நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்க 274 அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டனரா?

    • எழுதியவர், அலெக்ஸ் திரின்
    • பதவி, பிபிசி மத்திய கிழக்கு நிருபர்

கடந்த சனிக்கிழமை (ஜூன் 8), இஸ்ரேலிய படைகள் நுஸ்ரத் அகதிகள் முகாமுக்கு அருகில் ஹமாஸ் குழுவினருடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் 274 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழுவால் நடத்தப்படும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகளும் அப்பாவிப் பொதுமக்களும் அடங்குவர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இஸ்ரேல் ராணுவம் இந்த மோதலில் 100-க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டனர் என்று கூறியிருக்கிறது.

இந்த மோதலையடுத்து நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

ஹமாஸின் பிடியில் இருந்த நான்கு பணயக்கைதிகளை இஸ்ரேல் மீட்டிருக்கிறது. பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் ராணுவம் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

அதேசமயம், இஸ்ரேல் பணயக் கைதிகளை மீட்க மேற்கொண்ட நடவடிக்கையில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்றொருபுறம் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் சனிக்கிழமையன்று மீட்கப்பட்டதை தொடர்ந்து பின்னர் தங்கள் குடும்பத்தினரை சந்தித்தனர். நோவா அர்கமனி (27), அல்மோக் மிர் (22), ஆண்ட்ரி கோஸ்லோவ் (27), சலோமி ஜீவ் (41) ஆகியோர் சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.

கடந்தாண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று நோவா இசை விழாவில் ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் இஸ்ரேலிய குடிமக்கள் கடத்தப்பட்டனர். பணயக் கைதிகளாக வைக்கப்பட்ட அவர்களை மீட்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருந்தது என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கையின் போது, ​​நுசெய்ரத் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இஸ்ரேலிய ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த நடவடிக்கையில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவின் அல்-அக்ஸா மற்றும் அல்-அவ்தா ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் 70 சடலங்கள் இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மோதலில் அல்-நுஸ்ரத் அகதிகள் முகாமைச் சுற்றி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அரசாங்கத்தால் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் 100 பேர் பலியாகியிருக்கலாம் என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். இந்தப் பகுதிகளில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் தீவிரமான குண்டுவெடிப்புகள் நடந்ததற்கான தடயங்களைக் காட்டுகின்றன. மருத்துவமனைகள் படுகாயம் அடைந்தவர்களால் நிரம்பியுள்ளன. இறந்த சடலங்களும் காணப்படுகின்றன. இந்தத் தாக்குதலில் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மக்கள் தங்கள் உறவினர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் புகைப்படங்களும் இந்த பகுதிகளில் அதிகம் பகிரப்பட்டது.

'உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் நடவடிக்கை'

உளவுத்துறை துல்லியமாக வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். அதன் கீழ், நஸ்ரத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு கட்டிடங்களில் இருந்து பணயக்கைதிகள் மீட்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மீட்கப்பட்டப் பணயக்கைதிகள் நலமாக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான புகைப்படங்களில் அவர்கள் தங்களின் குடும்பங்களைச் சந்திக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கைக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராணுவத்தினரைப் பாராட்டினார்.

இந்த நடவடிக்கை துணிச்சலுடன் மேற்கொள்ளப்பட்டதாக நெதன்யாகு பாராட்டியுள்ளார். "உயிருடன் இருந்தாலும் சரி, இறந்திருந்தாலும் சரி, கடைசி பணயக்கைதியை மீட்கும் வரைக்கும் நாங்கள் போராடுவோம். அவர்களுக்காக எங்கள் உயிரைத் தியாகம் செய்வோம்,” என்றார்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் படைகள் ஹமாஸின் கடுமையான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறினார்.

மீட்கப்பட்ட பணயக்கைதிகள் யார்?

இஸ்ரேல் ராணுவத்தால் மீட்கப்பட்ட பணயக்கைதிகளில், நோவா அர்கமணி (சீன வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேலிய குடிமகன்) அக்டோபர் 7 அன்று நோவா திருவிழாவில் இருந்து கடத்தப்பட்டார். மோட்டார் சைக்கிளில் அவரை ஹைமாஸ் கடத்தி சென்றபோது, ​​'என்னைக் கொல்லாதீர்கள்!' என்று கூச்சலிட்டார்.

ரஷ்யாவை பூர்விகமாக கொண்ட கோஸ்லோவ் 2022-இல் இஸ்ரேலுக்கு வந்தார்.

ஜீவ் என்பவரும் ஒரு ரஷ்யர். இருவரும் நோவா திருவிழாவில் பாதுகாவலர்களாக வேலை பார்த்து வந்தனர். அந்த நேரத்தில் அவர்கள் கடத்தப்பட்டனர்.

மிர் ஜான் என்பவர் கடத்தப்பட்டதற்கு மறுநாள் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்கு சேர இருந்தார். ஆனால் அதற்குள் ஹைமாஸால் கடத்தப்பட்டார்.

மீட்கப்பட்ட பணயக்கைதிகளின் குடும்பங்கள் இது ஒரு அசாத்திய நடவடிக்கை என்று கூறியுள்ளனர். இஸ்ரேலிய ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கைக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், ஹமாஸ் பிடியில் உள்ள 120 பணயக்கைதிகளையும் மீட்க வேண்டும் என்று இந்த குழு இஸ்ரேலிய ராணுவத்திற்கு நினைவூட்டியுள்ளது. மேலும், உயிருடன் இருக்கும் பணயக்கைதிகளுக்கு மறுவாழ்வு அளித்து, இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

ஒருபுறம், பணயக்கைதிகளை விடுவித்ததில் இஸ்ரேலில் கொண்டாட்டச் சூழல் நிலவுகிறது, ஆனால் மறுபுறம், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களின் சடலங்கள்,கோரத் தாக்குதலின் சுவடுகளீன் புகைப்படங்கள் வெளியாகின்றன.

பிபிசி வெரிஃபையின்படி, மத்திய காஸாவில் உள்ள பல இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் நஸ்ரத் பகுதி மிகவும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நான்கு பணயக்கைதிகளும் நஸ்ரத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

அல்-அக்ஸா மருத்துவமனை வெளியிட்டுள்ள காணொளியில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையின் தரையில் படுத்துக் கிடப்பதைக் காண முடிகிறது. மேலும் ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.

மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தப் பகுதியில் 400 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஹமாஸ் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

சர்வதேசத் தலைவர்கள் சொல்வது என்ன?

இஸ்ரேலின் மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பாலத்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அல்-நுஸ்ரத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 'இஸ்ரேலிய ராணுவத்தால் நடத்தப்படும் இனப்படுகொலை' பற்றி ஐக்கிய நாடுகள் சபை விவாதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

"காஸாவில் அரங்கேறி வரும் மற்றொரு படுகொலை சம்பவம் பற்றிய செய்திகள் நெஞ்சை பதற வைக்கின்றன. நாங்கள் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுப் பிரதிநிதி ஜோசப் போரல் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் பணயக் கைதிகளை விடுவிக்கும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை அமல்படுத்த முயற்சிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், பணயக் கைதிகளை விடுவிக்க ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே வழி என்று தீவிர வலதுசாரி கூட்டாளிகள் கூறினர்.

இஸ்ரேலிய ராணுவம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளில் சனிக்கிழமை நடந்த மீட்பு நடவடிக்கை மிகவும் வெற்றிகரமானதாகக் கருதப்படுகிறது, மேலும் இது அழுத்தத்தில் இருக்கும் நெதன்யாகுவுக்கு அடுத்தக்கட்ட செயல்பாடுகளை எளிதாக்கியுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலிய போர் துறை அமைச்சர் பென்னி கான்ஸ் சனிக்கிழமை தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டார்.

கான்ஸ் விரைவில் ராஜினாமா செய்யப் போவதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக, ஜூன் 8-ஆம் தேதிக்குள் காஸாவில் போருக்குப் பிந்தைய திட்டத்திற்கு நெதன்யாகு ஒப்புதல் அளிக்காவிட்டால், பதவி விலகப்போவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'இஸ்ரேல் சொந்த நிபந்தனைகளை விதிக்க முடியாது'

நஸ்ரத் முகாமுக்கு அருகே இஸ்ரேலிய பணயக்கைதிகள் மீட்கப்பட்ட செய்தியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் சோல்ஸ் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

நஸ்ரத்தில் இஸ்ரேலின் மீட்பு நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஹமாஸ் மீது இஸ்ரேல் தனது நிபந்தனைகளை விதிக்க முடியாது என்று கூறியுள்ளார். அனைத்து பாலத்தீனியர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதிக்காது என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 251 பேர் பிணைக் கைதிகளாக சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இந்த பணயக்கைதிகளில் 116 பேர் இன்னும் பாலத்தீனத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 41 பேர் உயிரிழந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு வார போர் நிறுத்தத்திற்கு ஈடாக 105 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இன்னும் 240 பாலத்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று, ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 36,801-ஐ எட்டியுள்ளது என்று கூறியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)