இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

இஸ்ரோவின் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அப்பகுதியின் வயது குறித்த முக்கியமான தகவல் வெளிவந்துள்ளது.

சந்திரயான் - 3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடம் 370 கோடி (3.7 பில்லியன்) ஆண்டுகள் பழமையானது என இஸ்ரோவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமியில் முதன்முதலாக நுண்ணுயிர் தோன்றியதும் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் என விஞ்ஞானிகள் ஏற்கெனவே கண்டறிந்துள்ளனர். இது நிலவுக்கும் பூமிக்குமான வரலாற்று தொடர்பு குறித்த முக்கியமான பார்வையை வழங்குகிறது.

இஸ்ரோவின் இந்த ஆய்வறிக்கை, அறிவியல் ஆய்வுலகில் மதிப்புமிக்க 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வு கூறுவது என்ன? அது ஏன் முக்கியம்?

என்ன கண்டுபிடித்தனர்?

ஆகஸ்ட் 23, 2023ம் ஆண்டு, இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தினர். நிலவின் தென் துருவத்துக்கு அருகில் ஒரு விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா தனது சந்திரயான்-3 திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பெற்றது.

அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் சீனாவுக்குப் பிறகு, நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடத்தின் வயதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி புள்ளி' என, பிரதமர் நரேந்திர மோதி பெயரிட்டார். அந்த இடம் 370 கோடி (3.7 பில்லியன்) ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.

2016-ம் ஆண்டு நேச்சர் இதழில் வெளியான ஓர் ஆய்வின்படி, கிரீன்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட ஒற்றை செல் நுண்ணுயிரிகளின் புதைபடிம எச்சங்களை ஆராய்ந்ததில் அவை 370 கோடி ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டது. பூமியில் தோன்றிய உயிரினங்களுள் மிக பழமையான ஒன்றாக இதுதான் கருதப்படுகிறது.

"பூமியுடன் நிலவு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதை அறிய இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது." என்கிறார் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.

மேலும் பேசிய அவர், "தென் துருவத்தில் தரையிறங்கியதே மிகப்பெரும் சாதனைதான். தற்போது அமைவிட ரீதியில் அப்பகுதி பழமையானது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது, மதிப்புமிக்கது என்பதால் தான் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது" என கூறினார்.

எப்படி ஆய்வு மேற்கொண்டனர்?

ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தான் இந்த ஆய்வை மேற்கொண்டனர். நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்தில் நில அமைப்பியல் (morphological) மற்றும் நில அடுக்கு (topographic) ஆகியவற்றை ஆராய்ந்தனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் மேம்பட்ட இமேஜிங் கருவிகளைப் பயன்படுத்தி, நிலவின் பள்ளங்கள் மற்றும் பாறை அமைப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர்.

அதுகுறித்த மேம்பட்ட தரவுகளை (High resolution remote sensing datasets) பயன்படுத்திதான் நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்தைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை ஆராய்ந்துள்ளனர்.

சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடத்தின் முதல் வரைபடம் மூலம் இது வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்தில் உள்ள மூன்று வெவ்வேறு தன்மைகள் கொண்ட நிலப்பரப்புகளை இதற்காக விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். அதாவது, அதிகளவில் கரடுமுரடாக உள்ள பகுதி (high-relief rugged terrain) , சமவெளி பகுதி (smooth plains), ஓரளவுக்கு சமவெளியாக உள்ள பகுதி (low-relief smooth plains). இதில், ஓரளவுக்கு சமவெளியாக உள்ள பகுதியில்தான் சந்திரயான் - 3 தரையிறங்கிய இடம்உள்ளது.

இப்பகுதியில், பாறைகள் எந்தளவுக்கு உள்ளன என்பது விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 14 கி.மீ. தெற்கே 540 மீ. விட்டம் கொண்ட ஒரு புதிய பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய பாறைத் துண்டுகள் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்தன, அவை "அருகிலுள்ள 10 மீட்டர் அகலமுள்ள பள்ளத்திலிருந்து" தோன்றியிருக்கலாம்.

இந்த பாறைகளை ஆய்வு செய்ததன் மூலம் தான் (The crater size-frequency distribution (CSFD) அப்பகுதியின் வயது கணக்கிடப்பட்டுள்ளது.

நிலவின் தென்பகுதியில் உள்ள முக்கியமான ஸ்கோம்பெர்கர் எனும் பள்ளத்தின் எச்சங்கள் (Schomberger crater), தரையிறங்கும் தளத்தை மூடியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதை தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

அப்பகுதியின் வயதை கண்டுபிடிப்பது, நிலவின் தென் துருவப் பகுதியின் நிலவியல் வரலாறு குறித்து புரிந்துகொள்வதற்கு பங்களிக்கின்றன.

இதுதொடர்பாக, விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் கூறுகையில், "சந்திரயான் - 3 விண்கலம் மூலம் கிடைத்தத் தகவல்களுள் இது ஒரு கூடுதலான தகவல் என்றுதான் பார்க்க வேண்டும். ஏற்கெனவே அப்பகுதி, விண்கல்லில் இருந்து விழுந்த பகுதிதான் என்பது நமக்குத் தெரியும். அடிப்படையில், இதன்மூலம் நாம் நிலாவின் நிலவியல் வரலாறை அறிய முயற்சிக்கிறோம்." என்கிறார்.

நிலவு எப்படி உருவானது என்பது குறித்து 3 கூற்றுகள் உள்ளதாகக் கூறுகிறார், வெங்கடேஸ்வரன். அதன்படி,

முதல் கூற்று, புவியும் நிலவும் ஒரே காலக்கட்டத்தில் தோன்றியவை.

இரண்டாவது, பூமியும் நிலவும் வெவ்வேறு காலக்கட்டத்தில், வெவ்வேறு பகுதிகளில் தோன்றி ஏதோவொரு காரணத்தால் நிலவு பூமிக்கு நெருக்கமாக வந்தபோது, அங்கேயே நிலைத்துவிட்டது.

மூன்றாவது, விண்கல் பூமியில் விழுந்து பூமி பிளந்து அதிலிருந்து நிலா உருவானது என்ற கோட்பாடும் உள்ளது.

இதில், "மூன்றாவது கூற்றுதான் பெரும்பாலும் நம்பப்படுகின்றது. ஆனால், மற்ற இரண்டும் உண்மையல்ல என்பதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை." என்கிறார் அவர்.

மேலும், "நிலவில் பூமியை நோக்கி இருக்கக்கூடிய பகுதியின் நிலவியல் அமைப்பும் பூமியின் மறுபக்கத்தின் புவியியல் அமைப்பும் வெவ்வேறு விதமாக உள்ளன."

"நிலாவில் எரிமலை இருந்தது நமக்குத் தெரியும், அது எப்போது முடிவுக்கு வந்தது என தெரியவேண்டும். பூமிக்கும் நிலாவுக்குமான தொடர்பு, நிலவு எப்படி தோன்றியது, அதன் நிலவியல் அமைப்பு தொடர்பாக இப்படி நிறைய கேள்விகள் உள்ளன. அவற்றுக்கான பதில்களை கண்டறியும் நகர்வில் இஸ்ரோவின் இந்த கண்டுபிடிப்பு ஓர் புள்ளி." என விளக்கினார் வெங்கடேஸ்வரன்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலவின் தொலைதூரப் பகுதியில் எரிமலை இருந்ததாக, 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் நேச்சர் இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை அமெரிக்கா மற்றும் சீன விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தனர்.

நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய பகுதி மிக தொன்மையானது என்பதைத்தான் இந்த ஆய்விலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்த ஆராய்ச்சிக்கும் உயிர்களின் தோற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார் வெங்கடேஸ்வரன்.

முந்தைய சாதனைகள்

நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தில் இரண்டு முக்கியப் பாகங்கள் இருந்தன. ஒன்று, விக்ரம் லேண்டர் எனப்படும் தரையிறங்கிக் கலன், மற்றொன்று பிரக்யான் எனப்படும் உலாவி கலன்.

இரண்டு கருவிகள் ரோவரிலும் மூன்று கருவிகள் லேண்டரிலும் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றின் மூலம், நிலவின் தரைப்பரப்பில் உள்ள வேதிப்பொருட்கள், நிலவின் மணல், வெப்பநிலை, பிளாஸ்மா, சீஸ்மிக் கதிர்கள் குறித்துப் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. "இவை அனைத்துமே முதன்முறை. யாரும் செய்யாததை சந்திரயான்-3 விண்கலம் செய்திருக்கிறது" என, சந்திரயான் திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, அதன் திட்ட இயக்குநர் வீர முத்துவேல் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.

கந்தகம் கண்டுபிடிப்பு, நிலநடுக்கம், நிலாவில் உள்ள மண்ணின் வெப்பத்தன்மை, பிளாஸ்மா குறித்த கண்டுபிடிப்பு என, நிலாவில் பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை சந்திராயன்-3 விண்கலம் செய்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)