You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெளிநாடுகளில் மருத்துவம் முடித்து, இந்திய தேர்வில் தோல்வியடைந்த 73 பேர் மீது சிபிஐ வழக்கு - முழு விவரம்
வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் முடித்து இந்தியாவில் மருத்துவர் ஆவதற்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ள மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 62 பேர் மற்றும் முறைப்படி இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாத 12 பேர் உள்பட மொத்தம் 73 பேருக்கு எதிராக இந்திய புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இன்று இந்தியா முழுவதும் சிபிஐ அதிகாரிகள் 91 இடங்களில் சோதனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி ஆகிய இரண்டு இடங்களிலும் இந்தச் சோதனை நடந்துள்ளது.
மதுரை புறநகரைச் சேர்ந்த விக்னேஷ் வெள்ளைக்கண்ணு, ரஷ்யாவில் மருத்துவ முதுகலை படிப்பை 2009இல் முடித்துள்ளார். இவர் பிஹார் மருத்துவ கவுன்சிலில் 2020இல் மருத்துவராகப் பதிவு செய்துள்ளார். ஆனால், 2018இல் இந்தியாவில் நடந்த மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் வசிக்கும் சீயர்ஸ் சாமுவேல் எந்பவர் 2007இல் ரஷ்யாவில் மருத்துவ முதுகலை பட்டம் முடித்து பிஹார் மருத்துவ கவுன்சிலில் 2019இல் பதிவு செய்திருக்கிறார். ஆனால், இவர் 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
இந்தக் காரணங்களுக்காக இந்த இருவரது வீடு மற்றும் மருத்துவ நிலையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
உண்மை வெளிவந்தது எப்படி?
இந்த விவகாரத்தில் இந்திய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ கல்விக் கொள்கைத் துறை இளநிலை செயலாளர் சுனில் குமார் குப்தா கடந்த அக்டோபர் 31ஆம் தேதி இரண்டு கடிதங்களை சிபிஐ தலைமையகத்துக்கும் தேசிய மருத்துவ அறிவியல் வாரியத்துக்கும் அனுப்பியிருந்தார்.
அதில் இந்தியா முழுவதும் வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் முடித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற கட்டாயமாக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மருத்துவ பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதபோதும், சில மாநில மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் உதவியுடன் மருத்துவராகப் பதிவு செய்து கொண்டு பணியாற்றி வருவதாகவும் இவ்வாறு 62 பேர் கண்டறியப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இது தவிர வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் முடித்த 11 பேர் முறையாக இந்தியாவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் தங்களுடைய முந்தைய கல்வித் தகுதியை மட்டும் வைத்து மாநில மருத்துவ கவுன்சில்களில் பதிவு செய்து கொண்டுள்ளதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
91 இடங்களில் சோதனை
இது குறித்து இந்திய புலனாய்வுத் துறையிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இதையடுத்து கைலாஷ் சாஹு என்ற காவல் துணை கண்காணிப்பாளரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டு அவரது தலைமையிலான குழுவினர் இன்று நாடு முழுவதும் 91 இடங்களில் சோதனை நடத்தினர்.
வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் முடித்த இந்தியர்கள் பலரும் யுக்ரேன், ரஷ்யா, ஆர்மேனியா, சீனா, நேபாளம், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், ருமேனியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் 2000 முதல் 2020ஆம் ஆண்டுக்கு இடையே படித்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
மருத்துவ கவுன்சில் ஊழியர்கள் மீதும் வழக்கு
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ செய்தித்தொடர்பாளர் கவுரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "இந்திய மருத்துவப் பணி விதிகளுக்கு முரணாக முறைகேடாகப் பதிவு செய்து கொண்டுள்ள 73 பேருக்கு உதவியதாக தேசிய மருத்துவ கவுன்சில், அசாம், பிகார், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, டெல்லி ஆகிய இடங்களில் உள்ள மருத்துவ கவுன்சிலில் பணியாற்றி வரும் பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் பெயரிலும் இந்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது," என்று கூறினார்.
"இந்த சோதனையின்போது மருத்துவர் தொழிலில் சேருவதற்காகப் போலியாகச் சிலர் வாங்கிய மருத்துவ பதிவுச் சான்றிதழ்கள், பட்டப்படிப்பு சான்றிதழ்களையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்," என்று சிபிஐ செய்தித்தொடர்பாளர் கவுர் தெரிவித்தார்.
வெளிநாட்டில் மருத்துவம் முடித்தவர்களுக்கு இந்தியாவில் என்ன கட்டுப்பாடு?
இந்தியாவை பொறுத்தவரை எந்தவொரு வெளிநாட்டில் மருத்துவ பட்டம் முடித்திருந்தாலும், இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டுமானால், அவர்கள் தகுதிகாண் தேர்ச்சி ஒழுங்குமுறை சட்டம்-2002இன்படி எஃப்எம்ஜிஇ எனப்படும் வெளிநாடு மருத்துவ பட்டம் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
2002ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகு இத்தகைய மாணவர்கள் இந்தத் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலில் தங்களைப் பதிவு செய்து கொண்டு மருத்துவர் தொழிலை மேற்கொள்ள முடியும்.
முன்னதாக, இந்தத் தேர்வை நடத்தும் அமைப்பான தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (என்பிஇஎம்எஸ்) தேர்வு முடிவுகளை மாநில மருத்துவ கவுன்சிலுக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அனுப்பி வைக்கும். அதன் அடிப்படையிலேயே மருத்துவர்களுக்கான பதிவு எண் வழங்கப்படும்.
இந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் கவனத்துக்கு வராமலேயே சில மாநிலங்களில் உள்ள மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் உதவியுடன் சிலர் முறைகேடாக தங்களை மாநில மருத்துவ கவுன்சிலில் மட்டும் பதிவு செய்துகொண்டு மருத்துவராகப் பணியாற்றி வருவது தெரிய வந்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்