You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மூங்கில் பழங்குடிகளின் வாழ்வியலில் ஒரு அங்கமாக இருப்பது எப்படி?
- எழுதியவர், நித்யா பாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
இன்று செப்டம்பர் 18, சர்வதேச மூங்கில் தினம். சர்வதேச மூங்கில் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மூங்கிலின் பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.
அன்றாட பயன்பாடுகளில் முக்கிய அங்கம் வகிக்கும் மூங்கில்களை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகின்றனர் பழங்குடி மக்கள்.
வாழ்வாதாரத்திற்காக மட்டுமின்றி இறை வழிபாட்டிலும், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் சேமிப்புக்காகவும் மூங்கிலை அதிகமாக பழங்குடியினர் பயன்படுத்துகின்றனர்.
அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் மூங்கில்
"எங்களுடைய தாத்தா காலத்தில் தேன் முதல் தண்ணீர் வரை அனைத்தையும் மூங்கிலில்தான் சேமித்து வைப்பார்கள். டீ குடிக்கக் கூட நாங்கள் ஒரு காலத்தில் பயன்படுத்தியிருக்கிறோம்," என்று கூறுகிறார் சுந்தரி.
சுந்தரி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வசித்துவரும் சோளகர் பழங்குடியினப் பெண் ஆவார்.
சேமிப்பு மட்டுமின்றி, எங்களின் வீடுகளைக் கட்டவும், ஏணிகளை உருவாக்கவும், பரண் அமைக்கவும் கூட நாங்கள் மூங்கில் கழிகளையே அதிகம் நம்பி இருந்தோம், என்று கூறுகிறார் சுந்தரி.
காடுகளில் இருந்து எடுத்துவரப்பட்ட மூங்கில்களில் கூடைகள், பாய்கள் முடைந்து விற்பனையும் செய்துவருகின்றனர் ஒரு சில பழங்குடியினர். அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிய அளவில் உதவுகிறது என்கிறார் அவர்.
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஆராய்ச்சியாளார் திருமூர்த்தி, "மூங்கில் எங்கள் கலாசாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக எங்கள் வழிபாட்டு தளங்களில் கடவுள்களுக்கு படைக்கும் பொருட்களை மூங்கிலில் வைத்து படைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்," என்று குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமின்றி தொதவர் சமூகத்தினர் உள்ளிட்ட பழங்குடியினர் வழிபடும் தெய்வங்களின் கோவில்களை மூங்கில் கொண்டே வடிவமைக்கின்றனர், என்று அவர் கூறுகிறார்.
சமய வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் காற்றிசைக் கருவிகளும் மூங்கில் மரத்தால் ஆனவை. பீனாச்சி என்ற இசைக்கருவியை சோளகர்கள் இறைவழிபாட்டின் போது இசைக்கின்றனர் என்று தெரிவிக்கிறார் சுந்தரி.
உணவாக பயன்படும் மூங்கில்
வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் மூங்கில் பூக்கும். மூங்கிலில் இருந்து கிடைக்கும் நெல்லை பழங்குடியின மக்கள் தங்களின் உணவு தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
"மூங்கில் அரிசி மிகவும் அரிதாகதான் கிடைக்கும். அப்படி கிடைக்கும் அரிசியை நாங்கள் வேறு யாருக்கும் விற்பனை செய்வதில்லை. எங்கள் வீடுகளில் மூங்கில் அரிசியை சமைத்து மூங்கில் அரிசி சாதம் செய்வோம். சில நேரங்களில் மூங்கில் அரிசி தோசை சுடுவோம்," என்று தங்களின் உணவுப் பழக்கம் குறித்து குறிப்பிடுகிறார் சுந்தரி.
குரும்பர் பழங்குடியினர் மூங்கில் குருத்தை உணவாக உட்கொள்கின்றனர் என்று திருமூர்த்தி கூறுகிறார்.
"நாங்கள் எங்களின் பெரும்பாலான உணவுத் தேவைக்கு இயற்கையையே அதிகம் நம்பி இருக்கிறோம். மூங்கிலுக்கும் அதில் ஒரு முக்கிய இடம் உண்டு. மூங்கில் அரிசி போன்றே, மூங்கில் குருத்தும் மிகவும் ருசியானது. அதனை மற்ற காய்கறியை சமைப்பது போன்றே சிறிது சிறிதாக வெட்டி பொரியல் செய்து உண்போம்," என்று குறிப்பிடுகிறார்.
அருகி வரும் மூங்கில் காடுகள்
மூங்கில் காடுகள் பழங்குடியினத்தினருக்கு மட்டுமின்றி காடுகளும் காட்டுயிர்களும் சிறந்து விளங்குவதற்கு இன்றியமையாதது என்று கூறுகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
"சத்தியமங்கலம் பகுதியில் இன்று மூங்கில் காடுகள் இருப்பதை காண்பதே அரிதாக இருக்கிறது. அரசு பழங்குடி மக்களுடன் இணைந்து மூங்கில் காடுகளை மீளுருவாக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்," என்று கூறுகிறார் கோவையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பாரதிதாசன்.
"மூங்கில் யானைப் போன்ற உயிரினங்களுக்கு விருப்பமான உணவு. பல்வேறு தேவைகளுக்காக மூங்கில் காடுகள் அழிக்கப்பட்டது அவைகளின் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகை செய்தது. இதனால் உணவுகளைத் தேடி மனிதர்கள் வாழும் பகுதிக்கு யானைகள் வரும் நிகழ்வும் ஆரம்பமாகியது," என்று மனித-விலங்கு மோதல்கள் குறித்து விவரிக்கிறார் பாரதிதாசன்.
"மூங்கில்கள் வெட்ட வெட்ட வளரும் தன்மை கொண்டது. மீண்டும் மீண்டும் துளிர்க்கும் போது அதன் இலைகளை சாப்பிட யானைகள், கரடிகள் போன்றவை மூங்கில் காடுகளுக்கு வருகை புரியும் ''என்று தெரிவிக்கிறார் பாரதிதாசன்.
இன்று மூங்கிலுக்கான வணிகத் தேவையும் அதிகரித்து வருகிறது. வீட்டின் உள்புற வடிவமைப்புகளில் அழகிற்காக அதிகமாக மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. காடுகளில் மூங்கில்களை பாதுகாக்க தனியார் நிலங்களில் மூங்கில் வளர்க்க மக்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் பாரதிதாசன்.
2017-ஆம் ஆண்டு வரை மரமாகவே கருதப்பட்ட மூங்கில்
இந்திய வனச் சட்டம் 1927, மூங்கிலை மரமாக பட்டியலிட்டிருந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டாலும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகும் இதே சட்டம் நீடிக்க துவங்கியது.
இந்தநிலையில் 2017-ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் 1927-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு, காடு அல்லாத பகுதியில் வளரும் மூங்கிலை புல்லாக வகைப்படுத்தியது இந்திய அரசு. இருப்பினும் வனப்பகுதியில் வளரும் மூங்கில் தொடர்ந்து மரமாகவே வகைப்படுத்தப்பட்டது.
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த உதவும் மூங்கில்
உயிரி எரிசக்தி மூலப் பொருளாக மூங்கிலை பயன்படுத்தலாம் என என்று கூறுகிறது மருத்துவத்திற்கான தேசிய நூலகம் (National Library for Medicine) இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை.
2022ம் ஆண்டு Multifunctional applications of bamboo crop beyond environmental management: an Indian prospective என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
''சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவில் மூங்கிலை விவசாயம் செய்து வருகிறது. உலகில் நான்கில் ஒரு பங்கு மூங்கில் இந்தியாவில் உற்பத்தியாகிறது. அதுவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளிலும், வடகிழக்கு இந்தியாவிலும் அதிகமாக உற்பத்தியாகிறது'' என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எரிபொருள் தேவைகளுக்காக மூங்கிலைப் பயன்படுத்த இயலும் என்று கூறும் ஆய்வு, "மூங்கில் வேகமாக வளர்கிறது. கரி, உயிரிவாயு மற்றும் உயிரி எரிபொருளாக பல்வேறு எரிசக்தி தேவைப்படும் துறைகளில் மூங்கிலை பயன்படுத்த இயலும்," என்று கூறுகிறது.
கரியமில வாயுவை உறிஞ்சும் செயலிலும் முக்கிய பங்காற்றுகிறது மூங்கில். அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில், ஒரு ஹெக்டர் பரப்பளவில் உள்ள மூங்கில் காடுகள் ஆண்டுக்கு 17 டன் கரியமில வாயுவை உறிஞ்சுகிறது என்றும், உலகம் முழுவதும் 36 மில்லியன் ஹெக்டர் பரப்பில் மூங்கில் வளர்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)