You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'திமிங்கிலத்தின் வாய்க்குள் இருந்தேன்' - நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய இவர் தப்பித்தது எப்படி?
- எழுதியவர், ஆண்ட்ரியா டியாஸ் & அயெலன் ஒலிவா
கயாக்கிங் (கயாக் என்பது துடுப்பு போட்டு இயக்கக் கூடிய ஒரு சிறு படகு) சென்ற அட்ரியன் சிமன்காஸை ஒரு திமிங்கிலம் விழுங்கியபோது, அவர் முதலில் கவனித்தது வழுவழுப்பான ஒரு உணர்வைத் தான்.
"நான் ஏதோ ஒன்றின் வாய்க்குள் இருப்பதை உணர்ந்தேன், ஒருவேளை அது என்னை சாப்பிட்டிருக்கலாம், அது ஓர்கா (திமிங்கிலம்) அல்லது கடல் அரக்கனாக இருக்கலாம் என நினைத்தேன் " என்று 23 வயதான அட்ரியன் பிபிசி முண்டோவிடம் கூறினார்.
அட்ரியன், "பினோச்சியோவைப் போல" (ஒரு கற்பனைக் கதாபாத்திரம்) ஹம்பேக் திமிங்கிலத்திற்குள் எப்படி உயிர் வாழ முடியும் என்று சிந்திக்கத் தொடங்கினார். ஆனால் அந்த உயிரினம் திடீரென்று அவரை வெளியே துப்பியது.
வெனிசுலாவைச் சேர்ந்த அட்ரியன் தனது தந்தையுடன் சிலியின் படகோனியா கடற்கரையில் உள்ள மெகல்லன் கடல் பகுதியில் வழியாக கயாகிங் சென்ற போது, "பின்னாலிருந்து ஏதோ ஒன்று என்னைத் தாக்கியது, அருகில் வந்து மூடிக்கொண்டு என்னை மூழ்கடித்தது" என்றார்.
அவரது தந்தை டாலால், அந்தச் சம்பவத்தை சில மீட்டர் தொலைவில் இருந்து படம் பிடிக்க முடிந்தது.
"நான் என் கண்களை மூடிக் கொண்டேன், மீண்டும் கண்களைத் திறந்த போது, நான் திமிங்கிலத்தின் வாய்க்குள் இருப்பதை உணர்ந்தேன்" என்று அட்ரியன் பிபிசியிடம் விவரித்தார்.
"எனது முகத்தில் வழுவழுப்பான தன்மை கொண்ட ஏதோ ஒன்று உரசியதை உணர்ந்தேன்" என்று கூறிய அவர், தான் பார்த்தது அடர் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அட்ரியன்,
"அதை தடுக்க நான் இனி போராட முடியாது என்பதால் அது என்னை விழுங்கிவிட்டால் என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன்," என்றும், "அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நான் யோசிக்க வேண்டியிருந்தது" என்றும் தெரிவித்தார்.
ஆனால் சில நொடிகளில், அட்ரியன் மேற்பரப்பை நோக்கி எழுவதைப் போல உணரத் தொடங்கினார்.
"எவ்வளவு ஆழத்தில் உள்ளேன் என்பது தெரியாமல் மூச்சை அடக்க முடியுமா என்று சற்று பயந்தேன், மேலே வருவதற்கு நீண்ட நேரம் எடுத்தது போல் உணர்ந்தேன்" என்று விளக்குகிறார் அட்ரியன்.
"நான் இரண்டு வினாடிகள் மேலே வந்தேன், இறுதியாக நான் மேற்பரப்புக்கு வந்தபோது , அது என்னை உண்ணவில்லை என்பதை உணர்ந்தேன்." என்கிறார்.
அருகிலுள்ள கயாக்கில் இருந்து , அட்ரியனின் தந்தை டால் சிமான்காஸ் இக்காட்சியை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
சிலியின் தெற்கு நகரமான புன்டா அரீனாஸில் இருந்து கடற்கரையோரம் இருக்கும் ஈகிள் பே-வை அவர்கள் இருவரும் கடந்தபோது, பின்னால் ஒரு சத்தம் கேட்டது.
"திரும்பிப் பார்த்தபோது, அட்ரியனைக் காணவில்லை" என்கிறார் அட்ரியனின் தந்தை டால் சிமான்காஸ்.
மேலும் "அட்ரியன் கடலில் இருந்து மேலே வருவதை பார்க்கும் வரை நான் கவலைப்பட்டேன்" என்று 49 வயதான டால் கூறினார்.
"பின்னர் நான் ஏதோ ஒரு உடலைப் பார்த்தேன், அதன் அளவின் காரணமாக திமிங்கிலமாக இருக்கலாம் என்று நான் உடனடியாக புரிந்துகொண்டேன்" என்றும் குறிப்பிடுகிறார்.
கயாக்கிங் செய்யும் போது எழும் அலைகளைப் பதிவுசெய்ய, டால் தனது கயாக்கின் பின்புறத்தில் ஒரு கேமராவைப் பொருத்தியிருந்தார். இது அவரது மகனின் அனுபவத்தைப் படம்பிடித்தது.
ஏழு ஆண்டுகளுக்கு முன் தந்தையுடன் வெனிசுலாவிலிருந்து சிலிக்குக் குடிபெயர்ந்த அட்ரியன், அந்த வீடியோவை மீண்டும் பார்த்த போது, திமிங்கிலத்தின் அளவு எவ்வளவு பெரிதாக இருந்தது என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
"அந்த திமிங்கிலத்தின் முதுகு மேலெழுந்த தருணத்தையும், அதன் துடுப்புகள் தெரிந்ததையும் நான் பார்க்கவில்லை. சத்தத்தை மட்டும் தான் கேட்டேன். அதனால் தான் எனக்கு பயமாய் இருந்தது," என்றார் அட்ரியன்.
தொடர்ந்து பேசிய அவர், "பின்னர் அந்த வீடியோவை பார்த்த போது, அது என் முன்னால் மிகப்பெரிய அளவில் தோன்றியது என்பதை உணர்ந்தேன். அதை அப்போதே பார்த்திருந்திருந்தால், என்னை அது இன்னும் அதிகமாகப் பயமுறுத்தியிருக்கும் என்று தோன்றியது" என்றும் தெரிவித்தார் .
'ஹம்பேக் திமிங்கிலத்தால் மனிதனை விழுங்க இயலாது'
அட்ரியனைப் பொருத்தவரை, அந்த அனுபவம் வெறும் உயிர் தப்பியதைப் பற்றியது மட்டுமல்ல.
ஆனால் திமிங்கிலம் அவரைத் துப்பியபோது தனக்கு "இரண்டாவது வாய்ப்பு" கிடைத்ததாக உணர்ந்ததாக அவர் கூறினார்.
"உலகின் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றில் ஏற்பட்ட அந்த 'தனிப்பட்ட' அனுபவம், அதுவரை நான் என்ன சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்பதைப் பற்றியும், அந்த அனுபவத்தை எவ்வாறு பயன்படுத்தி, அதற்காக நன்றியுடன் இருக்க முடியும் என்பதையும் சிந்திக்க என்னை வித்திட்டது," என்று அவர் மேலும் கூறினார்.
ஆனால், வனவிலங்கு நிபுணரின் கூற்றுப்படி, அட்ரியன் இவ்வளவு விரைவாக திமிங்கிலத்திலிருந்து தப்பிக்க ஒரு காரணம் உள்ளது.
ஹம்பேக் திமிங்கிலங்கள், சிறிய மீன்கள் மற்றும் இறால்களை விழுங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட "வீட்டு தண்ணீர்க் குழாயின் அளவே உடைய" குறுகிய தொண்டைகளைக் கொண்டுள்ளன என்று பிரேசிலிய பாதுகாவலர் ரோச்ட் ஜேக்கப்சன் செபா பிபிசியிடம் தெரிவித்தார்.
"கயாக்கர்கள், டயர்கள் அல்லது ட்யூனா போன்ற பெரிய மீன்களை கூட அவற்றால் விழுங்க முடியாது," என்பதைத் தெரிவித்த செபா,
"இறுதியில், அந்த திமிங்கிலம் கயாக்கிங் சென்றவரைத் துப்பியது, ஏனெனில் அதனால் விழுங்க இயலாது" என்று அவர் கூறினார்.
ஹம்ப்பேக் திமிங்கிலம் தற்செயலாக அட்ரியனை மூழ்கடித்திருக்கலாம் என செபா பரிந்துரைத்தார்.
அதாவது, "திமிங்கிலம் மீன் கூட்டத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தவறுதலாக, அது மீன்களுடன் அவரை விழுங்கியிருக்கலாம்" என்கிறார் செபா.
"திமிங்கிலங்கள் உணவுக்காக மிக விரைவாக மேலெழும்பும் போது, அவை தற்செயலாக தங்கள் பாதையில் உள்ள பொருட்களை தாக்கலாம் அல்லது மூழ்கடிக்கலாம்."
திமிங்கிலங்கள் வழக்கமாக நீந்தும் பகுதிகளில் துடுப்புப் பலகைகள், மிதவைப்படகுகள் அல்லது அதிகம் சத்தம் எழுப்பாத மற்ற படகுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு "முக்கியமான நினைவூட்டலாக" அமைந்துள்ளதாக அவர் எச்சரித்தார்.
திமிங்கிலத்தைப் பார்ப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் பயன்படுத்தப்படும் படகுகள், அவற்றின் இயந்திரங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
ஏனெனில் அந்த ஒலியின் மூலம் திமிங்கிலங்களால் அந்த படகுகளின் இருப்பைக் கண்டறிய முடியும்.
லூயிஸ் பர்ருச்சோ மற்றும் மியா டேவிஸ் ஆகியோர் தந்த கூடுதல் தகவல்கள் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)