You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தர பிரதேசத்தில் 2 வயது பெண் புலியை அடித்தே கொன்ற கிராம மக்கள் - என்ன நடந்தது?
- எழுதியவர், சையத் மோசிஸ் இமாம்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தூத்வா புலிகள் காப்பகத்தில் பெண் புலி ஒன்றை கிராம மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.
அந்தப் பெண் புலி தாக்கியதால் கிராம மக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். அதே புலிகள் காப்பகத்தில் உள்ள மலனி என்ற பகுதியில் மற்றொரு புலி இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தூத்வா புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநரான டி. ரங்கராஜு இந்த இரண்டு விவகாரம் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
- பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?
- 'திமிங்கிலத்தின் வாய்க்குள் இருந்தேன்' - நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய இவர் தப்பித்தது எப்படி?
- வயநாடு கடையடைப்பு: காட்டுயானை தாக்குதலால் தொடரும் மரணங்கள் - அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்
- ஆழ்துளை கிணறுகளிலிருந்து 40 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வரும் வெந்நீர் - எங்கே, எப்படி?
புலிகளைக் கொன்ற கிராம மக்கள்
பிப்ரவரி 26ஆம் தேதியன்று தூத்வா புலிகள் காப்பகத்தின் எல்லையோரப் பகுதியில் ஒன்று திரண்ட புல்வாரியா கிராம மக்கள் பெண் புலி ஒன்றை அடித்துக் கொன்றனர்.
"இந்தப் புலிக்கு இரண்டு வயதுதான் ஆகிறது. தாய்ப் புலியிடம் இருந்து பிரிந்து சமீபத்தில்தான் அதற்கான எல்லையை வரையறுக்கத் தொடங்கியிருந்தது. அதற்குள்ளாக, கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை இந்தப் புலி தாக்கியுள்ளது. அது இரண்டு வயதே நிரம்பிய வளரிளம் பருவத்தைச் சேர்ந்த புலி என்பதால் அளவில் சிறிதாக இருந்தது. ஆகவே, மக்கள் அதை எளிதாகச் சுற்றி வளைத்துள்ளனர்," என்று ரங்கராஜு தெரிவிக்கிறார்.
இருப்பினும் இந்தச் சம்பவம் அதிகாலையில் நடைபெற்றுள்ளது. எனவே இதில் ஈடுபட்டவர்கள் யார் என்று தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காட்டுயிர் சட்டத்தின் கீழ் இதில் தொடர்புடைய சில அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மலனியில் மற்றொரு புலி, வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளது. அந்த வாகனத்தை ஓட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளர். இறந்த இரண்டு புலிகளுக்கும் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.
தூத்வா பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புலிகள் காப்பகங்கள் உள்ளன. அதிகரித்து வரும் புலிகள் எண்ணிக்கை காரணமாக, மனிதர்கள் - புலிகள் எதிர்கொள்ளல் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இது எதிர்மறையான பின்விளைவை ஏற்படுத்துகிறது.
ரங்கராஜு இதுகுறித்துப் பேசும்போது, "தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் புலிகள் அவற்றின் குட்டிகளோடு வலம் வருகின்றன," என்று கூறினார்.
இந்தப் புதிய புலிகள் காட்டின் எல்லைப் பகுதிகளில் நடமாடுகின்றன. சில நேரங்களில் அவை மனிதர்களை எதிர்கொள்ளும்போது தாக்கக்கூடிய சூழலும் ஏற்படுகிறது. ஆனால் மிகவும் அரிதாகவே நடக்கிறது," என்று கூறினார்.
காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல்
காட்டுயிர் ஆய்வுகளுக்கான மையத்தின் (Centre for Wildlife Studies) தரவுகள்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 80 ஆயிரம் காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல் சம்பவங்கள் பதிவாகின்றன.
இந்தியாவில், காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல் பிரச்னைகளில் அதிகமாகப் பேசப்படுபவை, புலிகள், யானைகள் மற்றும் சிறுத்தைகள். தற்போது 3,500க்கும் அதிகமான புலிகள் உள்ளன. அதோடு, 30,000 யானைகள் மற்றும் 13,874 சிறுத்தைகள் உள்ளன.
இந்திய அரசின் தரவுகள்படி, 349 பேர் கடந்த ஐந்து ஆண்டுகளில் புலிகள் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும் காட்டுயிர் நிபுணரான முனைவர் யத்வேந்திரா சிங் ஜாலா இதுகுறித்துப் பேசும்போது, "காட்டுயிர் மனித எதிர்கொள்ளல் சம்பவங்கள் முன்பைக் காட்டிலும் தற்போது குறைந்துள்ளன. பல உயிரினங்கள் முன்பு அழியும் நிலையை எதிர்கொண்ட பகுதிகளிலேயே இப்போது எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன," என்று கூறுகிறார்.
ஒவ்வோர் ஆண்டும், 35க்கும் மேற்பட்டோர் புலிகள் தாக்கி உயிரிழக்கின்றனர். சிறுத்தைகள் தாக்குவதால் 150 பேரும், காட்டுப் பன்றி தாக்குவதால் 150 பேரும் உயிரிழக்கின்றனர். பாம்புக் கடியால் 50 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். மற்றொரு புறம், ஒவ்வோர் ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
"இது இறப்புகளின் எண்ணிக்கையைப் பற்றியதல்ல. 200 ஆண்டுகளுக்கு முன்பு மனித இறப்புக்கான காரணங்களில் காட்டுயிர்கள் தாக்குவதும் கணிசமான பங்கைக் கொண்டிருந்தன. இன்று, அரிதாக ஆங்காங்கே நடக்கின்றன.
அதனால்தான் இத்தகைய செய்திகள் உடனே செய்தியாக்கப்படுகின்றன. உண்மையில் புலிகள் காப்பகத்தில் புலிகள் தாக்கி இறப்பதைக் காட்டிலும் நீங்கள் வாகன விபத்தில் சிக்கி இறப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது," என்று முனைவர் ஜாலா தெரிவித்தார்.
இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை
கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தற்போது 3,682 புலிகள் உள்ளன. 2018ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 2,967 ஆக இருந்தது. 2014ஆம் ஆண்டில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 2,226.
ஆண்டுக்கு 6% என்ற அளவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. புலிகள் 1,38,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழ்ந்து வருகின்றன. அதே பகுதியில் ஆறு கோடி மக்களும் வசித்து வருகின்றனர்.
கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்து புலிகள் வாழும் 20 மாநிலங்களில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்தக் கணக்கெடுப்பின்போது, புலிகளின் வாழ்விடங்களில் அவற்றுக்குத் தேவையான இரை உயிரினங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன, புலிகளுக்கு வாழ்விடப் போட்டியை விளைவிக்கும் வேறு உயிரினங்கள், வாழ்விடத்தின் தரம் ஆகியவையும் மதிப்பிடப்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)