ஹஜ் புனிதப் பயணத்தின் பெயரால் மோசடி செய்யும் நிறுவனங்கள் - தப்புவது எப்படி?

    • எழுதியவர், எதர் ஷலாபி
    • பதவி, பிபிசி

பாலத்தீனிய இளைஞரான சுலைமான் அல்-ஷெரா, கையில் எகிப்திய கடவுச்சீட்டை வைத்து கொண்டு, சௌதி அரேபியாவில் இருக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான தேசிய செயற்குழு அலுவலகத்திற்குள் மனமுடைந்த நிலையில் அமர்ந்திருந்தார்.

சில மணி நேரங்களுக்கு முன்பு தான், பொய்யான புனித யாத்திரை அனுமதிச்சீட்டை அனுப்பிய ஒரு போலி ஹஜ் நிறுவனத்திடம் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டார் என்பதைக் கண்டுபிடித்திருந்தார் அவர்.

சுலைமான் ஒரு வாரத்திற்கு முன்பே, எகிப்தில் இருந்து சௌதி விசிட்டர் விசாவில் மெக்கா வந்தடைந்திருந்தார்.

சமூக ஊடகங்களில் கவர்ச்சிகரமான விலையில் ஹஜ் யாத்திரைக்கான 'பேக்கேஜ்கள்’ இருப்பதாக விளம்பரம் வெளியிட்ட ஒரு நிறுவனத்தினை நம்பி தான் சுலைமான் மெக்கா சென்றிருந்தார். யாத்திரை மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தரையிறங்கியதும் அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை (UAE) தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 'தவறான' விளம்பரத்தின் வலையில் தான் விழுந்துவிட்டதாக அவர் கூறினார்.

"ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதற்கான உரிமம் பெற நான் அந்த நிறுவனத்திற்கு 6,000 திர்ஹாம் (ரூ.1,36,480) கொடுத்தேன். ஹஜ் யாத்திரைக்கான அனுமதிப் படிவம் மற்றும் பார்கோடுகளை எனக்கு அனுப்பினர். ஆனால், அனைத்து ஆவணங்களும் போலியானவை என்றும் நான் ஏமாற்றப்பட்டதையும் நான் கண்டுபிடித்தேன்,” என்றார் சுலைமான்.

அந்த நிறுவனம் தம்மை ஏமாற்றிவிட்டதையும், எனவே இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முடியாது என்பதையும் சுலைமான் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். மேலும் அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் அவரது அழைப்புகளுக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டனர். இனி அவர் செலுத்திய பணத்தை திரும்பப் பெற முடியாது என்று அவர் கருதினார்.

"நான் அந்த நேரத்தில் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மனம் உடைந்து போனேன். எனது ஹஜ் யாத்திரையையும் எனது பணத்தையும் இழந்துவிட்டேன்," என்று அவர் கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஹஜ் பயணத்திற்கு அனுமதி மறுப்பு

சாத் அல்-குராஷி (Saad al-Qurashi) ஹஜ் மற்றும் உம்ராவுக்கான தேசியக் செயற்குழுவின் ஆலோசகர் ஆவார், இந்த அமைப்பு சவுதி அரேபியாவிற்குள் சுற்றுலா நிறுவனங்களை மேற்பார்வையிடுகிறது மற்றும் புனித யாத்திரைக்கான அனுமதி ஆவணங்களை சரிபார்க்கிறது.

சுலைமான் போன்ற பலர் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான தேசிய செயற்குழு தலைமையகத்திற்கு வரும்போதுதான் தாங்கள் பணம் கொடுத்து ஏமாந்திருப்பதை உணர்கின்றனர் என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

அவர்கள் ஹஜ் சம்பிரதாயங்களை நிறைவேற்ற முற்படும்போதும், தாங்கள் சட்டப்பூர்வமாக ஹஜ் யாத்திரை வந்திருப்பதை நிரூபிப்பதற்காக பக்தர்கள் அணியும் காப்பினை (bracelets) பெற முயற்சி செய்யும்போது உண்மை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர்.

"ஹஜ் அனுமதிப்படிவம் வைத்திருப்பவர்கள், அந்த ஆவணங்கள் மற்றும் பார்கோடுகளுடன் எங்களிடம் வரும்போது, ​​அவர்கள் போலியான தாள்கள் மற்றும் அடையாள அட்டைகளை போலி நிறுவனங்களிடமிருந்து பெற்றிருப்பதைக் கண்டுபிடிக்கிறோம். அவர்கள் இந்த நிறுவனங்களுக்கு அனுப்பிய பெரும் தொகையை இழக்கின்றனர்.

பின்னர் அந்த நபர் ஹஜ்ஜிலிருந்து தடை செய்யப்படுகிறார். "

இம்முறை ஹஜ் சீசனில் எகிப்து, சிரியா மற்றும் இராக் ஆகிய நாடுகளில் இதுபோன்ற பல கும்பல்கள் செயல்பட்டதாக சவுதி சேம்பர்ஸ் கவுன்சிலுக்குச் சொந்தமான குழுவில் பணியாற்றும் அல்-குராஷி சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று பணம் கொடுத்து ஏமாந்த நிகழ்வுகளை கண்டறிந்ததாக அவர் கூறினார்.

கடைசி நிமிட பயணத்திட்டங்களின் விளம்பரங்களை நம்ப வேண்டாம்

அல்-குராஷி "கடைசி நிமிட பேக்கேஜ்களை" வழங்கும் நிறுவனங்களை எளிதில் நம்பி விட வேண்டாம் என்று எச்சரிக்கிறார், மேலும் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்படும் மலிவு விலை பயணத்திட்டங்களையும் நம்ப வேண்டாம் என்கிறார்.

ஹஜ் மற்றும் உம்ராவுக்கான தேசியக் செயற்குழுவின் அலுவலகத்தில் அமர்ந்து தொலைபேசி மூலம் பிபிசியிடம் பேசிய சுலைமான் அல்-ஷேர், நான் அந்த நிறுவனம் பற்றி ஆய்வு செய்யாமல், அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் நிறுவனத்திற்கு பெரும் தொகையை மாற்றி தவறு செய்துவிட்டேன்” என்று கூறுகிறார்.

ஹஜ் புனித யாத்திரைக்கான அனுமதிப் படிவத்தை வழங்குவதற்கு அதிகாரபூர்வமற்ற வழிகளைப் பயன்படுத்தும் தனிநபர்கள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் பணத்தை ஏமாற வேண்டாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

தவறாக வழிநடத்தும் மதிப்புரைகள் மற்றும் பொய்யான விளம்பரங்கள்

ஹஜ் புனித யாத்திரைக்கான பொய்யான அனுமதிச்சீட்டு பெற்றவர்கள் சுலைமானை போன்று பலர் இருக்கின்றனர்.

பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவர் ஃபாரூக் அப்தெல் வஹாப் பிபிசியிடம், பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சுற்றுலா பிரமுகரிடம் யாத்திரைக்கு முன்பதிவு செய்த பிறகு, அவரும் அவரது குடும்பத்தினரும் ஏமாற்றப்பட்டு பணம் முழுவதையும் இழப்பார்கள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்கிறார்.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஃபாரூக், பிபிசியிடம் "பணத்தை மீட்க தனக்கு பொய்யான வாக்குறுதி கொடுத்த அந்த நிறுவனத்துடன் நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது," என்றும் அவர் கூறினார்.

ஃபாரூக்கும் அவரது உறவினர்களும் ஹஜ் யாத்திரைக்காக சேமித்து அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைத்த தொகையான 7,000 பவுண்டுகளை (ரூ.7,51,985) ஒருவழியாக அவர் மீட்டெடுத்தார் - ஆனால் அவரது சொந்த முயற்சிகளுக்கு பிறகு தான் பணம் திருப்பிச் செலுத்தப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நம்பகமான பயண நிறுவனங்களில் முன்பதிவு செய்து, அவர் மெக்காவுக்குச் சென்றார்.

நுஷக் இயங்குதளம்

ஃபாரூக்கின் அனுபவம் 2020-ஆம் ஆண்டுக்கு முந்தையது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம்களுக்கான ஹஜ் யாத்திரை பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறைகள் சவுதி அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட `நுஷக்’ (Nusuk platform) என்ற தளத்திற்கு மட்டுமே இருந்தது.

நுஷக் மூலம், பக்தர்கள் ஹஜ் யாத்திரை பயணத்திட்டங்களின் வகைப்படுத்தலில் இருந்து தேர்ந்தெடுக்கலாம், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம், பின்னர் அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் நம்பகமான சுற்றுலா நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதை உறுதிப்படுத்தலாம்.

நுஷக் தளத்திற்கு கூடுதலாக, சவுதி அரேபியா ஹஜ் மற்றும் உம்ராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்த பிறகு மட்டுமே நாட்டில் வசிக்கும் பக்தர்களை ஹஜ் மேற்கொள்ள அனுமதிக்கிறது.

மற்ற முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் தங்கள் நாடுகளில் உள்ள அதிகாரப்பூர்வ ஹஜ் தொடர்பான அமைப்புகள் மூலம் விசாவைப் பெற்ற பிறகு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள முடியும்.

சவுதி அரேபியாவில் மற்ற நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு யாத்திரை மேற்கொள்ள தனி ஒதுக்கீடுகளும் உள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மில்லியன் முஸ்லிம்களுக்கும் 1,000 பேர் ஹஜ் ஒதுக்கீடு பெறுவர்.

ஃபாரூக் கூறுகையில் : 'கோவிட் தொற்று நோய் சூழல் உருவாவதற்கு சில மாதங்கள் முன்னர், நான் எனது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருடன் ஹஜ் யாத்திரை செல்ல விரும்பினேன்.

"எனவே, நாங்கள் நம்பத்தகுந்த நிறுவனத்திடம் ஹஜ் பயணத்திற்காக அனுமதிச்சீட்டை பெறுவதற்கு நிறைய பணம் செலுத்தினோம்.”

"ஆனால் அந்த ஆண்டில், கொரோனா தொற்றுநோய் காரணமாக ஹஜ் பயணங்கள் ரத்து செய்யப்பட்டது.”

"எனவே, நான் பணத்தைத் திரும்பக் கேட்டேன், ஒரு வருடத்திற்கு எந்த பதிலும் வரவில்லை. பின்னர் நான் நீதிமன்ற உதவியை நாட வேண்டியிருந்தது."

அவருக்குப் பணத்தைத் திருப்பித் தருமாறு அந்நிறுவனத்திடம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஃபாரூக் தனது பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினார், ஆனால் அரசு இணையதளத்தில் அந்த நிறுவனத்தின் பதிவு எண்ணை சரிபார்த்தபோது அந்நிறுவனம் மூடப்பட்டதை கண்டறிந்தார்.

அவர் கூறுகையில் : 'நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி அந்நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். நிறுவனத்தின் பதிவு எண் மற்றும் விளம்பரப்படுத்தப்பட்ட முகவரி போன்ற விவரங்களை நான் சரிபார்த்த போது தான் ​​​​நிறுவனம் கலைக்கப்பட்டதையும் இப்போது இல்லை என்பதையும் கண்டுபிடித்தேன்.

"நம்பிக்கை வையுங்கள் சகோதரரே”

அவர் பணத்தைத் திரும்பப் பெற முயற்சித்த போது, நிறுவனத்தின் பிரதிநிதிகள் "மதரீதியான மொழியை" பயன்படுத்தியதாக அவர் கூறுகிறார்.

அதில் "நம்பிக்கை வைக்கவும் சகோதரரே" மற்றும் "பணத்தை திரும்பப் தருவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தினர்.

ஃபாரூக் பணத்தை மீட்டெடுக்க இயலவில்லை. எனவே தன் கசப்பான அனுபவத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை அவமானப்படுத்த முயற்சித்தார். இது தவிர அவருக்கு வேறு வழியில்லை என்று குறிப்பிட்டார்.

ஒரு புதிய நிறுவனம் அவரைத் தொடர்பு கொண்டு தவணை முறையில் அந்த பணத்தை திருப்பித் தருவதாகக் கூறியது.

"நான் பகிர்ந்த வீடியோ வைரலான போதுதான் அந்த நிறுவனம் என்னைத் தொடர்பு கொண்டது. வேறொரு புதிய நிறுவனத்தின் மூலம் பணத்தை எனக்குத் திருப்பித் தந்தது" என்று அவர் கூறுகிறார்.

தவணை முறையில் பணத்தைத் திரும்பப் பெற ஏற்பாடு செய்த நிறுவனத்தைத் தொடர்புக் கொள்ள பிபிசி முயற்சித்தது.

அதன் விளம்பரங்களில் இருந்த மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளில் பிபிசி தரப்பில் அனுப்பிய கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை.

ஹஜ் பயணம் - உதவிக்குறிப்புகள்

பிரிட்டிஷ் பயண முகவர்கள் சங்கம் (Abta) போன்ற அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக சங்கத்தில் உறுப்பினராக உள்ள சுற்றுலா நிறுவனத்தை கவனமாக தேர்ந்தெடுக்குமாறு பிரிட்டன் காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

பல நாடுகளில் இத்தகைய அமைப்புகள் உள்ளன. இந்தோனீசிய சுற்றுலா மற்றும் பயண முகவர் சங்கம், பாகிஸ்தான் சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கம், நைஜீரியாவின் சுற்றுலா சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சுற்றுலா மற்றும் சுற்றுலா ஏஜென்சிகள் கவுன்சில்

ஆகியவை இதில் அடங்கும்.

பயண தளவாட ( logistics) நிறுவனமான ஈசுஸ் (Ezus) பல நாடுகளின் சுற்றுலா சங்கங்களின் பட்டியலைக் கொண்டுள்ளது.

பயணிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான அனைத்து ஒப்பந்தங்களும், தொலைபேசி அழைப்புகள் அல்லது வாய்மொழி ஒப்பந்தங்களை நம்பாமல், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் காண்பிக்கும் ஒப்பந்தங்களில் ஆவணப்படுத்தப்பட்டு கையொப்பமிட வேண்டும் என்று பிரிட்டனின் ABTA அமைப்பு அறிவுறுத்துகிறது.

கற்றுக்கொண்ட படிப்பினைகள்

ஃபாரூக் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று, நேர்மறையான ஆன்லைன் மதிப்புரைகளை (Reviews) நம்புவதை தவிர்ப்பது.

"எனது அனுபவத்தில், பல போலி நிறுவனங்கள் போலியான நல்ல மதிப்புரைகளை எழுதுவதற்கும் அவற்றை ஆன்லைனில் வெளியிடுவதற்கும் மக்களிடம் பெரும் தொகையை செலுத்துகின்றன. மேலும் தவறான விளம்பரங்களால் யாத்திரை பேக்கேஜ்களை வாங்கிவிட்டு பலர் ஏமாறுகின்றனர்,” என்கிறார்.

சௌதி அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டில் பக்தர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது, அவர்களில் 90% பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.

போலி நிறுவனங்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த மொத்த நபர்களில் 3% பேர் மட்டுமே அதிகாரப்பூர்வ புகார்களை தாக்கல் செய்கிறார்கள் என்றும், அதிகம் பாதிக்கப்படும் பக்தர்களின் சராசரி வயது 42 என்றும் அந்த கவுன்சில் மதிப்பிடுகிறது.

நுஷக் தளத்தின் அறிமுகத்துக்கு பின்னர் ஹஜ் தொடர்பான மோசடிகள் கணிசமாகக் குறைத்துள்ளதாக கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த தளம் 126 நாடுகளைச் சேர்ந்த பக்தர்களுக்கான முன்பதிவு செயல்முறையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் ஹஜ் யாத்திரையை முன்பதிவு செய்வதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக செய்யப்பட்ட அனைத்து அடையாள ஆவணங்கள் மற்றும் நிதி பரிமாற்றங்களையும் சரிபார்க்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)