ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுவீச்சில் உயிர் தப்பியவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்?

    • எழுதியவர், லூசி வாலிஸ்
    • பதவி, பிபிசி செய்தி

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

அன்றைய நாள் காலை…

ஏற்கனவே வெப்பம் சற்றே அதிகரித்திருந்தது. சியேகோ கிரியாக்கே (Chieko Kiriake) தன் நெற்றியில் வழிந்து கொண்டிருந்த வியர்வையை துடைத்தபடி, ஒரு நிழலான பகுதியை தேடித் கொண்டிருந்த போது, தொலைவில் மிகப் பிரகாசமான ஒளி தோன்றியது. 15 வயதே நிரம்பிய சியோகோ அதற்கு முன் அப்படியொரு காட்சியைக் கண்டதில்லை.

அப்போது நேரம் 8:15, நாள் ஆகஸ்ட் 6, 1945.

‘சூரியன் கீழே விழுவது போல நான் உணர்ந்தேன், எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது’ என அந்த நிகழ்வை நினைவுகூர்கிறார் சியோகோ.

அவர் வசித்து வந்த ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அப்போது தான் அணுகுண்டை வீசியிருந்தது. போர்க்களத்தில் முதல் முறையாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது அப்போது தான். அந்தசமயம் ஜெர்மனி ஐரோப்பியாவில் சரணடைந்து இருந்தது. இரண்டாம் உலகப்போரில் நேசநாட்டுப் படைகள் ஜப்பானுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

சியோகோ அப்போது படித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரைப் போன்ற மூத்த மாணவர்கள் போர் காலகட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்தனர்.

குண்டுவீச்சில் காயம்பட்ட சக நண்பரை தனது முதுகில் தூக்கிக்கொண்டு தள்ளாடியபடி பள்ளிக்கு அழைத்து சென்றார். பெரும்பாலான மாணவர்கள் மோசமான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வகுப்பறையில் எண்ணெயைத் தடவி காயங்களுக்கு சிகிச்சை அளித்தார் சியோகோ.

‘அச்சமயம் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க எங்களிடம் இருந்தது அது மட்டுமே. ஒருவரை அடுத்து மற்றொருவர் கண் முன்னே மாண்டனர்’ என கூறுகிறார் சியோகோ.

‘எங்களை போன்ற மூத்த மாணவர்களை அழைத்து ஆசிரியர்கள் விளையாட்டு மைதானத்தில் குழி தோண்டுமாறு கூறினர். அங்கே, எங்கள் கைகளால் உயிரிழந்த மாணவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்தோம். நான் அதை மிகவும் சோகமாக உணர்ந்தேன்.’ என்கிறார்.

சியோகோவுக்கு இப்போது 94 வயதாகிறது. ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு ஏறத்தாழ 80 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஜப்பானில் ஹிபாகுஷா (Hibakusha) என்றழைக்கப்படும் உயிர் பிழைத்த இவர்கள், தங்கள் வாழ்நாளின் கடைசிப் பகுதியில் உள்ளனர்.

அணுகுண்டு தாக்குதல் காரணமாக நிறைய பேர் உடல்நல குறைபாடுகளுடனும், சிலர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். இப்போது, இவர்கள் பிபிசி டூ ஆவணப்படத்திற்காக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், எதிர்கால சந்ததியருக்கு எச்சரிக்கையாக அமையும் வகையில் தங்களது கடந்த காலத்தை ஆவணப்படுத்துகிறார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அந்த துயரமான நிகழ்வுக்கு பிறகு, நகரில் ஒரு புதிய வாழ்க்கை துவங்கியது என்கிறார் சியோகோ.

புற்கள் வளர 75 ஆண்டுகள் ஆகும் என மக்கள் பேசிக் கொண்டதாக கூறிய சியோகோ, ‘அடுத்த ஆண்டே பறவைகள் ஊருக்கு திரும்பின’ என்றார்.

தனது வாழ்நாளில் நிறைய முறை மரணத்தின் விளிம்பை அடைந்துள்ளேன் என்று கூறும் சியோகோ, அவரது உயிரை ஏதோ ஒரு பெரிய சக்தி காப்பாற்றுகிறது என நம்புவதாக கூறுகிறார்.

இன்று உயிருடன் வாழும் பெரும்பாலான ஹிபாகுஷாக்கள், அணுகுண்டு வீச்சு தாக்குதலின் போது குழந்தைகளாக இருந்தவர்கள். ஜப்பானிய மொழியில் ஹிபாகுஷா என்ற வார்த்தைக்கு ‘வெடிகுண்டால் பாதிக்கப்பட்ட மக்கள்’ என பொருள் அறியப்படுகிறது. இப்போது இவர்கள் வயது முதிர்ந்தவர்களாக உள்ளனர்.

இப்போது உலகளாவிய மோதல்கள் தீவிரமாகி உள்ளன. முன்னெப்போதையும் விட, இக்காலத்தில் அணுகுண்டு தாக்குதல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இவர்கள் உணர்கின்றனர்.

‘யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு, இஸ்ரேல் - ஹமாஸ் போர் போன்ற உலகளாவிய மோதல்களை காண்கையில், என் உடம்பு நடுங்குகிறது, கண்ணீர் வழிகிறது’ என்கிறார் 86 வயதான மிச்சிகோ கொடாமா (Michiko Kodama).

‘மீண்டும் ஒரு அணுகுண்டு தாக்குதல் நடக்க நாம் அனுமதிக்க கூடாது. இப்போது அதற்கான நெருக்கடி உருவாகி இருப்பதாக உணர்கிறேன்’ என்கிறார் அவர்.

மிச்சிகோ அணு ஆயுதத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருபவர். தனது பிரசாரத்தால் உயிரிழந்தவர்களின் குரல்கள் கேட்கப்படும் என்கிறார். இதுகுறித்த சாட்சியங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்படும் என்கிறார்.

‘நேரடியாக அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹிபாகுஷா-க்களிடம் இருந்து அவர்கள் அனுபவத்தை கேட்டறிய வேண்டியது அவசியம் என நினைக்கிறன்’ என்கிறார் இவர்.

ஹிரோஷிமாவில் அணுகுண்டு தாக்குதல் நடந்த போது மிச்சிகோ பள்ளி பயின்று வந்த 7 வயது சிறுமி ஆவார்.

‘என் வகுப்பின் ஜன்னல் வழியாக, கடுமையான ஒளி எங்களை நோக்கி வேகமாக நெருங்குவதை கண்டேன். அது மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளி நிறத்தில் இருந்தது.’ என்றார் அவர்.

ஜன்னல்கள் வெடித்து சிதறியது, வகுப்பறை முழுவதும் பிளவுபட்டது, குப்பை குவியல்கள் எல்லா பக்கமும் தூவலாக பரவியது, சுவர், மேசை மற்றும் நாற்காலிகள் கூர்மையான குத்துவது போல சிதறி கிடந்தன, என்று தனது அனுபவத்தை விவரிக்கிறார் மிச்சிகோ.

‘மேற்கூரை விரிசல் விட்டு கீழே விழுந்தது. நான் எனது மேசைக்கு கீழே மறைந்து கொண்டேன்.’

குண்டு வெடிப்புக்கு பிறகு, முற்றிலும் சேதமடைந்த வகுப்பறையைக் கண்டார். எங்கு பார்த்தாலும், கைகளும், கால்களும் சிக்கிக் கிடப்பதை காண முடிந்தது.

‘நான் வகுப்பறையில் இருந்து தாழ்வாரம் பகுதிக்கு ஊர்ந்து சென்றேன். என் நண்பர்கள் அனைவரும் ‘உதவுமாறு’ கேட்டனர்’ என்று அவர் கூறினார்.

பிறகு, மிச்சிகோவின் தந்தை வந்து இவரை வீட்டுக்கு தூக்கி சென்றதாக மிச்சிகோ கூறினார்.

வானில் இருந்து சேறு போன்ற ஒரு கருப்பு மழை பொழிவது போல் காட்சியளித்தது எனும் மிச்சிகோ. ‘அது கதிர்வீச்சு பொருட்கள் மற்றும் அணுகுண்டு வெடிப்பு மிச்சங்களின் கலவை’ என்கிறார்.

அன்றைய தினம் வீடு திரும்பிய பயணத்தை மறக்கவே முடியாது என்கிறார் இவர்.

‘அது நரகம் போன்ற காட்சி’ என்று கூறும் மிச்சிகோ. ‘எங்களை கடந்து தப்பியோடிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்களின் உடைகள் முழுவதுமாக எரிந்திருந்தன, அவர்களின் சதைகள் உருகிக் கொண்டிருந்தன.

அன்று தான் கண்ட ஒரு சிறுமியை பற்றி நினைவுகூர்ந்த மிச்சிகோ, ‘தன் சம வயது நிரம்பிய அந்த சிறுமியின் உடல் மிக மோசமாக எரிந்திருந்தது’ என்கிறார்.

‘அந்த சிறுமியின் கண்கள் அகண்டு விரிந்திருந்தன. அந்த கண்கள் இன்றும் என்னை துளைப்பது போல உணர்கிறேன். என்னால் அவளை மறக்க முடியவில்லை. 78 ஆண்டுகள் கழிந்த பிறகும், அந்த சிறுமியின் நினைவு என் உடலையும்,. மனதையும் பாதிக்கிறது.’ என்கிறார் மிச்சிகோ.

ஒருவேளை மிச்சிகோவும் அவரது குடும்பத்தாரும், அச்சமயம் அவர்களது பழைய வீட்டில் வசித்திருந்தால், உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். குண்டு வெடித்த இடத்தில் இருந்து அந்த வீடு வெறும் 350 மீட்டர் தொலைவில் தான் அமைந்திருந்தது. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு 20 நாட்களுக்கு முன்னர் தான் சில கிலோமீட்டர் தூரம் தள்ளி அவர்கள் வேறு வீட்டுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். அது தான் அவர்கள் குடும்பத்தை காப்பாற்றியது.

1945 இன் இறுதியில் ஹிரோஷிமாவில் தோராயமாக 1,40,000 பேர் இச்சம்பவத்தால் உயிர் இழந்ததாக கூறப்பட்டது.

மூன்று நாளுக்கு பிறகு நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு தாக்குதல் காரணமாக 74,000 பேர் உயிர் இழந்தனர்.

நாகசாகியில் அணுகுண்டு வெடித்த மையப்பகுதியில் இருந்து வெறும் 2 கிலோ மீட்டர் தொலைவில் வசித்து வந்தவர் தான் சூய்ச்சி கிடோ (Sueichi Kido). அப்போது இவரது வயது 5. இவர் முகம் முழுக்க தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அணுகுண்டு தாக்குதலின் முழு தாக்கத்தில் இருந்து இவரை பாதுகாத்த, சூய்ச்சியின் தாய் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டார்.

‘ஹிபாகுஷாக்களாகிய நாங்கள், எங்களை போல வேறு எந்த ஹிபாகுஷாவும் உருவாகாமல் பாதுகாக்கும் எங்கள் பணியில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம்’ என்கிறார் 83 வயதான சூய்ச்சி. இவர் சமீபத்தில் நியூயார்க் பயணம் மேற்கொண்டு அணு ஆயுதங்களின் ஆபத்துகள் குறித்து எச்சரிக்க ஐநா சபையில் உரையாற்றினார்

அணுகுண்டு தாக்குதலின் தாக்கத்தில் மயங்கிய இவர், எழுந்து பார்த்த போது, அங்க அருகில் ஒரு சிவப்பு நிற எண்ணெய் கேன் இருந்தது, அது தான் இவ்வளவு பெரிய வெடிப்புக்கும், சுற்றிலும் ஏற்பட்ட நாச செயலுக்கும் காரணம் என சில வருடங்கள் இவர் எண்ணியுள்ளார்.

அது அணுஆயுத தாக்குதல் என்ற உண்மையில் இருந்து இவரை பாதுகாக்க இவரது பெற்றோரும் இவருக்கு தெளிவான விளக்கம் அளிக்க விரும்பவில்லை. அவர் இதுபற்றி பேசிய போதெல்லாம் கண்ணீர் சிந்தியுள்ளனர்.

இந்த வெடிப்பின் மூலம் ஏற்பட்ட எல்லா காயங்களும் உடனே தென்பட்டவை இல்லை. சிலர் வாரங்கள் கழித்தும், மாதங்கள் கழித்தும் கதிர்வீச்சு நச்சு காரணத்தினாலான அறிகுறிகளை கண்டறிய துவங்கினர். இதனால் புற்றுநோய் பாதிப்பு அளவு அதிகரித்தது.

நிறைய ஆண்டுகள் தப்பி பிழைத்தவர்கள் சமூகத்தில் பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. குறிப்பாக, இல்லற துணை தேடுகையில் பாகுபாட்டை சந்தித்தனர்.

‘நம் குடும்பத்தில் ஹிபாகுஷா இரத்தம் நுழைய விரும்பவில்லை’ என தன்னிடம் கூறப்பட்டதாக மிச்சிகோ கூறுகிறார்.

பின்னாளில் இவர் திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளும் பெற்றார்.

இவரது தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் புற்றுநோயால் இறந்தனர். இவரது மகள் நோய் காரணமாக 2011 இல் இறந்தார்.

நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் தப்பி பிழைத்த மற்றொரு நபரான கியோமி இகுரோவின் (Kiyomi Iguro) வயது அப்போது 19. தூரத்து உறவினர் ஒருவருடன் திருமணமாகி, கருச்சிதைவு உண்டான போது, அவரது மாமியார் அதற்கு அணுகுண்டு தாக்குதலின் தாக்கம் தான் காரணம் என்று கூறியதாக குறிப்பிடுகிறார்.

‘உன் எதிர்காலம் மிக மோசமானது’ என்று அவர் கூறியதாக கியோமி தெரிவிக்கிறார்.

நீ அணுகுண்டு தாக்குதலை எதிர்கொண்டது பற்றி அண்டை வீட்டாரிடம் பேச வேண்டாம் என்று மாமியார் அறிவுறுத்தியதாக கியோமி கூறுகிறார்.

நேர்காணல் கண்ட பிறகு கியோமி மரணமடைந்தது பரிதாபத்திற்குரியது.

ஆனால், தனது 98வது வயது வரை, நாகசாகியின் அமைதி பூங்கா எனும் இடத்திற்கு சென்று, அணுகுண்டு நகரில் வெடித்த 11:02 மணியளவில் அங்கிருந்த மணியை அடித்து, அமைதிக்காக வேண்டுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

சூய்ச்சி, பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய வரலாற்றைக் கற்பித்து வந்தார். இவர் ஒரு ஹிபாகுஷா என அறிந்ததும் தன் மீது நிழல் போன்ற ஒரு அடையாளம் படியத் துவங்கியது என்கிறார். ஆனால், பின்னர், தான் ஒரு சாதாரண மனிதன் அல்ல என்பதை உணர்ந்து, மனித குலத்தை காப்பாற்றுவது பற்றி பேசுவதை தனது கடமையாக உணர்ந்ததாக கூறினார்.

‘நான் ஒரு சிறப்பான நபர் என்ற உணர்வு தனக்குள் பிறந்தது’ என்கிறார் சூய்ச்சி.

ஹிபாகுஷாக்கள் அனைவரும் உறுதியோடு கூறுவதில் ஒரு விஷயம் மட்டும் பொதுவாக இருக்கிறது. அது என்னவெனில், கடந்தகாலம், நிகழ்காலம் ஆகிவிட கூடாது என்பது தான்.

Atomic People எனும் இந்நிகழ்ச்சி வரும் ஜூலை 31 ஆம் தேதி பிபிசி 2 மற்றும் பிபிசி ஐபிளேயர்-இல் ஒளிபரப்பாகும்.

ஒருவேளை நீங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஏதேனும் நிகழ்வினால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கான உதவி மற்றும் அறிவுரை BBC Action Line இல் கிடைக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)