இலங்கை போலீஸ் மாஅதிபர் பணியாற்ற உயர்நீதிமன்றம் தடை - ஜனாதிபதி தேர்தல் நடப்பதில் சிக்கலா?

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் காலம் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் நடத்துவது தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன.

தேர்தலைத் தாமதப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்ற பின்னணியில், உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

போலீஸ் திணைக்களம், அரச அச்சகத் திணைக்களம் மற்றும் தபால் திணைக்களம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தரப்பினருடன் தேர்தல் ஆணைக்குழு அண்மையில் விசேஷ சந்திப்புக்களை நடத்தியிருந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான தேதி நாளை (ஜூலை 26) அறிவிக்கப்பட்டு, அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ ஆகியோர் அதிகாரபூர்வமாக இன்று (ஜூலை 25) அறிவித்தனர்.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஒன்றிணைந்து, தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் அண்மையில் கையொப்பமிட்டிருந்தனர்.

போலீஸ் மாஅதிபருக்கு இடைக்காலத் தடை

தேசபந்து தென்னக்கோன், போலீஸ் மாஅதிபராகக் கடமையாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் நேற்று (ஜூலை 24) இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

இதன்படி, போலீஸ் மாஅதிபராகக் கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோனுக்கான இடைகாலத் தடையுத்தரவு அமலிலுள்ள காலப் பகுதியில், அந்தப் பதவிக்குச் சட்ட ரீதியாகத் தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளது.

முன்னாள் போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவின் ஓய்வையடுத்து, பிரதி போலீஸ் மாஅதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் பதில் போலீஸ் மாஅதிபராக 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

எனினும், இலங்கையில் 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமை தொடர்பில் தேசபந்து தென்னக்கோனிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தமை மற்றும் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றில் உயர்நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்திருந்தமை ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு தரப்பினர் அவரது நியமனத்திற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், போலீஸ் மாஅதிபர் பதவிக்கு தேசபந்து தென்னக்கோனின் பெயர் அரசியலமைப்புச் சபைக்குப் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், அவரது பெயர் தெரிவு செய்யப்பட்ட விதம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

அரசியலமைப்பு சபையில் ஒன்பது அங்கத்தவர்கள் அங்கம் வகிப்பதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது அவர்களில் ஐந்து பேரின் அனுமதி அவசியம் என கூறப்படுகின்றது.

அரசியலமைப்புச் சபையின் தலைவராகச் சபாநாயகர் செயற்படுவதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது வாக்குகள் சமமாகும் பட்சத்தில் மாத்திரமே சபாநாயகரினால் தனது வாக்கை அளிக்க முடியும்.

இந்த நிலையில், போலீஸ் மாஅதிபர் தெரிவின் போது அரசியலமைப்பு சபையின் 4 பேர் தேசபந்து தென்னக்கோனுக்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் வாக்களித்திருந்ததுடன், எஞ்சிய இருவர் வாக்களிக்காதிருந்தனர்.

வாக்களிக்காத இருவரது வாக்குகளும் எதிராக அளிக்கப்பட்ட வாக்கு எனக் கருதி, சபாநாயகர் தனது வாக்கை ஆதரவாக அளித்த நிலையில், தேசபந்து தென்னக்கோனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போலீஸ் மாஅதிபராக நியமித்தார்.

இந்தச் செயற்பாடானது, அரசியலமைப்பை மீறிய செயற்பாடு என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

'தேசபந்து தென்னக்கோனின் நியமனம் தவறானது'

தேசபந்து தென்னக்கோனை போலீஸ் மாஅதிபராக நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தைச் செலுப்படியற்றதாகுமாறு கோரி, கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை உள்ளிட்டோரினால் 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

இதன்படி, யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி சார்பில் சட்ட மாஅதிபர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதன்படி, பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள தேசபந்து தென்னக்கோன், போலீஸ் மாஅதிபராகச் செயற்படுகின்றமை, அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றமை மற்றும் கடமைகளில் ஈடுபடுகின்றமையை இடைநிறுத்தும் வகையில் உயர்நீதிமன்றத்தினால் இடைகாலத் தடை விதிக்கப்பட்டது.

இந்த இடைகாலத் தடையுத்தரவு அமலிலுள்ள காலப் பகுதியில் பதில் போலீஸ் மாஅதிபராக ஒருவரை, சட்டத்திற்குட்டவாறு நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அவசர அமைச்சரவைக் கூட்டம்

உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் அவசர அமைச்சரவை கூட்டமொன்றை கூட்டியிருந்தார்.

போலீஸ் மாஅதிபர் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, சட்ட விடயங்களை ஆழமாக ஆராய்ந்து, எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் அமைச்சரவையில் பதிலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசியலமைப்பில் இடமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ளதாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு போலீஸ் மாஅதிபர் இன்றி, இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலொன்றை நடத்தும்போது பொதுமக்களின் பாதுகாப்பு போலீஸார் வசமுள்ளது எனவும், போலீஸ் மாஅதிபர் இன்றி தேர்தலை அறிவிக்க முடியாது எனவும் ஜனாதிபதி அமைச்சரவையில் கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்து இந்த விடயங்கள் குறித்து ஆராய வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, தெரிவுக்குழு விஷயங்களை ஆராய்ந்து முடிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட முடியாது என கூறியுள்ளதாக இலங்கை பத்திரிகை செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில், குறித்த விஷயம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அரசியலமைப்புச் சபை நாளை (ஜூலை 26) அவசரமாகக் கூடுகின்றது.

தேர்தல் ஆணைக்குழு சொல்வது என்ன?

பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

''பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவர் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படுவார். அவ்வாறு நியமிக்கப்படும் பதில் போலீஸ் மாஅதிபருடன் இணைந்து கடமைகளை முன்னெடுப்போம்," என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?

போலீஸ் மாஅதிபர் இன்றி, பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் என இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

"போலீஸ் மாஅதிபர் இன்றி தேர்தலை நடத்த முடியாது எனக் கூற முடியாது. பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்குமாறு உயர்நீதிமன்றம், ஜனாதிபதிக்கு தெளிவாக கூறியுள்ளது. தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமைக்கு அமைய, தகுதியான ஒருவரை நியமிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தலை வழமை போன்று கட்டாயம் நடத்த வேண்டும்," என இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா குறிப்பிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)