பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன் கொடுத்த இந்திய வணிகரைப் பற்றி தெரியுமா?

    • எழுதியவர், வக்கார் முஸ்தபா
    • பதவி, பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர்

மேற்கு இந்தியாவில் முகலாய ஆட்சியிலிருந்து சுதந்திரமாக மராட்டிய அரசாங்கத்தை நிறுவிய சிவாஜி, 1664 இல் குஜராத்தில் உள்ள சூரத் மீது படையெடுத்து, அங்கு வணிகரும் கடன் கொடுப்பவருமான விர்ஜி வோராவின் 50,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் அல்லது 6,50,000 வெள்ளி ரூபாய் மதிப்புள்ள சொத்தை கொள்ளையடித்தார்.

பொருளாதார நிபுணர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் பிரேம் சங்கர் ஜாவின் கூற்றுப்படி, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் சூரத்தைச் சேர்ந்த விர்ஜி வோரா, ஆமதாபாத்தின் சாந்திதாஸ் மற்றும் வங்காளத்தைச் சேர்ந்த ஜகத்சேத் குடும்பம் போன்ற வணிகர்களும் கடன்கொடுப்பவர்களும் அளவுக்கதிகமான செல்வம் சேர்த்திருந்தனர்.

மேலும், அவர்கள் இத்தாலிய நகரமான வெனிஸின் வணிகர்களையும் விஞ்சி, செல்வத்தை குவிந்திருந்தனர் என்றும் அறியப்படுகின்றது.

பிரேம் சங்கர் ஜா தனது 'Crouching Dragon, Hidden Tiger' என்ற புத்தகத்தில் "அவர்கள் தங்களை ஆண்ட மன்னர்கள் மற்றும் நவாப்களை விட பணக்காரர்களாக மாறினர்" என்று எழுதியுள்ளார்.

மராத்தா கொள்ளைச் சம்பவத்துக்குப் பிறகு, அந்த நேரத்தில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனிப்பட்ட சொத்துக்களை கொண்டிருந்த வீர்ஜி வோராவுக்கு, மீண்டு எழ அதிக காலம் எடுக்கவில்லை.

மொத்த வர்த்தகம், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கித் துறையில் ஈடுபட்டிருந்தார் வோரா.

சூரத்துக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களில் அவருக்கு ஏகபோக உரிமை இருந்தது. மேலும் மசாலா பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளி, பவளம், தந்தம், ஈயம் மற்றும் ஒப்பியம் போன்றவற்றையும் அவர் வர்த்தகம் செய்தார்.

முகலாய காலத்தில், சூரத்தின் சுபேதாருடன் வோராவின் உறவுகள் மிகவும் சுமுகமாக இருந்தன என்றும் அறியப்படுகின்றது.

வோரா கைது செய்யப்பட்டபோது என்ன நடந்தது?

'வரலாற்றுப் பார்வையில் இந்திய வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர்' என்ற தனது புத்தகத்தில், இந்திய வணிகர்களின் வரலாற்று பின்னணியை மதிப்பாய்வு செய்து மகரந்த் மேத்தா எழுதியுள்ளார்.

"சூரத்தின் ஆளுநரான மிர் மூசா ஆங்கிலேயர்களுடன் வர்த்தகம் செய்தார்."

"அவர்களுடன் நல்லுறவைப் பேணுவதற்காக, மிர் மூசா வர்த்தகம் செய்த அதே பொருட்களில் ஆங்கிலேயர்களுடன் வோரா வர்த்தகம் செய்யவில்லை. பின்னர், 1642 ஆம் ஆண்டில், மிர் மூசா வோராவுக்கு பவளப்பாறைகளை வாங்க உதவினார்.

1643 ஆம் ஆண்டில், வோரா அவருடனான உறவுகளைப் பயன்படுத்தி பவளப்பாறை, மிளகு மற்றும் பிற பொருட்களின் மீதான தனது ஏகபோகத்தை நிறுவினார்" என்று மகரந்த் மேத்தா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "ஒருமுறை, மிர் மூசா இல்லாத நேரத்தில், சூரத்தின் சுபேதார் அனைத்து மிளகையும் பறிமுதல் செய்து, வியாபாரிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக பணம் வசூலித்தார், இது வோராவுடனான அவரது தகராறிற்கு வழிவகுத்தது" என்றும் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

"1638 ஆம் ஆண்டில், 50 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வோரா சிறையில் அடைக்கப்பட்டார். ஷாஜஹானின் நீதிமன்றத்தில் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் வோரா மறுத்தார். பேரரசர் அவரை விடுவித்து சுபேதாரை பணிநீக்கம் செய்தார்."

அது மட்டுமின்றி, வோரா ஷாஜகானுக்கு நான்கு அரேபிய குதிரைகளை வழங்கியதாகவும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ண கோவிந்த் கோகலே 'மெர்ச்சண்ட் பிரின்ஸ் விர்ஜி வோரா' எனும் புத்தகத்தில் வோரா குடும்பம் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் துறைமுக நகரங்களிலும் கிளைகளைக் கொண்டிருந்ததாக எழுதியுள்ளார்.

மேத்தாவின் கூற்றுப்படி, வோரா பெரும்பாலும் சிறப்பு கிராம்புகளின் முழு சரக்குகளையும் வாங்கி, பின்னர் அவற்றை மற்ற இந்திய மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு தனது சொந்த விதிமுறைகளின்படி விற்பார் என்று அறியப்படுகின்றது.

1643ம் ஆண்டு ஜூலை 18ம் தேதியிட்ட ஆங்கில தொழிற்சாலை பதிவு ஒன்று, 'ஐரோப்பிய பொருட்களுக்கு பிரத்யேக உரிமை வைத்திருந்த ஒரே வியாபாரி' என்று அவரை விவரிக்கிறது.

மேலும் ஐரோப்பிய வணிகர்களுக்கும் உள்ளூர் சிறு வணிகர்களுக்கும் இடையிலான பரிமாற்றங்களை வோரா கட்டுப்படுத்தியதாகவும், தனது சொந்த விருப்பங்கள் மற்றும் நோக்கங்களுக்கு ஏற்ப 'நேரத்தையும் விலையையும்' நிர்ணயித்ததாகவும் அந்தப் பதிவு கூறுகிறது.

பிரிட்டிஷ் மற்றும் டச்சு கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு கடன் கொடுத்த இந்தியர்

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியும் டச்சு கிழக்கிந்திய கம்பெனியும் அவரிடமிருந்து கடன் வாங்கின.

மேலும், வோரா ஒருபோதும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடன் போட்டியிடவில்லை என்று மேத்தா எழுதியுள்ளார்.

ஆனால், சூரத்தில் அதற்கு அதிக அளவில் கடன் வழங்குபவராகவும் வாடிக்கையாளராகவும் அவர் இருந்துள்ளார்.

இருதரப்பும் அடிக்கடி பரிசுகளையும் கடிதங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

மேலும் வோரா விதித்த அதிக வட்டி விகிதங்கள் குறித்து பிரிட்டிஷ் அதிகாரிகள் அடிக்கடி புகார் தெரிவித்தனர், இது மாதம் 1 முதல் 1.5 சதவீதம் வரை இருந்தது என்றும் தெரியவருகிறது.

கோகலேவின் கூற்றுப்படி, "சூரத் நகரில் கடுமையான பணப் பற்றாக்குறை உள்ளது. விர்ஜி வோரா ஒருவரே உரிமையாளர்" என்று ஒரு ஆங்கிலப் பதிவு கூறுகிறது.

இந்தியாவில் உள்ள டச்சு கிழக்கிந்திய கம்பெனியும் அதன் மூலதனத்தின் பெரும்பகுதியை விர்ஜி வோரா மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான சாந்திதாஸ் சவேரியிடமிருந்து பெற்றதாக ஆர்.ஜே. பிராண்ட்ஸ் தனது 'தி அரேபியன் சீஸ்: தி இந்தியன் ஒசன் வேர்ல்ட் ஆஃப் தி செவந்த் செஞ்சுரி' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

கோகலேவின் கூற்றுப்படி, வோரா தனிப்பட்ட வணிகத்திற்காக பல ஆங்கில வணிகர்களுக்கு பணம் கடன் கொடுத்தார்.

டச்சு வர்த்தக அறிக்கைகளின்படி, சூரத்தின் வர்த்தகத்தில் வோராவின் ஆளுமை ஐரோப்பிய வர்த்தகர்களுக்கு ஒரு நிரந்தரத் தடையை உருவாக்கியது.

1670 வாக்கில், வோராவுக்கு வயதாகிவிட்டது.

அதே ஆண்டில் சூரத்தின் மீது சிவாஜியின் இரண்டாவது படையெடுப்பு அவருக்கு மற்றொரு பெரிய இழப்பை ஏற்படுத்தியது.

1670க்கு பிறகு ஆங்கிலேய மற்றும் டச்சு ஆவணங்களில் இடம்பெற்ற சூரத்தின் வர்த்தகர்கள் மற்றும் தரகர்கள் பற்றிய குறிப்புகளில் வோரா இடம்பெறவில்லை.

மேத்தாவின் கூற்றுப்படி, 1670 க்குப் பிறகு வோரா உயிருடன் இருந்திருந்தால், அவர் ஆங்கில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பார்.

எனவே, வோரா 1670 இல் இறந்திருக்கலாம் என்று அவர் ஊகிக்கிறார்.

ஆனால் வோரா அந்தத் தொழிலில் இருந்து ஓய்வு பெற்று, தனது பேரன் நான்சந்திடம் தொழிலை ஒப்படைத்திருக்கலாம் என்று கோகலே நம்புகிறார். கோகலேவைப் பொறுத்தவரை, வோரா 1675 இல் இறந்துவிட்டார்.

சாந்திதாஸ் - அரச நகை வியாபாரி

இப்போது சாந்திதாஸைக் குறித்து அறிந்துகொள்ளலாம்.

மேத்தாவின் கூற்றுப்படி, ஒரு அரச நகை வியாபாரியாக, அவருக்கு முகலாய அரசவை மற்றும் அரச குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள சிறப்பு அனுமதி இருந்தது.

நகை வியாபாரத்தில் புகழ் பெற்றவராக இருந்த சாந்திதாஸ், முகலாய அரச குடும்பத்தினர் மற்றும் சமூகத்தில் உயர்மட்டத்தில் இருந்த பணக்காரர்களுடன் நகை வியாபாரத்தில் ஈடுபட்டார்.

பேரரசர் ஜஹாங்கிர் மற்றும் தாரா ஷிகோ ஆகியோரின் ஆணைகளில், அவர் குறிப்பாக அரச குடும்பத்திற்கு நகைகளை வழங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆங்கில தொழிற்சாலை பதிவுகளில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, டச்சு, பாரசீக மற்றும் அரபு வணிகர்களுடனும் சாந்திதாஸ் வர்த்தகம் செய்ததாக வில்லியம் ஃபாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வர்த்தகப் பொருட்களில் கிராம்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் அடங்கும்.

செப்டம்பர் 1635 இல், பிரிட்டிஷ் கடற்கொள்ளையர்கள் சாந்திலால் மற்றும் பல வணிகர்களின் பொருட்களைத் தாக்கி சூறையாடினர்.

இருப்பினும், சாந்திதாஸ் தனது அரசியல் தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி ஆங்கிலேயர்களின் இழப்புகளை ஈடுகட்டினார்.

சாந்திதாஸின் மகன் வாகசந்த் மற்றும் பேரன் கௌஷல்சந்த் ஆகியோரும் வர்த்தகத்தில் புகழ் பெற்றனர்.

மராட்டியர்கள் ஆமதாபாத்தை சூறையாடுவதாக மிரட்டியபோது, கௌஷல் சந்த் பணம் கொடுத்து நகரத்தை அழிவிலிருந்து காப்பாற்றினார்.

இதேபோல், வங்கத்தின் நவாப் காலத்தில் ஜகத்சேத் என்ற பெயர் ஒரு செல்வந்தரான வணிகர், வங்கியாளர் மற்றும் கடன் ொடுக்கும் குடும்பப் பெயராக புகழ் பெற்றிருந்தது.

வில்லியம் டால்ரிம்பிள் தனது 'தி அனார்க்கி' என்ற புத்தகத்தில், ஐரோப்பாவின் ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் அளவிற்கு இவர்களின் செல்வாக்கு பெரிதாக இல்லை என்றாலும், 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் முகலாயப் பேரரசின் நிதி ஆளுகை மீது இவர்களுக்கிருந்த செல்வாக்கை, ஐரோப்பிய நிதி அமைப்பில் இருந்த ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் பங்குடன் ஒப்பிடலாம் என்று எழுதினார்.

ராஜஸ்தானின் நாகௌரில் வசிக்கும் இந்தக் குடும்பத்தின் நிறுவனர் ஹிரானந்த் ஷா, 1652 இல் பாட்னாவிற்கு வந்தார்.

1707 ஆம் ஆண்டில், அவரது மகன் மாணிக்சந்த் முகலாய இளவரசர் ஃபாரூக் ஷாவுக்கு நிதி உதவி செய்தார், அதற்கு ஈடாக அவர் 'உலக வங்கியாளர்' என்று பொருள்படும் ஜகத்சேத் என்ற பட்டத்தைப் பெற்றார்.

வங்காளத்தின் முதல் ஆளுநரான முர்ஷித் குலி கானிடம், டாக்காவை விட்டு வெளியேறி ஹூக்ளி நதிக்கரையில் உள்ள முர்ஷிதாபாத்தில் குடியேறுமாறு மாணிக்சந்த் பரிந்துரைத்தார். மேலும் மாணிக்சந்த் அவரது திவானாக ஆனார்.

ஜகத்சேத் குடும்பத்தை முகலாயப் பேரரசின் பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க இந்து வணிகக் குடும்பம் என்று ராபர்ட் ஓரம் வர்ணித்துள்ளார்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரப்பூர்வ வரலாற்றாசிரியர்

ஜகத்சேத் குடும்பத்தின் செல்வமும் செல்வாக்கும் இல்லாமல் முகலாயப் பேரரசின் நிதிக் கொள்கையோ அல்லது வங்காளத்தின் பொருளாதாரமோ முன்னேற முடியாத அளவுக்கு இருந்தது.

பொருளாதார விவகாரங்களின் ஜகத்சேத்தின் பங்களிப்பு பாங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கிக்கு இணையானது என கருதப்பட்டது.

இந்தக் குடும்பம் வங்காள அரசாங்கத்திற்கு பல்வேறு நிதி சேவைகளை வழங்கியது.

இதில் வருமானம் அல்லது வருவாய் வசூல், உறுதிமொழி பத்திரங்கள் மற்றும் கடன்கள் ஆகியவை அடங்கும்.

வங்காளத்தில் நாணய உற்பத்தியில் அவருக்கு பிரத்யேகமான உரிமை இருந்தது, மேலும் முகலாய கருவூலத்திற்கான வருடாந்திர வருவாயை வசூலிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் ஜகத்சேத்.

பத்திரிகையாளர் சகாய் சிங், "நவாப்கள் முதல் பிரெஞ்சு, போர்த்துகீசிய, டச்சு மற்றும் பிரிட்டிஷ் நிறுவனங்கள் வரை அனைவரும் அவரது கடனாளிகள்" என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார்.

மாணிக்சந்த் 1714 இல் இறந்தார். அதற்குள், அவர் தனது வணிக நிறுவனத்தின் கிளைகளை இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நிறுவியிருந்தார்.

"அவர்கள் முகலாயப் பேரரசர், வங்காள நவாப் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியுடனும், பிரெஞ்சு மற்றும் போர்த்துகீசிய வணிகர்களுடனும் வணிகம் செய்தனர்.

இது இந்த வணிகக் குடும்பத்தின் செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்கை பெரிதும் அதிகரித்தது" என்று சையத் அசிம் மஹ்மூத் ஒரு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் எழுதினார்.

"மாணிக் சந்த்துக்கு குழந்தை இல்லை. அவரது வளர்ப்பு மகன் ஃபதே சந்த் நிதி வணிகத்தை முன்னெடுத்துச் சென்று அதன் உச்சத்திற்குக் கொண்டு வந்தார்."

1722 ஆம் ஆண்டில், புதிய முகலாயப் பேரரசர் முகமது ஷா அவருக்கு 'ஜகத்சேத்' என்ற பட்டத்தை வழங்கினார்.

ஃபதே சந்த் தனது நிறுவனத்தின் கிளைகளை முர்ஷிதாபாத்திலிருந்து டெல்லி மற்றும் குஜராத் வரை கட்டியெழுப்பியிருந்தார்.

மேலும் மன்னர்கள், நவாப்கள் முதல் நில உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் வரை அனைவருக்கும் வட்டிக்கு பெரிய அளவில் கடன் கொடுக்கத் தொடங்கினார் ஃபதே சந்த்.

அது மட்டுமின்றி, 1718 முதல் 1730 வரை, அந்த நிறுவனம் அவரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் 4 மில்லியன் ரூபாய் கடன் வாங்கியதாகவும் அந்த வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

பிளாசி போரில் (1757) சிராஜ்-உத்-தௌலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு, ஜகத்சேத் மேத்தா பச்சந்தின் ஆதரவுடன் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை வழிநடத்தினார் ராபர்ட் கிளைவ்.

"ஜெகத்சேத் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வெற்றிகரமான குதிரையின் மீது பந்தயம் கட்டும் கலையை அறிந்திருந்தனர், ஆனால் பெரும்பாலும் அவர்கள் சொந்தமாக, வெற்றிகரமான குதிரைகளை உருவாக்கினர்."

என்று சுதீப் சக்ரவர்த்தி தனது 'பிளாசி: தி பேட்டில் தட் சேஞ்ச்ட் தி கோர்ஸ் ஆஃப் இந்தியன் ஹிஸ்டரி' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

சக்ரவர்த்தி ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டுகிறார்.

அதில், கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிற வணிகர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் வசூலிக்கத் தவறியதற்காக நவாப் சிராஜ்-உத்-தௌலா, மெஹ்தாப்ராய் ஜகத்சேத்தை அறைந்தார்.

சதித்திட்டங்கள் தொடங்கிய தருணம் இது.

பத்திரிகையாளர் மந்திரா நாயர் தனது கட்டுரைகளுள் ஒன்றில் பிளாசி போர் மிகவும் மோசமானதாக இல்லை என்று எழுதியுள்ளார்.

"இந்தப் போர் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. ராபர்ட் கிளைவின் நோக்கம் மிகவும் கீழ்ப்படிதலுள்ள நவாப்பை அரியணையில் அமர்த்துவதாகும். சிராஜ்-உத்-தௌலா மிர் ஜாபரை பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் கிளைவின் நோக்கத்திற்கு ஏற்ற நபராக அவரை மாற்றினார்."

ஆனால் கிளைவ் மற்றொரு சக்திவாய்ந்த கூட்டாளியையும் கொண்டிருந்தார், அவர்தான், அக்கால பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்திய, வங்கிக் குடும்பத்தின் தலைவரான மெஹ்தாபிரே 'ஜகத்சேத்'

"மிர் ஜாபரின் பங்கு நன்கு அறியப்பட்டதே, ஆனால், ஆளும் வட்டாரங்களைத் தவிர, சிராஜை அகற்றுவதற்கான இந்த சதியில் ஜகத் சேத்தின் பங்கு பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

'சியார் அல்-முதக்ரீன்' கூற்றுப்படி, சிராஜுக்கு எதிரான போரில் ஜகத்சேத் ஆங்கிலேயர்களுக்கு மூன்று கோடி ரூபாய் வழங்கினார் என அறியப்படுகின்றது.

இந்தத் தொகை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம், ஆனால் அவர் ஆங்கிலேயர்களுக்குப் பணம் கொடுத்தார் என்பது உறுதி.

சிராஜ்-உத்-தௌலாவின் கூட்டாளியும் வங்காளத்தில் பிரெஞ்சு ஆலைகளின் தலைவருமான ஜீன் லாவின் கூற்றுப்படி, "இந்தப் புரட்சியின் உண்மையான தூண்டுதல்கள் இவர்கள் தான். இவர்கள் இல்லாமல், ஆங்கிலேயர்களால் இதையெல்லாம் ஒருபோதும் செய்ய முடியாது" என்று சக்ரவர்த்தி பதிவு செய்துள்ளார்.

இதன் பிறகு, ஜகத்சேத் குடும்பத்தின் வீழ்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

1763 ஆம் ஆண்டில், வங்காள நவாப் மீர் காசிம் அலி கானின் உத்தரவின் பேரில் மெஹ்தாப் சந்த் மற்றும் அவரது உறவினர் ஸ்வரூப் சந்த் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

அதன் பிறகு, குஷால் சந்த் குடும்பத்தை வழிநடத்தினார், ஆனால் அவரது அலட்சியத்தால், வணிகம் சரிந்தது.

1912 ஆம் ஆண்டில், ஜகத்சேத்தின் கடைசி வாரிசு இறந்தார், குடும்பம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஓய்வூதியத்தில் வாழத் தொடங்கியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)