இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடா? 8 கேள்வி - பதில்

இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடா? 8 கேள்வி - பதில்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரால் இந்தியாவின் சிஎன்ஜி (CNG), சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா?

உலகின் கச்சா எண்ணெய்களில் கிட்டத்தட்ட 20% ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இரான் அங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கத்தாரில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) உற்பத்தியும் நின்றுவிட்டது.

எனவே, இவை அனைத்தும் இந்தியா மற்றும் உலக நாடுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

அமெரிக்கா-இஸ்ரேல்- இரான் மோதல், இந்தியா, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு

பட மூலாதாரம், Reuters

ஹோர்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

கடந்த ஆண்டு தினமும் 20 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய், கண்டன்சேட் (condensate) மற்றும் எரிபொருள்கள் இரானுக்கு அருகில் உள்ள இந்த நீர் வழித்தடம் வழியாக கொண்டு செல்லப்பட்டன.

இரான் மட்டுமல்ல, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் இராக் ஆகிய நாடுகளும் தங்களின் பெரும்பாலான கச்சா எண்ணெயை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்கின்றன.

இந்த விநியோகத்தில் பெரும்பகுதி ஆசியாவிற்கே செல்கிறது.

அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் (US EIA) 2024-ஆம் ஆண்டு தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்பட்ட கச்சா எண்ணெயில் 84% மற்றும் எல்என்ஜியில் 83% ஆசிய சந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

இந்தப் பிராந்தியத்தில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகும்.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி), மீள் எரிவாயுவாக்கம் (திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை மீண்டும் வாயு நிலைக்கு மாற்றுவது) செய்யப்பட்டு சிஎன்ஜி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்கா-இஸ்ரேல்- இரான் மோதல், இந்தியா, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

கத்தார் ஏன் எல்என்ஜி உற்பத்தியை நிறுத்தியது?

ராஸ் லாஃபான் பகுதியில் உள்ள 'கத்தார் ஆற்றல் எல்என்ஜி' நிறுவனத்தின் ஆலையை இரானிய டிரோன்கள் தாக்கியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை, இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்என்ஜி மற்றும் இதர தயாரிப்புகளின் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய எல்என்ஜி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.

2022-ஆம் ஆண்டு வரை, ரஷ்யாதான் மிகப்பெரிய எல்என்ஜி ஏற்றுமதியாளராக இருந்தது. ஆனால் யுக்ரேன் போருக்குப் பிந்தைய தடைகளால் அதன் அளவு குறைந்தது.

இன்று, அமெரிக்கா மிகப்பெரிய எல்என்ஜி ஏற்றுமதியாளராக உள்ளது, அதனைத் தொடர்ந்து கத்தார் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளன.

உலகளவில், சீனா இயற்கை எரிவாயுவின் மிகப்பெரிய இறக்குமதியாளராக உள்ளது, மேலும் அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின்படி, அது ஆஸ்திரேலியாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

உலகளாவிய எல்என்ஜி ஏற்றுமதியில் கத்தார் 20% பங்கைக் கொண்டுள்ளது. இந்த எரிவாயுவில் பெரும்பகுதி எங்கே செல்கிறது? இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம்.

அல் ஜசீரா செய்தியின்படி, கத்தார் ஆற்றல் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 82% ஆசிய நாடுகளுக்குச் செல்கிறது.

இந்தியா உலகின் 4-வது மிகப்பெரிய எல்என்ஜி இறக்குமதியாளராக உள்ளது. கேப்ளர் தரவுகளின்படி, இந்தியாவின் எல்என்ஜி இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கு கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் இருந்து வருகிறது.

2024-இல், இந்தியாவின் மிகப்பெரிய எல்என்ஜி இறக்குமதி கத்தாரில் இருந்து வந்தது, அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அங்கோலா மற்றும் ஓமன் ஆகியவை உள்ளன.

அமெரிக்கா-இஸ்ரேல்- இரான் மோதல், இந்தியா, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இந்தியாவின் மீதான தாக்கம் என்ன?

மத்திய கிழக்கில் பதற்றம் நீண்ட காலம் தொடர்ந்தால், இந்தியா பாதிக்கப்படலாம்.

ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளது, இதன் விளைவாக எரிபொருள் இறக்குமதிக்கு இந்தியா அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும். விநியோகம் சீரற்றதாக மாறினால், சில்லறை சந்தைகளில் தட்டுப்பாடு ஏற்படலாம். பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பணவீக்கத்தைத் தூண்டி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கலாம்.

2025 பிப்ரவரியில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் பேசுகையில், இந்தியாவிடம் 74 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் கையிருப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

மார்ச் 2 அன்று, இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மத்திய கிழக்கு தொடர்பான விஷயங்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், கச்சா எண்ணெய், எல்என்ஜி மற்றும் பிற பெட்ரோலிய பொருட்கள் கிடைப்பதை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தது.

''அவசர காலங்களுக்காக இந்தியாவிடம் பெட்ரோலிய இருப்பு உள்ளது, மேலும் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களிடமும் கூடுதல் இருப்பு பராமரிக்கப்படுகிறது.'' என்று தெரிவித்துள்ளது

அமெரிக்கா-இஸ்ரேல்- இரான் மோதல், இந்தியா, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியா தனது உள்நாட்டு எண்ணெய் நுகர்வில் 90 சதவீதத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது.

கச்சா எண்ணெய் - இந்தியாவிடம் மாற்று வழிகள் உள்ளனவா?

ஆம் — ஓரளவு உள்ளன.

கடந்த சில ஆண்டுகளில், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை பல்வகைப்படுத்தியுள்ளது. ரஷ்யா-யுக்ரேன் போர் தொடங்கிய பிறகு, இந்தியா தள்ளுபடி விலையில் அதிக அளவிலான ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியது.

ஆனால் சமீபத்திய மாதங்களில், இந்தியா ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்து, மத்திய கிழக்கிலிருந்து வாங்குவதை அதிகரித்தது.

ஜனவரி 2026-இல், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 55% மத்திய கிழக்கிலிருந்து வந்தது.

அமெரிக்கா, கனடா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்தும் வாங்குவதை இந்தியா அதிகரித்தது.

ரஷ்யாவிலிருந்து இறக்குமதியை மீண்டும் அதிகரிப்பது ஒரு சாத்தியமான ஒன்றாகும். மத்திய கிழக்கு விநியோகம் பாதிக்கப்பட்டால், ரஷ்யா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இந்தியாவிற்குத் திருப்பி விடத் தயாராக இருப்பதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல்- இரான் மோதல், இந்தியா, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏன்?

போர் காரணமாக திங்கட்கிழமை ஒரே வர்த்தக அமர்வில் கச்சா எண்ணெய் விலை 23 டாலர் உயர்ந்து, ஒரு பீப்பாயின் விலை 103 டாலராக அதிகரித்தது.

எண்ணெய் விலை அதிகரித்தது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் "குறுகிய காலத்திற்கு எண்ணெய் விலை உயர்வது உலக அமைதிக்காக செலுத்த வேண்டிய சிறிய விலையே என்று குறிப்பிட்டு இருந்தார்".

ஆனால் Trading.com நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் மெக்வையர், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 150 டாலரைத் தாண்டக்கூடும் என எச்சரித்துள்ளார்.

எண்ணெய் விலைகளை கண்காணிக்கும் ஸ்பெக்டேட்டர் இன்டெக்ஸ் வெளியிட்ட தகவலின்படி, கச்சா எண்ணெய் விலை 30 சதவீதமும், பிரென்ட் கச்சா எண்ணெய் 26 சதவீதமும், ஹீட்டிங் ஆயில் 22 சதவீதம் மற்றும் பெட்ரோல் 14 சதவீதம் உயர்ந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் உள்ள எண்ணெய் கையிருப்பு எவ்வளவு?

இந்தியாவின் எண்ணெய் கையிருப்பைப் பற்றி ஆற்றல் சார்ந்து செயல்படும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

"ஹோர்முஸ் நீரிணை வழியாக தினமும் 137 கப்பல்கள் சென்ற நிலையில், கடந்த சில நாட்களில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மட்டுமே செல்ல முடிந்ததாக" பிபிசியிடம் ஆற்றல் நிபுணர் நரேந்திர தனேஜா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தெற்காசிய நாடுகள் இந்தப் பகுதியில் இருந்து வரும் எண்ணெயை அதிகம் சார்ந்துள்ள நிலையில், தற்போது இங்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளதாக குறிப்பிடும் அவர், கடந்த ஓர் ஆண்டாக சீனா தினமும் சுமார் 10 லட்சம் பீப்பாய் எண்ணெயை இரானில் இருந்து வாங்கி தனது கையிருப்புகளில் சேமித்துள்ளதாக விவரிக்கிறார்.

"கடந்த 365 நாட்களில் அவர்கள் சேமித்துள்ள எண்ணெய், அடுத்த ஐந்து மாதங்களுக்கு அவர்களுக்கு கவலைப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தாது," என்கிறார் அவர்.

இந்தியாவின் எண்ணெய் கையிருப்பைப் பற்றி நரேந்திர தனேஜா கூறும் போது, இந்தியா உலகம் முழுவதும் 41 நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும், தற்போது நிலத்தடியில் உள்ள இந்தியாவின் வியூக ரீதியான கையிருப்பு சுமார் 25 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என குறிப்பிடுகிறார்.

"இதற்கு மேலாக சேமிப்பு தொட்டிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வணிக கையிருப்புகளை சேர்த்தால் சுமார் 50 நாட்களுக்கு போதுமான எண்ணெய் இந்தியாவிடம் உள்ளது. ஆனால் அனைத்து தொட்டிகளையும் முழுவதுமாக காலி செய்ய முடியாததால், நடைமுறையில் சுமார் 40 நாட்களுக்கு மட்டுமே எண்ணெய் உள்ளது," என நரேந்திர தனேஜா கூறுகிறார்.

அமெரிக்கா-இஸ்ரேல்- இரான் மோதல், இந்தியா, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் ஏற்பட்டுள்ள தாக்கம் என்ன?

இந்தியாவில் கடந்த சனிக்கிழமை வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலை 60 ரூபாயும், வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை 115 ரூபாயும் உயர்த்தப்பட்டது.

தற்போதைய சூழலில் எண்ணெய் விலை உயர்வது தவிர்க்க முடியாததாக ஒன்றாக இருக்கும் என பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்துள்ள வெளிநாட்டு கொள்கை நிபுணர் ஹர்ஷ் வி. பந்த், உலகின் பெரிய பொருளாதாரங்களுக்குக் கூட சிரமங்கள் உருவாகும் எனவும் பலவீனமான பொருளாதாரங்கள் அதிக அழுத்தத்தை சந்திக்கும் எனவும் கூறுகிறார்.

"இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியை பல்வேறு நாடுகளிலிருந்து பெறும் வகையில் மாற்றியுள்ளது. யுக்ரேன் போர் தொடங்கியபோது இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கத் தொடங்கியது. மத்திய கிழக்கு உலக எண்ணெய் சந்தையின் முக்கிய மையமாக இருப்பதால் அங்கு ஏற்பட்ட மோதல்கள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும்," என பந்த் குறிப்பிடுகிறார்.

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதன் எதிரொலியாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று (மார்ச் 10) முதல் உணவகங்கள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால், இன்னும் இரண்டு நாட்களுக்குள் மாநிலம் முழுவதும் ஓட்டல்கள் மூடப்படும் நிலை உருவாகலாம் என்று தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

நாட்டின் பல்வேறு நகரங்களில் சமையல் எரிவாயு பிரச்னையால் ஓட்டல்கள் மூடப்படுவதை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (ECA) இன்று அமல்படுத்தியுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரைப் பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகிக்க அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என்றும், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி, 21 நாள்களிலிருந்து 25 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழுடன் பகிருங்கள்

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 'சாதிய பாகுபாடு' நிலையில் மாற்றம் உள்ளதா? உங்கள் அனுபவம் மற்றும் கருத்துகளை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு