You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய விடுதலைக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் இங்கே அமலில் இருந்த 'முண்டச்சி வரி' பற்றி தெரியுமா?
- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியா சுதந்திரம் அடைந்து, பல ஆண்டுகளுக்கு பிறகும் கூட தமிழ்நாட்டில் கல்வராயன் மலை கிராமங்களில் கணவரை இழந்த பெண்கள் வரி செலுத்தி வந்துள்ளனர்.
இந்தியா விடுதலை அடைந்த பிறகும் கூட கல்வராயன் மலையில் இருந்த பல கிராமங்கள் ஜாகிர்தார்களால் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டதே இதற்குக் காரணம். 'முண்டச்சி வரி' என்ற அந்த வரியை கணவனை இழந்த பெண்கள் கட்டியே தீர வேண்டிய நிலை 1976-ஆம் ஆண்டு வரை நீடித்திருக்கிறது. என்ன நடந்தது?
"காட்டை விற்று முண்டச்சி வரி கட்டினார்"
சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரந்து கிடக்கிறது கல்வராயன் மலை. இங்குள்ளது வெள்ளரிக்காடு கிராமம். அங்கிருக்கும் மலைக் காட்டில் வேலையை முடித்துவிட்டு வந்து அமர்ந்த தீர்த்தனும் அவர் மனைவி சின்னம்மாவும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த நிலைமையை நினைவுகூர ஆரம்பித்தனர்.
"எனது தந்தை வழித் தாத்தா இறந்துவிட்டார். அதற்குப் பிறகு அவரது மனைவி அதாவது என் பாட்டி மறுமணம் ஏதும் செய்யவில்லை. அவர் கணவரை இழந்தவராகவே இருந்ததால், வரி கட்டும்படி சொன்னார்கள். அந்த சமயத்தில் காட்டில் விளைச்சல் இல்லாததால், அவரால் அந்த வரியைச் செலுத்த முடியவில்லை. இதனால், அவர் தனது காட்டை விற்று, துரையிடம் அந்த வரியைக் கட்டினார்" என்கிறார் தீர்த்தன்.
"இங்கிருக்கும் வயதான பெண்கள் யாரைக் கேட்டாலும் அந்த வரியைப் பற்றிச் சொல்வார்கள். கணவனை இழந்தவர்கள் கட்ட வேண்டிய வரி என்பதால், அதனை முண்டச்சி வரி என்பார்கள்" என்கிறார் தீர்த்தனின் மனைவியான சின்னம்மா.
- பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன் கொடுத்த இந்திய வணிகரைப் பற்றி தெரியுமா?
- பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை
- தரங்கம்பாடி: 400 ஆண்டுகள் கடந்தும் உறுதியாக நிற்கும் 'டேனிஷ்' கோட்டை எதற்காக கட்டப்பட்டது?
- பிரான்சில் பிரிட்டிஷார் பிடியில் இருந்து தப்ப, கப்பலில் இருந்து கடலில் குதித்த சாவர்க்கர் - என்ன நடந்தது?
அருகில் உள்ள பாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தேனிக்கு தற்போது 75 வயதாகிறது. "எனக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். கணவர் இறந்த பிறகு நான் மறுமணம் செய்துகொள்ளவில்லை. அப்போது முண்டச்சி வரி இருந்தது. ஆனால், இந்தப் பகுதி தமிழ்நாட்டு அரசின் கீழ் வந்ததும் அது நிறுத்தப்பட்டது" என நினைவுகூர்கிறார் அவர்.
மேல் பாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டியான அம்மாசிக்கு ஆறு குழந்தைகள். கடைசிக் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே அவரது கணவர் இறந்துவிட்டார். "எனக்காக எனது சின்னம்மா இந்த முண்டச்சி வரியைச் செலுத்தினார் என்பது நினைவிருக்கிறது" என்கிறார் அம்மாசி.
இந்தியா சுதந்திரமடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் கல்வராயன் மலைப் பகுதி கிராமங்கள் ஜாகிர்தார்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்துவந்தன. 1918-ஆல் பதிப்பிக்கப்பட்ட மெட்ராஸ் கெஸட்டியர், இந்த கல்வராயன் மலைகளில் இருந்த நிர்வாக முறை குறித்த சில தகவல்களைத் தருகிறது.
இந்த கல்வராயன் மலைப் பகுதிகள், ஐந்து ஜாகிர்களாக பிரிக்கப்பட்டிருந்தன:
- சின்ன கல்வராயன் நாடு
- பெரிய கல்வராயன் நாடு
- ஜடய கவுண்டன் நாடு
- குறும்ப கவுண்டன் நாடு
- ஆரியக் கவுண்டன் நாடு
இந்த ஐந்து ஜாகிர்களும் பாரம்பரியமாக மலையாளி வம்சத்தைச் சேர்ந்த தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டன. இவர்களின் கட்டுப்பாட்டில், இந்தப் பகுதி எப்படி வந்தது என்பது குறித்து பல்வேறு கதைகள் இருந்தாலும், உறுதியான வரலாற்றுத் தகவல்கள் இல்லை.
ஆனால், ஜடய கவுண்டர் வம்சத்தினரிடம் இருந்த இரண்டு செப்புப் பட்டயங்கள், இந்தப் பகுதி மீதான விஜயநகர மன்னர்களின் அதிகாரத்தை சுட்டிக்காட்டுகின்றன. இதில் ஒரு செப்புப் பட்டயம் கிருஷ்ணதேவராயர் காலத்தையும் மற்றொன்று அச்சுததேவராயர் காலத்தையும் சேர்ந்தது என்கிறது மெட்ராஸ் கெஸட்டியர்.
இந்த ஜாகிர்கள் தங்கள் வருவாய்க்கென பல்வேறுவிதமான வரிகளை அங்கு வசித்த மக்கள் மீது விதித்தனர்.
"கொடுவாள் வரி, குடி வரி, வீட்டு வரி, வெள்ளாடு வரி, மாட்டு வரி, புனல் காடு வரி, புல் வரி, கூட்டு வரி, நாட்டு வரி, ஏர் வரி, திருமண வரி,காவாலி வரி (திருமணம் ஆகாதவர்களுக்கான வரி) முண்டச்சி வரி (கணவனைப் பிரிந்தவர்கள், இழந்தவர்களுக்கான வரி) என 15க்கும் மேற்பட்ட வரிகள் வசூலிக்கப்பட்டதாகக் கூறுகிறார் கிழக்குத் தொடர்ச்சி மலை காராள வம்சம் நூலின் ஆசிரியரான எழுத்தாளர் செழியன்.
எங்கள் மலையில் ஒரு பெண், துணையில்லாமல் இருக்கக் கூடாது என்பது வழக்கமாக இருந்தது என்கிறார் தொரடிப்பட்டைச் சேர்ந்த கோனம்மாள்.
"மணமாகிச் செல்லும் பெண்கள் கணவனைப் பிடிக்காமல் பிறந்த வீட்டிற்கே வந்துவிட்டாலோ, கணவன் இறந்து விட்டாலோ உடனடியாக அவளுக்கு மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள். அதை, கல்யாணம் என்று சொல்லாமல், 'நூல் போடுதல்' என்று குறிப்பிடுவார்கள். வயதான நிலையில் கணவன் இறந்து விட்டாலோ, கணவனை இழந்த பெண்கள் திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளாவிட்டாலோ அவர்கள் ஜாகிருக்கு 'முண்டச்சி வரி' செலுத்த வேண்டும்" என்கிறார் கோனம்மாள்.
ஜாகிர் வம்சத்தினர் இப்போது என்ன செய்கின்றனர்?
புதுப்பாலப்பட்டு ஜாகிர்தார் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் சின்னைய குறும்ப கவுண்டர் தற்போது புதுப்பாலப்பட்டு மலைப் பகுதியின் ஓரத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்துவருகிறார்.
"எனது தாத்தா காலம் வரை ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் எங்களுக்கு சொந்தமாக இருந்தன. எங்களது அரண்மனையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்தனர். 15க்கும் மேற்பட்ட வரிகளை மக்களிடம் இருந்து பெற்றதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது" என நினைவுகூர்ந்தார் அவர்.
ஜாகிர்தார்களின் அரண்மனை இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார் சின்னைய குறும்பக் கவுண்டர். ஒரு காலத்தில் மிகப் பிரமாண்டமாக இருந்திருக்கக் கூடிய அந்த அரண்மனை தற்போது பாதிக்கு மேல் இடிந்து கிடக்கிறது. குளிப்பதற்கு தனியே கிணறு, குதிரை கொட்டடி,வேலைப்பாடுகளுடன் அமைந்த உட்புற சுவர் என சிதிலமடைந்த அந்த அரண்மனை ஆச்சரியத்தை அளிக்கிறது.
இந்தப் பகுதிகள் எப்போது தமிழக அரசின் கீழ் வந்தன?
இது தொடர்பாக 2014ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வியெழுப்பிய போது, "1963ஆம் ஆண்டின் அடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ், 1976ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இந்தப் பகுதிகள் தமிழக அரசின் கீழ் கொண்டுவரப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணத்திற்குப் பிறகு, அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக தானே முன்வந்து ஒரு வழக்கை விசாரித்தது சென்னை உயர் நீதிமன்றம். அந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த வனத்துறை, ஜாகிர்தார்களால் வனத்தின் வளம் சுரண்டப்பட்டதாக தெரிவித்தது. அந்த வழக்கில் கல்வராயன் மலைகள் தமிழக அரசின் கீழ் வந்தது தொடர்பாக மேலும் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
அதாவது, 1963ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் கல்வராயன் மலையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர, தமிழ்நாடு அரசு 1965ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஜாகிர்தார்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு 1976-ல்தான் தமிழக அரசுக்கு சாதகமாக முடிவுக்கு வந்தது என தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டுடன் கல்வராயன் மலைப்பகுதி இணைக்கப்பட்டதும் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் இப்பகுதியில் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக வெளியுலக தொடர்பு இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டது. பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.
"சில வருடங்களுக்கு முன்பாக இந்த மலைப்பகுதியில் இருந்த 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் கணவர் இல்லாத பெண்களே கிடையாது. கணவரை இழந்தவர்களாக இருந்தால் அவர்கள் முண்டச்சி வரி கட்ட வேண்டும் என்பதால் அதற்கு பயந்து பிடித்தோ, பிடிக்காமலோ மறுமணம் செய்துகொண்டனர்." என்கிறார் செழியன்.
தற்போது, அந்தப் பகுதியில் மலைவாழ் மக்களின் நலனுக்காக பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த். இந்த மலையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் என 1,565 மகளிருக்கு தமிழ்நாடு அரசு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதாக தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)