'110 குழந்தைகள் பலி'- இரானில் பள்ளிக்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது யார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மெர்லின் தாமஸ் மற்றும் ஷயான் சர்தாரிசாதே
- பதவி, பிபிசி வெரிஃபை
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
வீடியோவை பகுப்பாய்வு செய்த நிபுணர்களின் கூற்றுப்படி, தெற்கு இரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு அருகிலுள்ள ராணுவத் தளத்தின் மீது அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை தாக்கியுள்ளது.
இதில் சுமார் 110 குழந்தைகள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட வீடியோ, உண்மையானது என 'பிபிசி வெரிஃபை' உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், மினாப்பில் உள்ள ஷஜாரே தயேபா தொடக்கப் பள்ளிக்கு அடுத்துள்ள இரானிய புரட்சிகர காவல் படை தளத்தை ஓர் ஏவுகணை தாக்குவதற்கு முந்தைய தருணங்கள் பதிவாகியுள்ளன.
செயற்கைக்கோள் படங்கள், சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் நிபுணர்களின் பகுப்பாய்வு மூலம் பள்ளிக்கு அருகிலுள்ள பகுதியில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதை பிபிசி ஏற்கனவே உறுதி செய்துள்ளது.
இந்த சமீபத்திய வீடியோவைப் பார்த்த நிபுணர்கள், டோமாஹாக் ஏவுகணை இருப்பதும், அந்தப் பகுதி பலமுறை தாக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் இது அமெரிக்காவின் நடவடிக்கை என்பதைக் காட்டுகின்றன என்று எங்களிடம் தெரிவித்தனர்.
இஸ்ரேல் அல்லது இரான் ஆகிய இரு நாடுகளிடமும் டோமாஹாக் ஏவுகணைகள் இருப்பதாக தெரியவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
'சாத்தியமற்றது'
ஒரே ஓர் இரானிய ஏவுகணை அந்த இடத்தைத் தாக்கி, இவ்வளவு அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்ற வாதம் சாத்தியமற்றது என்று ஒரு நிபுணர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பள்ளி மீதான தாக்குதலுக்கு இரான்தான் காரணம் என்று கூறினார்.
"இரான் இதைச் செய்ததாக நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில், அவர்களின் ஆயுதங்கள் துல்லியமானவை அல்ல." என்று செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார்.
பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ் வழங்கியுள்ள தகவல்படி, இந்தச் சம்பவம் குறித்த அமெரிக்காவின் ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, இந்த கொடிய தாக்குதலுக்கு அமெரிக்கா "அநேகமாக" பொறுப்பாக இருக்கலாம்.
ஆனால் பள்ளியை வேண்டுமென்றே குறிவைக்கவில்லை என்றும், தவறுதலாக அது தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சிபிஎஸ் நியூஸிடம் பேசிய இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒரு வட்டாரம், அந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல என்றும், பள்ளிக்கு அருகில் அதன் ராணுவம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் காரணம் என்று இரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இக்கருத்தை பகிரங்கமாக ஏற்கவோ அல்லது மறுக்கவோ இல்லை.
புதிய வீடியோ குறித்த நிபுணர்களின் மதிப்பீடு குறித்து கருத்து தெரிவிக்குமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் பிபிசி கேட்டுள்ளது.

பட மூலாதாரம், Anadolu via Getty Images
பெரிய புகை மூட்டம்
வீடியோ குறித்த பிபிசி வெரிஃபை பகுப்பாய்வின்படி, தளத்தில் ஒரு மருத்துவ கிளினிக் உள்ளது. அது இரான் புரட்சிகர காவல் படையின் கடற்படைக்கு சொந்தமானது என்று இரானிய ஊடகங்கள் கூறுகின்றன. அப்பகுதி வீடியோவில் காணப்படும் டோமாஹாக் ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த கிளினிக் பள்ளியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த வீடியோவை பெல்லிங்கேட் என்ற ஆன்லைன் புலனாய்வுக் குழு முதலில் பகுப்பாய்வு செய்தது.
சரிபார்க்கப்பட்ட வீடியோவில், டோமாஹாக் ஏவுகணை தெரிவதற்கு முன்பே பள்ளிக்கு அருகில் பெரிய புகை மூட்டங்கள் காணப்படுகின்றன.
வீடியோவில் காணப்படும் ஏவுகணை ராணுவத் தளத்தில் வெடிப்பதற்கு முன்பே, பள்ளி தாக்கப்பட்டிருக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது.
இரான் புரட்சிகர காவல் படையின் தளத்தில் உள்ள மற்ற கட்டடங்கள் தாக்கப்பட்ட அதே நேரத்தில்தான் பள்ளியும் தாக்கப்பட்டது என்ற பிபிசி வெரிஃபையின் முந்தைய பகுப்பாய்வுடன் இக்கருத்தும் ஒத்துப்போகிறது.

பட மூலாதாரம், Getty Images
நீண்ட தூரம் பாயும் குரூஸ் ஏவுகணை
சரிபார்க்கப்பட்ட வீடியோவில் உள்ள ஆயுதத்தை அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை என மூன்று நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
மெக்கென்சி இன்டெலிஜென்ஸ் சர்வீசஸின் மூத்த ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், வீடியோவில் உள்ள ஆயுதம், ''இலக்கை தாக்கும் முன் அதன் இறுதி கட்டத்தில் பறக்கும் அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை போலவே தென்படுகிறது.'' என்று தெரிவித்தார்.
டோமாஹாக் என்பது ஒரு வகை நீண்ட தூரம் பாயும் குரூஸ் ஏவுகணை ஆகும்.
இது நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களில் இருந்து ஏவப்படக்கூடியது. இது பல ஆண்டுகாலமாக அமெரிக்காவிடம் உள்ளது.
அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் வெஸ் பிரையன்ட், இது ஒரு டோமாஹாக் ஏவுகணைதான் என்பதை உறுதிப்படுத்தினார்.
இரான் புரட்சிகர காவல் படையின் முழு வளாகத்தின் மீதும் பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள், இது அமெரிக்காவின் "திட்டமிடப்பட்ட மற்றும் துல்லியமான" நடவடிக்கை என்பதைக் காட்டுகிறது என்று பிரையன்ட் மேலும் கூறினார்.
ஆயுத ஆராய்ச்சி சேவையின் இயக்குநர் என்.ஆர். ஜென்சன் ஜோன்ஸ் முன்னதாக பிபிசி வெரிஃபையிடம் கூறுகையில், பள்ளியில் காணப்படும் இவ்வளவு பெரிய சேதத்தை இரானிய ஏவுகணை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
ஏனெனில் அவை "ஒப்பீட்டளவில் சிறிய வெடிபொருள் முனைகளையே" கொண்டுள்ளன என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க ராணுவத்தின் மிக உயரிய அதிகாரியான ஜெனரல் டான் கெய்ன், மார்ச் 2 அன்று கூறுகையில், "தெற்குப் பகுதி முழுவதிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களின்" ஒரு பகுதியாக அமெரிக்க கடற்படையால் இரான் மீது ஏவப்பட்ட முதல் ஏவுகணைகள் டோமாஹாக் ரகத்தைச் சேர்ந்தவை என்று தெரிவித்தார்.
மார்ச் 4 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை போரின் முதல் 100 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை விளக்கும் வரைபடம் ஒன்றை வெளியிட்டது. அது மினாப் பகுதி இலக்கு வைக்கப்பட்டதைக் காட்டுகிறது.

இரானில் தொடர்ந்து இணையத் தடை உள்ளதால், இந்தச் சம்பவம் குறித்த விவரங்களைத் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது.
இரானில் சர்வதேச பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செய்தி சேகரிப்பதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, பிப்ரவரி 28 அன்று மினாப்பில் உண்மையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக உறுதிப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












