ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னை நினைவாகக் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை

    • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவுக்காக நடந்த சீரமைப்பு பணியின் போது ஒரு பாதாள அறை வெளிப்பட்டது.

பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சோழர்கால மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் (பஞ்சவன்மாதேவி ஈஸ்வரம்) உள்ளது.

இந்த பழமை வாய்ந்த சோழர் கால கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவிலை தூய்மைப்படுத்தி தளம் சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

குடமுழுக்கு விழா பணிகள்

கடந்த திங்கள்கிழமை (10-03-2025) பிரகாரப் பகுதியில் தளம் போடும் பணி செய்து கொண்டிருந்த பணியாளர்கள் மண்வெட்டி கடப்பாரை கொண்டு தரையில் குத்தியபோது வித்தியாசமான ஓசை கேட்டுள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் தட்டிய போது எழுந்த ஓசை மாறுபடவே பணிகளை உடனடியாக நிறுத்தினர். கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவியிடம் தகவலைக் கூறி அவரையும் அழைத்து வந்து தரையைத் தோண்டினர்.

''அப்போது அப்பகுதி உள்வாங்கியது. பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்த பொருட்களை அகற்றியபோது அங்கு கருங்கல்லில் கட்டப்பட்டு மூடப்பட்ட பாதாள அறை வெளிப்பட்டது.'' என்றார் இக்கோவிலின் செயல் அலுவலர் நிர்மலா தேவி.

''விரைவில் பாதாள அறையின் உள்ளே இறங்கி ஆய்வு மேற்கொள்ளப்படும்" எனவும் அவர் கூறினார்.

மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் தகவல் தரப்பட்டுள்ளதாகவும், வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் வந்து பார்வையிட்டதாகவும் நிர்மலா தேவி பிபிசி தமிழிடம் கூறினார்.

பிபிசி தமிழிடம் பேசிய விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், "இக்கோவில் ராஜராஜசோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவி என்பவரின் பள்ளிப்படை கோயிலாகும்" என்று கூறினார்.

"பஞ்சவன்மாதேவி தனது கணவரான ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் மீது அதீத பாசம் கொண்டு அவரை தனது சொந்த மகனாக வளர்த்து வந்தார்.

அந்த அளவற்ற பாசத்தின் வெளிப்பாடாக தனது சிற்றன்னையின் நினைவாக (பஞ்சவன் மாதேவி ஈஸ்வரம்) மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோயிலை ராஜேந்திரசோழன் கட்டியதாக கூறிய பேராசிரியர் ரமேஷ் தொடர்ந்து கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ரகசிய பாதாள அறை குறித்து விவரித்தார்.

பாதாள நிலவறை

"கோவிலில் தற்போது வெளிப்பட்டுள்ள பாதாள அறை தரைப்பகுதி மட்டத்திலிருந்து சுமார் 8 அடி ஆழத்தில் உள்ளது. இதன் நீளம் 15 அடியாக உள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் கண்டறியப்பட்டுள்ள இந்த பாதாள அறை எதிரிகள் படையெடுப்புகளின் போது விக்கிரகங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்" என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.

இந்த நிலவறை அமைப்பு 14-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

"தொல்லியல்துறையினர் ஆய்விற்கு பின்பு, பாதாள அறையில் உள்ள மண்ணை வெளியே எடுத்தால் தான் அறையில் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளதா? இது எதுவரை செல்கின்றது உள்ளிட்ட பிற தகவல்கள் தெரியவரும்" என்றார் பேராசிரியர் ரமேஷ்.

பள்ளிப்படை என்றால் என்ன?

''பள்ளிப்படை என்பது சைவ சடங்குகளின்படி, இறந்தவரின் அஸ்தி புதைக்கப்பட்ட இடத்தின் மேல் சிவலிங்கம் வைத்து வழிபடுவதாகும். பள்ளிப்படையை மிக நெருக்கமான, நேசிக்கப்பட்ட ஒருவர் இறந்து விட்டால் அவர்களுக்காக கட்டப்படும் கோவில் என்றும் கூறலாம்'' என்கிறார் பேராசிரியர் ரமேஷ்‌.

''ராஜேந்திர சோழனின், ஏழாம் ஆட்சியாண்டில் ( கி.பி .1021) கட்டப்பட்ட இந்த கோவில் கருவறை பகுதியில் மிகப்பெரிய கல்வெட்டு காணப்படுகிறது. கோவிலில் பூஜைகள் தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்றதை இந்த கல்வெட்டு மிக விரிவாக தெரிவிக்கின்றது" என்கிறார் ரமேஷ்.

தொடர்ந்து பேசிய அவர், "தினமும் பூஜை நடத்துவதற்காக ஓதுவார்கள், மேளம் வாசிப்பவர்கள், சைவ பிராமணர் ஒருவர், கணக்கு வழக்குகளைப் பார்ப்பவர் ஒருவர், பொருளாளர் ஒருவர், காவலர் ஒருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பணிகள், கொடுக்க வேண்டிய ஊதியம் ஆகியவை இந்த கோவிலில் அமைந்துள்ள கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

ராஜேந்திரன் மற்றும் அவரது சிற்றன்னை பிறந்த நட்சத்திரமான திருவாதிரை நாளில் விஷேசப் பூஜை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது சாமிக்குப் படைக்க வேண்டிய உணவு வகைகள் என்ன என்பது கல்வெட்டில் கூறப்பட்டு இருக்கிறது என்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.

பழுவேட்டரையர் மகள்

பிபிசி தமிழிடம் பேசிய கல்வெட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன், "சோழ மன்னர்கள் வரிசையில் முதலாம் ராஜராஜனின் மனைவியே பஞ்சவன்மாதேவி. இவர் சேர குறுநில மன்னர்களுள் ஒருவராகிய பழுவேட்டரையரின் மகள். திருச்சி மாவட்டம் உடையார்குடி தாலுகாவில் உள்ள பழுவூரே இவரின் ஊராகும்.

இந்த கோயில், பஞ்சவன்மாதேவி மறைந்த பிறகு, ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் தன் சிற்றன்னைக்காக கட்டிய பள்ளிப்படை கோவிலாகும்'' என்றார்.

"பழுவேட்டரையரின் மகள் என்பதால் பஞ்சவன்மாதேவி பிறந்த மண்ணின் கலைத்திறன் இக்கோவிலில் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோவில் கடந்த காலங்களில் 'பஞ்சவன் மாதேவிஈஸ்வரம்' என்று அழைக்கப்பட்டது" என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)