இஸ்ரேல் மீது நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவிய இரான்: அவை ஏற்படுத்திய சேதம் என்ன?

இரான், இஸ்ரேல், ஹெஸ்பொலா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேலை நோக்கி டஜன் கணக்கான ஏவுகணைகளை ஏவியது
    • எழுதியவர், மாட் மர்ஃபி
    • பதவி, பிபிசி நியூஸ்

செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேலை நோக்கி இரான் பெரும் எண்ணிக்கையில் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

இந்த ஆண்டில் இஸ்ரேல் மீது இரான் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். ஏப்ரல் மாதத்திலும் இரான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை தாக்கியது.

இரானின் இந்த தாக்குதல் தற்போது நின்றுள்ளதாகவும், தற்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்கிழமை இரவு இரான் 181 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாகவும், அதில் ஒரு பாலத்தீனர் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இது தொடர்பான காணொளியையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது, அதில் ஒருவர் சாலையில் நடந்து செல்லும்போது தாக்குதலுக்கு உள்ளானது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவின் வடக்கே இரான் ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில் சாலையில் 8 முதல் 10 மீட்டர் ஆழத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.

இரண்டு அல்லது மூன்று கார்கள் மோசமாக சேதமடைந்துள்ளன என்று பிபிசி செய்தியாளர் ஜான் டோனிசன் டெல் அவிவிலிருந்து கூறுகிறார்.

தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகம் இருப்பதால் அது இலக்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரானின் இந்த தாக்குதல் எவ்வளவு ஆக்ரோஷமானது?

இரான், இஸ்ரேல், ஹெஸ்பொலா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல் அவிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பறக்கும் ஏவுகணைகள்

ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது சற்று பெரிய தாக்குதல். ஐந்து மாதங்களுக்கு முன்பு சுமார் 110 பாலிஸ்டிக் (மேலே நீண்ட உயரம் சென்று தாக்கும்) ஏவுகணைகள் மற்றும் 30 க்ரூஸ் (தாழ்வாக பறந்து தாக்கும்) ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை இரான் தாக்கியது.

செவ்வாய்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 7:45 க்கு (இந்திய நேரம் இரவு 10:15 மணி) டெல் அவிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏவுகணைகள் பறப்பதை இஸ்ரேலிய தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காட்சிகளில் காண முடிந்தது.

தாக்குதலின் போது சில ஏவுகணைகள் இலக்குகளை தாக்கியதை ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர். இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் தனது ராணுவம் முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியது என்றும் 90 சதவிகித எறிகணைகள் (ஏவுகணைகள் / டிரோன்கள்) இலக்கை துல்லியமாக தாக்கின என்றும் இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படை (ஐஆர்ஜிசி) கூறுகிறது.

மூன்று இஸ்ரேலிய ராணுவ தளங்கள் தாக்குதலின் இலக்குகள் என்று ஐஆர்ஜிசி வட்டாரங்கள் இரானிய அரசு ஊடகத்திடம் தெரிவித்தன.

ஆனால், இரானால் ஏவப்பட்ட ஏவுகணைகளில், ‘பெரும்பாலானவை’ அழிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

டெல் அவிவுக்கு மேலே வானத்தில் ஒளிரும் வெளிச்சம் காணப்பட்டது. இஸ்ரேலிய வான் பாதுகாப்பு, இந்த ஏவுகணைகளை இடைமறித்ததை இது குறிக்கிறது.

குறைந்தது இரண்டு ஏவுகணைகள் இடைமறிக்கப்படும் ஒலியை தாங்கள் கேட்டதாக ஜெருசலேமில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

எவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று இஸ்ரேல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயினும் ஏவுகணைகளின் இரும்பு துகள்கள் தாக்கி இரண்டு பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ராணுவமும் இதே செய்தியை வெளியிட்டுள்ளது.

இரான் இஸ்ரேலை தாக்கியது ஏன்?

இரான், இஸ்ரேல், ஹெஸ்பொலா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்

தங்கள் அமைப்பின் உயர் தளபதி மற்றும் இரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி இது என்று இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படை ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஐஆர்ஜிசி தளபதி அப்பாஸ் நில்ஃபோரோஷன் ஆகியோரின் மரணங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் டெஹ்ரானில் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியவின் மரணம் குறித்தும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஹனியவின் மரணத்திற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றாலும் இதற்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக நம்பப்படுகிறது.

நாட்டின் அதிஉயர் தலைவரான ஆயத்துல்லா அலி காமனெயி தனிப்பட்ட முறையில் இந்த தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார் என்று மூத்த இரானிய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.

இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடந்து வரும் மறைமுகப்போரில் பதற்றம் அதிகரித்திருப்பதை இந்த தாக்குதல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

உண்மையில் இஸ்ரேலின் இருப்பையே இரான் அங்கீகரிக்கவில்லை. இரானின் ராணுவக் கொள்கையில் இஸ்ரேல் மையமாக உள்ளது.

மறுபுறம் இஸ்ரேல் இரானை தனது இருப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. அதற்கு எதிராக பல ஆண்டுகளாக மறைமுகப்போரை நடத்தி வருகிறது.

‘அயர்ன் டோம்’ ஏவுகணைகளை தடுத்ததா?

இரான், இஸ்ரேல், ஹெஸ்பொலா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவால் ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையில் அயர்ன் டோம் வடிவமைக்கப்பட்டுள்ளது

இஸ்ரேலிடம் வான் பாதுகாப்புக்கு ஒரு பெரிய அமைப்பு உள்ளது. இவற்றில் மிகவும் பிரபலமானது ’அயர்ன் டோம்’.

ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவால் ஏவப்படும் குறுகிய தூர ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையில் அயர்ன் டோம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரலில் இரான் நடத்திய தாக்குதலின் போது வான் பாதுகாப்பின் சில அம்சங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் வான் பாதுகாப்பு அமைப்பின் பிற கூறுகளும் வேலை செய்திருக்கக்கூடும்.

உதாரணமாக, ‘டேவிட் ஸ்லிங்’, இது ‘மந்திரக்கோல்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பாகும், இது நடுத்தர முதல் நீண்ட தூர ஏவுகணைகளையும், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளையும் இடைமறிக்கப் பயன்படுகிறது.

பூமியின் வளிமண்டலத்திற்கு மேலே பறக்கும் நீண்ட தூர ஏவுகணைகளைப் பொறுத்தவரை, இஸ்ரேல் arrow-2 மற்றும் arrow-3 இடைமறிப்புகளை பயன்படுத்துகிறது.

இஸ்ரேலின் கூட்டாளிகள் சொல்வது என்ன?

இரான், இஸ்ரேல், ஹெஸ்பொலா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானிய தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்குமாறும் அமெரிக்க படைகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது

இரானிய தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்குமாறும், இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துமாறும், ஏற்கனவே அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட சுமார் 12 இரானிய ஏவுகணைகளை அமெரிக்க கடற்படை இடைமறித்ததாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஜோர்டான் தலைநகர் அமான் மீது ஏவுகணைகள் இடைமறிக்கப்படும் வீடியோக்களையும் பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரலில் இரான் நடத்திய தாக்குதலின்போதும் ஏராளமான ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

அடுத்து என்ன நடக்கும்?

இரான், இஸ்ரேல், ஹெஸ்பொலா, அமெரிக்கா

பட மூலாதாரம், x/ @netanyahu

படக்குறிப்பு, “இரான் மிகப்பெரிய தவறை செய்துள்ளது, அதற்கு அந்த நாடு பதில் சொல்ல வேண்டியிருக்கும்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்

இந்த தாக்குதலுக்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இரான் மிகப்பெரிய தவறை செய்துள்ளது, அதற்கு அந்த நாடு பதில் சொல்ல வேண்டியிருக்கும்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் ராணுவமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாக்குதல்கள் தீவிரமானவை என்றும், நாடு மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்ததாகவும் இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறினார்.

”இந்த தாக்குதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது, திட்டமிட்ட நேரத்தில் மற்றும் இடத்தில் அதைச் நாங்கள் செயல்படுத்துவோம்” என்றார் அவர்.

முன்னதாக அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யெஹோவ் கேலண்டுடன் பேசினார். ”இரான் இஸ்ரேலை தாக்கினால், அது ‘கடுமையான விளைவுகளை’ ஏற்படுத்தும்” என்று பின்னர் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் இரானின் எதிர்வினை "மேலும் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்" என்று இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)