ்ந்தது.
`கிளாரியன்-கிளிப்பர்டன்’ மண்டலம் (Clarion-Clipperton Zone) என்பது பசிபிக் பெருங்கடலின் சுற்றுச்சூழல் மேலாண்மைப் பகுதியாகும். இது சர்வதேச கடற்பரப்பு ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த பகுதி ஏற்கனவே பல கடற்பரப்பு சுரங்க நிறுவனங்களால் ஆராயப்பட்டு வரும் ஒரு தளமாக உள்ளது. அந்த நிறுவனங்கள் உலோக முடிச்சுகளை சேகரித்து மேற்பரப்பில் ஒரு கப்பலுக்கு கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன.
அமெரிக்க தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகம், "கடற்பரப்பு சுரங்கம், இந்த பகுதிகளில் உள்ள உயிர்கள் மற்றும் கடற்பரப்பு வாழ்விடங்களை அழிக்கும்" என எச்சரித்துள்ளது.
ஆழ்கடல் சுரங்க நடவடிக்கைகளுக்கு விஞ்ஞானிகள் எதிர்ப்பு
44 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட கடல்சார் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் அபாயங்களை எடுத்துரைக்கும் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆழ்கடலில் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். ஆழ்கடலைப் பற்றி நாம் அறிந்ததை விட சந்திரனின் மேற்பரப்பைப் பற்றி நமக்கு அதிகம் தெரியும் என்கின்றனர் சில விஞ்ஞானிகள். அந்தளவுக்கு ஆழ்கடலில் பல கண்டுப்பிடிக்கப்படாத ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன.
இந்த உலோக முடிச்சுகள் ஆழ்கடலில் இருக்கும் உயிர்கள் வாழ ஆக்ஸிஜனை வழங்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
எடின்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர், பேராசிரியர் முர்ரே ராபர்ட்ஸ், கடலுக்கு அடியில் சுரங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிரான மனுவில் கையெழுத்திட்ட விஞ்ஞானிகளில் ஒருவர்.
"ஆழ்கடல் உலோக முடிச்சுகளை அகற்றுவது நம்மால் புரிந்து கொள்ள முடியாத சுற்றுச்சூழல் அமைப்புகளை அழித்துவிடும் என்பதற்கு ஏற்கனவே ஏராளமான சான்றுகள் உள்ளன" என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.
"இந்த கடற்பரப்பு நமது கிரகத்தின் மிகப் பெரிய பகுதிகளை உள்ளடக்கியிருப்பதால், அவை ஆக்ஸிஜன் உற்பத்தியின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக இருக்கலாம் என்பதை அறிந்தப் பின்னரும் ஆழ்கடல் சுரங்கத்தை முன்னெடுப்பது பைத்தியக்காரத்தனமாக இருக்கும்." என்றார்.
பேராசிரியர் ஸ்வீட்மேன் மேலும் கூறுகையில்: "இந்த ஆய்வை நான் சுரங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒன்றாக பார்க்கவில்லை. நாம் ஆழ்கடலை இன்னும் விரிவாக ஆராய வேண்டும், ஆழ்கடலுக்குச் சென்று மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் சுரங்க நடவடிக்கைகள் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)