நடன இயக்குனர் ஜானி மீது பாலியல் குற்றச்சாட்டு - எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

    • எழுதியவர், பி. நவீன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்ற ஷேக் ஜானி பாஷா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜானி மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்து வந்த 21 வயது பெண் ஒருவர், அவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்தனர்.

ஜானி தெலுங்கு, தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றுகிறார்.

தற்போது புகார் அளித்துள்ள இளம்பெண்ணுக்கு ஜானி மாஸ்டருடன் 2017-ஆம் ஆண்டு அறிமுகம் ஏற்பட்டது.

அதன் பிறகு 2019 இல், அவர் ஜானியின் குழுவில் உதவி நடன இயக்குனராக சேர்ந்தார்.

படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்தபோது, ​​ஜானி ஒரு ஹோட்டலில் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண் ராயதுர்கம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) புகார் அளித்தார்.

போலீசார் ஜீரோ எஃப்.ஐ.ஆர் (இந்தியாவில் உள்ள எந்த காவல் நிலையத்திலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது) பதிவு செய்து, வழக்கை நரசிங்கி காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

‘ஜானி மாஸ்டரின் மனைவியும் அச்சுறுத்தினார்’

படப்பிடிப்பிற்காக மும்பை சென்றபோது ஜானி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக போலீசார் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்.

“இதை யாரிடமாவது சொன்னால், உதவி நடன இயக்குனர் பணியில் இருந்து நீக்கிவிடுவதாகவும், சினிமா துறையில் பணியாற்ற முடியாது என்றும் ஜானி மிரட்டினார். அதன் பிறகு ஜானி அவரை பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்தார். படப்பிடிப்பு தளத்தில் ஜானி அப்பெண்ணை வலுக்கட்டாயமாக கேரவனுக்குள் ஏற்றுவது வழக்கம். சம்மதிக்கவில்லை என்றால், படப்பிடிப்பில் உள்ள அனைவரின் முன்னிலையிலும் அவதூறாக பேசி, அநாகரீகமாக தொடுவார்” என, பாதிக்கப்பட்ட பெண் கூறியதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜானி பாதிக்கப்பட்ட பெண்ணை மதம் மாறி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நாட்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் ஜானி மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராகப் பணிபுரிவதை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் வேலை செய்து வருவதாக எஃப்.ஐ.ஆர் குறிப்பிடுகிறது.

வேலையிலிருந்து நின்றுவிட்டாலும், ஜானி தன் மனைவியுடன் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று சண்டையிட்டு, மதம் மாறுமாறு மிரட்டியதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜானி மாஸ்டரின் மனைவி அப்பெண்ணை பலமுறை அடித்ததாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஆகஸ்ட் 28 அன்று, பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு சந்தேகத்திற்கிடமான பார்சல் வந்தது, அதில் 'மிகவும் கவனமாக இருங்கள்' என்று எழுதப்பட்டிருந்ததாக” எஃப்ஐஆர் தெரிவிக்கிறது.

விரைவான விசாரணை

டோலிவுட் பாலியல் துன்புறுத்தல் நிவர்த்தி குழு (Tollywood Sexual Harassment Redressal Panel) செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.

பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்த காலகட்டத்தில் அப்பெண் 18 வயதுக்குட்பட்டவர் என்றும் அவருக்கு சட்ட உதவி தேவை என்றும் அக்குழு உறுப்பினர் ஜான்சி கூறினார்.

"பாதிக்கப்பட்ட பெண் முதலில் பணியிடத்தில் தனக்கு துன்புறுத்தல் ஏற்பட்டது என்று கூறி இக்குழுவை அணுகினார்” என்றார் அவர்.

“இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தது தெரியவந்தது. இந்த பிரச்னையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டோம்.

எங்கள் அதிகார எல்லைக்குள் விசாரணையை முடித்துவிட்டோம். இந்த சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை 90 நாட்களுக்குள் தெரிவிப்போம்.

தெலுங்கு திரையுலகில் பணிபுரியும் எந்தப் பெண்ணும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் புகார் அளிக்க தைரியம் வேண்டும். புகார் அளிப்பவர்களின் விவரங்களை நாங்கள் ரகசியமாக வைத்திருப்போம்" என்று ஜான்சி கூறினார்.

இதுபோன்ற பிரச்னைகளுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், 90 நாட்களுக்குள் தீர்வு காண்பதாகவும் மூத்த இயக்குனர் தம்மாரெட்டி பரத்வாஜா கூறினார்.

ஜனசேனாவின் உத்தரவு

சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா கட்சிக்காக ஜானி பணியாற்றினார்.

ஆனால், தற்போது அவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருக்குமாறு ஜனசேனா உத்தரவிட்டுள்ளது.

இந்த முடிவு உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜானி இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில், ஜானி மற்றும் அவரது குடும்பத்தினருடன் 'பிபிசி தெலுங்கு' பேச முயன்றது.

ஜானி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் போன் செய்தும் குறுஞ்செய்தி அனுப்பியும் இதுவரை பதில் வரவில்லை.

அவர்களிடமிருந்து பதில் கிடைத்தால், இந்தக் கட்டுரையில் விவரங்களைச் சேர்ப்போம்.

சின்மயி பதிவு

"ஜானி பாதிக்கப்பட்ட பெண் சிறுமியாக காலத்திலிருந்தே பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யத் தொடங்கியதாக வெளிவரும் தகவல்களிலிருந்து புரிகிறது. இந்த கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள அப்பெண்ணுக்கு பலம் கிடைக்கட்டும்" என்று பாடகி சின்மயி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

“குற்றம் சாட்டப்பட்ட ஷேக் ஜானியை ‘மாஸ்டர்’ என்று சொல்வது சரியல்ல, ‘மாஸ்டர்’ என்ற வார்த்தைக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள்” என்று நடிகை பூனம் கவுர் கூறியுள்ளார் .

நடன இயக்குநர் ஜானி, தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். திருச்சிற்றம்பலம், டாக்டர், ஜெயிலர், பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)