You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்திய வழக்கு விசாரணை - ஹண்டர் வழக்கின் பின்னணி
- எழுதியவர், ஆண்டனி சர்ச்சர்
- பதவி, பிபிசி வட அமெரிக்க நிருபர்
கைத்துப்பாக்கி உரிமம் பெறும் விண்ணப்பத்தில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக பொய் சொன்னதற்காக அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஜோ பைடனுக்கு பேரிடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத்தினருடன் எப்போதுமே நெருக்கமான பிணைப்பை கொண்டிருக்கும் பைடன், தன் மகனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள பேரதிர்ச்சி மற்றும் சோகத்தால், ஒரு குடும்பத் தலைவராக இரு மடங்கு துயரத்தை கொண்டிருக்கிறார்.
தற்போது அவரது மகன் அமெரிக்க சட்டத்துக்கு புறம்பான மூன்று குற்றங்களில் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளார். எனவே அவருக்கு நீண்ட கால சிறை தண்டனை கிடைக்கக்கூடும்.
அதே சமயம் ஹண்டர் பைடனுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, நவம்பர் தேர்தலில் அமெரிக்க மக்கள் வாக்களிக்கும் போக்கை மாற்ற வாய்ப்பில்லை.
வாக்குச் சீட்டில் இருக்கப்போவது ஹண்டரின் பெயரல்ல, அவருடைய தந்தையின் பெயர் தான். எனவே இந்த விவகாரம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மேலும் ஹண்டரின் குற்றங்களில் பைடனுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரை தொடர்புப்படுத்தும் எந்த ஆதாரமும இல்லை.
பொதுமக்கள் இது தொடர்பான வழக்கு விசாரணைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
"நான் ஒரு அப்பாவும் கூட.. "
ஹண்டரின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், பைடன் தனது இரட்டைக் கடமைகளை சுட்டிக்காட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
"நான் அதிபர், ஆனால் நான் ஒரு அப்பாவும் கூட" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் தனது மகனுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக கூறினார். மேலும் தன் மகன் உறுதியான ஆணாக வளர்ந்து நிற்பதை பார்த்து பெருமைக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
விசாரணையின் தொடக்கத்தில், ஜோ பைடன் மகனின் வழக்குகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று கூறினார். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, பைடன் தனது அரசுக் கடமைகளை மேற்கொண்டார். தேர்தல் பரப்புரைகளையும் செய்தார்.
ஆனால் வாரக்கணக்கில் நடைபெற்ற அவரது மகனின் நீதிமன்ற விசாரணை பற்றிய கேள்விகள், எங்கு சென்றாலும் அவரைப் பின்தொடர்ந்தன. அதே போன்று, ஹண்டர் தொடர்பான வழக்குகளும் தீர்ப்பும், இந்த மாத இறுதியில் நடக்கவுள்ள மிக முக்கியமான அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதத்திற்குத் தயாராகி வரும் பைடனுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
டிரம்ப் வழக்கு விசாரணையில் இருந்து பைடன் மகனின் வழக்கு வேறுபடுவது எப்படி?
பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற போது, முதல் இரண்டு ஆண்டுகள் அவரது மனைவி ஜில் பைடனின் பத்திரிகை செயலாளராக பணியாற்றிய மைக்கேல் லாரோசா, இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்தார் : "இது, நிச்சயமாக, எந்த ஒரு தந்தைக்கும் தனிப்பட்ட முறையில் அதிக பாதிப்பாக ஏற்படுத்தும்." என்கிறார்.
மேலும் பேசிய அவர், "ஒரு அதிபராக பைடன் அவரது கடமைகளில் இருந்து தவறமாட்டார். இவ்வழக்குகள் அவரை கடமையில் இருந்து திசைத்திருப்பாது. ஆனால் அது குடும்பத்தில் உணர்ச்சிகரமான பாதிப்பை ஏற்படுத்தும்.” என்றார்.
கடந்த வாரம் டி-டே (D-Day) நினைவேந்தல் நிகழ்வுக்காக பிரான்சில் இருந்தபோது, பைடன் தனது மகனை மன்னிக்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று கூறினார். மேலும் அவர் ஜூரியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக கூறினார். டொனால்ட் டிரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முறைக்கேடான வழக்கு என்று மறுத்ததற்கு மாறாக பைடனின் பேச்சு அமைந்திருக்கிறது.
ஹண்டர் பைடன் வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக டிரம்ப் இவ்வழக்கு கண் துடைப்பு என்று கூறினார். பரப்புரைக்காக வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், பைடன் குடும்பத்தினரால் செய்யப்பட்ட கடுமையான குற்றங்களில் இருந்து மக்களை திசைத்திருப்பவே ஹண்டர் மீது இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்றார் டிரம்ப்.
இதே கருத்தை பல குடியரசுக் கட்சியினரும் எதிரொலித்தனர். தெற்கு கரோலினாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நான்சி மேஸ், இந்த தீர்ப்பு "நியாயத்தின் மீது போர்த்தப்பட்ட முக்காடு" என்று கூறினார்.
டிரம்பின் வழக்கு விசாரணைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே சண்டையும் சச்சரவும் ஆக இருந்தது. குடியரசுக் கட்சி பிரமுகர்கள் தங்களின் முன்னாள் அதிபர் டிரம்பின் விசாரணை நடவடிக்கைகளை கண்டித்து கொண்டிருந்தனர்.
ஹண்டரின் வழக்கு விசாரணை வேறுபட்ட உணர்வைக் கொண்டிருந்தது, ஒரு பைடன் குடும்பம் ஒரு இருண்ட காலத்தை சந்திக்க தயாராக இருப்பதை பிரதிபலித்தது. அவர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தவில்லை.
ஹண்டர் பைடன் போதைக்கு அடிமையானது ஏன்?
ஹண்டர் பைடன் தனது சகோதரர் பியூ மூளை புற்றுநோயால் இறந்த காலக்கட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானார். விசாரணையின்போது, ஹண்டரின் நினைவுக் குறிப்புகள், அவரது குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் சாட்சியங்கள் ஆகியவற்றின் மூலம் போதைப் பழக்கத்துடனான அவரது போராட்டம் தெரியவந்தது. மேலும் ஹண்டரின் போதை பழக்கம் அவரது குடும்ப உறவுகளின் ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும் விசாரணைகளின் போது வலி மிகுந்த சாட்சியங்களாக வழங்கப்பட்டன.
வழக்கு விசாரணையின் எல்லா நேரங்களிலும், ஹண்டர் பைடனின் குடும்ப நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள், அவரின் தாய் ஜில் பைடன் மற்றும் அவரது மனைவி மெலிசா கோஹன் உட்பட அனைவரும் அவருக்குப் பின்னால் அமர்ந்து, அவரை பார்த்து கொண்டனர். சில சமயங்களில் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தனர். விசாரணையின் இடைவேளையின் போது அவரது கைகளை பிடித்து தைரியம் சொன்னார்கள். வழக்கறிஞரின் இறுதி வாதங்களின் போது அவரது சகோதரி ஆஷ்லே அழுதார்.
"நானும் எனது மனைவி ஜில்லும் எப்போதும் எங்கள் அன்பு மற்றும் ஆதரவை ஹன்டருக்கும் எங்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுப்போம். எந்த சூழலிலும் இது மாறாது" என்று பைடனின் தீர்ப்புக்கு பிந்தைய அறிக்கையின் முடிவில் எழுதப்பட்டிருந்தது.
அரசு தரப்பு வழக்கறிஞர் அவரது இறுதி வாதத்தின் போது, இது மிகப்பெரிய வழக்கு என்றும், ஹண்டர் பைடன் ஒரு கைத்துப்பாக்கிக்கான அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தபோது, அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று தெரிந்தே பொய் சொல்லி இருக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இறுதியில், நீதிக் குழு (Jury) ஹண்டர் மீது தவறு இருப்பதை உறுதி செய்தது. இதனால் ஹண்டர் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கக்கூடும்.
ஹண்டர் பைடன் அதிபர் பைடனின் முதல் மனைவியின் மகன் ஆவார். அரை நூற்றாண்டுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் தனது கைக்குழந்தையுடன் பைடனின் முதல் மனைவி இறந்து போனார். கார் விபத்தில் ஹண்டரும் அவரது சகோதரர் பியூவும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். ஆனால் பியூ சில ஆண்டுகளுக்கு பிறகு நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். முதல் மனைவியின் ஒரே வாரிசாக இருப்பது ஹண்டர் மட்டும் தான்.
ஹண்டர் பைடன் தற்போது தண்டனைக்காக காத்திருக்கிறார். ஆனால் நீதிமன்றம் தனது தண்டனையை முடிவு செய்த பிறகும் அவருக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிந்துவிடாது. 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மத்திய வருமான வரியாக செலுத்தத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் செப்டம்பர் மாதம் மேலும் ஒரு வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார்.
தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணை டெலாவேர் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளை கொண்டிருக்காது. ஆனால் அது அதிபருக்கு அரசியல் ரீதியாக அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஹண்டரின் வெளிநாட்டு வணிக பரிவர்த்தனைகள் மற்றும் அதிபருடனான நிதி உறவுகள் பற்றி எதிரணியான குடியரசுக் கட்சி விமர்சகர்களால் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டும் ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது.
போதைப் பழக்கமும் அது ஏற்படுத்தும் விளைவுகளும் பல அமெரிக்கர்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. எனவே ஹண்டர் பைடனின் வழக்கு மக்கள் மத்தியில் அனுதாப அலையை ஏற்படுத்தியது. எவ்வாறாயினும், நிதி முறைகேடு மற்றும் வரி மோசடி குற்றச்சாட்டுகள் வாக்களிக்கும் பொதுமக்களிடமிருந்து பெரிதாக அனுதாபத்தை உருவாக்காது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)