You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டைட்டானிக்: டைட்டன் நீர்மூழ்கியில் கிடைத்த கடைசி தகவல் என்ன? விபத்து எப்படி நடந்தது?
- எழுதியவர், சாம் கப்ரால்
- பதவி, பிபிசி செய்தியாளர்
டைட்டன் நீர்மூழ்கியில் இருந்த குழுவினர் கடைசியாக வெளியிட்ட தகவல் என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது.
டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு, விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக வெளியிட்ட இறுதிச் செய்திகளில் ஒன்று, "இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது" என்பதுதான். இது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க கடலோரக் காவல் படையின் ஆய்வாளர்கள், டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலுக்கும் (mother ship) இடையிலான இறுதி தகவல் தொடர்புகளில் ஒன்றாக இந்த செய்தி இருந்ததாகக் கூறினர்.
டைட்டன் நீர்மூழ்கியின் உள்ளே இருந்து வெடிப்பு (implosion) நிகழ்ந்ததைத் தொடர்ந்து டைட்டனின் பின்புற வால் கூம்புப் பகுதி கடல் அடி மட்டத்தில் தங்கியது. இந்தப் படங்கள் முதல்முறையாக ஆய்விற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் மூலம் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன.
ஆய்வாளர்கள் மேற்கொண்ட விசாரணை
டைட்டானிக் கப்பல் 111 ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலைப் பற்றி ஆய்வு செய்வதற்காக டைட்டன் நீர்மூழ்கி கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டது. டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை நெருங்குவதற்கு இரண்டு மணிநேரம் இருந்த நிலையில் கடலின் உள்ளேயே அது விபத்துக்குள்ளானது.
கடலோர காவல்படை அதிகாரிகள் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 16) இதற்காக இரண்டு வார கால ஆய்வைத் தொடங்கினர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், எதிர்காலத்தில் இதேபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பரிந்துரைகளை வழங்கவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆய்வுக்காக இதேபோன்ற நீர்மூழ்கியின் பயணத்தை ஆய்வாளர்கள் மறுபடியும் மேற்கொண்டனர். டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலான போலார் பிரின்ஸ்க்கும் இடையில் பரிமாறப்பட்ட குறுஞ்செய்திகளையும் வெளியிட்டனர்.
டைட்டன் நீர்மூழ்கி உள்ளூர் நேரப்படி 09:17க்கு ஆழ்கடல் நோக்கி பயணிக்கத் தொடங்கியது. மூலக்கப்பலில் இருந்த உதவிப் பணியாளர்கள் நீர்மூழ்கியின் ஆழம், எடை, மூலக் கப்பலைப் பார்க்க முடிகிறதா போன்றவற்றைக் கண்காணித்து வந்தனர்.
முதலில் தகவல் தொடர்புகள் மோசமாக இருந்தன. ஆனால் சுமார் ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, டைட்டன் "இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது" என்று செய்தி அனுப்பியது.
அதன் கடைசி செய்தி, உள்ளூர் நேரப்படி 10:47க்கு, 3,346மீ ஆழத்தில் இருக்கும்போது வந்தது. அதன்பின், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
டைட்டன் நீர்மூழ்கி பற்றிய கண்டுபிடிப்புகள்
டைட்டனை பற்றிய அவர்களின் கண்டுபிடிப்புகளை முன்வைத்தனர். அது பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், திறந்த வானிலை மற்றும் பிற கூறுகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு இருந்தது என்றும், அதன் பாகங்கள் மூன்றாம் தரப்பினரின் சோதனைக்கு உள்ளாகவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த விபத்துக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பயணங்களில், இதுபோன்ற நீர்மூழ்கிகள் எதிர்கொண்ட கடுமையான சிக்கல்களையும் அவர்கள் குறிப்பிட்டனர். 2021, 2022 ஆகிய ஆண்டுகளில், டைட்டானிக் இடிபாடுகளை நோக்கி நீர்மூழ்கி 13 முறை பயணித்தது. அப்போது 118 முறை உபகரணங்களில் சிக்கல்கள் ஏற்பட்டது.
ஒரு பயணத்தின்போது, கடலில் இருந்து வெளியே கொண்டு வருகையில் நீர்மூழ்கியின் முன் பகுதி கடல் அடிமட்டத்தில் விழுந்தது. 3,500 மீட்டர் ஆழத்தில் அதன் த்ரஸ்டர்கள் (thrusters) செயலிழந்தன. மற்றொரு பயணத்தின்போது அதன் பேட்டரிகள் செயலிழந்து 27 மணிநேரம் அதில் பயணித்தவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
இதை உற்பத்தி செய்த ஓஷன் கேட் (OceanGate) நிறுவனம், ஒரு நீர்மூழ்கியைத் தயாரிக்க மேற்கொள்ளும் வடிவமைப்புத் தேர்வுகள், பாதுகாப்புத் திறன் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவது குறித்து முன்பு சிக்கல்களைச் சந்தித்திருக்கிறது.
ஓஷன் கேட் நிறுவனம்தான் இதற்கு காரணமா?
நிறுவனத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநர் டோனி நிசென், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் "தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தன்னைக் கஷ்டப்படுத்தியதாக" கூறினார்.
டைட்டனில் பயணித்த ஓஷன் கேட் நிறுவனத்தின் மறைந்த தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பெரும்பாலான பொறியியல் முடிவுகளை எடுத்ததாக நிசென் கூறினார். அவருடன் பணிபுரிவது கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ஸ்டாக்டன் தான் விரும்பியதை நிறைவேற்றப் போராடுவார், என்ன நடந்தாலும் அதில் இருந்து பின்வாங்கமாட்டார்” என்று அவர் கூறினார்.
"பெரும்பான்மையான ஊழியர்கள் எப்போதும் ஸ்டாக்டன் சொல்வதை ஒப்புக்கொள்வார்கள்; அது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளுக்கு வழிவகுக்கும்."
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஓஷன் கேட் நிறுவனம், தான் நடத்திய அனைத்து ஆய்வு மற்றும் வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியது. நிறுவனத்தில் தற்போது முழுநேர ஊழியர்கள் இல்லை, ஆனால் விசாரணைக்கு ஒரு வழக்கறிஞர் ஒத்துழைப்பார் என்று அது கூறியது.
ஏற்கெனவே நடந்த 15 மாத விசாரணையின் முதல் பொது விசாரணை திங்கட்கிழமையன்று தொடங்கியது.
தனியார் நிறுவனங்கள் ஆழ்கடலில் மேற்கொள்ளும் ஆய்வுகளை ஒழுங்குபடுத்துவது பற்றிய நீடித்த விவாதத்தை டைட்டனின் விபத்து குறித்த பதிலளிக்கப்படாத கேள்விகள் எழுப்பியுள்ளன.
பத்து முன்னாள் ஓஷன்கேட் ஊழியர்கள், அதன் இணை நிறுவனர் கில்லர்மோ சோன்லீன், கடல் பாதுகாப்பு மற்றும் ஆழ்கடல் ஆய்வு நிபுணர்கள் ஆகியோரிடம் கடலோர காவல்படையின் மரைன் ஃபோர்டு ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் (எம்பிஐ) விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரைன் ஃபோர்டு ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் என்பது அமெரிக்க கடல்சார் விபத்துகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மிகவும் முக்கிய அமைப்பு. இது வருடத்திற்கு ஒரு விசாரணையை மட்டுமே நடத்துகிறது என்று அதன் தலைவர் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார்.
"இதுவரை நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான விசாரணைகளில், ஒரு வழக்கு மட்டுமே இந்த நிலையை எட்டுகிறது" என்று ஜேசன் நியூபாவர் கூறினார்.
"இந்த விசாரணையின் மூலம் இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, இது போல எதுவும் நடக்காமல் தடுக்கவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்."
உயர்மட்ட கடலோர காவல்படை மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (NTSB) அதிகாரிகளின் குழுவிற்கு, சிவில் தண்டனைகளைப் பரிந்துரைக்க அதிகாரம் உள்ளது. மேலும் கிரிமினல் வழக்குக்கான தண்டனையை அமெரிக்க நீதித்துறையிடம் பரிந்துரை செய்யவும் அதிகாரம் உள்ளது.
டைட்டன் நீர்மூழ்கி ஜூன் 18, 2023 அன்று அதன் மூலக் கப்பலான போலார் பிரின்ஸ் உடனான தொடர்பை இழந்தது. அதன் பிறகு நான்கு அரசாங்கங்கள் இதைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டன.
ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளரான ஹமிஷ் ஹார்டிங், மூத்த பிரெஞ்சு டைவர் பால் ஹென்றி நர்கோலெட், பிரிட்டிஷ்-பாகிஸ்தாதான் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது 19 வயது மகன் சுலேமான் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)